’புஷ்பா’: சமந்தாவின் ‘ஓ சொல்றியா’ பாடலுக்கு தடைக்கேட்டு ஆண்கள் சங்கத்தினர் வழக்கு

அல்லு அர்ஜுனின் ‘புஷ்பா’ படத்தின் ‘ஓ சொல்றியா மாமா’ பாடலுக்கு எதிராக ஹைதராபாத்தில் ஆண்கள் சங்கத்தினர் வழக்கு தொடர்ந்திருக்கின்றனர்.

’அலா வைகுந்தபுரம் லோ’ படத்தின் வெற்றிக்குப் பிறகு தெலுங்கின் முன்னணி நடிகர் அல்லு அர்ஜுன், பிரபல இயக்குநர் சுகுமார் இயக்கத்தில் ‘புஷ்பா’ படத்தில் நடித்து முடித்துள்ளார். தேவிஸ்ரீ பிரசாத் இசையமைக்க வில்லனாக மலையாள நடிகர் ஃபகத் ஃபாசில் ’பன்வார் சிங் ஷெகாவத் ஐபிஎஸ்’ கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். இம்மாதம், 17 ஆம் தேதி தியேட்டர்களில் வெளியாகும் இப்படத்தின் பாடல்களும் ட்ரைலரும் ரசிகர்கள் மத்தியில் ஹிட் அடித்துள்ளது.

ஏற்கெனவே, இப்படத்தின் ‘ஸ்ரீவள்ளி’, ‘சாமி’ பாடல்கள் வெளியாகி சூப்பர் ஹிட் அடித்த நிலையில், ‘ஓ அந்தவா’ மூன்றாவது பாடல் கடந்த வாரம் வெளியானது. விவாகரத்திற்குப்பிறகு சமந்தா சிறப்புத் தோற்றத்தில் நடனம் ஆடியுள்ள பாடல் என்பதாலும் தேவிஸ்ரீ பிரசாத்தின் இசையாலும் தென்னிந்திய ரசிகர்களிடம் இப்பாடல் மிகுந்த வரவேற்பை பெற்றுள்ளது. வெளியான ஒரே நாளில் 14 மில்லியன் பார்வைகளைக் கடந்து அதிக பார்வைகளைக் கடந்த பாடல் என்ற பெருமையைப் பெற்றிருந்தது. யூடியூபில் இதுவரை 20 மில்லியன் பார்வைகளைக் கடந்து 1 மில்லியன் லைக்ஸ்களை குவிக்கவுள்ளது. தெலுங்கில் பாடலாசிரியர் சந்திரபோஸ் வரிகளில் இந்தராவதி செளகான் குரலில் பாடல் அமைந்துள்ளது.

image

தமிழிலும் விவேகாவின் வரிகளில் நடிகை ஆண்ட்ரியா ’ஓ சொல்றியா’ பாடலைப் பாடியுள்ளார். இப்பாடலுக்குத்தான் தற்போது எதிர்ப்பு கிளம்பியுள்ளது. அதில், வரும் பாடல் வரிகள் ஆண்களைக் கொச்சைப்படுத்துவதாக பாடலுக்குத் தடைக்கோரி ஹைதராபாத்தில் ஆண்கள் சங்கத்தினர் வழக்கு தொடர்ந்துள்ளனர்.

Source : WWW.PUTHIYATHALAIMURAI.COM