`அந்தகாரம்’ விக்னராஜன்:

அந்தகாரம்

“‘அந்தகாரத்து’க்கு முன்னாடியே ஒரு படம் ஆரம்பிச்சேன். ஆனா, அதுக்கான விஷயங்கள் தொடரல. அந்த நேரத்துலதான் சூப்பர் நேச்சுரல் சஸ்பென்ஸ் த்ரில்லருக்கான கரு ஒண்ணு அமைஞ்சது. எங்க அம்மாதான் படத்தின் தயாரிப்பாளர். ஏன்னா, இப்படி ஒரு கதையை மத்தவங்க தயாரிக்க முன் வருவாங்களானு தெரியாததால நாங்களே தயாரிச்சோம். தெரிஞ்சவங்க நட்பு வட்டம்ல பணம் வாங்கி, ஒரு கட்டத்துல குடியிருக்கற வீட்டையும் அடமானம் வச்சு, தயாரிச்சேன். நினைச்சதைக் கொடுக்க முடிஞ்ச திருப்தியும், எல்லாருமே இப்பவும் படத்தை கொண்டாடுறதும் சந்தோஷமா இருக்கு. அடுத்த படத்துக்கான வேலைகள ஆரம்பிச்சாச்சு. இதுவும் வித்தியாசமான கருவா இருக்கும்.ஸ்கிரிப்ட் ஒர்க் முடியற நிலையில இருக்கு.”

`க/பெ. ரணசிங்கம்’ இயக்குநர் விருமாண்டி:

க/பெ ரணசிங்கம்

“அயல் தேசத்தில் பஞ்சம் பிழைக்கப்போன கணவனையும், அரசின் மெத்தனப் போக்கையும் முரட்டு அதிகாரத்தையும் எதிர்த்துப் போராடும் சாமான்யப் பெண்ணைப் பற்றிய கதையாய் ‘க/பெ.ரணசிங்கம்’ அமைஞ்சது. விஜய் சேதுபதி முக்கியமான ஒரு கௌரவ கதாபாத்திரத்தில் வந்திருந்தாலும் ரொம்ப கவனத்தோட நடிச்சிருந்தார். உணர்வுடனும், உயிர்த்துடிப்புடனும் இருந்த ஐஸ்வர்யா ராஜேஷின் நடிப்புக்கு நிறைய பாராட்டுக்கள் கிடைச்சது. குறிப்பாக, படம் பெண்களிடம் ரீச்சாச்சு! இப்போ, அடுத்த படத்திற்கான வேலைகளை ஆரம்பிச்சுட்டேன். வரும் பொங்கல் முதல் படப்பிடிப்புக்குக் கிளம்புறோம். சினிமாவுக்காக உழைத்த ஒருவரின் கதை. என் முந்தைய படம் மாதிரியே இதுவும் உண்மை கதைதான். சசிகுமார் ஹீரோ. அவர் தன்னோட கெட்டப்பை மாற்றி, வேற லுக்கில் அசத்தப் போறாரு. அவரோட கரியரில் இது முக்கியமான படமாகவும் இருக்கும்.”

`மண்டேலா’ மடோன் அஷ்வின்

மண்டேலா

“சாதியால் பிளவுப்பட்டு நிற்கும் இரு கிராமங்கள் சேர்ந்து தேர்வு செய்யும் ஊர்த் தலைவர் தேர்தலில் ஒற்றை ஓட்டு வெற்றியாளரைத் தீர்மானிக்குது என்றால் அங்கே என்ன நடக்கும் என்பதை சாட்டையடி காமெடியாக சொன்ன படம் ‘மண்டேலா’. இளிச்சவாயன் என்கிற ஸ்மைல் கேரக்டரில் யோசிபாபு கவனம் ஈர்த்தார். படத்துக்கு எல்லா தரப்பு ஆடியன்ஸும் வரவேற்பு கொடுத்தாங்க. இப்ப அடுத்ததுக்கு ரெடியாகிட்டேன். திரைக்கதைக்கு ரொம்பவே முக்கியத்துவம் கொடுத்து எழுதிட்டிருக்கேன். ‘மண்டேலா’வை விட இன்னும் ஆச்சர்யங்கள் நிறைந்த படமா இருக்கும். நீங்க கொஞ்சமும் எதிர்பார்க்காத திரைக்கதையாகவும் இருக்கும்.”

`மாறா’ திலீப் குமார்

மாறா

“தான் சிறுவயதில் கேட்டறிந்த கதையை எதிர்பாராத இடத்தில் ஓவியமாகப் பார்த்து திகைக்கிறார் ஷ்ரத்தா. அந்தக் கதை அவனுக்கு எப்படித் தெரிந்தது என்று ஓவியன் மாதவனைத் தேடிச் செல்லும் பயணத்தில் அவளுக்குப் பல கதைகள் கிடைக்கின்றன. ஆச்சர்யம், காதல், நெகிழ்வுடன் இணைத்து அன்பினால் நெய்யப்பட்ட கதையே ‘மாறா’. நான் விளம்பர படங்களை இயக்கின போது, ‘கல்கி’னு ஒரு குறும்படத்தை இயக்கினேன். அதைத் தயாரித்த நிறுவனம்தான் ‘மாறா’வைத் தயாரிச்சது. அந்தப் பட ஸ்கிரிப்ட் ஒர்க் ரெடியாகும் முன்பே, மாதவன் சார் கமிட் ஆனார். ஒடிடியில் வெளியானாலும் கூட ‘மாறா’வுக்கு நல்ல வரவேற்பு கிடைச்சது. அடுத்த படத்துக்கான கதை ரெடியாகிடுச்சு. ‘மாறா’வை தயாரிச்ச அதே தயாரிப்பாளர்களுக்குதான் இப்ப படம் பண்ணப் போறேன். அது என்ன ஜானர், யார் நடிக்கறாங்கனு நான் சொல்றதை விட, தயாரிப்பு நிறுவனமே சொல்றதுதான் சரியா இருக்கும்னு நினைக்கறேன்.”

`ஓ மை கடவுளே’ அஷ்வத் மாரிமுத்து

ஓ மை கடவுளே

கொஞ்சம் காதல், கொஞ்சம் பேன்டஸி, கொஞ்சம் காமெடி, கொஞ்சம் சண்டை என எல்லாம் கலந்த காக்டெயில்தான் ‘ஓ மை கடவுளே’. தோழியாய் பார்த்த ரித்திகாவை மனைவியாய் நெருங்க முடியாமல் அசோக் செல்வன் தவிக்க… ரித்திகாவோ நினைத்த மாதிரியான திருமண வாழ்க்கை நடக்காததில் அப்செட் ஆக… இவர்களுக்கு இடையே ஸ்கூல் சீனியரான வாணி போஜன் குறுக்கிடுகிறார். அதன் பின் நடக்கும் களேபரங்களும் சுவாரஸ்யங்களும்தான் ‘ஓ மை கடவுளே’. அது சரி அடுத்து என்ன செய்கிறார் அஷ்வத்?

“‘ஒ மை கடவுளே’வை தெலுங்கில் ரீமேக் பண்ணிட்டு இருக்கேன். ஹைதராபாத்துலதான் படப்பிடிப்புகள் போய்ட்டிருக்கு. விஸ்வக் சென், மித்திலா பலக்கர் நடிக்கறாங்க…” என்கிறார் அஷ்வத்.

Sign In

Register

Reset Password

Please enter your username or email address, you will receive a link to create a new password via email.