இந்தக் கட்டுரையில் இடம்பெற்றுள்ள கருத்துகள் அனைத்தும், கட்டுரையாளரின் தனிப்பட்ட கருத்துகள். விகடன் கருத்துகள் அல்ல! – ஆசிரியர்.

இனிமையான குழந்தைப் பருவமும், பெற்றோரின் அரவணைப்பும், அவர்கள் ஏற்படுத்தித்தரும் வாய்ப்புகளும் அனைவருக்கும் சாத்தியப்படுவதில்லை. மகிழ்ச்சியற்ற குழந்தைப் பருவமென்பது ஆகப்பெரும் துயரம். களிப்பும் கொண்டாட்டமும் சூழ்ந்து வாழவேண்டிய வயதில், வறுமையும் அவமானங்களும் துரத்த வாழ்கிற குழந்தைகள் எல்லாவற்றையும் கண்டு அச்சப்படுகிறவர்களாக மாறுகிறார்கள். இந்த அச்சம் அவர்களை வேறு பாதைகளுக்கு, சில சமயங்களில் இழுத்துச் செல்வதுண்டு. ஏதோவொரு தருணத்தில் தவிர்க்க முடியாத காரணங்களால் அப்படி வழிதவறியவர்களையெல்லாம் அரவணைத்து, அவர்களின் வாழ்வுக்கு வெளிச்சம் காட்டும் மனிதர்களும் நம்மோடு வாழ்ந்துகொண்டுதான் இருக்கிறார்கள். வாய்ப்புகள் அமையப்பெறாத எவரும் சபிக்கப்பட்டவரில்லை என்கிற பேருண்மையை நிஜமாக்கும் மனிதர்கள் பற்றித் தெரிந்துகொள்ளும் நேரங்களில் மனதில் நம்பிக்கையும் பேருவகையும் பெருக்கெடுக்கின்றன.

பன்னிரண்டாம் நூற்றாண்டின் தத்துவ மேதை மைமோனிடஸின் கூற்றுப்படி “குறைகளோடு போராடும் மனிதர்களுக்கு அவர்களிடம் மறைந்துள்ள திறமையை அவர்களுக்கு நினைவூட்டி, அவர்களது சுயம் அழிந்துவிடாமல் வாழச் செய்வதே சமூகத் தொண்டாற்றுவதின் அடிப்படை நோக்கமாக இருக்க வேண்டும்.’’ இந்தக் கொள்கையைத் தனது குறிக்கோளாகக்கொண்டு இயங்கிவரும் மலேசியாவின் My Skills Foundation எனும் தொண்டு நிறுவனத்தின் பணிகள், சமூகச் சீர்த்திருத்தத்துக்கு வித்திடும் அரும்பணிகளாகும்.

வாழ்வின் விசை அனைவரையும் ஒரே திசையில் வழிநடத்தி, கரைசேர்த்துவிடுவதில்லை. சிலர் அதன் சுழலில் சிக்கி, வழிதவறி மூழ்கிப்போய்விடுவதுமுண்டு அல்லது திசையிழந்து கரைசேர தத்தளித்து, தோற்றுப்போவதுமுண்டு. வழிகாட்டுதலின்றி திசைமாறிச் சென்ற பதின் பருவத்தினருக்கு, நம்பிக்கையும் புதுவாழ்வு ஏற்படுத்திக்கொள்ள வாய்ப்புகளும் உருவாக்கித் தரும்போது அவர்களில் பலர் நாளைய சமுதாயத்தின் தலைவர்களாகவும், முன்னோடிகளாகவும் உருவெடுத்திருக்கின்றனர் என்பதற்கு வரலாற்றில் அநேகச் சான்றுகளுண்டு.

