விழுப்புரம் மாவட்டம், முண்டியம்பாக்கத்தில் உள்ள அரசு உயர்நிலைப் பள்ளியில் 1992 – 93 ஆம் ஆண்டுகளில் 10ம் வகுப்பு படித்த மாணவ மாணவிகள், 28 வருடங்கள் கழித்து அதே பள்ளியில் கடந்த 5ம் தேதி ஒன்று கூடியுள்ளனர். தங்களுக்கு பாடம் பயிற்றுவித்த ஆசிரியர்களுக்கு மரியாதை செலுத்தி நன்றி கூற நினைத்த அம்மாணவர்கள், ‘சிறகடிக்கக் கற்றுத்தந்த செம்மல்களுக்கு திருவிழா’ என்ற நிகழ்ச்சியை நடத்தி தங்களின் ஆசிரியர்களை நெகிழ்ச்சியில் ஆழ்த்தியுள்ளனர். அதுமட்டுமின்றி, தாங்கள் பயின்ற அப்பள்ளிக்கு நலத்திட்ட உதவிகளும் செய்து மகிழ்ந்துள்ளனர்.

ஆசிரியர்களுக்கு வரவேற்பு அளித்த மாணவர்கள்

இது தொடர்பாக சிவக்குமார் மற்றும் தியாகராஜன் என்பவர்களிடம் பேசினோம். “நாங்க 1992 – 1993ல இதே பள்ளிக்கூடத்தில் 10வது முடிச்சோம். எங்க செட்டுல மொத்தம் 87 பேர் படிச்சோம். அதுக்கு அப்புறமா கல்லூரி படிப்பு, வேலை அப்படி எல்லோரும் ஒரு கட்டத்துக்கு போயிட்டோம். கடந்த 2 வருஷத்துக்கு முன்னாடி எங்களுக்கு அப்புறம் (1996 -97) அதே பள்ளியில படிச்ச பசங்க ஒன்றுகூடல் விழா நடத்தியிருந்தாங்க. அதை தொடர்ந்து, எங்களுக்கு பாடம் சொல்லி கொடுத்த ஆசிரியர்களுக்கும் நன்றி கூறி மரியாதை செலுத்தணும்னு தோனுச்சு.

அதனால, வாட்ஸ்அப் குரூப் ஒண்ணு ஆரம்பிச்சு, பள்ளிக்கூடத்துல ஒண்ணா படிச்ச நண்பர்களைத் தேடிப்பிடிக்க ஆரம்பிச்சோம். பாலகுமார் என்ற எங்கள் ஆசிரியர் மூலமா மற்ற ஆசிரியர்களைத் தேடிப்பிடிக்க ஆரம்பிச்சோம். இதுக்கே 2 வருஷத்துக்கு மேல ஆகிடுச்சி. ‘நாம எல்லாம் வெவ்வேறு துறையில வேலை செய்தாலும், இப்போ நல்லாதான் இருக்கிறோம். அதுக்கு முக்கிய காரணமாக இருந்த நம்ம ஆசிரியர்களுக்கு நாம எல்லோரும் சேர்ந்து நேரில் சென்று நன்றி சொல்லனும்’னு நண்பர்களுக்குள்ளாகவே பேசி முடிவெடுத்தோம். அதன்படிதான் ஞாயிற்றுக்கிழமை அன்று பள்ளிக்கூட நண்பர்கள் எல்லாம் ஒண்ணா சேர்ந்து இந்தத் திருவிழாவை ஆசிரியர்களுக்காக நடத்தினோம்.

ஆசிரியர்கள் மற்றும் முன்னாள் மாணவர்கள்

எங்க செட் நண்பர்கள் 87 பேருல, 8 பேர் தவறியிருந்தாங்க. மீதமுள்ள 80 பேரில், அன்னைக்கு எப்படியும் 70 பேர் தங்களின் குடும்பத்தோடு வந்துட்டாங்க. சவுதி, மலேசியா, இலங்கைல இருந்த நண்பர்கள் கூட வந்திருந்தாங்க. நீண்ட நாள் கழிச்சு எல்லோரும் சந்திச்சதுல ரொம்ப சந்தோஷமா இருந்துச்சு. எங்க எல்லோருக்கும் எப்படியும் 43 – 45 வயசு இருக்கும். ஆனா, நாங்க எல்லாம் அன்று 15 வயசுக்கே திரும்பி போயிட்டோம். எல்லாமே பிரமிப்பா இருந்தது. எங்களுக்குப் பாடம் சொல்லி கொடுத்த ஆசிரியர்கள் 20 பேர் வந்திருந்தாங்க. அவங்களுக்கு முறையாக வரவேற்பு கொடுத்தோம். பின்னர், பாதபூஜை செய்து வணங்கி ஆசிர்வாதம் பெற்றோம். எங்களை மனம் கனிந்து வாழ்த்தினாங்க. அதுபோதும் எங்களுக்கு! எங்க மனசு எல்லாம் சந்தோஷமாக மாறிடுச்சு. எல்லோரும் ஒண்ணா சாப்புட்டு பேசி மகிழ்ந்தோம். அந்த நாள் எப்படி போச்சுனே தெரியல. அதுவும் எங்க வாழ்நாள்ல மறக்க முடியாத ஒரு நாள்தான்!” என்றார் மகிழ்ச்சி பொங்க.

Sign In

Register

Reset Password

Please enter your username or email address, you will receive a link to create a new password via email.