இதுவரை நகராட்சியாக இருந்துவந்த கரூர், முதன்முறையாக மாநகராட்சியாக தரம் உயர்த்தப்பட்டிருக்கிறது. இந்த நிலையில், கரூர் மாநகராட்சி மேயர் பதவி, மகளிருக்கு ஒதுக்கப்பட்டிருக்கிறது. இதனால் தி.மு.க., அ.தி.மு.க உள்ளிட்ட பிரதானக் கட்சிகள் கரூர் மாநகராட்சியைக் கைப்பற்ற வியூகங்களை வகுக்கத் தொடங்கியிருக்கின்றன. நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தலில் போட்டியிடும் தி.மு.க இன்று கூட்டணிக் கட்சிகளுடன் வார்டு பங்கீடு பேச்சுவார்த்தை நடத்தியது. கரூர் தி.மு.க மாவட்ட அலுவலகமான கலைஞர் அறிவாலயத்தில் கூட்டணிப் பங்கீடு தொடர்பான பேச்சுவார்த்தை, தி.மு.க கரூர் மாவட்டப் பொறுப்பாளரும், மின்சாரத்துறை அமைச்சருமான செந்தில் பாலாஜி தலைமையில் நடைபெற்றது. இந்தப் பேச்சுவார்த்தையில் கலந்துகொண்ட காங்கிரஸ் எம்.பி ஜோதிமணி, தான் கேட்ட வார்டுகளை தி.மு.க தர முன்வராததால், செந்தில் பாலாஜியுடன் வாக்குவாதம் செய்ததாகக் கூறப்படுகிறது.

வெளியேறும் ஜோதிமணி

அதனால், அங்கிருந்த தி.மு.க-வினர் தன்னை ஒருமையில் பேசி, வெளியேறும்படி தெரிவித்ததாகக் கூறிய ஜோதிமணி, காங்கிரஸ் கட்சியினரோடு அலுவலகத்தைவிட்டு ஆவேசமாக வெளியேறினார். அவரை காங்கிரஸ் கரூர் மாவட்டத் தலைவர் சின்னசாமி, கையைப் பிடித்து அழைத்துச் சென்று காரில் ஏற்றி அனுப்பிவைத்தார். அப்போது ஜோதிமணி, தி.மு.க-வினரைப் பார்த்து, “உங்கள் வீட்டுக்கு நான் விருந்துக்கு வரவில்லை… ஒருமையில் எனக்கும் திருப்பிப் பேசத் தெரியும்” என ஆவேசமாகப் பேசியபடி அங்கிருந்து கிளம்பிச் சென்றார்.

இந்த விவகாரம் பரபரப்பை ஏற்படுத்திய நிலையில், அமைச்சர் செந்தில் பாலாஜி செய்தியாளர்களைச் சந்தித்துப் பேசினார். அப்போது அவர், “தி.மு.க சார்பிலும், எங்களது தோழமைக் கட்சிகள் சார்பிலும் கையெழுதிட்டு எல்லோருக்கும் எந்தெந்த வார்டுகள் என்பதை இறுதி செய்துவிட்டோம். தலைமையின் ஒப்புதல் பெற்ற பிறகு தி.மு.க-வின் சார்பில் போட்டியிடக்கூடிய வேட்பாளர் பட்டியல் வெளியிடப்படும். மதச்சார்பற்ற முற்போக்கு கூட்டணிக் கட்சிகளின் நிர்வாகிகள் சார்பில், இந்திய தேசிய காங்கிரஸ் கட்சி மற்றும் இதர கட்சிகளோடு பங்கீடு பேச்சுவார்த்தை இரண்டு, மூன்று நாள்களாக நடந்துவந்தது. அதைத் தொடர்ந்து, அதில் அவர்கள் கொடுத்த பட்டியலை வைத்து எங்கள் கட்சி நிர்வாகிகளோடு கலந்து பேசி இறுதிசெய்யப்பட்டது.

Also Read: “நான் இங்கே விருந்துக்கு வரவில்லை!”… திமுக-வினருக்கு எதிராகக் கொதித்த ஜோதிமணி – நடந்தது என்ன?

