தமிழகத்தில் நடந்து முடிந்த நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தலில் தி.மு.க கூட்டணி பெரும்பான்மையான இடங்களைக் கைப்பற்றியது. சீட் ஒதுக்கீட்டின்போது கூட்டணிக் கட்சி நிர்வாகிகளிடம் கறாராக இருந்த தி.மு.க., முடிவுகள் வெளியான பிறகு மேயர், துணை மேயர், நகராட்சித் தலைவர், பேரூராட்சித் தலைவர், துணைத் தலைவர் என பல்வேறு பொறுப்புகளை கூட்டணிக் கட்சிக்கு பிரித்துக் கொடுத்துள்ளது.

தொல்.திருமாவளவன்

ஆனால், மறைமுகத் தேர்தலின் போது கூட்டணிக் கட்சிகளுக்கு ஒதுக்கிய சில இடங்களில் தி.மு.க-வினரும் போட்டி வேட்பாளராகவும் போட்டியிட்டனர். கூட்டணி தர்மத்தை மீறி நடந்த இந்தச் சம்பவத்தைக் கண்டித்த தொல்.திருமாவளவன், “முதல்வரின் ஆணையை மீறி கூட்டணிக் கட்சிகளுக்கு ஒதுக்கப்பட்ட இடங்களில் தி.மு.க சார்பில் போட்டியிட்டு வெற்றி பெற்றவர்களை ராஜினாமா செய்ய வைத்து கூட்டணி அறத்தைக் காத்திட வேண்டும்” என வலியுறுத்தி இருந்தார்.

இந்த விவகாரம் தொடர்பாக அறிக்கை வெளியிட்ட முதல்வரும் தி.மு.க தலைவருமான மு.க.ஸ்டாலின், “சில இடங்களில் நடந்த நிகழ்வுகள் என்னை வருத்தமடைய வைத்துள்ளது. குற்ற உணர்ச்சியால் கூனிக்குறுகி நிற்கிறேன். கழகத் தலைமை அறிவித்ததை மீறி தோழமைக் கட்சிக்கு ஒதுக்கப்பட்ட இடங்களில் போட்டியிட்டு வென்றவர்கள் உடனடியாக தங்கள் பொறுப்பை விட்டு விலகியபின் என்னை வந்து சந்தியுங்கள்” எனத் தெரிவித்திருந்தார்.

மு.க.ஸ்டாலின்

அதையடுத்து பல இடங்களில் கட்சியின் சார்பாக கூட்டணிக்கு ஒதுக்கப்பட்ட இடங்களில் போட்டியிட்டவர்களில் சிலர் ’பொறுத்திருந்து பார்க்கலாம்’ என்கிற ரீதியில் காத்திருக்கிறார்கள். ஒரு சிலர் பொறுப்பில் இருந்து விலகுவதற்குத் திட்டவட்டமாக மறுத்துள்ளனர்.

`வைட்டமின் பிரச்னைகள்!’

நெல்லை மாவட்டம் வீரவநல்லூர் பேரூராட்சித் தலைவர் பொறுப்பு கூட்டணிக் கட்சியான மார்க்சிஸ்ட் கட்சிக்கு ஒதுக்கப்பட்டிருந்தது, மொத்தம் உள்ள 18 வார்டுகளில் 9 இடங்களில் தி.மு.க-வும் 2 இடங்களில் மார்க்சிஸ்ட் கட்சி வேட்பாளரும் வெற்றி பெற்றிருந்தனர். அ.தி.மு,.க ஒரு இடத்திலும் சுயேச்சைகள் 6 இடங்களிலும் வெற்றி பெற்றிருந்தார்கள். மார்க்சிஸ்ட் சார்பாக களமிறங்கிய கீதா என்பவரை எதிர்த்து தி.மு.க சார்பாக போட்டியிட்ட சித்ரா வெற்றி பெற்றார்.

