“செமயா இருந்துச்சுப்பா..” என்கிற அளவிற்கு விறுவிறுப்பான போட்டி நேற்றைய எபிசோடில் நடந்தது. சர்வைவர் அதன் பரபரப்பான இறுதிக்கட்டத்தை எட்டிக் கொண்டிருப்பதன் சூடு நேற்றுதான் நன்றாக உறைக்க ஆரம்பித்தது. அப்படியொரு சுவாரசியமான போட்டி.

இனி, காடர்கள், வேடர்கள் என்கிற வியாபாரமெல்லாம் செல்லுபடியாகாது. தனிநபர்களாகத்தான் விளையாடியாக வேண்டும் என்கிற யதார்த்தமான நிலைமை நேற்றிலிருந்து தலைவிரித்து ஆடத் தொடங்கியது. இனிமேல் பாசக்காட்சிகளைப் பார்க்க முடியாது. கூட்டணிகள் உடையும்; சிதறும்; வேறொன்றாக உருமாறும். இதன் ஆரம்பம் உமாபதி – ஐஸ்வர்யா கூட்டணியின் முதல் வெற்றி.

ரணகளம் இனி ஆரம்பம்.

சர்வைவர் 86-ம் நாளில் என்ன நடந்தது?

ஆயுள் தண்டனை கைதி ரிலீஸ் ஆன மாதிரி மீசையும் தாடியுமாக ஹோட்டலுக்குத் திரும்பினார் அம்ஜத். ‘ஜூரி வில்லா’ என்று லுலுவாய்க்கு பெயரிடப்பட்ட கட்டிடத்தின் உள்ளே காட்டினார்கள். படுக்கையறை, கண்ணாடி, கழிவறை, தலைவாரும் சீப்பு என்று அந்த இடத்தை பார்க்கும்போது நமக்கே சற்று விநோதமாக இருந்தது. இதுவரை செடி, கொடி, மரம், டாஸ்க் என்று இயற்கைப் பின்னணியிலேயே சர்வைவர் நிகழ்ச்சியைப் பார்த்து விட்டு ஒரு நவீன உலகின் பின்னணியில் இருக்கும் அறையை முதன்முறையாக பார்க்கும் போது நமக்கே ‘ஒரு மாதிரி’ விநோதமாக தோன்றுகிறது என்றால் நிச்சயம் அம்ஜத்திற்கு அது கூடுதல் விநோதமாக இருந்திருக்கும். நந்தா சொன்னதின் அர்த்தம் இப்போதுதான் புரிகிறது.

‘வனமகன்’ ஜெயம்ரவி மாதிரி அறைக்குள் நுழைந்த அம்ஜத், கண்ணாடியில் தன் முகத்தையே விநோதமாகப் பார்த்தார். பிறகு அதே தோற்றத்தில் வீட்டாரிடம் பேச முடிவு செய்து வீடியோ காலில் அழைத்தார். (ஏன் இந்தக் கொலைவெறி?!). மனைவியைப் பார்த்ததும் நெகிழ்ந்த அம்ஜத், மகளைப் பார்த்ததும் உடைந்து போனார். ‘டெடிபேர்தான் அப்பாவாம். ஏன் வீட்டுக்கு வரலைன்னு திட்டுவாளாம்..”என்று மனைவி சொன்ன போது வாய்விட்டு அழுதார் அம்ஜத்.

