`சும்மா இருக்கக் கத்துக்கணும்’ The Art of Leaving the Ball – கோலியும் ரூட்டும் தடுமாறும் இடம்!

ஆஷஸ் தொடரில் பாக்ஸிங் டே டெஸ்ட் நடந்து முடிந்திருக்கிறது. இந்தியா Vs தென்னாப்பிரிக்கா பாக்ஸிங் டே டெஸ்ட்டும் நடந்து முடிந்திருக்கிறது.

இந்த இரண்டு போட்டிகளிலும் ஒரே மாதிரியாக ஒரு சம்பவம் நிகழ்ந்துள்ளது. இங்கிலாந்து அணியின் கேப்டனும் Fab 4 பேட்ஸ்மேன்களின் வரிசையில் முக்கியமானவருமான ஜோ ரூட் மற்றும் இந்திய அணியின் கேப்டன் மற்றும் ரூட்டை போன்றே Fab 4 இல் முக்கிய வீரருமான விராட் கோலி,

இருவரும் ஒரே மாதிரியாக தங்கள் விக்கெட்டுகளை பௌலர்களுக்கு கிறிஸ்துமஸ் பரிசாக அளித்திருந்தனர்.

ViratKohli

பாக்சிங் டே டெஸ்ட்டின் இரண்டு இன்னிங்ஸ்களிலும் இருவருமே ஆஃப் ஸ்டம்புக்கு வெளியே செல்லும் பந்துகளுக்கு பேட்டை விட்டு எட்ஜ் ஆகி கீப்பர்/ஸ்லிப்பிடம் கேட்ச் ஆகியிருந்தனர்.

கோலி இரண்டு இன்னிங்ஸ்களிலுமே ரொம்பபே ஒயிடாக சென்ற 100% லீவ் செய்திருக்கக்கூடிய பந்துகளை துரத்தி சென்று அவுட் ஆனார்.

ரூட் முதல் இன்னிங்ஸில் ஒயிடாக சென்ற பந்துக்கு பேட்டை விட்டும், இரண்டாவது இன்னிங்ஸில் இன்கம்மிங் டெலிவரி என தவறாக கணித்து 5th ஸ்டம்ப் லைனில் திரும்பிய பந்துக்கு பேட்டை விட்டும் அவுட் ஆகியிருந்தார்.

டெஸ்ட் கிரிக்கெட்டிற்கு நிதானம்தான் அடிப்படை. ஆஃப் ஸ்டம்புக்கு வெளியே செல்லும் பந்துகளை கைகள் கட்டப்பட்ட தன்மையோடு லீவ் செய்ய வேண்டும். பௌலர்கள் ஃபுல்லாக ஆஃப் ஸ்டம்புக்கு வெளியே வீசி கவர் ட்ரைவ்க்கான ஆசையை தூண்டுவார்கள். ஷார்ட் பிட்ச் டெலிவரிக்களை தூண்டிலாக வீசுவார்கள். லெக் ஸ்லிப்/ லெக் கல்லி என வைத்து லெக் ஸ்டம்ப் லைனில் வாட்டமாக வீசுவார்கள். லேசாக பேட்டில் உரசினாலே பவுண்டரி எனத் தோன்றும். நம்பி பேட்டைவிட்டால் இரையை எதிர்பார்த்துக் காத்திருக்கும் சிங்கங்கள் போன்ற ஃபீல்டர்களிடம் சரியாக மாட்டிக்கொள்வார்கள். இவற்றிலிருந்து பிழைத்திருக்க, நீண்ட நேரம் விக்கெட்டை விடாமல் க்ரீஸில் நிற்க, பேட்ஸ்மேன்கள் கைக்கொண்டிருக்கும் ஆயுதம்தான் லீவ்கள். ஏதுவான பந்து வரும் வரை ஏனைய பந்துகளை ஆடுவதற்கு முயற்சி செய்யாமல் பேட்டைவிட்டு பந்தின் பாதையை தொந்தரவு செய்யாமல் அப்படியே நேராக கீப்பரின் க்ளவுஸுக்குள் தஞ்சமடைய வைக்க வேண்டும்.

