பாகிஸ்தான்: வாட்ஸ்அப்பில் நபிகளின் கேலிச்சித்திரத்தை அனுப்பியதாக பெண்ணுக்கு மரணதண்டனை

பாகிஸ்தானில் தனது தோழிக்கு நபிகள் பற்றிய அவதூறான கேலிச்சித்திரங்களை அனுப்பியதாக பெண் ஒருவருக்கு நீதிமன்றம் மரண தண்டனை விதித்துள்ளது.

அனிகா அட்டிக் என்ற பெண் மீது 2020 ஆம் ஆண்டில் ஃபாரூக் ஹசனாத் என்ற ஒருவரால் பதிவு செய்யப்பட்ட புகாரின் பேரில் ராவல்பிண்டியில் உள்ள நீதிமன்றத்தால் இந்த தீர்ப்பு வழங்கப்பட்டுள்ளது. இந்த வழக்கில் நபிகளுக்கு எதிராக அவதூறு செய்ததாகவும், இஸ்லாத்தை அவமதித்ததாகவும், சைபர் கிரைம் சட்டங்களை மீறியதாகவும் அனிகா அட்டிக் மீது குற்றம் சாட்டப்பட்டது.

image

அனிகாவும் ஃபாரூக்கும் முன்பு நண்பர்களாக இருந்தனர், ஆனால் பின்னர் இருவருக்கும் இடையே கருத்து வேறுபாடுகள் ஏற்பட்டு பிரிந்தனர். அதைத் தொடர்ந்து அனிகா அவருக்கு வாட்ஸ்அப்பில் அவதூறு செய்திகளை அனுப்பினார் என்று குற்றச்சாட்டில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஃபரூக், அனிகாவிடம் அவதூறு செய்திகளை நீக்கிவிட்டு மன்னிப்புக் கேட்கும்படி கூறியதாகவும், ஆனால் அவர் மறுத்துவிட்டார். இதையடுத்து, ஃபரூக் அவர் மீது மத்திய புலனாய்வு அமைப்பின் (எஃப்ஐஏ) சைபர் கிரைம் பிரிவில் புகார் அளித்தார் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இது தொடர்பாக கருத்து தெரிவித்துள்ள அனிகா அட்டிக், “புகார்தாரர் வேண்டுமென்றே தன்னை ஒரு மத விவாதத்திற்குள் இழுத்துவிட்டார், அதன்பின்னர் அவர் ஆதாரங்களை சேகரித்து பழிவாங்குகிறார் ” என்று தெரிவித்தார்

image

பாகிஸ்தானின் இறை நிந்தனைச் சட்டம் 1980களில் முன்னாள் ராணுவ சர்வாதிகாரி ஜியாவுல் ஹக்கால் இயற்றப்பட்டது, இந்த சட்டங்களின் கீழ் யாரும் இதுவரை தூக்கிலிடப்படவில்லை, ஆனால் அவதூறு செய்த சந்தேகத்தின் பேரில் பலர் கொல்லப்பட்டுள்ளனர்.

கடந்த ஆண்டு, சியால்கோட் நகரில் உள்ள தொழிற்சாலை ஒன்றில் மேலாளராகப் பணிபுரிந்த இலங்கையை சேர்ந்த நபர் ஒருவர், மதம் குறித்து அவதூறு செய்ததாகக் குற்றம் சாட்டப்பட்டு ஒரு கும்பலால் அடித்துக் கொல்லப்பட்டார்.

Source : WWW.PUTHIYATHALAIMURAI.COM