ஒரு நட்பின் விரிசல்

சரண் மறுபடியும் காடர்கள் பக்கம் சாய்ந்து விட்டது குறித்து ஐஸ்வர்யாவிற்கு உள்ளூற வருத்தம். நந்தாவைப் பற்றி தவறாக சரண் பேசியது குறித்து விளக்கம் கேட்டுக் கொண்டிருந்தார் ஐஸ்வர்யா. “நந்தா என் கிட்ட என்ன சொன்னாருன்னா. இனிகோவிற்கு வாக்கு கொடுத்துட்டேன். அதனாலதான் உன்னை எதிர்த்து வோட் பண்ண வேண்டியதாப் போச்சு –ன்னு சொன்னாரு. அதுக்கு அப்புறம் இனிகோவை நான் இன்னிக்குதான் பார்க்கறேன். இதைப் பத்தி அவர் கிட்ட விசாரிக்கும்போது “அப்படியொன்னும் நந்தா என்கிட்ட வாக்கு கொடுக்கலையே’ன்னு சொன்னாரு. நந்தா பத்தி தப்பா பேசினா உனக்குப் பிடிக்காதுன்னு தெரியும். கேமை கேமா பார்த்து நானும் உன்கிட்ட இருந்து இதையெல்லாம் மறைச்சிருக்கணும். இப்படி backfire ஆகுணும்னு எனக்குத் தெரியாது” என்று சரண் விளக்கம் அளிக்க, ஐஸ்வர்யா மிகுந்த அப்செட் ஆகி தனியாக உலவி கலங்கத் துவங்கினார். பிறகு கண்ணீருடன் திரும்பி வந்து “எனக்கு எது ஸ்ட்ராட்டஜி, எது பர்சனல்-ன்னு புரியல.. என் மூலமா உனக்கு ஒரு பிரச்சினையும் வராது” என்று சோகமாக சொல்லி விட்டுத் திரும்பினார். ஒரு அழகான நட்பில் விரிசல் ஏற்பட்ட தருணம் அது.

ஐஸ்வர்யா

பஞ்சாயத்தில் நடந்த திருப்பங்கள்

ஜூரி வில்லா. அம்ஜத் காலையுணவை ருசித்து சாப்பிட்டுக் கொண்டிருக்க, பின்னால் இருந்து ஒரு உருவம் வந்து அவரை இறுக்க கட்டி அணைத்தது. அது நந்தா என்பது அம்ஜத்திற்கு தெரியும். நந்தாவின் முகம் இப்போது சற்று மலர்ச்சியாக இருந்தது. “என் பிரெண்டைப் போல யாரு மச்சான்” என்கிற பாடல் பின்னணியில் ரகளையாக ஒலித்தது.

கடந்த பஞ்சாயத்தில் நடந்த சம்பவங்களை நந்தாவிடம் அம்ஜத் விளக்கினார். காடர்கள் ஐஸ்வர்யாவைத்தான் முதலில் டார்கெட் செய்வார்கள் என்பது அம்ஜத்திற்குத் தெரியும். ஆனால் அதே சமயத்தில் தான் ஐடலை ஐஸ்வர்யாவிற்குத் தரக்கூடும் என்கிற சந்தேகமும் அவர்களுக்கு எழும். எனவே வாக்குகளைப் பிரித்துப் போடுவார்கள். காடர்களின் குழுவில் இருந்ததால் இது அம்ஜத்திற்கு நன்றாகவே தெரியும். எனவேதான் வாக்கு எண்ணுவதற்கு முன்னால் ஐடலை ஐஸ்வர்யாவிற்கு தந்தார். இது ஒரு Calculated riskதான். இதன் மூலம் ஐஸ்வர்யாவும் தப்பித்து தானும் தப்பிக்கலாம் என்பது அம்ஜத்தின் திட்டமாக இருக்கலாம்.

இனிகோ , விக்ராந்த்

ஆனால் மறுவாக்கெடுப்பில் இனிகோவிடமிருந்து வெளிப்பட்ட திடீர் அட்வான்டேஜ் காரணமாக இந்த உத்தி அம்ஜத்தையே பழிவாங்கி விட்டது. இனிகோ நினைத்திருந்தால் நாராயணனை வெளியேற்றி அம்ஜத்தை காப்பாற்றியிருக்கலாம். ஆனால் ஒரு வலிமையான போட்டியாளர் நீடிப்பதை காடர்கள் விரும்பவில்லை.

ஐஸ்வர்யா, அம்ஜத், நாராயணன் என்று யார் போனாலும் காடர்களுக்கு லாபம்தான். “தனிநபர் முடிவுன்னு அவங்க சொல்றாங்க. நிச்சயம் அந்த மாதிரி தெரியல” என்ற அம்ஜத், “ஐஸ்வர்யா ஃபைனலுக்கு வரணும்” என்று தன் விருப்பத்தைச் சொல்ல “நடக்கும். நியாயம்.. தர்மம்-ன்னு ஒண்ணு இருக்குல்ல” என்று தலையாட்டினார் நந்தா. (நியாயம்.. தர்மம்?…சர்வைவர் ஆட்டம்ன்னா என்னன்னு உங்களுக்குத் தெரியல. ரூல்ஸை பாருங்க.. போய் இங்லீஷ்காரன் எப்படி ஆடறான்னு பாருங்க. நந்தா.. பிழைக்கத் தெரியாதவரா இருக்கீங்களே?!).