ENG Vs IND

டெஸ்ட் கிரிக்கெட்டில் தனக்கான நிலையான இடத்திற்காக ரோஹித் சர்மா போராடிக் கொண்டிருந்தார். அவர் தனக்கான இடத்தை உறுதிப்படுத்திக் கொண்டதற்கு அவரின் பந்தை லீவ் செய்யும் திறன் மிக முக்கிய காரணமாக இருந்தது. உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப்பின் இறுதிப்போட்டியில் நியுசிலாந்துக்கு எதிராக ஆடிய போது, ரோஹித் சர்மா பந்துகளை லீவ் செய்யும் விதத்தை ‘Positive Leaving’ என கமெண்டேட்டர் தினேஷ் கார்த்திக் வகைப்படுத்தியிருந்தார். அதவாது, பந்தை ஆட முடியாது என எண்ணி லீவ் செய்யாமல், நான் நினைத்தால் எப்போது வேண்டுமானாலும் ஷாட் ஆடுவேன் என்பதை பௌலருக்கு உணர்த்தும் வகையில் ரோஹித் பந்துகளை லீவ் செய்கிறார் என தினேஷ் கார்த்திக் பாராட்டியிருந்தார். ஆனால், அணியில் தனக்கான இடத்தை பிடிப்பதற்கு வெளிநாடுகளின் பெரிய இன்னிங்ஸ்களை ஆடுவதற்கு ரோஹித்திற்கு இந்த அளவிலான லீவ்கள் போதுமானதாக இல்லை. இங்கிலாந்து தொடருக்கு முந்தைய ஒன்றரை மாத காலத்தில் பந்துகளை லீவ் செய்வதற்காகவும் டிஃபன்ஸை மேம்படுத்துவதற்காகவே மட்டுமே பிரத்யேக பயிற்சியில் இறங்கினார். இதன்விளைவாக, இங்கிலாந்து தொடரில் ரோஹித் முன்பை விட நன்றாகவே பந்துகளை லீவ் செய்திருப்பார். அதன்மூலம் நீண்ட நேரம் க்ரீஸில் நின்று பெரிய இன்னிங்ஸ்களை ஆடியிருப்பார். ஒயிட்பால் ஹேங் ஓவரோடு கிரிக்கெட் ஆடுபவர் என்ற நிலையிலிருந்து முழுமையான டெஸ்ட் கிரிக்கெட்டர் எனும் நிலைக்கு உயர்ந்தார்.

#AUSvIND | Prithvi Shaw

இன்னொரு இந்திய ஓப்பனரான பிரித்திவி ஷாவையும் இந்த நேரத்தில் நினைவுகூற வேண்டும். இளம் வீரரான பிரித்திவி ஷா இந்திய டெஸ்ட் கிரிக்கெட்டுக்கு அறிமுகமான காலக்கட்டத்தில் அவரை கவாஸ்கர் + அசாரூதின் + சச்சின் கலந்த கலவை என ஏகத்துக்கும் புகழ்ந்து தள்ளியிருந்தனர். ஆனால், குறுகிய காலத்திலேயே அவரின் டெக்னிக்கில் இருந்த கோளாறுகள் வெளிப்பட்டு பௌலர்களுக்கு அம்பலப்பட்டு போனார். பந்துகளை எதிர்கொள்ள சரியான Foot Work அவரிடம் இல்லாமல் போனது ஒரு குறை என்றால், டெஸ்ட் கிரிக்கெட்டின் அடிப்படையான பந்துகளை லீவ் செய்வதில் அவர் தடுமாறியதும் மிகப்பெரிய குறையாக இருந்தது. கவரை ஓப்பனாக விட்டு ஷாட் ஆட இடம் கொடுத்து வீசினால் போதும் அது இன்னிங்ஸின் முதல் பந்தாகவே இருந்தாலும் ட்ரைவ் ஆட பேட்டை விட்டு அவுட் ஆகினார், இல்லை இன்சைட் எட்ஜ் ஆகி போல்டானார். ஆஸ்திரேலியாவின் அடிலெய்டு டெஸ்ட்டில் இதுதான் நிகழ்ந்திருந்தது.

