சேலம் பெரியார் பல்கலைக்கழகத்தில் ஆசிரியர்களுக்கு எதிராகவும், மாணவர்களுக்கு எதிராகவும் கட்டவிழ்த்து விடப்படும் அடக்குமுறைகள் மிகவும் அதிர்ச்சியளிப்பதாக பா.ம.க நிறுவனர் ராமதாஸ் வேதனை தெரிவித்திருக்கிறார்.

இது தொடர்பாக அவர் வெளியிட்டிருக்கும் அறிக்கையில், “சேலம் பெரியார் பல்கலைக்கழகத்தில் ஆசிரியர்களுக்கு எதிராகவும், மாணவர்களுக்கு எதிராகவும் கட்டவிழ்த்து விடப்படும் அடக்குமுறைகள் மிகவும் அதிர்ச்சி அளிக்கின்றன. ஒரு பல்கலைக்கழகம் அதன் தகுதிகளிலிருந்து கீழிறங்கிப் பழிவாங்கும் கூடமாக மாறுவதும், அதற்காக நினைத்துக்கூடப் பார்க்க முடியாத ஆயுதங்களைப் பயன்படுத்துவதும் உயர் கல்வியின் எதிர்காலம் குறித்த கவலையை ஏற்படுத்துகிறது. 

பெரியார் பல்கலைக் கழகம் – சேலம்

அந்தப் பல்கலைக்கழகத்தில் நடைபெற்று வரும் விதி மீறல்கள் மற்றும் முறைகேடுகளுக்கு எதிராக ஆசிரியர் சங்க நிர்வாகி என்ற முறையில் பிரேம்குமார் போராடி வருவதாகக் கூறப்படுகிறது. அதைச் சகித்துக்கொள்ள முடியாத பல்கலைக்கழக நிர்வாகம் அவர் பல்கலைக்கழகத்திற்கு எதிரான செயல்களில் ஈடுபடுவதாகக் கூறி அவரை பணியிடை நீக்கம் செய்திருக்கிறது. 

இந்த நிலையில், அவர் மீது பாலியல் குற்றச்சாட்டுகளைச் சுமத்தி புகார் அளிக்கப்பட்டுள்ளது, கல்வி நிறுவனங்களில் பாலியல் அத்துமீறல்கள் ஒழிக்கப்பட வேண்டும் என்று தீவிரமாகப் போராடி வரும் பாட்டாளி மக்கள் கட்சி, அதே நேரத்தில் பிடிக்காதவர்களையும் உரிமைகளுக்காகப் போராடுபவர்களையும் பழி வாங்குவதற்கான ஒரு ஆயுதமாக பாலியல் புகார்கள் பயன்படுத்தப்படக் கூடாது என்பதில் உறுதியாக உள்ளது. 

ராமதாஸ்

அவர் மீண்டும் பணியில் சேர்ந்து விடக்கூடாது என்று பல்கலைக்கழகம் நினைப்பதுதான் இந்த அநீதியான நடவடிக்கையின் பின்னணி.  பல்கலைக்கழக மாணவர்கள் பாதிக்கப்பட்ட ஆசிரியருக்கு ஆதரவாகப் போராடி வருகின்றனர். ஆசிரியர் மீது பொய்யான குற்றச்சாட்டைச் சுமத்தி அவர் மீது விசாரணை நடத்தி நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று அவர்கள் வலியுறுத்துகின்றனர். ஆனால், பல்கலைக்கழக சிக்கல்கள் குறித்து மாணவர்கள் யாரிடமும் தெரிவிக்கக் கூடாது எனப் பல்கலைக்கழக நிர்வாகம் தடைவிதித்துள்ளது. 

உரிமைகளுக்காகப் போராடும் உரிமையும் சக்தியும் மாணவர்களுக்கு உண்டு. பல்கலைக்கழக நிர்வாகம் பழி வாங்குவதை விடுத்து ஆக்கப்பூர்வ பணிகளில் கவனம் செலுத்த வேண்டும். பெரியார் பல்கலைக்கழகத்தில் நடப்பவற்றைத் தமிழக அரசு வேடிக்கை பார்க்கக்கூடாது. பெரியார் பல்கலைக்கழகத்தில் நடைபெறும் விதி மீறல்கள் மற்றும் அடக்கு முறைகள் குறித்து விசாரணை நடத்தி அதற்குக் காரணமானவர்கள் தண்டிக்கப்பட வேண்டும்” என்று குறிப்பிடப்பட்டிருக்கிறது.

Sign In

Register

Reset Password

Please enter your username or email address, you will receive a link to create a new password via email.