இம்யூனிட்டி எலிமினேஷன் சேலன்ஞ்

கொம்பர்கள் தீவிற்கு ஓலை போனது. ‘நீங்கள் எட்டு பேரும் இறுதி ஆட்டத்திற்கு தகுதியாகியிருக்கிறீர்கள். வாழ்த்துகள். Soul Survivor – ஆக வெல்பவருக்கு ஒரு கோடி பரிசு கிடைக்கும்.” என்று துவக்கத்தில் ஆசை காட்டிய ஓலை, ‘இனி ஆட்டத்தில் பல சவால்களும் திருப்புமுனைகளும் இருக்கும். அடுத்து நடக்கவிருப்பது Eliminated Immunity Challenge. நீங்கள் நான்கு அணிகளாகப் பிரிய வேண்டும். உங்கள் ஜோடி யாரென்பதை தீர்மானித்துக் கொள்ளுங்கள். கவனியுங்கள். இது முக்கியமான சவால். எனவே ஜோடியைத் தேர்ந்தெடுப்பதில் கவனமாக இருங்கள். இந்த ஆட்டத்தில் தோற்கும் அணி (2 நபர்கள்) அப்படியே எலிமினேட் ஆவார்கள்” என்று இறுதியில் ஓலை பயமுறுத்தியது.

பந்திக்கு முந்திய ஐஸ்வர்யா

கேம் பார்ட்னர் முக்கியம் என்பதால் உஷாரான ஐஸ்வர்யா, ‘என்னோட டீல் ஓகேவா?” என்பது போல் உமாபதியை நோக்கி சைகை காட்டி விட்டு “நான் உமாபதியோட பார்ட்னர்ஷிப் சேர விரும்புகிறேன்” என்று சட்டென்று சபையில் முதலில் சொல்லி விட்டார். இதை யாரும் எதிர்பார்க்கவில்லை. வழக்கம் போல் நீண்ட ஆலோசனைக்குப் பிறகே முடிவாகும் என்று நினைத்தார்கள்.

ஐஸ்வர்யா – உமாபதி

ஐஸ்வர்யா கேட்டதும் உமாபதியும் சம்மதித்து விட்டார். அதற்கொரு காரணம் இருந்தது. அவருக்கு காலில் அடிபட்டிருந்தது. ஆனால் இதை அவர் நேர்மையாக ஐஸ்வர்யாவிடம் சொல்ல “பரவாயில்லை. மனஉறுதிதான் முக்கியம்” என்றார் ஐஸ்வர்யா. ரிஸ்க் எடுப்பதை ரஸ்க் சாப்பிடுவது போல் கையாண்ட ஐஸ்வர்யாவின் ஸ்டைல் உமாபதிக்குப் பிடித்திருந்தது. ஆனால் அது உபகாரணம்தான். தன் கால் பிரச்சினையால் காடர்களோடு ஜோடி சேர்ந்து அவர்களில் யாரும் தோற்று விடக்கூடாது என்பதுதான் பிரதான காரணம். ஆனால் உமாபதி ஐஸ்வர்யாவோடு சேர்ந்தது விஜிக்குப் பிடிக்கவில்லை. எனவே அந்த வெறுப்பில் சரணைத் தேர்ந்தெடுத்தார். அது Puzzle விளையாட்டாக இருந்தாலும் சரி. சாகச ஆட்டமாக இருந்தாலும் சரி, சரண் இரண்டிலும் கில்லி என்பதால் சாதுர்யமாக காயை நகர்த்தி கூட்டணி அமைத்த விஜி, இன்னொரு பக்கம் உமாபதியையும் கோபித்துக் கொண்டார். அவ்வளவு அக்கறை என்றால் அவர் உமாபதியை முதலில் தேர்வு செய்திருக்க வேண்டும்.

