Press "Enter" to skip to content

பாரி முனை: இருளில் தவிக்கும் பயணிகள்; சென்னையில் இப்படியும் ஒரு பேருந்து நிலையம்! -கண்டுகொள்ளுமா அரசு?

மதராசபட்டினம் , சென்னை மாநகராக மருவி இருந்தாலும், சென்னைக்கென்ற அதன் பழமை அடையாளங்கள் இன்றளவும் இருக்கிறது. அதன் சிறந்த சான்று , பாரிஸ் கார்னர். அன்றிலிருந்து , இன்றுவரை தனித்துவமாக திகழும் சென்னையின் ஹாட்ஸ்பாட், பாரிஸ் தான்.

பாரி முனை பேருந்து நிலையம்

அங்கு இரண்டு பேருந்து நிலையங்கள் உள்ளன. ஒன்று, பீச் ரோட்டில் இருக்கும் பேருந்து நிலையம். மற்றொன்று உயர் நீதிமன்றம் மெட்ரோ நிலையம் அருகில் உள்ள பேருந்து நிலையம். இந்த மெட்ரோ நிலையம் அருகில் இருக்கும் பேருந்து நிறுத்தம் , இரவு நேரங்களில் இருள் சூழ்ந்து அச்சுறுத்தும் விதமாகவே காட்சி அளிக்கும். பேருந்துகள் நிற்பதால் மட்டுமே பேருந்து நிறுத்தம் என்று அறியப்படுகிறது. சரியான சாலையோ , நடைமேடையோ , மின்விளக்குகளோ எதுவுமின்றி அதை பேருந்து நிலையமாகவே கருத முடியாது. மொபைல் கழிப்பறை அமைப்பு இருந்தாலும், பயன்பாட்டில் இல்லாமல் வெறும் காட்சி பொருளாக மட்டுமே அது தென்படுகிறது. கூரை, இருக்கை போன்ற அடிப்படை வசதி கூட இல்லாத ஒரு பேருந்து நிலையமாக இது திகழ்கிறது.

பாரி முனை பேருந்து நிலையம்

சென்னையின் பிரதான சாலையில், அமைச்சர் சேகர் பாபு அலுவலகத்தையொட்டி அமைந்திருக்கும் ஒரு பேருந்து நிலையம் இந்த கோலத்தில் சீர்கேடாக, கவனிக்கப்படாமலிருப்பது அதிர்ச்சியளிக்கிறது. பொழுது சாய்ந்தால் , துளியும் வெளிச்சமில்லாமல் , குண்டும் குளிழியுமாக இருக்கும் அந்த பேருந்து நிலையத்தை தங்கள் தினசரியாக கொண்ட சில பயணிகளிடம் பேசினோம்.

பாரி முனை பேருந்து நிலையம்

செங்குன்றத்தைச் சேர்ந்த ராஜ் என்பவர் , “இங்கு கழிவறைகளில்லை. என் காதுபடவே பெண் பயணியர் பலர், இந்த அசௌகரியத்தைப் பற்றி உரையாடி இருக்கிறார்கள். மற்றொரு பேருந்து நிலையத்தில், நல்ல நடைமேடை, கழிப்பிடம் என அனைத்து வசதிகளும் உள்ளன. அதில் பாதி கூட இங்கு இல்லை” என்று கூறினார்.

கழிவறை இல்லாதது பெண்களுக்கு சிரமம் என்பது ஒரு புறம் இருக்க, ஓட்டுநர் , நடத்துநர் உட்பட ஆண்கள் பலர் அங்கு ஓரமாக சுவரிலேயே சிறுநீர் கழித்து , அசுத்தமாக வைத்துள்ளனர் . இது போக, உடைந்த மது குப்பிகள், வேறு பல கழிவுகள் என்று ஓரங்கள் எல்லாம் குப்பை கிடங்காக காட்சி அளிக்கிறது. பேருந்து நிறுத்தத்தின் வாயிலில் ஒரே ஒரு மின்விளக்கு பொருத்தப்பட்டுள்ளது. அதன் வீச்சு ஒரு 5 அடிக்கு உட்பட்டே இருப்பதால், பின்னால் உள்ள இடங்களில் எந்த நடமாட்டமும் கண்ணுக்கு புலப்படாது. மெட்ரோ நிலையத்திலிருந்து பின் வழியாக இந்த பேருந்து நிலையத்திற்கு வரும் பாதை புதர் போல் காட்சியளிக்கிறது. நடைபாதையில், கண்ணாடி குப்பிகளெல்லாம் இருப்பதால், பயனர்கள் மொபைலில் ஃப்ளாஷ் லைட் அடித்துக்கொண்டு நடக்கின்றனர் .

