உலகமே இன்று உற்றுகவனிப்பது உக்ரைன்- ரஷ்யா பிரச்னையைதான். கடந்த சில மாதங்களாகவே உக்கிரமாக இருந்த இந்த பிரச்னை இன்று குண்டு வீச்சு, தாக்குதல் என போர் வரை சென்றிருக்கிறது. இருதரப்பிலும் பல உயிரிழப்புகள், அச்சத்திற்கு தள்ளப்பட்ட மக்கள் என வேதனை நிலவுகிறது. இவ்விவகாரத்தில் இந்தியாவை உக்ரைன் மலையளவு நம்புகிறது. இந்தியா தங்களுக்கு ஆதரவு தெரிவித்தால் சாதகமாக இருக்கும் என கருதுகிறது உக்ரைன். ஆனால் உக்ரைனுக்கு அமெரிக்கா ஆதரவு தெரிவிக்கும் அளவிற்கு இந்தியா ஆதரவு தெரிவிக்கவில்லை. மென்மையான போக்கையே இதுவரை கடைபிடிக்கிறது.

இந்நிலையில் உக்ரைன்- ரஷ்யா இடையேயான போர், இந்தியாவை எந்த அளவில் பாதிக்கும்? இந்தியா இந்த நேரத்தில் எடுக்கவேண்டிய நடவடிக்கை என்ன என்பது குறித்து சவீதா நிகர்நிலை பல்கலைக்கழகத்தின் இணை பேராசிரியர் கார்த்திகேயன் அவர்களிடம் பேசினோம். அவர் பேசும்போது,

image

“முதலில் பாதிப்பு என்றால் அது பொருளாதார ரீதியான பாதிப்பாகத்தான் இருக்கும். இந்தியாவை எடுத்துக்கொண்டால் வர்த்தகம், பாதுகாப்பு, வெளிநாட்டு கொள்கை என அனைத்திலும் கிட்டத்தட்ட ரஷ்யா, அமெரிக்கா இரண்டு நாடுகளுடனுமே சமமான உறவில்தான் இந்தியா இருக்கிறது. ஒரேயொரு வித்தியாசம் என்னவென்றால் ரஷ்யாவைக் காட்டிலும் அமெரிக்காவில் இந்திய மக்கள் அதிகம்பேர் வேலை செய்கின்றனர். இந்த நேரத்தில் அமெரிக்காவிற்கு எதிரான நிலைப்பாட்டை இந்தியா எடுக்கும்பட்சத்தில், இந்திய மக்களுக்கு விசா நெருக்கடி, வேலை நெருக்கடி போன்ற பலவற்றை அமெரிக்கா ஏற்படுத்தக்கூடும். அதுமட்டும் இல்லாமல் வர்த்தகத்திலும் அமெரிக்காவுடன் பின்னிப்பிணைந்துதான் இருக்கிறோம்.

மறுபக்கத்தில் ரஷ்யாவை எடுத்துகொண்டோம் என்றால், நமது எண்ணெய் நிறுவனங்கள் அதிக அளவில் ரஷ்யாவில் முதலீடு செய்துள்ளன. அதேபோல பாதுகாப்பு உபகரணங்களின் உற்பத்தி சார்ந்த விவகாரங்களில் இந்தியாவிற்கு ரஷ்யா பக்கபலமாக இருக்கிறது. பிரான்ஸ், இஸ்ரேல் போன்ற நாடுகளில் இருந்தும் பாதுகாப்பு சம்பந்தமான தளவாடங்களை நாம் வாங்குகிறோம். ஆனால், ரஷ்யா உற்பத்திக்கு பெரிய அளவில் பக்கபலமாக இருக்கிறது. அதாவது மற்ற நாடுகளில் நாம் பாதுகாப்பு தளவாடங்களை விலைக்கு வாங்குகிறோம். ரஷ்யாவே, இந்தியாவிலேயே பாதுகாப்பு தளவாடங்களை தயாரிக்க உதவுகிறது. அதுசார்ந்த தொழில்நுட்பத்தை நம் இந்தியர்களுக்கும் கற்றுக்கொடுத்து தளவாடங்களை தயாரிக்க உதவுகிறது.