பிரித்திவி ஷாவின் டெஸ்ட் கிரிக்கெட் கரியர் தேக்க நிலையை அடைந்திருப்பதற்கு அவர் பந்துகளை லீவ் செய்யும் அடிப்படையை உணராமல் போனதும் ஒரு காரணம். பிரித்திவி ஷாவின் டெக்னிக்கல் கோளாறுகளை பற்றி சச்சின் டெண்டுல்கர் பேசும் போது, ‘Foot Work என்பது கால்கள் சார்ந்த விஷயம் அல்ல. அது மனநிலை சார்ந்த விஷயம்’ என பேசியிருப்பார். உண்மையில் பந்தை லீவ் செய்வதும் கவர் ட்ரைவுக்கு பேட்டை விடாமல் இருப்பதுமே கூட பேட்ஸ்மேனின் டெக்னிக் சார்ந்த விஷயம் என்பதை விட மனநிலை சார்ந்த விஷயமே.

#Sachin

2003-04 காலக்கட்டத்தில் ஆஸ்திரேலியாவிற்கு எதிராக சிட்னியில் கவர்ட்ரைவே அடிக்காமல் சச்சின் அடித்த 241* அவரின் வலுவான டெக்னிக்கின் பலன் என கூறுவதை விட தவநிலைக்கு சென்ற அவரின் மனோபலத்தின் வெற்றி என்றே கூற முடியும்.

இதைப்பற்றி விரிவாக இந்த கட்டுரையின் பிற்பகுதியில் பார்ப்போம். தென்னாப்பிரிக்காவிற்கு எதிரான இந்த டெஸ்ட் போட்டியின் முதல் இன்னிங்ஸில் சதமடித்த ராகுலும் இந்த கைகள் கட்டப்பட்ட தன்மையோடு தாராளமாக பந்துகளை லீவ் செய்து ஆடித்தான் சாதித்திருந்தார். எந்த பந்துகளை ஆடுகிறோம் என்பதை விட எந்த பந்துகளை ஆடாமல் விடுகிறோம் என்பதில் இருக்கும் தெளிவே டெஸ்ட் பேட்ஸ்மேனுக்கான அடிப்படை.

தென்னாப்பிரிக்காவிற்கு எதிராக இந்திய வீரர்கள் பேட்டிங் ஆட இறங்கும் முன்பு பயிற்சியாளரான ராகுல் டிராவிட் வீரர்களுக்கு சொன்ன அறிவுரை இது. இந்த அறிவுரை அவரின் அனுபவத்திலிருந்து வந்தது. அவரது டெஸ்ட் கரியரை நான்கே வரிகளில் ஒரு கவிதையாக அவரே விவரித்ததை போன்ற அறிவுரை இது. இந்த அறிவுரையை ஒரு அளவுகோலாக வைத்துக் கொண்டால், அதிகபட்சமாக இந்த அறிவுரையை பின்பற்றிய ராகுல் சதமடித்திருப்பதையும் பெரிதாக இந்த அறிவுரையை சட்டை செய்து கொள்ளாத கோலி, ரஹானே போன்றோர் பெரிய இன்னிங்ஸ் ஆட தடுமாறியதையும் உணர முடியும்.

பந்துகளை லீவ் செய்யும் கலையை முற்றுமாக உணர்ந்தவர்கள் என்றவுடன் இந்திய ரசிகர்களின் மனம் கவாஸ்கர், சச்சின், டிராவிட் என்றே காலச்சக்கரத்தில் ஏறி பின்நோக்கி பயணிக்கும். ஆனால், சமகாலத்திலேயே ஒரு இந்திய வீரர் லீவ் செய்யும் கலையை உச்சபட்ச அழகியலோடு நேர்த்தியாக வெளிக்காட்டியிருக்கிறார். நிச்சயமாக புஜாரா இல்லை. புஜாரா அதிகமான பந்துகளை லீவ் செய்வார். ஆனால், அதில் பெரிதாக ரசிக்க வைக்கும் தன்மைகள் இருக்காது. மேலும், இப்போதல்தெல்லாம் புஜாராவிற்கு ஆங்கிள் இன் டெலிவரிக்களாக வீசி எல்லா பந்துகளையும் ஆட வைக்கவே பௌலர்கள் முயல்கின்றனர். இந்த ஆங்கிள் இன் டெலிவரிக்களின் லெந்தையும் பவுன்ஸையும் கணித்து லீவ் செய்வதில் புஜாராவே கொஞ்சம் தடுமாறித்தான் போயிருக்கிறார். புஜாராவே இல்லையென்றால் வேறு எந்ர வீரர் அது? தமிழக வீரரான முரளி விஜய்யே அவர். 2014 இங்கிலாந்து சுற்றுப்பயணத்தில் விராட் கோலியே ஆஃப் ஸ்டம்புக்கு வெளியே செல்லும் பந்துகளை எதிர்கொள்வதில் கடுமையாக திணறியிருந்தார். ஆனால், முரளி விஜய் அந்த மாதிரியான டெலிவரிகளை மிகச்சிறப்பாக லீவ் செய்து பெரிய இன்னிங்ஸ்களை ஆடியிருந்தார்.

