நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தல் வரும் 19-ம் தேதி நடைபெறும் என மாநில தேர்தல் ஆணையம் அறிவித்ததிலிருந்து, அரசியல் கட்சிகள் தேர்தலுக்கான வார்டு பங்கீடு பணிகளை தீவிரமாக மேற்கொண்டுவருகின்றன. அந்த வகையில் அ.தி.மு.க இந்த முறையும், பா.ஜ.க-வுடன் கூட்டணிவைத்துத் தேர்தலைச் சந்திக்கும் என எதிர்பார்க்கப்பட்டுவந்த நிலையில், வார்டு பங்கீட்டில் உடன்பாடு எட்டப்படாததால் தனித்துப் போட்டியிட இரண்டு கட்சிகளும் முடிவுசெய்திருக்கின்றன.

இந்த முடிவு தொடர்பாக பா.ஜ.க மாநிலத் தலைவர் அண்ணாமலை செய்தியாளர்களிடம் பேசுகையில், “எங்கள் முடிவைத் தலைமைக்குத் தெரிவித்து, தொண்டர்களின் விருப்பத்துக்காக இந்த முடிவை எடுத்துள்ளோம். நயினார் நாகேந்திரன் அ.தி.மு.க குறித்துப் பேசியதற்கு வருத்தம் தெரிவித்துவிட்டார். பா.ஜ.க அடுத்த இடத்துக்குச் செல்ல வேண்டுமென்றால், உள்ளாட்சித் தேர்தலில் அதிகமான இடங்களில் போட்டியிட வேண்டும். 10 சதவிகித இடங்களுக்கு மேல் போட்டியிட வேண்டும். அ.தி.மு.க தலைவர்கள்மீது எந்தவொரு சிறு வருத்தமும் கிடையாது. தனிப்பட்ட முறையில் நாங்கள் விரும்பக்கூடிய தலைவர்கள், மிகத் திறமையாகக் கட்சியை வழிநடத்தக்கூடிய தலைவர்கள். ஓ.பன்னீர்செல்வம், எடப்பாடி பழனிசாமி ஆகியோர் கடினமான சூழலில்கூட திறமையாகக் கட்சியை வழிநடத்திக்கொண்டிருக்கின்றனர்” என்றார்.

அண்ணாமலை – எடப்படி கே பழனிசாமி

அதையடுத்து, அ.தி.மு.க-வின் இணை ஒருங்கிணைப்பாளர் எடப்பாடி கே.பழனிசாமி செய்தியாளர்களிடம் பேசினார். அப்போது, “நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தலில் பெரும்பாலான இடங்களை அ.தி.மு.க கைப்பற்றும். நாடாளுமன்ற, சட்டமன்றத் தேர்தலில் குறிப்பிட்ட அளவுதான் இடங்கள் ஒதுக்க முடியும். நகர்ப்புறத் தேர்தலில் அ.தி.மு.க-வினர் அதிக இடங்களில் போட்டியிட விருப்பம் தெரிவித்துள்ளனர். கட்சி நிர்வாகிகளின் விருப்பத்தை நிறைவேற்றவேண்டியது எங்களின் கடமை. தற்போதைய தேர்தலில் பா.ஜ.க தனித்துப் போட்டியிடுகிறது. எதிர்வரும் தேர்தல் குறித்து அப்போது முடிவெடுப்போம். எங்களின் குழந்தைகளை வளர்த்தெடுப்பதுதான் எங்களுக்கு முக்கியம். அ.தி.மு.க எம்.எல்.ஏ-க்கள் குறித்து அவதூறு பேசிய நயினார் நாகேந்திரன் வருத்தம் தெரிவித்துவிட்டார். அண்ணாமலையும் வருத்தம் தெரிவித்துவிட்டார். தவறு செய்யாதவர்கள் யாரும் இல்லை. எனவே, அ.தி.மு.க – பா.ஜ.க கூட்டணி தொடரும். இந்தத் தேர்தலில் மட்டும் தனித்துப் போட்டியிட முடிவு செய்துள்ளோம்” என்றார்.

Also Read: “சிங்கம் சிங்கிளாதான் வரும்; அதிமுக-வுக்கு எந்த பாதிப்பும் இல்லை!” – ஜெயக்குமார்

Sign In

Register

Reset Password

Please enter your username or email address, you will receive a link to create a new password via email.