image

உதாரணத்திற்கு நாம் ஒரு நாட்டில் இருந்து பாதுகாப்பு தளவாடத்தை விலைக்கு வாங்குகிறோம். அதில் ஏதாவது பிரச்னை ஏற்படுகிறது என்றால் அதனை அந்நாட்டிடமே கொடுத்து சரிசெய்ய வேண்டும். அதற்கும் தனித்தொகையை கொடுக்க வேண்டும். அவர்கள்தான் சரிசெய்துகொடுப்பார்கள். பழுது பார்ப்பதற்கான தொழில்நுட்பத்தை கற்றுகொடுக்கமாட்டார்கள். ஆனால் ரஷ்யாவிடம் ஒரு பாதுகாப்பு தளவாடத்தை வாங்குகிறோம் என்றால் அதனை எப்படி சரிசெய்வது என்பது முதற்கொண்டு அனைத்து தொழில்நுட்பத்தையும் அந்நாடு கற்றுக்கொடுக்கிறது. இதனால் இதுபோன்ற தயாரிப்புகளை முன்னெடுக்க தனியார் நிறுவனங்கள் கூட முன்வருகின்றன.

இந்தியா நிலைப்பாடு எப்படி இருக்க வேண்டும்?

“நாங்கள் யாரையும் பகைத்து கொள்ளமாட்டோம். இரண்டு தரப்பில் இருந்தும் நல்லது நடந்தால் ஏற்றுக்கொள்வோம்” என்ற நடுநிலை நிலைப்பாட்டை எடுத்தால் சரியாக இருக்கும். ஆனால் இதில் மற்றொரு சிக்கலும் இருக்கிறது. உக்ரைனின் இறையாண்மை பாதிக்கும் வகையில்தான் ரஷ்யாவின் செயல்பாடு இருக்கிறது. இதனை இந்தியா எளிதாக எடுத்துகொள்ளும்பட்சத்தில் நாளைக்கு நமக்கே ஆபத்து ஏற்படலாம்.

அதாவது அருணாச்சலப் பிரதேச எல்லை விவகாரத்தில் நமக்கும் சீனாவுக்கு பிரச்னை இருக்கிறது. சீனாவும் இப்போது ரஷ்யாவுக்கு ஆதரவுதான் கொடுக்கிறது. நாளைக்கே அருண்ணாச்சலப் பிரதேச எல்லை பிரச்னை இன்னும்கூடுதலாக வரும்போது, மற்ற உலக நாடுகள் ‘அந்த நாடுகள் பேசி அமைதியாக பேசிக்கொள்ளட்டும்’என வாய்மூடி இருக்கும் நிலை ஏற்படலாம்.

image

இந்தியா இந்த நேரத்தில் முதலில் செய்ய வேண்டியது என்னவென்றால், உக்ரைனில் தவிக்கும் இந்தியர்களை மீட்க வேண்டும். பொதுமக்கள் மீது தாக்குதல் நடத்தமாட்டோம் என ரஷ்யா தெரிவித்திருந்தாலும்கூட, போர் பதற்றத்தால் மக்களுக்கு குடிநீர், உணவு, மின்சாரம் கிடைப்பதில் சிக்கல் ஏற்பட்டுவிடும். உயிருக்கு ஆபத்து இல்லையென்றாலும்கூட அடிப்படை தேவைகளுக்கு பிரச்னை ஏற்படும். எனவே சிறப்பு விமானங்களை இயக்கி உடனடியாக சிக்கித் தவிக்கும் இந்தியர்களை, மத்திய அரசு மீட்க வேண்டும். விமானங்களை தரையிறக்க முடியாதபட்சத்தில், தரைவழி போக்குவரத்து வழியாக பாதுகாப்பான அண்டை நாடுகளுக்கு இந்தியர்களை கொண்டுசெல்ல நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றார்.

Source : WWW.PUTHIYATHALAIMURAI.COM

Sign In

Register

Reset Password

Please enter your username or email address, you will receive a link to create a new password via email.