Murali Vijay

அந்த தொடரில் அதிகமான பந்துகளை எதிர்கொண்டிருந்த வீரர் முரளி விஜய்யே. வேகப்பந்து வீச்சாளர்களுக்கு எதிராக மட்டும் 996 பந்துகளை எதிர்கொண்டிருந்தார். இதில் 403 பந்துகளை தொந்தரவே கொடுக்காமல் அழகாக லீவ் செய்திருப்பார்.

அதாவது, அவர் மொத்தமாக எதிர்கொண்ட பந்துகளில் 40% க்கும் மேலான பந்துகளை லீவ் மட்டுமே செய்திருந்தார்.2014 இங்கிலாந்து தொடரில் ஆண்டர்சனிடம் ஆஃப் ஸ்டம்புக்கு வெளியே சென்ற பந்துகளுக்கு தடுமாறிய பிறகு, 2018 இங்கிலாந்து தொடரில் கோலி பெரும் படிப்பினைகளோடு வந்திருந்தார். 2014 தொடரில் கடுமையாக சொதப்பியிருந்த கோலிதான் 2018 தொடரில் அதிக ரன்கள் அடித்த வீரராக இருந்தார்.’2014 சுற்றுப்பயணத்தில் என்னுடைய அவுட் ஸ்விங்கர்களை கோலி துரத்தி சென்று ஆடுவார். இதனால் எட்ஜ் ஆகி எளிதில் ஸ்லிப்பில் கேட்ச் ஆனார். ஆனால், இப்போது இந்த தொடரில் கோலி முன்பை விட பந்துகளை நன்றாக லீவ் செய்கிறார். மனதளவில் பக்குவப்பட்டிருக்கிறா அவரை நோக்கி பந்து வரும் வரை காத்திருக்கிறார். அப்படியான பந்துகள் வரும்போது வலுவான ஷாட்களை ஆடிவிடுகிறார்’ இது விராட் கோலியின் ஆட்டம் குறித்த ஆண்டர்சனின் மதிப்பீடு.

ENG Vs IND

கொஞ்சம் யோசித்து பார்த்தால் சதங்களாக அடித்து துவைத்து கொண்டிருந்த கோலி,

கடந்த இரண்டு ஆண்டுகளாக சதமடிக்காமல் இருப்பதற்கு இந்த பந்துகளை லீவ் செய்யும் கலையில் அவர் சறுக்கியதுமே மிகமுக்கிய காரணமாக இருக்கிறது.

2018 இங்கிலாந்து தொடரில் கோலி காட்டிய பக்குவம் இந்த 2021 இங்கிலாந்து தொடரில் அவரிடம் வெளிப்படவே இல்லை. 2014 தொடரை நினைவுப்படுத்தும் வகையில் விக்கெட்டுகளை தூக்கிக் கொடுத்திருந்தார். இப்போது தென்னாப்பிரிக்காவிற்கு எதிரான முதல் போட்டியிலுமே அப்படித்தான் ஆடி விக்கெட்டை விட்டிருக்கிறார்.

