உத்தரப் பிரதேச தேர்தல் நெருங்குவதையொட்டி, அம்மாநிலத்தில் ஆடு, புலி ஆட்டங்கள் அரங்கேறிவருகின்றன. தேர்தல் நெருங்கும் சூழலில் காங்கிரஸ் கட்சியிலிருந்து பிரிந்து பாஜகவில் இணைந்திருக்கிறார் முன்னாள் மத்திய அமைச்சரும், காங்கிரஸ் முன்னாள் மாநில தலைவருமான ஆர்.பி.என்.சிங். ‘காங்கிரஸ் முன்பு இருந்ததைப்போல தற்போது இல்லை’ என்றும் குற்றம்சாட்டியிருக்கிறார். இது அம்மாநில காங்கிரஸில் சலசலப்பை ஏற்படுத்தியுள்ளது.

இது தொடர்பாக பேசிய ஆர்.பி.என்.சிங், ”நான் காங்கிரஸ் கட்சியில் 32 ஆண்டுகளாக இருக்கிறேன். ஆனால், இன்று நான் உறுதியாக கூறுவேன், காங்கிரஸ் கட்சி முன்பு இருந்ததைப்போல தற்போது இல்லை. அதன் சிந்தனை அளவிலும் அது மாறுபட்டிருக்கிறது. மக்கள் நலனுக்காக உழைத்து நாட்டைக் கட்டியெழுப்ப பாடுபடும் கட்சி என்றால் அது பாஜகதான் என்பது அனைவருக்கும் தெரியும்” என்று பாஜக தலைமை அலுவலகத்தில் அக்கட்சியில் இணைந்தபின் செய்தியாளர்களிடம் தெரிவித்தார்.

அப்போது அவருடன், உ.பி., துணை முதல்வர்கள் கேசவ் பிரசாத் மவுரியா மற்றும் தினேஷ் சர்மா, உ.பி., பா.ஜ. தலைவர் ஸ்வதந்திர தேவ் சிங், மத்திய அமைச்சர்கள் தர்மேந்திர பிரதான், அனுராக் தாக்கூர் ஆகியோர் இருந்தனர்.

I Begin A New Chapter: RPN Singh Quits Congress After Named Star Campaigner  For UP Polls, To Join BJP

ஜோதிராதித்ய சிந்தியாவைப்போல ஒருகாலத்தில் ஆர்.பி.என்.சிங்கும் காங்கிரஸின் அடுத்த தலைமுறையின் முக்கியமான தலைவராக கருதப்பட்டார். ஆனால், 2020ம் ஆண்டு ஜோதிராதித்ய சிந்தியா பாஜகவில் இணைந்தார். அதேபோல தற்போது ஆர்.பி.என்சிங்கும் காங்கிரஸை கைகழுவிவிட்டார்.

அகில இந்திய காங்கிரஸ் கமிட்டி பொறுப்பாளரும், காங்கிரஸ் காரிய கமிட்டி உறுப்பினருமான ஆர்.பி.என் சிங்கின் வெளியேற்றம் மாநில காங்கிரஸூக்கு மிகப்பெரிய அடியாக பார்க்கப்படுகிறது. காரணம், உ.பி. தேர்தல் பிரசாரத்தின் நட்சத்திர பேச்சாளர் பட்டியலில் இருந்தவர் பாஜகவில் ஐக்கியமானதை அவர்களால் ஏற்றுக்கொள்ள முடியவில்லை.

”ஆர்.பி.என்.சிங்கின் இணைவு உத்தரப் பிரதேசத்தில் பாஜகவிற்கு எந்த அளவிற்கு கைகொடுக்கிறது என்பதைக் காட்டிலும், காங்கிரஸின் பலவீனத்தை பறைசாற்றும். இது காங்கிரஸ் ஒரு செயலற்ற கட்சி என்பதையும், அதன் தலைவர் திறமையற்றவர் என்பதை மக்களிடம் கொண்டு போய் சேர்க்க உதவும். அவரது ஓபிசி முகம் தேர்தலுக்கு தேவைப்படலாம்” என பாஜக வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. பாஜகவிலிருந்து பிரிந்து தற்போது சமாஜ்வாதி கட்சியில் உள்ள ஓபிசி தலைவர்களில் ஒருவரான சுவாமி பிரசாத் மவுரியாவுக்கு எதிராக ஆர்.பி.என்சிங் களமிறக்கப்படலாம் எனக் கூறப்படுகிறது.