இவர்கள்

குற்றப் பின்னணிகொண்ட பல இளைஞர்களைத் தேர்ந்தெடுத்து, தமது அமைப்பின் மூலம் அவர்களது கல்வி, உளவியல் மேம்பாடு, உடல்நலன் பேணுதல் ஆகியவற்றில் கவனம்செலுத்தி குற்றச் செயல்கள் புரியத் தூண்டும் காரணிகளிடமிருந்து விலக்கிவைத்து, அவர்களுக்குப் புதுவாழ்வு அமைத்துத் தரும் `MySkills’ அமைப்பின் தலைவர் திரு.பசுபதி மற்றும் திரு.சண்முக சிவா அவர்களின் கனவுகள் இன்று நனவாகிக்கொண்டிருக்கின்றன. அவர்களின் வழிகாட்டுதலில் பல மலேசிய இளைஞர்கள் அரசு நிறுவனங்களிலும், ஆசிரியர்களாகவும், மருத்துவர்களாகவும் பணிபுரிகின்றனர். “குற்றவாழ்வின் இருள் அவர்கள் மேல் இனி எப்போதும் படரப்போவதில்லை” என்று கனிவான குரலில் கூறுகிறார் திரு.பசுபதி. அவருடன் இணைந்து இந்த அமைப்பில் செயல்பட்டுவரும் சண்முகசிவா, மலேசியாவில் புகழ்பெற்ற மருத்துவர். இந்த அமைப்பைத் தொடங்குவதற்கு முன்பாகவே 90-களில் `செம்பருத்தி’ என்ற பத்திரிகையை நடத்தியிருக்கிறார்கள். மலேசியாவில் தமிழர் முன்னேற்றம், தமிழர் உரிமைகளுக்காகக் குரல்கொடுப்பதென அவர்களின் சமூகச் செய்லபாடுகள் நீண்ட வரலாறுகொண்டப்சி. மருத்துவர், சமூக ஆர்வலர் என்பதோடு சண்முகசிவா சிறந்த எழுத்தாளரும்கூட.

MySkills அமைப்பு

MySkills அமைப்பின் தலைவர் திரு.பசுபதியின் குழந்தைப் பருவம் வறுமையில் சிக்கித் தவித்தபோது, ஒவ்வொரு நிலையிலும் யாரோ ஒருவர் நீட்டிய உதவிக்கரமே அவருக்குக் கல்வியும், அது சார்ந்த தொழிலும் ஏற்படுத்திக்கொள்ள உறுதுணையாயிருந்தன. உதவியின் மகத்துவத்தைத் தனது வாழ்விலிருந்தே அறிந்துகொண்ட பசுபதி அவர்கள், சட்டக்கல்வி பயின்று வழக்கறிஞரான பின் தன்னிடம் வந்த வழக்குகளில் இளங்குற்றவாளிகள் என்கிற அடையாளத்தோடு வந்த சிறுவர், சிறுமியருக்கு முன்னேற்றத்தின் பாதையை வழிகாட்டிட எண்ணி 2011-ம் ஆண்டு MySkills எனும் அமைப்பைத் தொடங்கினார். மலேசியாவின் Kalumpang பகுதியில், அமைதியான சூழலில் அமைந்திருக்கும் Myskills அமைப்பு ஆயிரக்கணக்கான இளைஞர்களின் வாழ்விடமாக இருக்கிறது.

பசுமையான சுற்றுப்புறம், திறந்தவெளி தங்குமிடங்கள் என மனதுக்கு இதமளிக்கும் சூழலில் இளைஞர்கள் வாழும்போது அமைதி அவர்களுக்குப் பழகுகிறது. நிம்மதியைப் பேணும் மனத்தில் குற்ற எண்ணங்கள் உதிப்பதில்லை. சுமார் இருநூறு பேர் தங்குமளவுக்கு விடுதிகளும் அமைக்கப்பட்டுள்ளன. `ஒருவனுக்கு ஒரு மீன் கொடுப்பாயானால், அது அவனது ஒருவேளைப் பசியை மட்டுமே ஆற்றும் அவனுக்கு, மீன்பிடிக்கக் கற்றுக் கொடு. அவன் வாழ்நாள் முழுதும் பசியாற அது ஏதுவாக இருக்கும்’ என்று திருவிவிலிய வாசகம் ஒன்று உண்டு. Myskills அமைப்பில் இளைஞர்கள் அனைவரும் கல்வியோடு சேர்ந்து பற்பலத் திறன்களை வளர்த்துக்கொள்ள வழிவகைகள் செய்யப்பட்டுள்ளன. பசுமை விவசாயம், இயல் இசை நாடகம், வாகனம் ஓட்டுதல், ஓவியம் பயிலுதல், விளையாட்டு்த்திறன், எலெக்ட்ரானிக் துறை படிப்புகள், வெல்டிங், ஒப்பனையியல் போன்றவற்றைக் கற்கும் அவர்களால் வாய்ப்புகளின் கதவுகளை எளிதில் திறக்க முடிகிறது.

