மயிலாடுதுறை மாவட்டம் குத்தாலம் தாலுகா மருதூர் கிராமத்தில் தனியாருக்கு சொந்தமான ஒபிஜி இரும்பு உருக்கு ஆலை செயல்பட்டு வருகிறது. இதிலிருந்து வெளிவரும் புகை, அப்பகுதி மக்களுக்கு அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது.

ஆலையில், பல்வேறு பகுதிகளில் இருந்து வரவழைக்கப்படும் இரும்பு பொருட்களை உருக்கி ரயில் தண்டவாள இரும்பு கம்பிகளாகவும், தகடுகள் உள்ளிட்ட பொருட்கள் செய்யப்படுகிறது. இந்த ஆலையில் பழைய இரும்பு பொருட்களை உருக்கி கம்பிகளாக மாற்றம் செய்யும்போது அதிலிருந்து அதீத கரும் புகையானது வெளிவருவது வழக்கம். அந்தப் புகையினை பில்டர்கள் அமைத்து உயரமான புகை போக்கி மூலம் பொதுமக்களுக்கு தீங்கு விளைவிக்காத வண்ணம் வெளியேற்றுவது வழக்கம்.

ஆனால் கடந்த மூன்று மாத காலமாக பில்டர் மற்றும் புகைபோக்கியில் பழுது காரணமாக இரும்பு உருக்கு ஆலையில் இருந்து வெளியேறும் புகையானது சரியான முறையில் வெளியேறாமல் ஆலையை சுற்றியுள்ள குடியிருப்பு பகுதிகள் மற்றும் கிராம பகுதிகளில் சூழ்ந்து புகை மண்டலமாக காட்சி அளித்து வருகிறது.

image

மேலும் இரும்பு உருக்கு ஆலையில் இருந்து வெளியேறும் அதீத ஆபத்தான புகையால் ஆலையின் அருகே உள்ள மருத்தூர், தேரழந்தூர், கோமல், கோட்டகம், கொழையூர் உள்ளிட்ட10-க்கும் மேற்பட்ட கிராமத்தில் உள்ள குழந்தைகள், கர்ப்பிணிகள் மற்றும் முதியவர்கள் என பலரும்  பாதிக்கப்பட்டு வருகின்றனர். வாகன ஓட்டிகளும் மிகுந்த சிரமத்திற்கு ஆளாகியுள்ளனர்.

இது குறித்து பலமுறை புகார் அளித்து எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை என அப்பகுதி மக்கள் வேதனை தெரிவிக்கின்றனர். உடனடியாக மாசு கட்டுப்பாட்டு துறை மற்றும் சுற்றுச்சூழல் துறையினர் இப்பகுதியை ஆய்வுசெய்து உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் கிராம மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

இதுகுறித்து தமிழ்நாடு மாசு கட்டுப்பாட்டு சுற்றுச்சூழல் துறை நாகை மாவட்ட சுற்றுச்சூழல் பொறியாளர் குணசீலம் அவரிடம் கேட்டதற்கு, “இது குறித்து எவ்வித புகாரும் எங்களுக்கு வரவில்லை. நீங்கள் சொல்வது குறித்து சம்பந்தப்பட்ட இடங்களில் ஆய்வு செய்து பாதிப்பு இருப்பின் உரிய நடவடிக்கை எடுக்கப்படும்” என்று தெரிவித்தார்.

– ராஜாராம்.

தொடர்புடைய செய்தி: “பேருந்துகளில் அவசர ஒலி அழைப்பு பட்டன், கேமிராக்கள் பொருத்தும் திட்டம்”- அமைச்சர் தகவல்

Source : WWW.PUTHIYATHALAIMURAI.COM

Sign In

Register

Reset Password

Please enter your username or email address, you will receive a link to create a new password via email.