திண்டுக்கல் – பழநி சாலையில் முத்தனம்பட்டி அருகே ஒரு தனியார் கல்லூரி இயங்கிவந்தது. இந்தக் கல்லூரியில் திண்டுக்கல், மதுரை, ராமநாதபுரம், ஈரோடு, கோவை உள்ளிட்ட பகுதிகளைச் சேர்ந்த மாணவிகள் 500 பேர் படித்துவந்தனர். இந்த நிலையில், கல்லூரியின் தாளாளரும், அ.ம.மு.க பிரமுகருமான ஜோதி முருகன் என்பவர் மாணவிகளுக்குத் தொடர்ச்சியாக பாலியல் தொந்தரவு கொடுத்துவந்திருக்கிறார். இதற்கு உடந்தையாகக் கல்லூரி விடுதியின் காப்பாளர் அர்ச்சனாவும் இருந்திருக்கிறார்.

இந்த நிலையில், மாணவிகளுக்குப் பாலியல் தொந்தரவு தொடர்வது குறித்து மாணவிகளின் பெற்றோர் தாளாளரிடம் விளக்கம் கேட்டிருக்கின்றனர்.

ஜோதி முருகன்

அப்போது தாளாளர் ஜோதி முருகன், மாணவிகள்மீதுதான் தவறு எனக் கூறியிருக்கிறார். அதையடுத்து, கடந்த நவம்பர் 19-ம் தேதி மாணவிகள், கல்லூரி தாளாளர் மற்றும் விடுதி காப்பாளரைக் கைதுசெய்யக் கோரி, திண்டுக்கல் – பழநி சாலையை மறித்து போராட்டத்தில் ஈடுபட்டனர். இதையடுத்து போலீஸார் இருவர் மீதும் போக்சோ சட்டத்தின் கீழ் வழக்கு பதிவு செய்து, விடுதிக் காப்பாளர் அர்ச்சனாவைக் கைதுசெய்தனர்.

போலீஸார் தன்னைத் தேடுவதை அறிந்த ஜோதி முருகன் தலைமறைவானார். இந்த நிலையில், நவம்பர் 23-ம் தேதி திருவண்ணாமலை மாவட்டம், போளூர் நீதிமன்றத்தில் அவர் சரணடைந்தார். அதையடுத்து, வேலூர் மத்திய சிறையில் நீதிமன்றக் காவலில் 26-ம் தேதி வரை ஜோதி முருகன் வைக்கப்பட்டிருந்தார். நீதிமன்றக் காவல் முடிந்தவுடன் திண்டுக்கல் மகளிர் நீதிமன்றத்தில் ஜோதி முருகன் ஆஜர்படுத்தப்பட்டார். அப்போது திண்டுக்கல், தாடிக்கொம்பு போலீஸார் ஜோதி முருகனை ஏழு நாள்கள் காவலில் எடுத்து விசாரிக்க அனுமதி கோரினர். நீதிபதி புருஷோத்தமன் மூன்று நாள்கள் அனுமதியளித்தார்.

இந்த நிலையில், போலீஸார் விசாரணை முடிந்தநிலையில், இன்று ஜோதி முருகன் மீண்டும் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டார். அவரை டிசம்பர் 10-ம் தேதி வரை பழநி கிளைச் சிறையில் அடைக்க நீதிபதி உத்தரவிட்டார். இதைத் தொடர்ந்து போலீஸார் ஜோதி முருகனைப் பழநி கிளைச் சிறையில் அடைத்தனர்.

பழநி கிளைச் சிறை

இதற்கிடையே, கல்லூரி மாணவிகள் தங்களின் கல்வியை உறுதி செய்ய வேண்டும் எனக் கோரிக்கை விடுத்தனர். அதனடிப்படையில் மாவட்ட காவல் கூடுதல் கண்காணிப்பாளர் லாவண்யா தலைமையில் குழு அமைக்கப்பட்டது. அந்தக் குழு மாணவிகளிடம் பேச்சுவார்த்தை நடத்தியது. இறுதியில் விருப்பமுள்ள மாணவிகளுக்குக் கல்விச் சான்றிதழ் வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டு, 190 மாணவிகளுக்குச் சான்றிதழ்கள் வழங்கப்பட்டன. மேலும், கல்லூரியின் மற்றொரு பங்குதாரர் மூலம் நிர்வாகம் நடைபெறும் என்றும், அங்கீகரிக்கப்பட்ட பாடப்பிரிவுகளைத் தொடர ஏற்பாடு செய்யப்பட்டிருப்பாகவும், விருப்பமுள்ள மாணவிகள் அதில் பங்கேற்கலாம் எனவும் அந்தக் குழு தெரிவித்திருக்கிறது.

Also Read: திண்டுக்கல்: மாணவிகளுக்கு பாலியல் தொந்தரவு? – தனியார் கல்லூரி தாளாளர் மீது போலீஸ் வழக்கு பதிவு!

Sign In

Register

Reset Password

Please enter your username or email address, you will receive a link to create a new password via email.