மலேசியத் தமிழர்களின் வாழ்க்கை, கடந்த காலத்தில் பெரும் போராட்டங்களை உள்ளடக்கியது. தோட்டத் தொழிலாளர்களாகவும், விவசாயக்கூலிகளாகவும் அடிமைப்படுத்தப்பட்டிருந்த அவர்கள் நீண்ட போராட்டங்களுக்குப் பிறகுதான் தங்களுக்கான அடிப்படை உரிமைகள் கிடைக்கப்பெற்றவர்களாக இருக்கிறார்கள். கடந்த சில தசாப்தங்களில் இந்தப் பிரச்னைகள் வேறு வடிவங்களில் உருவெடுக்கத் தொடங்கின. அவற்றில் முக்கியமானது தமிழ் மாணவர்கள் மலாய் மற்றும் சீன மாணவர்களால் எதிர்கொள்ளும் நெருக்கடிகள். குடும்பச் சூழல் காரணமாகவும், மற்ற இன மாணவர்களின் அச்சுறுத்தல் காரணமாகவும் சிறு வயதிலேயே குற்றப்பின்னணிகொண்டவர்களோடு தங்களை இணைத்துக்கொள்ளவேண்டிய நெருக்கடி நமது தமிழ் மாணவர்களுக்கு உருவாகிவிடுகிறது. இப்படி திசைமாறிப் போகிறவர்களை சரியான பாதைக்குக் கொண்டுவர வேண்டுமென்பதுதான் my skills foundation அமைப்பின் முக்கிய நோக்கம்.

MySkills அமைப்பு

கல்விதான் ஒரு மனிதனை அவனது எல்லாத் துயரங்களிலிருந்தும் விடுதலை செய்யக்கூடிய ஆயுதம். இங்கு பயிலும் மாணவர்களுக்கு மலேசிய கல்வித்துறையின் பாடத்திட்டத்தின்படி மாணவர்களுக்குக் கல்வி பயிற்றுவிக்கப்படுகிறது. அதற்கான தேர்ந்த ஆசிரியர்களும், தன்னார்வலர்களும்தான் இவ்வமைப்பின் முதுகெலும்பாக விளங்குகின்றனர். கல்வி மற்றும் திறன் மேம்பாட்டு வகுப்புகளோடு சேர்ந்து, இளைஞர்களின் மனவியலைப் பக்குவப்படுத்தும் யோகப் பயிற்சி வகுப்புகளும், ஆன்மிகச் சொற்பொழிவுகளும் அவ்வப்போது நிகழ்ந்தவண்ணம் உள்ளன.

Myskills அமைப்பில் பயிலும் இளைஞர்களோடு உரையாடினால் அவர்களது ஆர்வமும் அறிவும் நம்மை வியக்கச் செய்துவிடும் என்கின்றனர் அவ்வமைப்பின் தன்னார்வலர்கள். “வாய்ப்பும் வாழ்வும் மறுக்கப்பட்ட வலி, அவர்களை வாழ்வை இன்னும் அதிகமாக நேசிக்கவைத்திருக்கின்றன. துன்பமெனும் பாலைவனத்தில் நடந்து, வெடித்துப்போன அவர்களது பாதங்கள் வாழ்வின் பசுமையில் இளைப்பாறிட ஏங்குகின்றன. அவர்கள் அவ்விடம் சென்றடைய சிறு பாலமென எங்கள் அமைப்பு செயல்படுவதில் எங்களுக்கு மிகுந்த மகிழ்ச்சி” என்று உவகை பொங்கக் கூறுகிறார் ஒரு தன்னார்வலர்.

