அடுத்த சில நாட்களில் தனது 62-வது அகவையில் அடியெடுத்து வைக்கவுள்ளார் இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டன் கிருஷ்ணமாச்சாரி ஸ்ரீகாந்த். அதிரடி ஆட்டத்தின் மூலம் அச்சமின்றி எதிரணியின் பலம் மிக்க பந்துவீச்சை துவம்சம் செய்வதில் வல்லவர் இவர். 1981 முதல் 1992 வரையில் இந்திய கிரிக்கெட் அணியின் ஸ்டார் ப்ளேயர்.

image

இந்தியாவுக்காக 145 சர்வதேச ஒருநாள் கிரிக்கெட் போட்டிகளில் விளையாடி உள்ள ஸ்ரீகாந்த் மொத்தம் 4,091 ரன்களை சேர்த்துள்ளார். அதில் கிரிக்கெட் விளையாட்டின் சிறந்த மைதானங்களில் ஒன்றான லார்ட்ஸில் அவர் பதிவு செய்த 38 ரன்கள் மிகவும் முக்கியமானது. சரியாக 38 ஆண்டுகளுக்கு முன்னர் அவர் விளையாடிய அந்த ஆட்டத்தை மேட்ச் வின்னிங் இன்னிங்ஸ் எனவும் சொல்லலாம். அதுவும் உலகக் கோப்பை தொடரின் இறுதிப் போட்டியில் அந்த இன்னிங்ஸை ஆடி இருந்தார், இந்த கிரிக்கெட் தமிழர். அதுவே இந்தியா அன்று கோப்பையை கைப்பற்றுவதற்கான மேஜிக் நம்பராக இருந்தது. அந்த இன்னிங்ஸ் குறித்து பார்க்கலாம்.

இங்கிலாந்து நாட்டில் 1983 கிரிக்கெட் உலகக் கோப்பை தொடர் நடைபெற்றது. பெரிய எதிர்பார்ப்பு எதுவும் இல்லாமல் இந்திய கிரிக்கெட் அணி ‘B’ பிரிவில் விளையாடியது. நான்கு வெற்றிகளை பதிவு செய்த இந்தியா, அரையிறுதிக்கும் முன்னேறியது. பின்னர் இங்கிலாந்தை வீழ்த்தி, இறுதிப் போட்டிக்குள் நுழைந்தது. இரண்டு முறை உலகக் கோப்பையில் சாம்பியன் பட்டத்தை அடுத்தடுத்து வென்றிருந்த அணியான வெஸ்ட் இண்டீஸ் அணியை எதிர்கொண்டது இந்தியா.

image

தொடக்க வீரரான ஸ்ரீகாந்த், இறுதிப் போட்டிக்கு முன்னர் வரை 1983 உலகக்கோப்பை தொடரில் விளையாடிய 7 ஆட்டங்களில் 156 ரன்களை சேர்த்திருந்தார். 8-வது ஆட்டமான இறுதிப் போட்டியில் ஸ்ரீகாந்த் 38 ரன்களை சேர்த்திருந்தார். மொத்தம் 57 பந்துகளை எதிர்கொண்ட அவர் 7 பவுண்டரி மற்றும் 1 சிக்ஸரை அந்த இன்னிங்ஸில் விளாசி இருந்தார். மொத்தம் 82 நிமிடங்கள் களத்தில் நின்று விளையாடி இருந்தார் அவர். இறுதிப் போட்டியில் இந்தியா மற்றும் வெஸ்ட் இண்டீஸ் என இரண்டு அணிகளையும் சேர்த்து தனி ஒரு பேட்ஸ்மேன் அடித்த அதிகபட்ச ரன் அதுதான். அதோடு அது மிகவும் முக்கியமான ரன்களும் கூட. 

கிரிக்கெட் உலகின் தலைசிறந்த வேகப்பந்து வீச்சாளர்களான ஆண்டி ராபர்ட்ஸ், ஜோயல் கார்னர், மால்கம் மார்ஷல், மைக்கேல் ஹோல்டிங் மாதிரியான பவுலர்களின் தரமான பந்துவீச்சுக்கு எதிராக அந்த இன்னிங்ஸை விளையாடி இருந்தார் ஸ்ரீகாந்த். 

image

A Shot of Hope!