‘வாழ்ந்தாலும் வீழ்ந்தாலும் ஒன்றாக இருப்போம்’ என்று இணைபிரியாத தோழர்களாக இருந்த இனிகோவும் விக்ராந்த்தும் ஓர் அணியாக சேர்ந்தார்கள். மீதம் இருந்த கறிவேப்பிலை மற்றும் கொத்தமல்லி யாரென்று பார்த்தால் அது நாராயணன் மற்றும் வனேசா. அவர்களுக்கு வேறு சாய்ஸூம் இல்லை. எண்ணிக்கை குறையக் குறைய இது போன்ற நிராகரிப்புகள் நிறைய வரும். எனவே அவர்கள் ஓரணியாக இணைந்தார்கள். ஆனால் இந்த அணியை குறைத்து மதிப்பிட்டு விட முடியாது என்பது பிறகுதான் தெரிந்தது.

இனியில்லை, எண்ணிக்கை விளையாட்டு

“களத்துக்கு வாங்க சர்வைவர்ஸ்” என்று அழைத்தார் அர்ஜுன். வழக்கத்தை விடவும் பிரமாண்டான விளையாட்டு செட்அப் போடப்பட்டிருந்தது. “இன்னிக்கு வெயில், காத்து அதிகமாக இருக்கு.. இறுதி பகுதிக்கு வந்துட்டீங்க. வாழ்த்துகள். இனிமே இம்யூனிட்டி சேலன்ஞ் மட்டும்தான் இருக்கும். வோட்டிங் இருக்காது” என்று அர்ஜுன் சொல்ல, அந்தச் சேதி ஐஸ்வர்யாவின் காதில் தேனாக பாய்ந்தது. ‘இனிமே நம்பர் கேம் பிரச்னையிருக்காது” என்று அவர் சந்தோஷமானார். திறமையை நிரூபித்தால்தான் இனி யாராக இருந்தாலும் ஆட்டத்தில் நீடிக்க முடியும்.

‘உங்கள் பார்ட்னரை எப்படி தேர்ந்தெடுத்தீர்கள்?” என்று விசாரிக்கத் துவங்கினார் அர்ஜுன். உமாபதி, ஐஸ்வர்யாவுடன் கூட்டணி வைத்ததில் காண்டாகி இருந்த விஜி அது குறித்து புகார்களை வைக்கத் துவங்கினார். “ஐஸ்வர்யாதான் என்னை டைரக்ட்டா உடனே கூப்பிட்டாங்க. விஜி நாலு சாய்ஸ்ல ஒண்ணா என்னை வெச்சிருந்தாங்க” என்று விஜியின் புகாருக்கு கவுன்ட்டர் தந்தார் உமாபதி. காடர்கள் கூட்டணி உடையத் தொடங்குவதின் அறிகுறி இது.

“நம்ம டீம்ல இருந்து ஒருத்தர் ஜெயிக்கணும்னு தோணுச்சு.” என்றார் இனிகோவுடன் கூட்டணி அமைத்த விக்ராந்த். “எல்லாமே ஃபாஸ்ட்டா முடிஞ்சிச்சி” என்றார் வனேசா. (நாராயணனை வைத்துக் கொண்டு என்ன செய்யப் போகிறோமோ என்கிற கவலை அவருக்குள் இருந்தது. அட! நாராயணா!).

“இனிமே இது தனிநபர் ஆட்டம். அதை மனசுல வெச்சுக்கிட்டு ஆடுங்க” என்ற அர்ஜூன் ஆட்டத்தின் கான்சப்டை விளக்கத் துவங்கினார்.

விஜி, சரண்

இனி ஆட்டம் ஆரம்பம்

இது நான்கு நிலைகளைக் கொண்ட ஆட்டம். அணியில் ஒருவர் முதலில் பந்தை மேலே இருக்கும் கூடையில் விழுமாறு போட வேண்டும். பிறகு ஏணியின்மீது ஏறி அந்தப் பந்தை ஒரு நீளமான பாதையில் உருட்டி விட வேண்டும். அது பாதையின் வழியாக உருண்டு வருவதற்குள் சில பல தடைகளைத் தாண்டிச் சென்று அந்தப் பந்து மறுமுனையில் கீழே விழுவதற்குள் பிடித்துவிட வேண்டும். அடுத்ததாக அந்தப் பந்தைக் கொண்டு போய் ஓர் உயரமான கோபுரத்தின் கூண்டில் போட வேண்டும்.