RPN Singh joins BJP in major setback to Congress

மவுரியாவை பொறுத்தவரை உத்தரப் பிரதேசத்தின் பத்ரவுனா (Padrauna)தொகுதியில் போட்டியிட்டு இரண்டு முறை வெற்றிபெற்றவர். ஆர்.பி.என் சிங் அந்த தொகுதியில் 3 முறை வெற்றிபெற்றுள்ளார். அதேபோல, குஷி நகர் மக்களவைத் தொகுதியில் 2009ம் ஆண்டு மவுரியாவை தோற்கடித்து வெற்றி பெற்றார் சிங்.

சிங் பாஜகவில் இணைந்த சில மணி நேரங்களிலேயே, பத்ருனா காங்கிரஸ் வேட்பாளர் மணீஷ் ஜெய்ஸ்வால் அக்கட்சியில் இருந்து விலகினார். குஷிநகர் காங்கிரஸ் தலைவர் ராஜ்குமார் சிங்கும் தனது பதவியை ராஜினாமா செய்வதாக அறிவித்தார், “கட்சியில் ஆர்பிஎன் சிங்குக்கு மரியாதை இல்லை” என்பதால் தான் அவ்வாறு செய்வதாக பி.டி.ஐ.யிடம் அவர் தெரிவித்துள்ளார். காங்கிரஸ் தனது வேட்பாளர்களைக்கூட தக்க வைக்க முடியாத சூழலில் தவித்து வருகிறது.

A list of some of Rahul Gandhi's most infamous gaffes - RaGa's back in  focus | The Economic Times

அண்மைக்கலாமாக காங்கிரஸில் உள்ள ராகுலின் படை வேகமாக கரைந்து வருவதை காண முடிகிறது. பாஜவில் இணையும் 3வது நபர் சிங். அதற்கு முன்னதாகவே சிந்தியா மற்றும் ஜிதின் பிரசாதா ஆகியோர் பாஜகவில் இணைந்து தற்போது அமைச்சர்களாக இருப்பதை கவனிக்க வேண்டியிருக்கிறது. இனியும் காங்கிரஸ் தனது கட்சியை பலப்படுத்த தவறினால் அது அந்த கட்சிக்கு மிகப்பெரிய அச்சுறுத்தலாகிவிடும்.

இது தொடர்பாக பேசியுள்ள காங்கிரஸ் கட்சி செய்தித் தொடர்பாளர் சுப்ரியா ஸ்ரீநாத், ‘இது சித்தாந்தத்திற்கான போர்’ எனக் கூறியுள்ளார். மேலும், ”நாடு முழுவதும் இந்த வகையான போராட்டத்தை காங்கிரஸ் முன்னெடுத்துள்ளது. குறிப்பாக உ.பி. போன்ற மாநிலத்தில், அரசுக்கு எதிராகவும், கருத்தியலுக்காகவும், உண்மைக்காகவும், நடக்கும் போர் இது. நீங்கள் தைரியமாக போராட வேண்டுமே தவிர, கோழைத்தனத்துடன் போராட்டக்கூடாது. நீங்கள் உங்கள் சொந்த காலில் நின்று போராட வேண்டும்” என்று தெரிவித்துள்ளார்.

முகத்தில் தைரியத்தை வரவழைத்துக்கொண்டு பேசினாலும், உண்மை நிலை என்னமோ மோசமாகத்தான் இருக்கிறது. முக்கிய தலைவர்களின் வெளியேற்றம் காங்கிரஸை அசைத்து பார்த்துள்ளது. ”கட்சி வறண்டு கொண்டிருக்கிறது. கட்சி மீதான நம்பிக்கையும் கரைந்துகொண்டிருக்கிறது. பலரும் வெளியேற வாய்ப்புள்ளது. ராகுல்காந்தி எப்போது விழித்தெழுவார் என்பதே தற்போதைய கேள்வி. ஆனால், அதை கேட்க ஆளில்லை” என்கிறார் காங்கிரஸ் மூத்த தலைவர் ஒருவர்.

தகவல் உறுதுணை: இந்தியன் எக்ஸ்பிரஸ்

Source : WWW.PUTHIYATHALAIMURAI.COM

Sign In

Register

Reset Password

Please enter your username or email address, you will receive a link to create a new password via email.