நவம்பர் 23-ம் தேதி தமிழக கவர்னர் ரவியை சந்தித்து பேசினார் அ.தி.மு.க ஒருங்கிணைப்பாளர் பன்னீர்செல்வம். அப்போது பன்னீர், “தி.மு.க பொறுப்பேற்ற ஆறு மாதங்களில் வெள்ள வடிகால் பணிகள் ஒன்றுகூட செய்யதாததுதான் பாதிப்புக்குக் காரணம். இந்த அரசு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுக்கத் தவறிவிட்டது” என்று கூறியிருக்கிறார்.

வேலுமணி

அதற்கு கவர்னரிடமிருந்து எந்த ரியாக்‌ஷனும் வரவில்லையாம். சென்னையில் வெள்ளம் தேங்கிய விவகாரத்தில் முன்னாள் அமைச்சர் வேலுமணி மீது ஊழல் குற்றச்சாட்டை முதல்வர் சுமத்திய நிலையில் தற்போது வேலுமணி, பன்னீரின் ஆதரவாளராக மாறியிருப்பதால், பிரச்னையை திசை திருப்பவே தி.மு.க மீது புகார் சொன்னாராம் பன்னீர்!

அ.தி.மு.க வழிகாட்டும் குழுவில் உறுப்பினராக இருந்த சோழவந்தான் முன்னாள் எம்.எல்.ஏ மாணிக்கம் பா.ஜ.க-வில் சேர்ந்தது அனைவரும் அறிந்ததே. பொதுப்பணித்துறையில் வேலைகளை செய்ய ஒப்பந்த நிறுவனம் நடத்திவரும் மாணிக்கம் ஏற்கெனவே பன்னீர் வழியாகதான் அ.தி.மு.க-வுக்கு வந்தார்.

பா.ஜ.க-வில் இணைந்த மாணிக்கம்

அவரது சிபாரிசில்தான் எம்.எல்.ஏ-வும் ஆனார். கடந்த தேர்தலில் அவர் போட்டியிட்டு தோல்வியடைந்ததும், தி.மு.க-வுக்கு செல்வதற்கு தொடர்ந்து முயற்சி செய்து வந்தாராம். ஆனால், மதுரை மாவட்ட தி.மு.க-வினர் இதற்கு எதிர்ப்பு தெரிவிக்கவே… கேட்டை மூடிவிட்டது தி.மு.க. அதனால்தான் இப்போது பா.ஜ.க-வுக்கு சென்றுவிட்டார் என்கிறார்கள்!

ஆவடி மாநகராட்சிக்கு எப்படியாவது தன் மகனை மேயராக்கிவிட வேண்டும் என்பதில் தீவிரமாக இருக்கிறார் அந்த மாவட்டத்தின் அமைச்சர். இதற்காக மாநகராட்சியில் 2,000 ஓட்டுக்கள் உள்ள வார்டு ஒன்றை தேர்வு செய்து, அங்கு பட்டுவாடா திட்டங்களையும் தயார் நிலையில் வைத்திருக்கிறார்கள்.

ஆவடி

இன்னொரு பக்கம் அதே மேயர் பதவியைக் குறிவைத்து ஃபைனான்சியர் ஒருவரும் காய் நகர்த்திவருகிறார். இந்த ஃபைனான்சியர்தான் அமைச்சருக்கே தேர்தலின்போது ஃபைனான்ஸ் செய்தவர் என்பதால், வாரிசு பட்டத்துக்கு பங்கம் வந்துவிடுமோ என்று பதற்றத்தில் இருக்கிறாராம் அமைச்சர்.

நவம்பர் 24 அன்று சென்னையில் நடந்த அ.தி.மு.க மாவட்டச் செயலாளர்கள் கூட்டத்தில் முன்னாள் அமைச்சர் சி.வி.சண்முகம், அன்வர்ராஜாவை கடுமையாக பேசியது அவரின் ஆதரவாளர்களை கொதிக்கவைத்துள்ளது. இதற்கிடையே, “எம்.ஜி.ஆர் காலத்து சீனியரான உங்களுக்கு கட்சியில மரியாதை இல்லை. சி.வி.சண்முகம் உங்களை அடிக்க பாயறாரு.

அன்வர் ராஜா

அதைக் கட்சித் தலைமையும் வேடிக்கை பார்க்குது. பேசாம நீங்க தி.மு.க-வுக்கு வந்துட்டா முக்கிய பொறுப்பு தர்றோம். சிறுபான்மையினரை மதிக்குற கட்சி தி.மு.க” என்று ராஜகண்ணப்பன் தரப்பிலிருந்து தூதுவிட்டிருக்கிறார்களாம். எப்போதும் எதுவும் நடக்கலாம் என்கிறார்கள்!

