முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் கைது செய்யப்பட்டதை கண்டித்து விழுப்புரம் பழைய பேருந்து நிலையத்தில் அதிமுக-வினர் இன்று (28.02.2022) கண்டன ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். ஆர்ப்பாட்டத்தில் தலைமை தாங்கி பேசிய முன்னாள் சட்டத்துறை அமைச்சர் சி.வி.சண்முகம், “மக்களுக்குக் கொடுத்த வாக்குறுதிகள் அனைத்தையும் மறந்துவிட்டு அதிமுக-வை முடக்கிவிடலாம் என்று கணக்கு போட்டுக்கொண்டு, 24 மணி நேரமும் அதையே சிந்தித்துக் கொண்டிருக்கிறார் ஸ்டாலின். அதற்காக அவர் வகுத்திருக்கும் திட்டம்தான் முன்னாள் அதிமுக தலைவர்கள் மீது பொய் வழக்கு போடுவது, முன்னாள் அமைச்சர்கள் வீடுகளில் சோதனை செய்வது, கைது செய்து சிறையில் அடைப்பது போன்ற நடவடிக்கைகள். அப்படி செய்தால் அந்த இயக்கத்தை வழிநடத்த யாரும் இருக்க மாட்டார்கள், அதிமுக-வை முடக்கிவிடலாம் என்று தவறான கணக்குப் போட்டுக் கொண்டிருக்கின்றார்.

விழுப்புரம் அதிமுக கண்டன ஆர்ப்பாட்டம்

அப்படித்தான் தற்போது முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் கைது செய்யப்பட்டிருக்கிறார். கைதுக்காக அதிமுக இந்த ஆர்ப்பாட்டம் செய்யவில்லை. கைது செய்வதை எண்ணி அதிமுக என்றும் பயப்படாது. சிறை என்பது எங்களுக்குப் புதிதல்ல. உங்கள் பூச்சாண்டியை கண்டு அதிமுக-வினர் பயப்பட மாட்டோம். நினைவில் வைத்துக்கொள்ளுங்கள் அதிமுக-வை முடக்கிவிடலாம், அடக்கிவிடலாம் என நினைத்தால்… நீ ஏமாந்து போவ ராஜா. உங்கள் கட்சி காணாமல் போய்விடும்! முதலில் உங்கள் முதுகில் இருக்கும் அழுக்கை பாருங்கள். உங்களுக்கு மிகப்பெரிய பள்ளம் தோண்டிக்கொண்டு இருக்கிறார்கள் உங்கள் கட்சியில். உலகம் ஒரு உருண்டை தான், அதுவும் கட்டாயம் ஒரு நாள் வரும்.

அதிமுக-வை முடக்கிவிடலாம் என ஸ்டாலின் நினைக்கலாம். ஆனால் உங்களைப் போல கெட்ட எண்ணம் கொண்டவர்கள் அதிமுக-வினர் இல்லை. அதிமுக நினைத்திருந்தால் திமுக என்ற கட்சியே இன்று இல்லாமல் போயிருந்திருக்கும். அன்று வைகோ திமுக-விலிருந்து பிரிந்தபோது, பெருவாரியான மாவட்டச் செயலாளர்கள் அவருடன் சென்றுவிட்டார்கள். சென்னை அண்ணாசாலையில் வைகோ திரளாக ஊர்வலம் சென்றார். அப்போது அவரை எங்களின் அம்மா அனுமதித்திருந்தால் திமுக அறிவாலயம் வைகோவால் கைப்பற்றப்பட்டிருக்கும். ஆனால் அன்று எங்கள் அம்மா அப்படி நினைக்கவில்லை. ‘யாராக இருந்தாலும் சட்டம் ஒழுங்கு கெடாமல் பாதுகாப்பளிக்க வேண்டும்’ என்று நினைத்து அவர் செல்லும் வழியை மாற்றிவிட்டார். இன்று இருக்கும் திமுக, நீங்கள் முதலமைச்சர் பதவியில் இருப்பதெல்லாமே எங்களின் அம்மா போட்ட பிச்சை. எனவே மனதில் வைத்து செயல்படுங்கள். மீண்டும் அதிமுக வெற்றி பெற்று தமிழகத்தை ஆளும். அப்போது நீங்கள் செய்யும் வினைக்கான எதிர்வினையை அனுபவித்தே ஆகவேண்டும், மறந்துவிட மாட்டோம்.