சித்ரா

கட்சித் தலைமையின் அறிவிப்பை ஏற்று ராஜினாமா செய்யும் முடிவில் சித்ரா இருக்கவில்லை. இது தொடர்பாக அவரின் ஆதரவாளர்கள் கூறுகையில், “சித்ராவின் கணவர் சுப்பிரமணியன் இந்தத் தேர்தலுக்காக நிறைய வைட்டமின்களை இறக்கினார். அவரை அன் அப்போஸ்டாக ஜெயிக்க வைக்கவே பல வைட்டமின்கள் செலவு செய்யப்பட்டது. தலைவர் தேர்தலிலும் அதே நிலை தான். அதனால் அவர் ராஜினாமா செய்ய மாட்டார்” என்கிறார்கள்.

தொடரும் பேச்சுவார்த்தை!

திருவாரூர் மாவட்டம் கூத்தாநல்லூர் நகர்மன்ற தலைவர் பதவி, தி.மு.க-வின் கூட்டணிக் கட்சியான இந்திய கம்யூனிஸ்ட் கட்சிக்கு, ஒதுக்கப்பட்டிருந்தது, மொத்தம் உள்ள 24 வார்டுகளில், தி.மு.க 17 வார்டுகளை கைப்பற்றி இருந்த நிலையில், அக்கட்சியின் பாத்திமா பசீரா வேட்பு மனுத் தாக்கல் செய்தார். அதனால் கடைசி நேரத்தில் சி.பி.ஐ வேட்பாளர் வேட்பு மனுத்தாக்கல் செய்யவில்லை.

நகர்மன்ற தலைவராக திமுக வின் பாத்திமா பசீர் போட்டியின்றி தேர்வு செய்யப்பட்டார். திமுக தலைமை உத்தரவிட்ட பிறகும் கூட பாத்திமா பசீர் தலைவர் பதவியை ராஜினாமா செய்யவில்லை. தி.மு.க-வின் மாவட்ட நிர்வாகிகள் அவரிடம் தொடர்ச்சியாகப் பேசிவருகிறார்கள். இதுவரை எந்த முடிவும் எட்டப்படவில்லை.

திருத்துறைப்பூண்டி தி.மு.க நகரச் செயலாளர் ஆர்.எஸ்.பாண்டியனின் மனைவி கவிதா பாண்டியன் நகர்மன்ற தலைவராகத் தேர்வான நிலையில், துணைத் தலைவர் பொறுப்பு மார்க்சிஸ்ட் கட்சிக்கு ஒதுக்கப்பட்டிருந்து. நகராட்சியில் மார்க்சிஸ்ட் கட்சிக்கு இரு கவுன்சிலர்களே இருந்தார்கள். தங்களுக்கு ஒதுக்கப்பட்ட இடத்தில் வேட்புமனு தாக்கல் செய்ய இருந்த நிலையில் தி.மு.க நகரச் செயலாளரான ஆர்.எஸ். பாண்டியன் மனுத்தாக்கல் செய்ததால் மார்க்சிஸ்ட் கட்சியினர் ஒதுங்கிக் கொண்டனர்.

ஆர்.எஸ்.பாண்டியன்

நகராட்சித் தலைவராக மனைவியும் துணைத் தலைவராக கணவனும் வெற்றிபெற்ற நிலையில், கட்சி மேலிடத்தின் அறிவிப்பால் ஆர்.எஸ்.பாண்டியன் அதிர்ச்சி அடைந்தார். தன்னுடைய கட்சிப் பொறுப்பு நீடிக்கவும் மனைவியின் பொறுப்பு நிலைக்கவும் என்ன செய்வது என ஆதரவாளர்களிடம் ஆலோசனை நடத்தி வருகிறார். அதனால் அவர் துணைத் தலைவர் பொறுப்பில் இருந்து விலக முடிவெடுத்ததாகத் தெரிகிறது.

ராஜினாமா செய்ய முடியாது!

