என் கணவரும் இப்ப இந்த வேலைதான் செய்கிறார். இந்த ஊர்ல நாங்க ஒரு குடும்பம் தான் இருக்கிறோம். பெரும்பாலும் அப்போது எல்லாம் துணி துவைக்க, அயர்ன் பண்ணிக்கொடுக்க யாரும் காசு குடுக்க மாட்டாங்க. வருஷத்துக்கு ஒருமுறை நெல்லுதான் கொடுப்பாங்க. ஒரு நாலஞ்சு வருஷமாதான் காசு கொடுத்து துணி அயர்ன் பண்றாங்க. அதுவும் கூட உள்ளூர்காரர்கள் ஒரு துணிக்கு 5 ரூபாய் கொடுப்பாங்க. வெளியூர்களிலிருந்து வர்றவங்க 10 ரூபாய் கொடுப்பாங்க.

எல்லா நாளிலும் வேலை இருக்கும். குறிப்பா முகூர்த்த நேரம், பண்டிகை நேரம், இது மாரி காலத்தில் 24 மணி நேரமும் அயர்ன் பண்ணுவோம். எங்களுக்குன்னு சொந்தமா வீடு மனை, நிலம் எதுவும் இல்லை. ஏதோ இங்கே இருக்கிற கோயில் நிலத்துலதான் காலங்காலமாக வாழ்ந்து வர்றோம். இந்த வேலையில காசு, பணம் சேர்த்து வைத்து இருக்கலாம் முடியாதுங்க.

அப்பப்ப வயித்த கழுவதான் சரியா இருக்கும். துணி அயர்ன் பண்ணிக்கொடுத்தா ஒரு வாரம் ஆகும் அவங்க பணம் கொடுக்க. வெளியூர்க்காரர்களா இருந்தா பணம் உடனே கொடுப்பாங்க. உள்ளூர்காரங்க லேட்டா தான் கொடுப்பாங்க. வேலை இல்லாத நாள்ல என் கணவர் கூலி வேலைக்கு போயிடுவார். நான் வேலை செய்யுற காலத்துல நாலு கிலோ அடுப்புகரி முப்பது ரூபாய்க்கு வித்துச்சி. இப்ப 30 கிலோ கறி 1200 ரூபாய்க்கு விக்கிறாங்க. இன்னும் நிறைய இடங்கள்ல அடுப்பு கரி கிடைக்கிறது இல்லை. நாங்க மட்டும்தான் இன்னுமும் இந்த பெட்டிய வச்சுக்கிட்டு அயர்ன் பண்றோம்.

நகரத்தில் இருக்கவங்க எல்லாம் கொஞ்சம், கொஞ்சமா கரண்ட் பெட்டி வைக்க ஆரம்பிச்சுட்டாங்க. ஏதோ இந்த இடத்துக்கு வாடகை இல்ல. அதனால குடும்பம் ஓடுது. வாடகை கொடுக்கிற மாதிரி இருந்தா ரொம்ப சிரமந்தாங்க. ஒரு ஆள் வேலை செஞ்சா ஒரு நாளைக்கு 200 ரூபாயிலிருந்து 300 ரூபா வரைக்கும் கிடைக்கும். இந்த வருமானத்தில்தான் குடும்பம் ஓடுது.

எப்படியோ இரண்டு பொண்ணுங்கள கட்டிக் கொடுத்துட்டேன். பையன் படிக்கிறான். இந்த ஊர்ல நானும் என் தங்கச்சி மட்டும்தான் இந்த தொழில் செய்யறோம். வெளியூரு போய் வேற ஏதாவது தொழில் செய்யலாம்னா இந்த ஊரு விட்டு போறதுக்கு மனசு வரலீங்க. நான் வேல கத்துக்கிட்ட காலத்துல இந்த பெட்டி 1500 ரூபாய் வித்துச்சி. இப்போ 9 ஆயிரம் ஆயிடுச்சு. ஏதோ காலையில எழுந்து நெருப்பு மூட்டி பெட்டியில் போட்டு அயர்ன் பண்ண ஆரம்பிச்சா பொழுது சாய வரைக்கும் வேலை இருக்கும். இப்படியே தான் தினம் தினம் இந்த கரிநெருப்போடையும், பெட்டியோடையும் வாழ்க்கை ஓடுதுங்க.

