பொதுப்பணித்துறையின் வேலூர் தொழில்நுட்பக் கல்விக் கோட்டச் செயற்பொறியாளராக ஷோபனா என்பவர் 2019-ம் ஆண்டிலிருந்து பணியாற்றிவந்தார். இவரின் அலுவலகம், வேலூர் தந்தை பெரியார் அரசு பாலிடெக்னிக் கல்லூரி வளாகத்தில் செயல்பட்டுவருகிறது. வேலூர், திருவண்ணாமலை, கடலூர், விழுப்புரம், கள்ளக்குறிச்சி, கிருஷ்ணகிரி, தருமபுரி, ராணிப்பேட்டை, திருப்பத்தூர் ஆகிய ஒன்பது மாவட்டங்களிலும் அரசுக் கல்லூரிக் கட்டுமானப் பணிகள், இந்த அலுவலகம் சார்பில்தான் மேற்கொள்ளப்படுகின்றன. இந்த நிலையில், தீபாவளியையொட்டி கட்டட ஒப்பந்ததாரர்களிடம் அதிகாரி ஷோபனா வசூல் வேட்டையில் ஈடுபட்டதாக, வேலூர் மாவட்ட லஞ்ச ஒழிப்புத்துறைப் போலீஸாருக்குப் புகார்கள் குவிந்தன.

கைப்பற்றப்பட்ட பணம்

அதையடுத்து, ரகசியமாக அவரைக் கண்காணித்த லஞ்ச ஒழிப்புத்துறைப் போலீஸார், நவம்பர் 2-ம் தேதி இரவு, ஷோபானாவின் காரை அதிரடியாகச் சோதனை செய்தனர். ஒரு துணிப்பையில் சுருட்டி வைக்கப்பட்டிருந்த 500 ரூபாய் கட்டுகளைக் கைப்பற்றி எண்ணிப் பார்த்தபோது, 5 லட்சம் ரூபாய் இருந்தது. பணத்துக்கான உரிய ஆவணங்கள் ஷோபனாவிடம் இல்லாததால், அதைப் பறிமுதல் செய்தனர். தொடர்ந்து, ஷோபனா தங்கியிருந்த குடியிருப்பிலும் சோதனை நடத்தினர். அங்கும் உரிய ஆவணங்களின்றி இருந்த 15.85 லட்சம் ரூபாய் ரொக்கப் பணம், ரூ.3.92 லட்சத்துக்கான மூன்று காசோலைகள், 18 சொத்து ஆவணங்கள் உள்ளிட்டவற்றை போலீஸார் கைப்பற்றினர்.

ஷோபானாவின் சொந்த ஊரான ஓசூர் நேரு நகரிலிருக்கும் அவர் வீட்டிலும் சோதனை நடத்தியதில், 2 கோடி ரூபாய் ரொக்கம், 38 பவுன் தங்க நகைகள், 1 கிலோவுக்கும் மேலான வெள்ளி நகைகள், 28 லட்சம் ரூபாய்க்கான நிரந்தர வைப்புச் சான்றிதழ், 11 வங்கிக் கணக்குப் புத்தகங்கள், வங்கி லாக்கர் சாவி ஆகியவை சிக்கியது. மொத்தமாக, 2.27 கோடி ரூபாய் ரொக்கப் பணம் பறிமுதல் செய்யப்பட்டது. இது தொடர்பாக, ஷோபனா மீது ஊழல் தடுப்புப் பிரிவின் கீழ் லஞ்ச ஒழிப்புத்துறைப் போலீஸார் வழக்கு பதிவு செய்தனர்.

ஷோபனா

விசாரணையை தீவிரப்படுத்திய நிலையில், வேலூர் தொழில்நுட்பக் கல்விக் கோட்டச் செயற்பொறியாளர் பதவியிலிருந்த ஷோபனா, திருச்சி வட்ட பொதுப்பணித்துறையில், கட்டட கட்டுமானம் மற்றும் பராமரிப்புத் துணைக் கண்காணிப்புப் பொறியாளராகப் பணியிட மாற்றம் செய்யப்பட்டார். தன் மீதான துறை ரீதியான நடவடிக்கையை அவர் ஏற்காமல், மருத்துவ விடுப்பு எடுத்துக்கொண்டு ஓசூரிலிருக்கும் வீட்டிலேயே தங்கியிருந்தார்.

இந்த நிலையில், ஊழல் தடுப்புப் பிரிவின் கீழ் பதிவுச் செய்யப்பட்ட வழக்கில் ஷோபனாவை, வேலூர் மாவட்ட லஞ்ச ஒழிப்புத்துறைப் போலீஸார் ஓசூரிலிருக்கும் அவரின் வீட்டுக்கே சென்று கைது செய்தனர். வேலூர் அழைத்துவரப்பட்ட ஷோபனாவிடம் சுமார் 5 மணி நேரம் விசாரணை நடத்தியப் பிறகு பெண்கள் தனிச்சிறையில் அடைத்துள்ளனர்.

இதுகுறித்து, லஞ்ச ஒழிப்புத்துறை அதிகாரிகளிடம் கேட்டபோது, ‘‘பொதுப்பணித்துறை பெண் அதிகாரி ஷோபனாவின் மொத்த சொத்து மதிப்பு மூன்றரைக் கோடி ரூபாய்க்கும் மேல் இருக்கிறது. இதில், வருமானத்துக்கு அதிகமாக 2,65,96,000 ரூபாயை அவர் சேர்த்திருப்பது விசாரணையில் தெரியவந்ததையடுத்து, கைது செய்திருக்கிறோம்’’ என்றனர்.

Sign In

Register

Reset Password

Please enter your username or email address, you will receive a link to create a new password via email.