அ.ம.மு.க-வின் தலைமை நிலையச் செயலாளராக இருந்த முன்னாள் அமைச்சர் பாப்பிரெட்டிப்பட்டி பழனியப்பன், சில மாதங்களுக்கு முன்பு தி.மு.க-வில் இணைந்தார். கொரோனா ஊரடங்கு தளர்வுகள் அமல்படுத்தப்பட்டுள்ள நிலையில், தன் ஆதரவாளர்களுடன் அதிகாரப்பூர்வமாக தி.மு.க-வில் அவர் இணையும் விழா அறிவாலயத்தில் கடந்த டிசம்பர் 4-ம் தேதி நடைபெற்றது. இந்த விழாவில் கழக பொதுச் செயலாளரும், நீர்வளத்துறை அமைச்சருமான துரைமுருகன் பங்கேற்கவில்லை. அவர் உடல்நிலை கருதியே விழாவுக்கு வரவில்லை என தி.மு.க சீனியர்கள் தரப்பில் விளக்கமளிக்கப்பட்டாலும், ‘துரைமுருகன் புறக்கணிக்கப்பட்டிருக்கிறார்’ என்கிறது அவருக்கு மிக நெருக்கமான வட்டாரம்.

துரைமுருகன் இல்லாத இணைப்பு விழா

இதுகுறித்து நம்மிடம் பேசிய தருமபுரி மாவட்ட தி.மு.க-வினர் சிலர், “கட்சியில் நடைபெறும் இணைப்பு விழாக்களில், தலைவர் பங்கேற்கும் பொழுதெல்லாம் பொதுச் செயலாளர் பொறுப்பிலிருப்பவர்களும் உடனிருப்பது வழக்கம். கருணாநிதி தலைவராக இருந்தபோது, அன்பழகன் இப்படி பங்கேற்றிருக்கிறார். ஆனால், பாப்பிரெட்டிப்பட்டி பழனியப்பன் தன் ஆதரவாளர்களுடன் கட்சியில் இணைந்த விழாவுக்கு துரைமுருகனை யாரும் அழைக்கவில்லை. இந்த இணைப்பு விழாவுக்கு தான் அழைக்கப்படுவோம் என்று எதிர்பார்த்தார் துரைமுருகன். ஆனால், மாவட்ட பொறுப்பாளர்களான தடங்கம் சுப்பிரமணி, இன்பசேகரன் உள்ளிட்ட எவரும் அவரை சட்டை செய்யவேயில்லை. தலைவர் ஸ்டாலினிடம் இருந்துகூட அவருக்கு அழைப்பு வரவில்லை. விழாவுக்கு கிளம்புவதற்கு முன்பாகத்தான், ‘அண்ணன்கிட்ட சொல்லிட்டீங்களா? அவர் வர்றாருல’ என்று கட்சியினரிடம் கேட்டிருக்கிறார் ஸ்டாலின். அதற்கு, ‘அவர் உடம்புக்கு சரியில்லை தலைவரே. ஊருக்கு கிளம்பிட்டாரு…’ என்று பதிலளித்திருக்கிறார்கள். அதற்குமேல் ஸ்டாலினும் எதுவும் கேட்கவில்லை. இந்த விழாவில், கழக பொருளாளர் டி.ஆர்.பாலு, அமைச்சர் எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம் ஆகியோர்தான் மேடையில் ஸ்டாலினுடன் அமர்ந்திருந்தனர்.

Also Read: `சசிகலா VS ஓ.பி.எஸ்… துரைமுருகன் VS வேலு!’ – Elangovan Explains

உண்மையில், தன்னை யாரும் மதித்து அழைக்கவில்லை என்கிற வருத்தத்தில்தான் வேலூருக்கு கிளம்பினார் துரைமுருகன். துரைமுருகன் புறக்கணிக்கப்பட்ட பின்னணியில் வடமாவட்ட அமைச்சர் ஒருவரின் கைங்கர்யம் இருக்கிறது. திருவள்ளூரில் ஆரம்பித்து கரூர் வரை அந்த அமைச்சர் வைத்ததுதான் கட்சியில் சட்டம் என்றாகிவிட்டது. தருமபுரி மாவட்டமும் அதற்கு விதிவிலக்கல்ல. அவரை மீறி கட்சியில் இணைப்பு, நீக்கம் என எதுவும் வட மாவட்டங்களில் நடக்காது. மறைமுக பொதுச் செயலாளராக அவர்தான் செயல்படுகிறார். இந்தச் சூழலில், அமைச்சரவைக்குள் அந்த அமைச்சருக்கும் துரைமுருகனுக்கும் இடையே உரசல் அதிகரித்து வருகிறது. இதனால், கட்சியில் துரைமுருகனுக்கு எந்த முக்கியத்துவமும் கிடைக்கக் கூடாது என்பதில் தீர்மானமாக இருக்கிறார் அந்த அமைச்சர். சமீபத்தில் தனக்கு நெருக்கான தொழிலதிபர்களிடம், ‘துரைமுருகனுக்கு வயதாகிவிட்டது. முன்ன மாதிரி ஓடியாடி வேலைப் பார்க்க முடியல. இனியும் கட்சிப் பதவியை ஏன் கெட்டியாகப் பிடிச்சுட்டு இருக்காருனு தெரியல. கட்சியில அடுத்த தலைமுறை தலைவர்கள் மேலிடத்துக்கு வரணும். ஆண்டாண்டு காலமா நான் மட்டுமே கட்சிப் பதவியில இருப்பேனு சொல்றது ஜனநாயகமா?’ என்று அந்த அமைச்சர் கமென்ட் அடித்திருக்கிறார். இந்தத் தகவல் துரைமுருகனுக்குச் சென்றவுடன் அவர் கடும் அப்செட்!