இந்தியா, இந்திய வீரர்கள், விராட் கோலி இவர்களை பற்றி பார்த்தாயிற்று. இப்போது ஜோ ரூட் பக்கமாக வருவோம். பல ஜாம்பவான்களை உருவாக்கிய கவுண்ட்டியான யார்க்சையர் முகாமிலிருந்து வந்தவர். பந்தை லீவ் செய்து கட்டுக்கோப்பாக ஆடுவதுதான் அங்கே பாலபாடம். ‘பேட்டை விட்டு ஆடி விக்கெட்டை விட்டுவிட்டு பெவிலியனில் உட்காந்து நீங்கள் ரன் அடிக்க முடியாது’ என்பது யார்க்சையர் வீரர்களுக்கு போதிக்கப்படும் அறிவுரைகளில் ஒன்று. இந்த பின்னணியிலிருந்து வந்து இங்கிலாந்து அணியின் கேப்டன் ஆகியிருக்கும் ஜோ ரூட் மாதிரியான வீரர் ஒரு டெஸ்ட்டின் இரண்டு இன்னிங்ஸிலும் பந்தை துரத்தி சென்று பேட்டைவிட்டு அவுட் ஆவது ஆச்சர்யமே. யார்க்சையரை சேர்ந்த ஜாம்பவான் கிரிக்கெட்டரான ஜெஃப்ரி பாய்காட்டிற்கு இது சார்ந்து இங்கிலாந்து வீரர்கள் அத்தனை பேரின் மீதுமே பெருங்கோபம் உண்டு.

Also Read: SA vs IND: ஜனவரியில் காபா, டிசம்பரில் சென்ச்சூரியன்… நொறுங்கும் கோட்டைகள், தொடரும் சாதனைகள்!

என ஜெஃப்ரி பாய்காட் தனது ஆதங்கத்தை வெளிக்காட்டியிருக்கிறார்.

இந்த தலைமுறையின் மகத்தான வீரர்களாக பந்துகளை லீவ் செய்வதன் உன்னதத்தை உணர்ந்து அனுபவித்தவர்களான ஜோ ரூட், விராட் கோலி மாதிரியான வீரர்கள் இப்படி அவசர கதியில் பேட்டை விட்டு அவுட் ஆவது ஏன்?

இதற்கான பதிலை ஜோ ரூட்டே 2018 ஆம் ஆண்டில் சொல்லியிருக்கிறார்.

பேட்ஸ்மேன்கள் பந்துகளை ஏன் லீவ் செய்ய மறுக்கின்றனர்? என பத்திரிகையாளர் சந்திப்பில் ஒருவர் கேள்வி எழுப்ப, அதற்கு ஜோ ரூட்

‘சமூகவலைதள காலத்தில் வாழ்ந்து கொண்டிருக்கிறோம். உலகமே மாறியிருக்கிறது. மக்கள் நிறைய எதிர்பார்ப்புகளோடு இருக்கிறார்கள். ஒவ்வொரு கணத்திலும் எதோ ஒன்று நிகழ்ந்து கொண்டே இருக்க வேண்டும் என நினைக்கிறார்கள். நாம் செய்யும் ஒவ்வொரு காரியத்திலும் இந்த மனநிலை வெளிப்பட்டுக் கொண்டே இருக்கிறது. டெஸ்ட் கிரிக்கெட்டும் இந்த மனநிலையின் ஒரு அங்கமே. டெஸ்ட் போட்டிகள் வேகமெடுக்க தொடங்கிவிட்டன. டி20 போட்டிகள் பெருகிவிட்டன. மூன்று ஃபார்மட்டிலும் ஆடும் வீரர்கள் நிறைய பேர் இருக்கின்றனர். அதன் தாக்கம் நிச்சயமாக இருக்கும். இனிமேல் இப்படித்தான். இந்த பாணியில்தான் டெஸ்ட் போட்டிகள் முன்நகர போகின்றன. வீரர்கள் பந்துகளை முடிந்தவரை அடிப்பதற்கே முயல்வார்கள்’

ENGvIND | Joe Root

ஒவ்வொரு கணத்திலும் எதோ ஒன்று நிகழ்ந்து கொண்டே இருக்க வேண்டும் என விரும்புகிறோம்

ரூட்டின் இந்த ஸ்டேட்மெண்ட்தான் அதி முக்கியமானது. நவநாகரீக வாழ்க்கை முறையை இவ்வளவு சுருக்கமாக ஒரு கிரிக்கெட்டர் நெத்தி பொட்டில் அடித்தாற் போல் விளக்குவது ஆச்சர்யம்தான்.