எல்லா மனிதர்களுக்குள்ளும் ஒரு ஆசை இருக்கத்தான் செய்கிறது. அதுபோலவேதான் இவர்களுக்குள்ளும் ஒரு ஆசை இருக்கிறது. ஆனால் அது நிறைவேறாத ஆசையாகவே இருப்பதுதான் உண்மை. தனக்கென சொந்தமாக ஒரு வீட்டுமனை வேண்டும் என்பது இவர்களுடைய எதிர்பார்ப்பாக இருந்தாலும் அது எப்போது நிறைவேறும் என்கிற கேள்விக்குறியோடு வாழ்க்கை ஓடுகிறது.

“என் பேரு அங்கப்பன். எனக்கு வயசு 23 ஆகுது. பத்து வருஷமா இந்த அயர்ன் பண்ற தொழில்தான் செஞ்சுட்டு வர்றேன். இதுக்கு முன்னாடி எங்க அப்பா இந்த வேலையை செஞ்சிட்டு இருந்தார்.அதுக்கடுத்து இப்போ நான் செய்றேன். இதில் ஒன்னும் பெருசா வருமானம்லாம் இருக்குன்னு சொல்ல முடியாதுங்க. வாரத்துக்கு மூணு நாள்தான் முழுசா வேலை இருக்கும். மத்த நாள்ல கூலி வேலைக்குதான் போகணும்.

நாங்க இன்னும் அடுப்புக்கரி போட்டு அயர்ன் பண்ற பெட்டிதான் வைத்திருக்கிறோம். இப்போதுலாம் அடுப்புக் கரி கிடைக்கிறது குதிரை கொம்பா இருக்குதுங்க. ஒரு வாரத்துக்கு முன்னாடியே சொல்லி வைக்கணும். கரியில்லாம போயிடுச்சுன்னா அந்த வாரம் முழுக்க பொழப்பு இல்லாமலே போய்விடும். வேறு எந்த தொழிலும் தெரியாததால இந்த தொழில் செஞ்சிட்டு இருக்கேன்.

நான் இந்த வேலைக்கு வரும்போது 3 ரூபாய் கொடுத்தாங்க ஒரு துணிக்கு. இப்ப 5 ரூபாயிலிருந்து 10 ரூபா வரைக்கும் வாங்குறோம். கொஞ்சம் வசதியான வீட்டுக்காரங்க யார்னா பட்டுப்புடவை கொடுப்பாங்க. அதெல்லாம் கண்ணும் கருத்துமாக வேலை செய்யணுங்க. ஏதாவது எசக்கு பிசக்காகி விட்டால் அவ்வளவுதான். முப்பதாயிரம், நாற்பதாயிரம் ரூபாய் கொடுத்து வாங்கும் பட்டுப்புடவைய நம்மள நம்பித் தான் கொடுக்கிறாங்க. அத கண்ணும் கருத்துமாக பார்த்து தான் அயர்ன் பண்ணனும். அதுல ஏதாவது சிக்கலாகி போச்சுன்னா அவ்வளவுதான். நம்ம தலை தூக்கவே முடியாம போய்விடும்; ஆனா இதுவரைக்கும் எனக்கு அந்த மாதிரி நடந்ததில்லை.

இப்படியே தான் இந்த வாழ்க்கை ஓடிட்டு இருக்கு. ஒன்னும் சாப்பாட்டுக்கு பெரிய அளவில் கஷ்டம் இல்ல. சுத்தி சொந்தக்காரங்க இருக்குறதுனால எங்கேயாவது ஒரு இடத்தில் சாப்பிடலாம். எனக்கு கல்யாணம் ஆகி ஒரு புள்ள இருக்குதுங்க. அது ஏதாச்சும் நல்ல படிக்க வச்சு கவர்மெண்ட் வேலை வாங்கணும். அதுதாங்க எனக்கு ஆசை” என்றார்.

முந்தைய அத்தியாத்தை படிக்க… எளியோரின் வலிமைக் கதைகள் 20: கருவாடு விற்பவர்களின் வாழ்க்கையில் வசந்தம் எப்போது?

Source : WWW.PUTHIYATHALAIMURAI.COM

Sign In

Register

Reset Password

Please enter your username or email address, you will receive a link to create a new password via email.