கன்னியாகுமரி மாவட்டம் கொல்லங்கோடு நகராட்சி தலைவர் பொறுப்பு மார்க்சிஸ்ட் கட்சிக்கு ஒதுக்கப்பட்ட நிலையில், தி.மு.க-வின் ராணி வெற்றி பெற்றுள்ளார். அவர் பொறுப்பில் இருந்து விலகும் முடிவில் இல்லை என்கிறார்கள் அவரின் ஆதரவாளர்கள். இது குறித்து நம்மிடம் பேசியவர்கள், “இந்த நகராட்சியில் உள்ள 33 வார்டுகளிலும் மார்க்சிஸ்ட் தனித்தே போட்டியிட்டு 10 இடங்களைப் பிடித்தது.

வெற்றி பெற்ற ராணி

தி.மு.க 10 இடங்களிலும் பா.ஜ.க 5 இடங்களிலும் காங்கிரஸ் மற்றும் சுயேச்சைகள் எஞ்சிய இடங்களையும் பிடித்தார்கள். கூட்டணி இலலாமல் வெற்றி பெற்ற நாங்கள் எதற்காக மார்க்சிஸ்ட் கட்சிக்கு நகராட்சித் தலைவர் பொறுப்பை விட்டுக் கொடுக்க வேண்டும்? இதைத் தலைமைக்கு விளக்கிச்சொல்வோம். ராஜினாமா செய்ய முடியாது” என்கிறார்கள்

கண்டுகொள்ளாத காங்கிரஸ்!

கோவை கருமத்தம்பட்டி நகராட்சி தலைவர் பதவி காங்கிரஸ் கட்சிக்கு ஒதுக்கப்பட்டிருந்தது. அதனால் அதிருப்தியடைந்த தி.மு.க-வினர், மறைமுக தேர்தலில் காங்கிரஸ் சார்பில் போட்டியிட்ட பாலசுப்பிரமணியனை தோற்கடித்தனர். தி.மு.க சார்பில் களமிறங்கிய நித்யா மனோகரன் வெற்றி பெற்று நகராட்சித் தலைவராகப் பதவியேற்றார்.

வெற்றி பெற்றவருக்கு வாழ்த்து

காங்கிரஸ் கட்சியிலும் பலமாக உள்கட்சி பூசல் இருந்ததால் இதை யாருமே பெரிய பிரச்னையாக எடுத்துக் கொள்ளவில்லை. அத்துடன், காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்த மனோகரனுக்கு துணை தலைவர் பொறுப்பு கொடுத்து சமாளித்துவிட்டனர். அதனால் நித்யா மனோகரன் தன் பதவியை ராஜினாமா செய்யாமல் கட்சித் தலைமையிடம் விளக்க அளித்து விவகாரத்தை ஆஃப் செய்துவிட்டார்

பெரியநாயக்கன்பாளையம் பேரூராட்சி தலைவர் பதவி மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சிக்கு ஒதுக்கப்பட்டது. அதையடுத்து, சி.பி.எம் சார்பில் சிவராஜன் தலைவர் பதவிக்குப் போட்டியிடுவார் என அறிவிக்கப்பட்டது. ஆனால், அவருக்கு முன்னதாகவே தி.மு.க-வைச் சேர்ந்த விஷ்வபிரகாஷ் வேட்புமனு தாக்கல் செய்தார். சிவபிரகாஷ் சற்று தாமதமாக வந்ததால் அவர் வரும் முன்பே விஷ்வபிரகாஷ் போட்டியின்றி தேர்வானதாக அறிவிக்கப்பட்டார்.

இதை எதிர்த்து கம்யூனிஸ்ட்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர். அதனால் அக்கட்சியைச் சேர்ந்த உமாதேவி என்பவருக்கு துணைத் தலைவர் பொறுப்பு வழங்கப்பட்டது. விஷ்வபிரகாஷ் ராஜினாமா செய்யாமல் துணைத் தலைவர் உமாவை சென்னைக்கு அழைத்துச் சென்று கட்சித் தலைமையைச் சமாதானப்படுத்திவிட்டாராம். ஆனால் கட்சிக் கட்டுப்பாட்டை மீறியதாக உமாதேவி, அவரது கணவர் பழனிசாமி ஆகியோர் மார்க்சிஸ்ட் கட்சியில் இருந்து நீக்கப்பட்டுள்ளனர்

தி.மு.க-வால் மட்டும் நாங்க ஜெயிக்கலை!