இந்தப் போட்டியில் ஆண்டி ராபர்ட்ஸ் பந்துவீச்சில் வலது காலால் மண்டியிட்டபடி ஆஃப்-சைடு திசையில் ஓர் அற்புதமான ஸ்கொயர் டிரைவ் ஆடியிருப்பார். அந்த ஷாட்தான் ‘A Shot of Hope’ என சொல்லப்படுகிறது. துவண்டு கிடந்த அணிக்கு நம்பிக்கை கொடுத்த ஷாட் என வர்ணிக்கப்படுகிறது அது. எதை இழந்தாலும் நம்பிக்கையை இழக்கக் கூடாது என்பதை அந்த ஷாட் இந்திய வீரர்களுக்கு இறுதிப் போட்டியில் உணர்த்தியதாகவும் சொல்லப்படுகிறது. அந்த நம்பிக்கைதான் மதன் லால் மூன்று விக்கெட் வீழ்த்தவும், கேப்டன் கபில்தேவ் பிடித்த அற்புத கேட்ச்சும் அடங்கும். அதன்மூலம் இந்தியா முதல் முறையாக உலகக் கோப்பையை வென்றிருந்தது.

image

தனது இன்னிங்ஸ் குறித்து ஸ்ரீகாந்த்!

“இந்தியா முதன்முதலில் உலகக் கோப்பையை வென்ற அந்த அற்புத தருணத்தை என்னால் மறக்கவே முடியாது. அந்தப் போட்டியில் நான் டாப் ரன் ஸ்கோரராக இருந்தது எனக்கு மகிழ்ச்சி. நாங்கள் கோப்பையை வெல்வோம் என யாரும் எதிர்பார்க்கவில்லை. ஆனால் அதை செய்து காட்டினோம். 

அப்போதைய கிரிக்கெட் வீரர்களில் ஃபெண்டாஸ்டிக் ஃபோர் பவுலர்கள் என போற்றப்பட்ட தரமான நான்கு வெஸ்ட் இண்டீஸ் வேகப்பந்து வீச்சாளர்களை எதிர்த்து விளையாட வேண்டி இருந்தது. மிகவும் சவாலான இன்னிங்ஸ் அது. கவாஸ்கர் அவுட்டானதும் எனக்கு என்ன செய்வதென்றே தெரியவில்லை. அமர்நாத் கொடுத்த நம்பிக்கையில் விளையாடினேன். அப்போது எனக்குள் நான் சொல்லிக் கொண்டது ஒன்றே ஒன்றுதான்: ‘கவுன்ட்டர் – அட்டாக் செய்ய வேண்டும்’ என்பதுதான் அது. அப்போதுதான் ரன் சேர்க்க முடியும் என நினைத்தேன். 

image

பவுன்ஸ், மூவிங் பால் என இங்கிலாந்து சூழலுக்கு ஏற்ற வகையில் அவர்கள் அற்புதமாக பந்து வீசியிருந்தனர். அதனை எதிர்த்து டிஃபென்ஸ் விளையாடுவது வேலைக்கு ஆகாது என நினைத்தேன். அதனால் அவர்களது பந்துவீச்சை கவுன்ட்டர் – அட்டாக் செய்தேன். அதற்கு பலனும் கிடைத்தது” என்கிறார் அவர். 

1985-இல் ஆஸ்திரேலியாவில் நடைபெற்ற உலக சாம்பியன்ஷிப் கிரிக்கெட்டில் டாப் ரன் ஸ்கோரரும் ஸ்ரீகாந்த் தான். தனது ஆரம்பகால கிரிக்கெட் கெரியரில் சில சங்கடங்களை எதிர்கொண்டுள்ளார் ஸ்ரீகாந்த். இந்திய அணியின் தேர்வுக்குழு தலைவராக ஸ்ரீகாந்த் இருந்த போதுதான் இந்தியா 2011 உலகக் கோப்பையை வென்றிருந்தது.

முந்தைய அத்தியாயம்: ‘கிரிக்’கெத்து 11: சச்சினின் பேட்டிங் சம்பவங்களை ரசித்திருப்போம்… இது பவுலிங் ‘கெத்து’!

 

Source : WWW.PUTHIYATHALAIMURAI.COM

Sign In

Register

Reset Password

Please enter your username or email address, you will receive a link to create a new password via email.