என்ன செய்கிறோம் ஏது செய்கிறோம் என தெரியாமல் ப்ரயோஜனமே இல்லையென்றாலும் நமக்கு நாமே பரபரப்பை ஏற்படுத்திக் கொண்டு எதோ ஒன்றை செய்து கொண்டே இருக்கிறோம். பொழுதுபோக்குக்காக சமூகவலைதளங்களுக்கு வந்தாலும் ஒரு வீடியோவை ஒரு ரைட்டைப்பை முழுமையாக அமர்ந்து பார்க்கும்/ படிக்கும் பொறுமை நமக்கு இருப்பதில்லை. எதை தேடுகிறோம் எதை எதிர்பார்க்கிறோம் என்று தெரியாமல் ஸ்க்ரோல் செய்து கொண்டே இருப்போம். எதோ ஒன்றை நிகழ்த்திக் கொண்டிருக்கிறோம். எதோ ஒரு வேலையை செய்து கொண்டிருக்கிறோம் என நம்மை நாமே ஏமாற்றிக் கொள்வோம். இதற்கு மொபைலை அணைத்துவிட்டு சும்மா இருந்திருக்கலாமே? அதைத்தான் செய்யமாட்டோமே. நமக்குதான் எதோ ஒன்று நிகழ்ந்து கொண்டே இருக்க வேண்டும். பரபரப்பாக ஓடிக்கொண்டே இருக்க வேண்டுமே!

இதே மனநிலைதான் ஆட்டத்திலும் வெளிப்படுவதாக ஜோ ரூட் கூறுகிறார். ஒன்றுமே செய்யாமல் பந்தை லீவ் செய்வதில் இப்போது எந்த வீரரும் திருப்தியடைவதில்லை. ஒவ்வொரு பந்திலும் எதோ ஒன்று நிகழ்த்தப்பட்டுக் கொண்டே இருக்க வேண்டும். நவநாகரீக வாழ்வு மற்றும் கூடுதலாக கிரிக்கெட்டர்களுக்கு பிரத்யேகமாக லிமிட்டெட் ஓவர் போட்டிகள் அருளியிருக்கும் மனநிலை இது.

இந்த நவநாகரீக மாயத்தை உடைத்தெறிந்து எதுவுமே நிகழ்த்தப்படாமல் இருப்பதிலும் கூட திருப்தியடையும் வீரர்கள்தான் பந்தை லீவ் செய்வதற்கு அஞ்சுவதே இல்லை. தற்போதைய நம்பர் 1 டெஸ்ட் வீரரான லபுஷானை போல!

லபுஷேன்

கடைசியாக நடந்த ஒரு போட்டி மட்டுமில்லை. நடந்து கொண்டிருக்கும் ஆஷஸ் தொடர் முழுவதுமே ஜோ ரூட் பந்துகளை லீவ் செய்வதில் சுணக்கமே காட்டியிருக்கிறார். இந்த தொடரில் அதிக ரன்களை அடித்திருக்கும் வீரர் ஜோ ரூட்டே. ஆனால், அவர் எதிர்கொண்ட பந்துகளில் வெறுமென 16% பந்துகளை மட்டுமே லீவ் செய்திருந்தார். அதேநேரத்தில், ஆஸ்திரேலிய அணிக்காக சிறப்பாக ஆடிக்கொண்டிருக்கும் லபுஷான் அவர் எதிர்கொண்ட பந்துகளில் 48% பந்துகளை லீவ் செய்திருந்தார். ‘நிகழ்கால கிரிக்கெட்டில் மிகச்சிறப்பான முறையில் பந்துகளை லீவ் செய்யும் வீரர் லபுஷான் தான்’ எனும் பாராட்டையும் கமெண்டேட்டர்களிடமிருந்து பெற்றிருந்தார்.

பந்துகளை லீவ் செய்வதன் உன்னதத்தை உணர்ந்த இருவரான கோலியும் ஜோ ரூட்டுமே கூட எதையோ நிகழ்த்தியே ஆக வேண்டும் என பந்தை துரத்தி வீழ்வது ஏமாற்றமளிக்கவே செய்கிறது.

நீங்கள் பரபரப்பாக எதையும் நிகழ்த்த முனைய வேண்டாம்.

ஜெஃப்ரி பாய்காட் வெளிக்காட்டிய விருப்பத்தை சச்சின் வெளிக்காட்டிய தவநிலையை பின்பற்றி கட்டுக்கோப்பாக க்ரீஸில் நின்றால் எல்லாம் தானாகவே நிகழும். 71 சதமும் சாத்தியமாகும்!