இது முடிந்ததும் அணியில் உள்ள இன்னொருவர் பலகைகளை அமைத்து A வடிவ கோபுரத்தில் ஏறி சறுக்கி வருவார். அடுத்ததாக இருவரும் இணைந்து பல துளைகளைக் கொண்ட பலகையில் மேலே உள்ள மூன்று துளைகளில் பந்துகளைக் கொண்டு போய் நிறுத்த வேண்டும். பொம்மலாட்டம் போல் இருவர் அசைக்கும் கயிற்றின் வழியாக ஒரு பலகையின் மூலம் பந்தை நகர்த்திச் செல்ல வேண்டும். ஒரு மேடையின்மீது நின்று இதைச் செய்ய வேண்டும். நான்கு அணிகள் விளையாடவிருக்கும் இந்தப் போட்டியில் கடைசியாக வரும் அணி ஆட்டத்திலிருந்து உடனடியாக வெளியேறும்.

போட்டி ஆரம்பித்தது. பந்தை முதலில் கூடையில் போட்ட சரண், அதை உருட்டி விட்டு மிக வேகமாக தடைகளைத் தாண்டிச் சென்றார். உயரம் தாண்டுதலைத் தவிர, ஏறத்தாழ தரையில் படுத்து முன்னேறும் தடையும் இருந்தது. அதை எளிதில் தாண்டி வரமுடியாதவாறு மண் போடப்பட்டு இருந்தது. என்றாலும் மிக வேகமாக வந்த சரண், கடைசி நொடியில் பந்தைத் தவற விட்டார். “நிமிர்ந்து பார்க்கறேன். தலை அப்படியே சுத்துது. அப்பத்தான் புரிஞ்சது. இந்த கேமை எப்படி செட் பண்ணியிருக்காங்கன்னு” என்றார் சரண். விக்ராந்த்தும் இதே போல் பந்தைத் தவறவிட்டார்.

உமாபதிக்கு கால்வலி இருந்ததால் ஒரு புதிய உத்தியைக் கையாண்டார். தடையைத் தாண்டும் போது மண்ணை நன்றாக கிளறி வழியை ஏற்படுத்திக் கொண்டார். முதல் முறை தோற்றாலும்கூட அடுத்த முறை எளிதாக வந்து விடலாம் என்பது அவரது கணக்கு. இது நன்றாக வேலை செய்தது. அடுத்த முறை அவர் வரும் போது கால் வலி இருந்தாலும் மிக வேகமாக தடைகளைத் தாண்டி மிக அசால்ட்டாக வந்து பந்தைப் பிடித்தார். இதில் அவருக்கு இரண்டாவது இடம்தான். ஏனெனில் தனது இரண்டாவது முயற்சியில் சரண் பந்தைப் பிடித்துவிட்டார். எனவே முதலில் பந்தைப் பிடித்தது சரண்தான்.

சரண் அடுத்த நிலையை நோக்கி வேகமாகச் சென்றார். பந்தை உயரமான கோபுரத்தில் உள்ள கூடையில் போட வேண்டும். பின்னாலேயே உமாபதியும் வந்து சேர்ந்தார். முதல் நிலை சவாலில் போராடிய விக்ராந்த்தும் நாராயணனும்கூட சில நிமிடங்களில் வந்து சேர்ந்தார்கள். ஆக ஒரு கட்டத்தில் போட்டியாளர்கள் சமநிலைக்கு வந்து விட்டார்கள். பந்தை உயரமான கூடையில் போடுவது நால்வருக்குமே சிரமமான பணியாக இருந்தது. ‘அண்டர் ஆர்ம் எறிதலை முயன்று பார்த்தார் விக்ராந்த்.

வனேசா

இந்த டாஸ்க்கில் முதலில் பந்தை எறிந்து கூடையில் கச்சிதமாக நிறுத்தியவர் உமாபதி. பிறகு விக்ராந்த்தும் இணைந்தார். மூன்றாவதாக போட்டு முடித்த பிறகுதான் சரணுக்கு உயிரே வந்தது. சில நிமிடங்கள் கழித்து நாராயணனும் வந்தார்.

இவர்கள் தங்களின் பங்களிப்பை முடித்ததும் அணியின் பார்ட்னர் அடுத்த பொறுப்பை ஏற்றுக் கொள்ள வேண்டும். உமாபதியின் பார்ட்னரான ஐஸ்வர்யா முதலில் சென்று விட்டாலும் பலகை அமைப்பதில் தடுமாறினார். இனிகோ சற்று வேகமாக முன்னேறினாலும் “மூன்றாவது பலகை சரியில்லை.. பாருங்க” என்று அர்ஜுன் குழப்பி விட்டதால் திகைத்து தடுமாறினார். விஜியும் சற்று வேகமாக முன்னேறினார்.