தென்காசி மாவட்டத்தில் தி.மு.க எம்.பி தனுஷ் குமார் மீது அவரின் உறவினரே நில அபகரிப்பு புகார் கூறியதுடன், விருதுநகர் கலெக்டர் அலுவலகம் முன்பாக தீக்குளிக்க முயன்றார். “நில அபகரிப்பு எதுவும் செய்யவில்லை” என்று தனுஷ்குமார் கூறினாலும், இதுதொடர்பாக விசாரணை நடத்த கலெக்டர் உத்தரவிட்டிருக்கிறார்.

Also Read: மிஸ்டர் கழுகு: “தூக்கி அடிச்சுருவேன்…” – மிரட்டும் ஆளும் புள்ளி!

இதற்கிடையே, தென்காசி வடக்கு மாவட்ட தி.மு.க பொறுப்பாளரான செல்லதுரை மீதும் சாகுல் ஹமீது என்பவர் குடும்பத்துடன் சென்று தென்காசி கலெக்டரிடம் புகார் அளித்துள்ளார். இதையடுத்து, கடந்த பத்தாண்டுகளுக்கு முந்தைய தி.மு.க ஆட்சியில் பரவலாக பல்வேறு ஊர்களிலும் நில அபகரிப்பு புகார் எழுந்ததுபோல, மீண்டும் அதே விவகாரம் தலைதூக்குகிறதோ என்று புலம்புகிறார்கள் மக்கள்!

கோவையில் எஸ்.பி.வேலுமணியின் நிழலாக வலம்வரும், சந்திரசேகர்தான் அ.தி.மு.க-வின் மேயர் வேட்பாளர் என்று கூறப்படும் நிலையில், அவரும் வடவள்ளியை சுற்றியுள்ள சில வார்டுகளை அதற்காக தயார்படுத்தி வைத்துள்ளார்.

இதை மோப்பம் பிடித்த அமைச்சர் செந்தில்பாலாஜி வடவள்ளியை சுற்றியுள்ள நான்கு வார்டுகளின், அ.தி.மு.க வட்டச் செயலாளர்களை வலைவீசி இழுத்து தி.மு.க-வில் சேர்த்துள்ளார். “இது ஆரம்பம்தான்… பெரிய தலைகள்யெல்லாம் இனிமேல்தான் வலையில் சிக்கும்” என்கிறது செந்தில்பாலாஜி தரப்பு!

சென்னை கமிஷனர் அலுவலகத்தில் கூடுதல் கமிஷனராக இருக்கும் ஒருவர் விரைவில் இடமாற்றம் செய்யப்படவிருக்கிறாராம். அவரது இடத்துக்கு மதுரையிலிருந்து ஒருவர் வரலாம் என்கிறார்கள். அதேபோல கொங்கு மண்டலத்திலிருந்து டி.ஐ.ஜி ஒருவர் சென்னைக்கு வர விருப்பம் தெரிவித்துள்ளார். அதற்காக சென்னையிலிருக்கும் இணை கமிஷனர் ஒருவரை இடமாற்றம் செய்ய ஃபைல் மூவ்வாகி இருக்கிறதாம். இந்த இடமாறுதல் அனைத்தும் சித்தரஞ்சன் சாலையில் முடிவு செய்யப்பட்டது என்கிறார்கள்.

திருவள்ளூர் மாவட்டத்தில் அதிக வருவாய் ஈட்டும் நகராட்சிக்கு புதிதாக கமிஷனர் ஒருவர் கொங்கு மண்டலத்திலிருந்து வந்துள்ளார். இவர் ஏற்கெனவே அ.தி.மு.க-வில் அமைச்சராக இருந்த ஒருவருக்கு உதவியாளராக இருந்தவர். அ.தி.மு.க-விலிருந்து கட்சி மாறிய அந்த அமைச்சரே, தற்போதும் அமைச்சராக இருப்பதால், தனக்கு வளமான பதவி வேண்டும் என அமைச்சரிடம் கேட்டுள்ளார் அந்த உதவியாளர்.

Also Read: முதல்வர் வீட்டிலிருந்து கிளம்பும் சென்னை மேயர்; இந்தியில் பேசிய சைலேந்திர பாபு! -கழுகார் அப்டேட்ஸ்

இதையடுத்தே பழைய பாசத்தில் வருமானம் கொழிக்கும் நகராட்சியில் பதவியைக் கேட்டு வாங்கிக் கொடுத்தார் என்கிறார்கள். இதற்கிடையே, “எப்படி என்னிடம் கேட்காமல், என் மாவட்டத்தில் அந்த அமைச்சரின் ஆளை நியமிக்கலாம்?” என்று கடுப்பிலிருக்கிறாராம் வெண்மைத்துறையின் அமைச்சர்!

Sign In

Register

Reset Password

Please enter your username or email address, you will receive a link to create a new password via email.