வார்டு பங்கீடு பேச்சுவார்த்தையில் செந்தில் பாலாஜி

மூன்று நாள்களாகத் தொடர்ந்து எங்களுடைய மாவட்ட அலுவலகத்திலிருந்து, இந்திய தேசிய காங்கிரஸ் கட்சியின் மாவட்டத் தலைவர் அவர்களுக்கு எடுத்துச் சொல்லப்பட்டது. பேச்சுவார்த்தைக்கு வந்தால், முடித்துக்கொள்ளலாம் என்று சொன்னபோது, என்னை வரச்சொல்லி எங்கள் கழகத்தின் சட்டத்துறை இணைச் செயலாளர் மணிராஜிடம், காங்கிரஸ் மாவட்டத் தலைவர் சொல்லியிருக்கிறார். அதனால், கோவையில் பேச்சுவார்த்தையை தொடர்ந்துகொண்டிருந்த நிலையில், இன்று இங்கே அவசரமாக வந்தேன். அவர்களைப் பேச்சுவார்த்தைக்கு அழைத்தோம். அவர்கள் இங்கே வந்தபோது சில கருத்துகளை எடுத்துச் சொன்னார்கள். மாநகராட்சியில் போட்டியிட நான்கு வார்டுகள் கேட்கிறார்கள் என்றால், அந்த நான்கையும் பொது வார்டுகளாகக் கேட்கிறார்கள். ஆனால், 50 சதவிகிதம் வார்டுகள் மகளிருக்குப் போட்டியிட ஒதுக்கப்பட்டிருக்கின்றன.

இதனால், கூட்டணிக் கட்சிகள் அதிகமான பொது வார்டுகளை கேட்டு வாங்கிகொண்டார்கள் என்றால், எங்கள் கட்சியின் ஒன்றியச் செயலாளர்கள், மாநகரச் செயலாளர்களுக்கெல்லாம் போட்டியிடும் வாய்ப்பு இல்லாமல் போய்விடும். அதனால், அவர்களிடம் நீங்கள் கொடுத்த பட்டியலில் 50 சதவிகித வார்டுகளை தர நாங்க ஒப்புக்கொள்கிறோம். அதேபோல, நாங்கள் சொல்கிற வார்டுகளையும் நீங்கள் எடுத்துக்கொள்ள வேண்டும் என்று சொன்னோம். ஆனால், முரண்பட்ட கருத்துகளைச் சொன்னார்கள். அதனால், நாங்கள் இங்கிருக்கும் நிலைமையை எங்கள் தலைமைக்கு எடுத்துச் சொல்லியிருக்கிறோம். அவர்களும், காங்கிரஸ் தலைமையிடம் பேசியிருக்கிறார்கள். எம்.பி தன்னை தி.மு.க-வினர் வெளியே போகச் சொல்லியதாகச் சொன்ன குற்றச்சாட்டு குறித்து இப்போது பேசவிரும்பவில்லை. ஏனென்றால், நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தல் நடக்கிறது. அதனால், கரூரில் நடைபெற்ற இந்தச் சிறு சம்பவத்தால், ஒட்டுமொத்தமாக தமிழக அளவில் கூட்டணிக் கட்சிகளுக்குள் சங்கடங்களை ஏற்படுத்திவிடக் கூடாது.

வெளியேறும் ஜோதிமணி

அதனால், என்ன நடந்தது என்பது பற்றிய விவகாரத்துக்குள் நான் செல்ல விரும்பவில்லை. இப்போதுகூட நாங்கள் தெளிவாகச் சொல்கிறோம். காங்கிரஸ் கட்சியின் தலைமை அலுவலகத்துக்கு, எங்கள் தலைமை அலுவலகத்திலிருந்து பேசியிருக்கிறார்கள். அதனால், அவர்கள் சார்பில் யார் வந்தாலும் உட்கார்ந்து பேசி சுமுகமான முடிவை எடுக்கலாம் என்று கேட்டுக்கொள்கிறோம். கடந்த மூன்று நாள்களாக வார்டு பங்கீடு குறித்துப் பேசியபோது, எல்லா கட்சியிலிருந்தும் வந்து பேசி முடிவெடுத்தார்கள். ஆனால், காங்கிரஸ் சார்பில், என்னைக் கட்டாயம் வர வேண்டும் என்று சொன்னதால் நான் வந்தேன். இருந்தும், அதில் உடன்பாடு எட்டவில்லை. மற்ற கட்சிகளோடு வார்டு பங்கீடு சமுகமாக முடிந்துவிட்டது” என்றார்.

Also Read: ஜோதிமணியை முன்வைத்து உச்சம் தொடும் களேபரம் – என்ன நடக்கிறது கரூர் காங்கிரஸில்?!

Sign In

Register

Reset Password

Please enter your username or email address, you will receive a link to create a new password via email.