கரூர் மாவட்டம் புலியூர் பேரூராட்சி தலைவர் பொறுப்பு, கூட்டணிக் கட்சியான இந்திய கம்யூனிஸ்ட் கட்சிக்கு ஒதுக்கப்பட்டது. அக்கட்சியின் சார்பாக கலாராணி போட்டியிடுவார் என அறிவிக்கப்பட்டது. ஆனால் பெரும்பான்மையுடன் இருந்த தி.மு.க-வை சேர்ந்த புவனேஸ்வரி வேட்புமனு தாக்கல் செய்ததால் கலாராணி கண்ணீருடன் வெளியேறினார். கட்சித் தலைமையின் அறிவிப்புக்குப் பிறகும் புவனேஸ்வரி ராஜினாமா செய்யவில்லை.

ராதாகிருஷ்ணன்

கடலூர் மாவட்டம் நெல்லிக்குப்பம் நகராட்சி தலைவர் பொறுப்பு விடுதலை சிறுத்தைகள் கட்சிக்கு ஒதுக்கப்பட்ட நிலையில், தி.மு.க சார்பாக தனியார் பள்ளியின் உரிமையாளரும், தமிழ்நாடு திரைப்பட தயாரிப்பாளர் சங்கத்தின் கௌரவ செயலாளருமான ராதாகிருஷ்ணனின் மனைவி ஜெயந்தி போட்டி வேட்பாளராகக் களமிறங்கினார்.அவரை எதிர்த்து விடுதலை சிறுத்தைகள் சார்பாக கிரிஜா திருமாறன் களமிறங்கினார்.

எதிர் தரப்பினர் நடத்திய குதிரை பேரம், வெளியிடத்துக்கு அழைத்துச் சென்றது போன்ற நடவடிக்கைகள் காரணமாக கிரிஜா திருமாறன் தோல்வியடைந்தார். மீண்டும் துணைத் தலைவர் தேர்தலிலும் கிரிஜா போட்டியிட்டும் அதிலும் அவருக்குத் தோல்வியே மிஞ்சியது.

நெல்லிக்குப்பம் நகராட்சித் தலைவராக தேர்ந்தெடுக்கப்பட்டிருக்கும் ஜெயந்தியின் கணவர் ராதாகிருஷ்ணனிடம் பேசியபோது, “நாங்கள் பதவியை ராஜினாமா செய்ய மாட்டோம். தி.மு.க-வின் வாக்குகளால் மட்டும் நாங்கள் வெற்றி பெற்றுவிடவில்லை. எங்கள் நிலைப்பாட்டை தலைவருக்கு விளக்கமாகக் கூறி புரியவைப்போம்” என்று முடித்துக் கொண்டார்.

தொடரும் போராட்டம்!

நீலகிரி ஓவேலி பேரூராட்சி துணைத் தலைவர் பதவி விடுதலை சிறுத்தைகள் கட்சிக்கு ஒதுக்கப்பட்டிருந்த நிலையில், அக்கட்சியின் மாவட்டச் செயலாளரான சகாதேவனை எதிர்த்து போட்டியிட்ட தி.மு.க-வின் செல்வரத்தினம் வெற்றி பெற்று துணைத் தலைவரானார். கட்சித் தலைமையின் அறிவிப்புக்குப் பின்னரும் இதுவரை செல்வரத்தினம் பொறுப்பில் இருந்து விலகவில்லை.