கல்வி மற்றும் இளைஞர்களுக்குக் கிடைக்கும் எவ்வித பயிற்சிக்கும் அவர்களிடத்தில் கட்டணமேதும் வசூலிக்கப்படுவதில்லை. பெற்றோர் மற்றும் உறவினர்கள் அவர்களைச் சந்தித்துச் செல்லவும் தடையேதுமில்லை. அவர்களது வாழ்வுக்கான செலவு மொத்தமும் தன்னார்வலர்களின் நன்கொடைகளால் மட்டுமே சந்திக்கப்பட்டுவருகின்றன. இவ்வமைப்பின் இயக்கம் உலகெங்குமுள்ள பல நல்ல உள்ளங்களின் கொடைக்கரங்களால் நடக்கிறது. பொருளாதார உதவி செய்யும் ஒவ்வொருவரும் இவ்வமைப்பின் சிற்பிகளாவர். இவ்வமைப்பின் பலம் கூடி, சுயச்சார்பில் இயங்கும் நாள் வெகு தொலைவிலில்லை. அதை இவ்வமைப்பின் இளைஞர்களே சாத்தியப்படுத்தித் தருவர் என்பதில் துளியும் ஐயமில்லை.

2017-ம் வருடம் முதன்முறையாக மலேசியா சென்றிருந்தபோது எழுத்தாளர் வல்லினம் நவீன் கோலாலம்பூரின் முக்கியப் பகுதியில் my skills foundation அமைப்பினர் நடத்தும் உணவகத்துக்கு அழைத்துச் சென்றிருந்தார். முழுக்க முழுக்க அந்த அமைப்பில் பயிலும் இளைஞர்களே எல்லா வேலைகளையும் செய்கிறார்கள். அங்கிருக்கும் தொலைக்காட்சியில் அந்த இளைஞர்கள் இங்கு வருவதற்கு முன்பு எப்படி இருந்தார்கள், அவர்களது குடும்பப் பின்னணி இவற்றோடு இந்த அமைப்புக்கு வந்த பிறகு அவர்களது வாழ்க்கை என்னவாக மாறியிருக்கிறதென அவர்களே பேசும் காணொலிகள் வருகின்றன. அங்கு பொறுப்பாளர்களாக இருப்பவர்களை `அக்கா, அண்ணன்…’ என அந்த இளைஞர்கள் உரிமையோடு அழைக்கிறார்கள். தன்னார்வலர்களாக இருப்பவர்களும், அவர்களைத் தங்கள் சொந்த சகோதர, சகோதரிகளாக நடத்துவதைப் பார்த்தபோது மகிழ்ச்சியாக இருந்தது. சிறுவயதில் ஆதரவற்றோர்களுக்கான விடுதியில் வளர்ந்தவன் என்ற முறையில் அந்தப் பருவத்தில் உருவாகும் தனிமையுணர்ச்சி, எல்லோராலும் கைவிடப்பட்டது போன்ற குழப்பங்களெல்லாம் எத்தனை வெறுப்பையும் தாழ்வுணர்ச்சியையும் உருவாக்கக்கூடுமென்பதை நன்கறிவேன். அங்கிருந்த இளைஞர்களிடம் நான் கண்டது தன்னம்பிக்கையையும் மனவுறுதியையும்தான்.

பசுபதி

‘கபாலி’ திரைப்படத்தின் கதை உருவானபோது, இயக்குநர் ரஞ்சித்தோடு திரைக்கதையில் இணைந்து வேலைசெய்த எழுத்தாளர் நவீன், மலேசியாவிலிருக்கும் MySkills அமைப்பைப் பற்றியும், அதன் மூலம் பயன்பெறும் இளைஞர்கள் பற்றியும் எடுத்துக் கூறி அங்கு அழைத்துச் சென்றிருக்கிறார். அதன் பிறகு திரைப்படத்தின் காட்சியமைப்பில் சிற்சில மாற்றங்கள் ஏற்படுத்தி, அவர்களது வாழ்வையும் கதைக்களத்தில் இணைத்துக்கொண்டதாகக் கூறப்படுகிறது. `அப்பழுக்கற்ற சித்தனுக்கு கடந்த காலம் மட்டுமே இருக்கிறது. தவறு செய்தவனுக்குத்தான் எதிர்காலம் இருக்கிறது’ என்று எங்கோ படித்த நினைவின் உண்மை MySkills அமைப்பின் செயல்பாடுகளின் மூலம் நன்கு விளங்குகிறது.

Sign In

Register

Reset Password

Please enter your username or email address, you will receive a link to create a new password via email.