துரைமுருகன் இல்லாத இணைப்பு விழா

இந்தக் காயங்களுக்கு மருந்து தடவுவதுபோல, தனக்கான முக்கியத்துவத்தை முதல்வர் ஸ்டாலின் அளிப்பார் என்று துரைமுருகன் நம்பினார். ஆனால், அந்த நம்பிக்கை பொய்த்துப் போனது. ‘பழனியப்பன் விழாவுக்கு ஏன்ணே வரலை?’ என்று இதுவரை துரைமுருகனிடம் முதல்வர் விசாரிக்கவில்லை. இந்த வருத்தங்களை தன் நண்பர்களிடம் பகிர்ந்து கொண்ட துரைமுருகன், ‘தம்பி ஸ்டாலின் கூட இப்படி செஞ்சுடுச்சே. இந்தக் கட்சிக்காக எவ்வளவு உழைச்சிருப்பேன், எவ்வளவு துயரங்களை தாங்கியிருப்பேன். என்னை திட்டமிட்டே ஒதுக்குறாங்க’ என்று வருத்தப்பட்டிருக்கிறார். பொதுச் செயலாளர் பொறுப்பிலிருந்து துரைமுருகனை கழற்றிவிட்டுவிட்டு, அந்தப் பதவியை தனதாக்கிக் கொள்ள தீவிரமாகக் காய் நகர்த்துகிறார் அந்த வடமாவட்ட அமைச்சர். இதற்காகவே துரைமுருகனை கட்சி நிகழ்ச்சிகளுக்கு அழைக்காமல் ஒதுக்குகிறார்கள்” என்றனர்.

Also Read: முல்லைப்பெரியாறு: `அமைச்சர் துரைமுருகன் காமெடி செய்துகொண்டிருக்கிறார்!’ – செல்லூர் ராஜூ

இதுதொடர்பாக தி.மு.க சீனியர்களிடம் நாம் பேசியபோது, “முதல்வர் ஸ்டாலினைச் சந்தித்து பழனியப்பன் கட்சியில் சேர்ந்தபோது, துரைமுருகன் அவர்களுடன் இருந்தார். அதைத் தொடர்ந்து, இணைப்பு விழாவுக்கு திட்டமிடும்போதே துரைமுருகனிடம் தகவலை சொல்லிவிட்டோம். அன்றையதினம் தான் சென்னையிலிருந்தால் நிகழ்வில் கலந்து கொள்கிறேன் என்று அவரும் உறுதியளித்திருந்தார். ஆனால், நிகழ்ச்சிக்கு சில நாள்களுக்கு முன்னதாக அவர் உடல்நிலையில் பாதிப்பு ஏற்பட்டது. ‘வயதுமுதிர்வு காரணமாக அவரை அலைக்கழிக்க வேண்டாமே’ என்று நாங்களும் விட்டுவிட்டோம். அவரைப் புறக்கணிக்க வேண்டும் என்பது எண்ணமில்லை” என்றனர்.

துரைமுருகன், ஸ்டாலின்

என்னதான் ஆயிரம் விளக்கமளித்தாலும், பாதத்தில் தைத்த முள்ளாக இந்தச் சம்பவம் துரைமுருகன் நெஞ்சில் தைத்துக் கொண்டிருக்கிறதாம். அவரை முதல்வர் ஆறுதல்படுத்துவார் என்கிற எதிர்பார்ப்பில், துரைமுருகன் ஆதரவாளர்கள் காத்திருக்கிறார்களாம்.

Sign In

Register

Reset Password

Please enter your username or email address, you will receive a link to create a new password via email.