புதுக்கோட்டை மாவட்டத்தில் கீரமங்கலம் பேருராட்சி துணைத்தலைவர் பொறுப்பு இந்திய கம்யூனிஸ்ட் கட்சிக்கு ஒதுக்கப்பட்ட நிலையில், போட்டி வேட்பாளராகக் களமிறங்கிய தி.மு.க-வின் தமிழ்செல்வன் வெற்றி பெற்றார். கீரனூர் பேரூராட்சி துணைத்தலைவர் பொறுப்பு மார்க்சிஸ்ட் கட்சிக்கு ஒதுக்கப்பட்ட போதிலும் தி.மு.க வேட்பாளரை களமிறக்கியதால் மார்க்சிஸ்ட் ஒதுங்கிக் கொண்டது. இந்த நிலையில், கூட்டணி தர்மத்தை மீறிய தி.மு.க-வினரைக் கண்டித்து இந்திய கம்யூனிஸ்ட் கட்சியினர் தொடர்ந்து போராடி வருகிறார்கள்.

தஞ்சாவூர் மாவட்டம் அதிராம்பட்டினம் நகராட்சியாக தரம் உயர்த்தப்பட்டு முதல் தேர்தலைச் சந்தித்த நிலையில், தலைவராக தி.மு.க-வின் தாஹிரா அம்மாள் வெற்றி பெற்றார். துணைத் தலைவர் பொறுப்பு இந்திய கம்யூனிஸ்ட் கட்சிக்கு ஒதுக்கப்பட்டிருந்தது. அதனால் அக்கட்சியின் சார்பாக நவாஸ் பேகம் களமிறங்கினார்.

ராம குணசேகரன்

இந்திய கம்யூனிஸ்ட் வேட்பாளரை எதிர்த்து தி.மு.க் நகரச் செயலாளர் இராம.குணசேகரன் களமிறங்கி 15 வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றார். இஸ்லாமியர்களும், இந்துக்களும் சம அளவில் வசிக்கும் இந்தப் பகுதியில் தலைவர், துணைத் தலைவர் பொறுப்புகள் ஒரே சமூகத்துக்கு ஒதுக்கியது சர்ச்சையான நிலையில் இரு கட்சிகளும் பேசி இராம.குணசேகரன் வெற்றியை ஏற்றுக் கொண்டதாகக் கூறப்படுகிறது.

ஒத்தி வைக்கப்பட்டதேர்தல்!

மதுரை மாவட்டம் திருமங்கலம், உசிலம்பட்டி நகராட்சிகளில் கட்சித் தலைமை அறிவித்த வேட்பாளர்களுக்கு எதிராக போட்டி வேட்பாளர்கள் கறமிங்கினார்கள். அதனால் அங்கு கடும் குழப்பம் ஏற்பட்டதால் இரு நகராட்சிகளிலும் தேர்தலை ஒத்திவைப்பதாக தேர்தலை நடத்தும் அலுவலர்கள் அறிவித்தனர்.

வெற்றி பெற்ற ரேணுப்பிரியா பாலமுருகன்

தேனி மாவட்டம் அல்லிநகரம் நகராட்சி தலைவர் பதவி காங்கிரஸ் கட்சிக்கு ஒதுக்கீடு செய்யப்பட்டது. அக்கட்சி சார்பாக சற்குணம் மனுத்தாக்கல் செய்யவிருந்த நிலையில், தி.மு.க கவுன்சிலர் ரேணுப்பிரியா பாலமுருகன் என்பவர் தன்னிச்சையாக களமிறங்கியதால் காங்கிரஸ் கவுன்சிலர்கள் அரங்கில் இருந்து வெளியேறினர். ரேணுப்பிரியா ராஜினாமா செய்வாரா என்பது குறித்து இதுவரை முடிவு அறிவிக்கப்படவில்லை.

தி.மு.க தலைவர் மு.க.ஸ்டாலின் அறிவிப்புக்குப் பின்னரும் கூட தமிழகத்தில் தி.மு.க-வினர் கூட்டணி தர்மத்தைக் கடைப்பிடிக்கவில்லை என்றே தெரிகிறது. தனிப்பட்ட விதத்திலும், கட்சி சார்பிலும் அடுத்தக்கட்ட நடவடிக்கை என்ன என்பது போக போக தான் தெரியும்!

Sign In

Register

Reset Password

Please enter your username or email address, you will receive a link to create a new password via email.