இந்த இடத்தில்தான் வனேசாவின் மேஜிக் வேலை செய்தது. நாராயணன் சற்று பின்தங்கி இவரிடம் பொறுப்பை ஒப்படைத்தாலும் பலகைகளை மடமடவென அடுக்கி முதலில் ஏறியது இந்த அம்மணிதான். ‘யாரையும் குறைத்து எடைபோடக்கூடாது’ என்று மற்றவர்களுக்கு தோன்றியிருக்கும். வனேசா மறுமுனையில் சறுக்கி வர ‘பார்த்து பார்த்து என்றார் நாராயணன். ஐஸ்வர்யாவும் இனிகோவும் ஒரே சமயத்தில் சறுக்கி வந்து இறங்கினார்கள். இந்தச் சமயத்தில் ஐஸ்வர்யாவிற்கு கையில் காயம் ஏற்பட்டது. இதன் பிறகு விஜியும் வந்து சேர்ந்தார்.

வென்று காட்டிய உமாபதி – ஐஸ்வர்யா கூட்டணி

நான்காவது நிலை. இதுதான் இருப்பதிலேயே சிக்கலான ஆட்டம். மிக நிதானமாகவும் கவனமாகவும் ஆட வேண்டிய ஆட்டம். ஒருவராக இருந்தால் கண்ட்ரோல் அவருடைய கையில் இருக்கும். ஆனால் பொம்மலாட்டக் கயிறுகளை இருவரும் பிடித்து கையாள வேண்டும் என்பதால் ஒருங்கிணைப்பும் ஒத்திசைவும் தேவைப்படும்.

“நான் வலதுகையைப் பயன்படுத்தறேன்-ன்னு விஜி சொன்னாங்க. எனக்கு எந்தக் கையா இருந்தாலும் பரவாயில்லைன்னு லெஃப்ட் எடுத்துக்கிட்டேன். ஆனா கோ –ஆர்டினேஷன் வரலை” என்றார் சரண். விக்ராந்த் – இனிகோ கூட்டணிக்கு வேறு பிரச்சினை. இருவருக்குமே இடது கை வாகுதான் சரியாக இருந்தது. நாராயணனுடன் பொறுமையாக மல்லுக் கட்டுக் கொண்டிருந்தார் வனேசா.

நாராயணன் வனேசா

நிதானமான ஆட்டத்திற்கும் ஐஸ்வர்யாவிற்கும் எப்போதுமே ஏழாம் பொருத்தம். என்றாலும் உமாபதி அவரை திறமையாக கண்ட்ரோல் செய்தார். இந்தக் கூட்டணி முதல் பந்தை மிகத்திறமையாகப் போட்டது. சில நிமிடங்களில் இரண்டாவது பந்தையும் போட்டது. “எப்படிரா இவங்களுக்கு மட்டும் நடக்குது” என்று இதர அணிகள் ஆச்சரியமாகப் பார்த்தார்கள். விஜி – சரண் கூட்டணிக்கு முதல் வெற்றி கிடைத்தது. வனேசா – நாராயணன் கூட்டணி ஒரு முயற்சியில் ஏறத்தாழ வெற்றி பெற்று பிறகு கோட்டை விட்டார்கள். அட! நாராயணா!

ஒரு கட்டத்தில் மூன்றாவது பந்தையும் இட்டு “முடிச்சிட்டோம் சார்.. “என்று கத்தினார் உமாபதி. இரண்டு திறமைசாலிகள் இணையும் போது கடினமான பாதையும் எளிதாக மாறும் என்பதற்கான உதாரணம் இது.

ஆக உமாபதி – ஐஸ்வர்யா அணி அடுத்தக் கட்டத்திற்கு நகரும். இதில் தோற்கும் அணி எலிமினேஷன் என்பதால் மற்ற மூன்று அணிகளும் கடுமையாக போராடிக் கொண்டிருந்ததோடு எபிசோட் முடிந்தது.

எந்த அணி இதில் எலிமினேட் ஆகும்?

பார்த்துடுவோம்.

Sign In

Register

Reset Password

Please enter your username or email address, you will receive a link to create a new password via email.