திண்டுக்கல் மாவட்டம் நத்தம் அருகே இடையபட்டி செவகாடு பகுதியில் 100 குடும்பங்கள் வசித்து வருகின்றனர். இந்த பகுதி மக்கள் பால், மருந்து மற்றும் மளிகைப் பொருள்கள் உள்ளிட்ட அத்தியாவசிய பொருள்களை வாங்குவதற்கு நத்தம் பகுதிக்கு வரவேண்டும். பள்ளி, கல்லூரி மாணவர்கள் நத்தம் வந்து தான் திண்டுக்கல் மற்றும் வெளியூர்களுக்குச் சென்று வருகின்றனர். இடையபட்டியில் இருந்து செவகாடு பகுதிக்கு இடையே சாலையின் குறுக்கே காசம்பட்டி ஆறு ஓடுகிறது. இந்த ஆற்றைக் கடந்து தான் மக்கள் நத்தம் செல்ல முடியும். ஆனால், இந்த பகுதியில் சாலையில் தொடர்ந்து மழைநீர் செல்வதால் சாலையும் கரைந்து கொண்டிருக்கிறது.

மனிதச் சங்கிலி

இந்த நிலையில், கடந்த ஒரு வாரமாகத் திண்டுக்கல் மாவட்டத்தில் தொடர் மழை பெய்து வருவதால், இந்த ஆற்றில் நீர் வரத்து அதிகரித்திருக்கிறது. இதனால் இடையபட்டி செவகாடு பகுதி மக்கள் சாலையைக் கடந்து செல்ல முடியாத நிலை ஏற்பட்டிருக்கிறது. வெளியூர் வேலைக்குச் செல்பவர்களும், பள்ளி, கல்லூரிகளுக்குச் செல்லும் மாணவர்களும், கடந்த 2 நாள்களாக ஆற்றில் மனிதச்சங்கிலி அமைத்து ஒவ்வொருவரையும் ஆற்றைக் கடக்க வைக்கின்றனர். இந்த ஆற்றைக் கடக்கப் பாலம் அமைக்க வேண்டும் என்பது இந்த பகுதி மக்களின் நீண்ட கால கோரிக்கையாக இருக்கிறது. ஆனால் அரசியல்வாதிகளும், அதிகாரிகளும் கண்டு கொள்ளாததால், ஆபத்தான முறையில் மக்கள் ஆற்றைக் கடந்து வருகின்றனர்.

இதுகுறித்து செவகாடு பகுதியைச் சேர்ந்த ராஜேஸ்குமாரிடம் விசாரித்தோம். “நத்தம் பகுதி மலைகளால் சூழப்பட்டதாகும். ஒவ்வொரு ஆண்டும் மழைக்காலத்தின் போது காசாம்பட்டி மலைப் பகுதியிலிருந்து மழைநீர் அதிகமாக வரும். அப்போது காசாம்பட்டி ஆற்றைக் கடக்கவே மக்கள் பெரும் சிரமப்படுகிறார்கள். செவகாடு அருகிலிருக்கும் மூங்கில்பட்டியில் தேவையில்லாமல் பாலம் அமைத்திருக்கின்றனர். எங்கள் பகுதிக்குப் பாலம் அமைக்கக்கோரி 10 ஆண்டுகளுக்கும் மேலாகச் சம்பந்தப்பட்ட அதிகாரிகளிடம் பலமுறை மனு அளித்திருக்கிறோம். ஓட்டுக்கேட்க வரும் அரசியல்வாதிகளிடம், ஆட்சியிலிருக்கும் அரசியல்வாதிகளிடமும் மனு அளித்திருக்கிறோம். ஆனால் எந்த வித நடவடிக்கையும் இல்லை.

ராஜேஸ்குமார்

இந்த பகுதியில் இயங்கிவரும் காளவாசலுக்கு டிராக்டர்கள் வந்து செல்கிறது. பாலம் அமைத்தால் டிராக்டர்கள் வந்து செல்லமுடியாது. காளவாசல் நடத்துவோரின் அழுத்தம் காரணமாகத் தான் பாலம் அமைக்கப்படாமல் இருக்கிறது. இடுப்பளவு தண்ணீர் வருவதால் ஆற்றை ஒட்டியிருக்கும் மயானக் கரையும் அடித்து செல்லப்பட்டு விட்டது. செவக்காடு பகுதியிலிருந்து நத்தம் செல்ல 6 கிலோ மீட்டர் பயணிக்க வேண்டும். அதனால், அவசரத்துக்கு மருத்துவமனைக்கோ அல்லது மருந்து வாங்கவோ கூட செல்ல முடியாத நிலை ஏற்பட்டிருக்கிறது. எனவே, எங்கள் நிலையைக் கருத்தில் கொண்டு அரசு அதிகாரிகள் பாலம் அமைக்கத் தேவையான நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும்” என்றார்.

Also Read: நெல்லை: தாமிரபரணி ஆற்றில் வெள்ளப்பெருக்கு; குறுக்குத்துறை முருகன் கோயிலைச் சூழ்ந்த வெள்ளம்!

Sign In

Register

Reset Password

Please enter your username or email address, you will receive a link to create a new password via email.