முப்படைத்தலைமை தளபதி பிபின் ராவத் உள்ளிட்ட ராணுவ வீரர்கள் மறைவுக்கு தமிழக தலைவர்கள் பலரும் தங்கள் இரங்கலை தெரிவித்துள்ளனர்.

இன்று மதியம் 12 மணியளவில், குன்னூர் அருகே காட்டேரி மலைப்பாதையில் வானில் பறந்துகொண்டிருந்த ராணுவ ஹெலிகாப்டர் கீழே விழுந்து விபத்துக்குள்ளானது. கோவை சூலூர் விமானப்படை தளத்திலிருந்து குன்னூர் வெலிங்க்டன் பயிற்சி மையத்திற்கு சென்றபோது இந்த விபத்து நிகழ்ந்திருந்தது. மூப்படைத் தலைமை தளபதி பிபின் ராவத் உள்ளிட்ட 14 பேர் பயணித்த இந்த விமானத்தில், பிபின் ராவத், அவரது மனைவி உள்ளிட்ட 13 பேர் உயிரிழந்ததாக விமானப்படை தெரிவித்துள்ளது. இந்நிலையில் அவரது இறப்புக்கு தமிழக தலைவர்கள் பலரும் தங்கள் இரங்கலை தெரிவித்துள்ளனர்.

Image

இது தொடர்பாக பா.ஜ.க தமிழக தலைவர் அண்ணாமலை தனது ட்விட்டர் பக்கத்தில், ”தமிழகத்தில் இன்று நடந்த மிகவும் துரதிர்ஷ்டவசமான ஹெலிகாப்டர் விபத்தில் முப்படை தலைமை தளபதி ஜெனரல் பிபின் ராவத், அவரது மனைவி மற்றும் 11 ஆயுதப் படை வீரர்களின் திடீர் மரணம் ஆழ்ந்த வேதனையை அளிக்கிறது. நமது ராணுவத்தின் தளபதியாக, முப்படை தலைமைத் தளபதியாக மிகத் திறம்பட செயலாற்றியவர்.அவருடைய இந்த துயர மரணம் நம்முடைய நாட்டிற்கு பேரிழப்பு. இந்த விபத்தில் மரணமடைந்த 13 பாரதத்தாயின் தவ பிள்ளைகளுக்கு என்னுடைய ஆழ்ந்த அனுதாபங்களை தெரிவித்துக்கொள்கின்றேன்.காயம் அடைந்து சிகிச்சையில் இருக்கும் GC வருண் சிங் அவர்கள் குணமடைந்து வருவதற்கு ஆண்டவனை பிரார்த்திக்கிறேன்!” என்று தெரிவித்துள்ளார்.

அம்மா மக்கள் முன்னேற்ற கழக பொதுச்செயலாளர் டி.டி.வி.தினகரன், ”நீலகிரி மாவட்டம் குன்னூர் அருகே நேரிட்ட ஹெலிகாப்டர் விபத்தில் நாட்டின் முப்படைத் தளபதி ஜெனரல். பிபின் ராவத் உள்ளிட்ட 13 பேர் உயிரிழந்த நிகழ்வு பெரும் அதிர்ச்சியளிக்கிறது.இந்திய இராணுவத்தில் பல்வேறு நிலைகளில் திறம்பட பொறுப்பு வகித்த ஜெனரல். பிபின் ராவத் உள்ளிட்டோரின் மறைவால் வாடும் உறவினர்களுக்கும் நண்பர்களுக்கும் மற்றும் இந்திய இராணுவத்தினருக்கும் எனது ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக் கொள்கிறேன்” என்று பதிவிட்டுள்ளார்.

தமிழக காங்கிரஸ் தலைவர் கே.எஸ்.அழகிரி, ”இந்திய ராணுவத்தின் முப்படை தளபதி பிபின் ராவத், அவரது மனைவி திருமதி. மதுலிகா ராவத் மற்றும் 11 ராணுவ அதிகாரிகள் நீலகிரி மாவட்டம், குன்னூர் மலைப் பகுதியில் ஹெலிகாப்டர் விபத்தில் பலியான செய்தி கேட்டு அளவற்ற அதிர்ச்சியும், துயரமும் அடைந்தேன்” என்று தெரிவித்துள்ளார்.

பா.ஜ.க செய்தி தொடர்பாளர் குஷ்பு தனது ட்விட்டர் பக்கத்தில், ”குன்னூரில் நடந்த பயங்கர ஹெலிகாப்டர் விபத்தில் ஜெனரல் பிபின் ராவத்தை இழந்துவிட்டோம். நாட்டுக்கு மிகப்பெரிய இழப்பு. அவரது ஆன்மா சாந்தியடையட்டும்” என்று பதிவிட்டுள்ளார்.

மத்திய இணையமைச்சர் எல்.முருகன், ”ஜெனரல் பிபின் ராவத் மற்றும் அவரது மனைவி மற்றும் பிற அதிகாரிகளின் திடீர் மறைவுக்கு ஆழ்ந்த இரங்கல். மிகவும் துணிச்சலான அதிகாரி. தேசிய பாதுகாப்புக்கு ஈடு இணையற்ற பங்களிப்புடன் ஆயுதப்படைகளை முன்னணியில் இருந்து வழிநடத்தினார்” என்று பதிவிட்டுள்ளார்.

கம்யூனிஸ்கட்சி மூத்த தலைவர் ஜி.ராமகிருஷ்ணன், ”முப்படைகளின் தளபதி ராவத் மற்றும் அவரது மனைவி உட்பட 13 பேரின் மரண செய்தி அதிர்ச்சி தருகிறது. நீலகிரி மாவட்டம், குன்னூர் அருகில் ஹெலிகாப்டர் நொறுங்கி பலியான அனைவருக்கும் அஞ்சலி. குடும்பத்தாருக்கு ஆழ்ந்த இரங்கலை தெரிவிக்கிறோம்” என்று பதிவிட்டுள்ளார்.

தேமுதிக தலைவர் விஜயகாந்த், ”முப்படைத் தளபதி பிபின் ராவத் துரதிர்ஷ்டவசமாக ஹெலிகாப்டர் விபத்தில் இறந்தது மிகுந்த வேதனையளிக்கிறது. அவரின் திடீர் மரணம் இந்திய ராணுவத்துக்கும் நம் தேசத்துக்கும் ஈடு செய்ய முடியாத இழப்பாகும். அவரது ஆன்மா சாந்தியடைய எல்லாம் வல்ல இறைவனை பிரார்த்திக்கிறேன்” என்று தெரிவித்துள்ளார். 

Source : WWW.PUTHIYATHALAIMURAI.COM

Sign In

Register

Reset Password

Please enter your username or email address, you will receive a link to create a new password via email.