சி.வி.சண்முகம்

எம்.ஜி.ஆர், அம்மாவுக்கு இருந்த பெருந்தன்மை எங்களுக்கு இல்லை. ஏனெனில் அவர்கள் கடவுள்! அவர்களைப் போல நாங்கள் இல்லை. ‘ஒரு கன்னத்தில் அறைந்தால் மறு கன்னத்தை காட்டு’ என்பதற்கு நாங்கள் இயேசு அல்ல. ஒரு கன்னத்தை நீங்கள் காட்டினால், அடுத்த கன்னத்தை பிச்சி எடுத்துவிடுவோம். முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார், யார்வீட்டு சொத்தையாவது அபகரித்தாரா? கொள்ளையடித்தாரா? ஆள்கடத்தினாரா? பெருங்குற்றம் எதையாவது செய்தாரா? எதற்காக கைது..? கொரோனாத் தொற்றால் பாதித்தவர்கள் வாக்களிப்பதற்காக ஒதுக்கப்பட்ட கடைசி ஒரு மணி நேரம் (5 முதல் 6) இடைவெளியிலே காவலர்களை வைத்து மற்றக் கட்சிகளைச் சேர்ந்தவர்களை வெளியேற்றிவிட்டு திமுக-வினர் கள்ள ஓட்டு போட்டிருக்கிறார்கள். அப்படி கள்ள ஓட்டு போட்ட நரேஷ் குமார் என்பவரை தடுத்தவரை தான் கைது செய்துள்ளனர். இன்றைய ஆட்சியில் நீதித்துறையும் மிரட்டப்படுகிறது, இதுதான் உண்மை.

அதிமுக நினைத்திருந்தால் உங்கள் அமைச்சர்களையும் கைது செய்து சிறையில் அடைத்து விசாரித்திருக்க முடியும். ஆனால் அதிமுக-வினர் நியாயத்திற்கு கட்டுப்பட்டவர்கள். அதற்கான பலனை இன்று அனுபவிக்கிறோம். அடுத்த குறி சி.வி.சண்முகம், கைது செய்யப்படுவார்… என்று செய்திகள் உலாவியதை பார்த்தேன். செய்துகொள்ளுங்கள், இந்த கைதுக்கெல்லாம் அஞ்சுபவர்கள் நாங்கள் இல்லை. எப்போது வேண்டுமானாலும் தாராளமாக வரலாம். இரவு 3 மணிக்கு வருவது, விடிய காலையில் வருவதெல்லாம் வேண்டாம். அப்பாயின்மென்ட் சொல்லிவிட்டே வரலாம். வேட்டி, சட்டை கட்டி ரெடியாக இருக்கிறோம். வேண்டும் என்றால் உங்களுக்கு டிபன் கூட சொல்லி வைக்கிறோம்.

முதலமைச்சர் ஸ்டாலின்

திமுக தலைவருக்கு சொல்கிறோம்… முடிந்தால் வரலாற்றைப் படியுங்கள். இல்லையென்றால் படிக்கத் தெரிந்தவரை படிக்கச் சொல்லி கேளுங்கள். அதிமுக எப்போதெல்லாம் தோல்வியை சந்திக்கிறதோ… அடுத்தமுறை வரலாறு காணாத வெற்றியை பெறும். வரலாற்றை எடுத்துக் கொஞ்சம் புரட்டிப் பாருங்கள். எதிர்காலத்தையும் நினைத்துப் பாருங்கள். தந்தைக்கு தான் தெரியும் பிள்ளையின் அருமை ‘தன் பிள்ளை அதுக்கு சரிபட்டு வரமாட்டான்’ என்று நினைத்த கருணாநிதி, தன்னால் முடியாத காலத்திலும் முதலமைச்சர் பதவி, கட்சித் தலைவர் பதவி என எதையுமே ஸ்டாலினுக்கு தரவில்லை. அவர் சுயநினைவில் இல்லாமல் இருந்த நேரத்தில், செயல் தலைவர் எனும் பதவியை ஸ்டாலின் ஏமாற்றி சூட்டிக்கொண்டார். அதிமுக-வை அழித்துவிடலாம் என்று நினைத்தால் அது எந்த காலத்திலும் நிறைவேறாது.

கண்ணை திறந்து கொண்டே கனவு காண்கிறார் ஸ்டாலின். நாடு முழுவதும் சமூக நீதியை பரப்ப போகிறாராம். முதலில் உங்கள் கட்சியில் சமூக நீதி இருக்கிறதா? அப்பா, பிள்ளை, பேரன், அடுத்தது கொள்ளுப்பேரன்… என்ன சமூகநீதி உள்ளது உங்கள் கட்சியில். என்ன அருகதை இருக்கிறது திமுக-விற்கு சமூகநீதி பற்றி பேசுவதற்கு. அதிமுக என்றைக்கும், எப்போதும் யாருக்கும் அஞ்சாது” என்று முடித்தார் காட்டமாக.

இந்த கண்டன ஆர்ப்பாட்டம், சுமார் 1 மணி நேரத்தைக் கடந்ததாலும், அதிமுக தொண்டர்கள் ஆயிரக்கணக்கில் குவிந்ததாலும் அங்குப் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது. இதனால் பாதிப்புக்குள்ளான சமூக ஆர்வலர் ஒருவர், உரிய நடவடிக்கை கேட்டு மாநிலக் கட்டுப்பாட்டு அலுவலகத்தில் புகார் அளித்துள்ளார்.

Sign In

Register

Reset Password

Please enter your username or email address, you will receive a link to create a new password via email.