“`கரூர் நகர்புற உள்ளாட்சித் தேர்தலில் வார்டுகள் பிரிப்பதில் ஜோதிமணிக்கும், அமைச்சர் செந்தில் பாலாஜிக்கும் இடையில் ஏற்பட்ட மோதல், இப்போதைக்கு முற்றுப்பெறாதுபோல’ என அரசியல் அரங்கில் பேச்சு அடிபட்டுக்கொண்டிருக்கிறது. இந்த நிலையில், “கடந்த ஊரக உள்ளாட்சித் தேர்தலில், தி.மு.க பலத்தோடு போட்டியிட்டாலும், காங்கிரஸ் 95 சதவிகிதம் தோற்றதற்குக் காரணம் ஜோதிமணியும், அனுபவம் இல்லாத மாவட்டத் தலைவர் சின்னசாமியும்தான்” என்று காங்கிரஸ் பொதுக்குழு உறுப்பினர் இன்ஜினீயர் பிரபாகர் என்பவர் வெளிப்படையாக விமர்சித்திருப்பது, காங்கிரஸ் கட்சிக்குள் சலசலப்பை ஏற்படுத்தியிருக்கிறது.

பிரபாகர் கண்டன அறிக்கை

இந்த விவகாரம் தொடர்பாக தனியார் தொலைக்காட்சிக்கு பேட்டி அளித்த இன்ஜினீயர் பிரபாகர், ஜோதிமணியை விமர்சித்து கண்டன அறிக்கையும் வெளியிட்டிருக்கிறார்.

அதில், “கரூர் மாவட்ட காங்கிரஸ் கட்சியைக் குழிதோண்டிப் புதைத்த பாராளுமன்ற உறுப்பினர் செல்வி.ஜோதிமணிக்குக் கண்டனம். கடந்த ஊரக உள்ளாட்சித் தேர்தலில், தி.மு.க கட்சியின் பலத்தோடு சந்தித்தும், காங்கிரஸ் 95 சதவிகிதம் தோல்வியைச் சந்தித்ததற்கு முழுக் காரணம் ஜோதிமணியும், அனுபவம் இல்லாத மாவட்டத் தலைவர் சின்னசாமியும்தான். ஏற்கெனவே, அவர்கள் செயல்பாடுகளால், 100-க்கும் மேற்பட்ட நிர்வாகிகள் கட்சியைவிட்டு வெளியேறிவிட்டனர். அதன் பெருமை செல்வி.ஜோதிமணியையே சேரும். தற்போது, நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தலில் தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டியால் அதிகாரபூர்வமாக அறிவிக்கப்பட்ட மாவட்டத் தேர்தல் பணிக்குழு உறுப்பினர்களைக் கலந்து ஆலோசிக்காமல் தன்னிச்சையாகச் செயல்பட்டு, நகராட்சித் தேர்தலில் தோல்வியைத் தேடித்தர முயல்கிறார்.

Also Read: “நான் இங்கே விருந்துக்கு வரவில்லை!”… திமுக-வினருக்கு எதிராகக் கொதித்த ஜோதிமணி – நடந்தது என்ன?

ஜோதிமணி தனிப்பட்ட முறையில் தி.மு.க அமைச்சர் செந்தில் பாலாஜி மீதிருக்கும் காழ்ப்புணர்ச்சியில், அவரை ஒருமையில் பேசி, அநாகரிமாக நடந்துகொண்டு, காங்கிரஸ் கட்சிமீதும், தி.மு.க-மீதும் பழிபோடுகிறார். தேர்தலுக்குப் பின்பு வரும் விளைவுகளுக்கு ஜோதிமணியே பொறுப்பேற்க வேண்டும். செல்வி.ஜோதிமணி தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டியையும், மூத்த தலைவர்களையும் மதித்து, காங்கிரஸ் கட்சியை வெற்றிப் பாதையில் அழைத்துச் செல்ல வேண்டும் என இதன் மூலம் அறிக்கை விடுவதுடன், ஜோதிமணியின் செயல்பாட்டுக்குக் கண்டனமும் தெரிவித்துக்கொள்கிறேன்” என்று பிரபாகர் குறிப்பிட்டிருக்கிறார்.

சின்னசாமியின் அறிக்கை

இந்த நிலையில், இவரது அறிக்கைக்கு எதிராக காங்கிரஸ் கமிட்டியின் கரூர் மாவட்டத் தலைவர் சின்னசாமி அறிக்கை ஒன்று வெளியிட்டிருக்கிறார். அந்த அறிக்கையில்,

“ `ஜோதிமணிக்கு கரூர் மாவட்ட காங்கிரஸ் கண்டனம்’ என்று ஒரு தனியார் தொலைக்காட்சியில் வெளிவந்திருக்கும் செய்தியை நாங்கள் மறுக்கிறோம். எங்கள் நாடாளுமன்ற உறுப்பினர் எளிய பின்னணியில் இருந்து அரசியலுக்கு வந்து, வலிமையாகவும், அர்ப்பணிப்போடும் மக்களுக்குப் பணியாற்றுபவர். எளிமையும் நேர்மையும் மிகுந்த ஒரு போராளி, காங்கிரஸ் தொண்டர்கள் மற்றும் கரூர் தொகுதி மக்களின் அன்புக்குரியவர். அவர் மீது இதுபோன்று கரூர் மாவட்ட காங்கிரஸின் பெயரால் அவதூறு பரப்புவது ஏற்புடையது அன்று. ஊடக அறமும் அல்ல. இது போன்ற செய்திகளை வெளியிடும்போது பொறுப்புடனும், உண்மைத்தன்மையுடனும் நடந்துகொள்ள வேண்டும் என்று, கரூர் மாவட்ட காங்கிரஸ் கமிட்டியின் தலைவர் என்ற முறையில் கேட்டுக்கொள்கிறேன்” என்று சின்னசாமி குறிப்பிட்டிருக்கிறார்.

கரூர் காங்கிரஸுக்குள் சலசலப்பை ஏற்படுத்தியிருக்கும் இந்த விவகாரம் குறித்து, இன்ஜினீயர் பிரபாகரிடமே பேசினோம்.

“நான் காங்கிரஸ் கட்சியில் மாநில பொதுக்குழு உறுப்பினராக இருக்கிறேன். அதோடு, காங்கிரஸ் கமிட்டி தலைமை, நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தல் சம்பந்தமாக பேச்சுவார்த்தை நடத்த ஜோதிமணி தலைமையில், மாவட்டத் தலைவர் சின்னசாமி, முன்னாள் மாவட்டத் தலைவர் பேங்க் சுப்பிரமணியம் ஆகியோருடன் என்னையும் நியமித்தது.

இன்ஜினீயர் பிரபாகர்

ஆனால், ஜோதிமணி எங்கள் மூவரையும் விட்டுட்டு, சின்னசாமியை மட்டும் ஆழைத்துக்கொண்டு சென்று இப்படிச் செய்துவிட்டார். அவரின் செயலால் கட்சிக்கும் கெட்ட பெயர். எங்களையும் அவர் மதிக்கவில்லை. அதனால்தான், அவருக்கு கண்டனம் தெரிவித்தேன்” என்றார்.

Sign In

Register

Reset Password

Please enter your username or email address, you will receive a link to create a new password via email.