பாரி முனை பேருந்து நிலையம்

“சரியான நேரத்திற்கு பேருந்துகள் வருவதில்லை. சீரான இடைவெளியிலும் பேருந்துகள் வருவதில்லை. இதனால் பணிக்கு செல்பவர்கள் மிகுந்த சிரமதிற்களாகிறார்கள்”, என்று தன் போன்று வேலைபார்ப்பவர்களின் பார்வையை முன்வைக்கிறார் பவானி .

பாரி முனை பேருந்து நிலையம்

மழை காலங்களில் , தரை தளம் சீராக இல்லாததால் நீர் தேங்கிவிடுகிறது என்றும், ஒதுங்க கூட இடம் இல்லை என்றும் பயணியர் வருந்தினார். மேலும், வெளிச்சமில்லாததால் , பிட்பாக்கெட் , திருட்டு போன்ற அபாயங்களும் இருப்பதாக மக்கள் கூறினர் .

பாரி முனை பேருந்து நிலையம்

“இவ்வளவு மோசமான பஸ் ஸ்டாண்ட் வேற எங்கேயும் பார்க்க முடியாது. வந்தா நாலு பஸ் ஒண்ணா வரும், இல்லனா வரவே வராது. அப்டி ஒண்ணா வந்தா மக்கள் எல்லாரும் அடிச்சு புடிச்சு ஓடி போய் ஏற வேண்டி இருக்கு. ஏன்னா, அந்த பஸ் விட்டுட்டா அடுத்து எப்போ வரும்னு தெரியாதே!” என்று நகைத்த படி தன் விமர்சனத்தை முன்வைத்தார் அன்பழகன் என்பவர்.

இந்த குற்றச்சாட்டுகள் குறித்தும், மக்களின் அசௌரியங்கள் குறித்தும் பாரிமுனை பேருந்து டிப்போ டைம் கீப்பர் அறிவழகனிடம் விசாரித்தோம். “இது ஹை கோர்ட்டிற்கு சொந்தமான இடம் . மெட்ரோ கட்டுமானத்தின்போது தற்காலிகமாக இந்த இடம் ஒதுக்கப்பட்டது. பிராட்வே அருகில் இதை இடமாற்றும் பணிகள் நடைபெற்று வருகிறது” என்று விளக்கமளித்தார்.

இது குறித்து பேசிய ரவி என்ற நடத்துநர், “மழையால் இடமாற்ற பணிகள் தள்ளிப்போய்விட்டதாகவும், விரைவில் இந்த இடம் காலி செய்யப்படும்” என்றும் கூறினார்.

பாரி முனை பேருந்து நிலையம்

ஆனால் பல ஆண்டுகளாகவே இந்த பேருந்து நிறுத்தம் இதே கோலத்தில் தான் இருக்கிறது. எந்த மாற்றமும் ஏற்படவில்லை. மக்கள் வேண்டுவதெல்லாம், மின்விளக்கு, கழிவறை, இருக்கை போன்ற அடிப்படை வசதிகளை தான்.

சுமார் 60 வயது முடிந்த கன்னியம்மாள் , “இங்க மழைக்கு ஒதுங்க இடம் இல்ல, பஸ் வர்ற வரைக்கும் கால் கடுக்க நிக்க வேண்டி இருக்கு. ராத்திரி ஆனா வெளிச்சமும் இருப்பதில்ல . ரொம்பவே சிரமமா இருக்கு ” என்றார்.

பாரி முனை பேருந்து நிலையம்

இப்படி அனைத்து வயதினரின் கோரிக்கையும் ஏறத்தாழ மின்விளக்கையும் , கழிவறையையுமே மையப்படுத்தி இருக்கிறது. தங்கள் அன்றாட வாழ்வின் ஒரு பங்காக பலருக்கு இந்த பேருந்து நிறுத்தம் அமைந்துள்ளது. அப்படி இருக்க , போக்குவரத்து கழகமும், நம் அரசாங்கமும், மக்களின் கோரிக்கைகளை ஏற்று தக்க நடவடிக்கை எடுக்குமா ?

– கார்த்திகா ஹரிஹரன்

(மாணவப் பத்திரிகையாளர்)