இந்தியா நியூஸிலாந்து அணிகளுக்கு இடையிலான முதல் டெஸ்ட் போட்டி கான்பூரில் நடைபெற்று வருகிறது. முதல் இன்னிங்ஸில் ஷ்ரேயாஸ் ஐயர் சதம் அடிக்க 345 ரன்களை குவித்தது இந்தியா. இதன்பின் ஆடிய நியூஸிலாந்து பேட்டர்கள் விக்கெட்டுகளை இந்திய ஸ்பின்னர்கள் விரைவாக வீழ்த்திவிடுவர் என்றே அனைவரின் நினைத்திருந்தனர். ஆனால் இரண்டாம் நாள் ஆட்டநேர முடிவில் ஒரு விக்கெட்டை கூட இழக்காமல் 129 ரன்கள் குவித்திருந்தது நியூஸிலாந்து.

மூன்றாம் நாளான இன்று முதல் செஷனுக்குள் நியூஸிலாந்தின் தொடக்க ஆட்டக்காரர்கள் விக்கெட்டுகளை விரைவாக வீழ்த்துவதே இந்திய பௌலர்களின் திட்டமாக இருந்திருக்கும். தொடக்க ஸ்பெல்லை இஷாந்த் மற்றும் அஷ்வின் வீச நேற்றை போலவே நிதானமாக தொடங்கினர் நியூஸிலாந்து ஓப்பனர்கள். இந்நிலையில் இன்னிங்ஸின் 66-வது ஓவரை வீசிய அஷ்வினின் முதல் பந்திலேயே சப்ஸ்டிட்யூட் கீப்பரான ஸ்ரீகர் பரத்திடம் கேட்ச் ஆனார் வில் யங். அதன்பின் களமிறங்கியவர் கேப்டன் வில்லியம்ஸன். அதுவரை ஒரு முனையில் இஷாந்தை வீச வைத்த கேப்டன் ரஹானே அதன்பின் ஸ்பின்னர்களை மட்டுமே முழுவதும் பயன்படுத்தினார்.

NZ openers

ஆனால் இவை எதற்கும் அசராத டாம் லாதம் மிகச்சிறப்பாக தடுப்பாட்டத்தை வெளிப்படுத்தினார். மறுமுனையில் வில்லியம்சனும் சிறப்பாக ஆட சுமார் பதினைந்து ஓவர்களுக்கு பிறகு வேகப்பந்துவீச்சாளர்களை வீச அழைத்தார் ரஹானே. அதற்கு பலனாக தன் ஸ்பெல்லின் இரண்டாவது ஓவரிலியேயே வில்லியம்ஸனை சாய்த்தார் உமேஷ். அப்போது நியூஸிலாந்தின் ஸ்கோர் 2 விக்கெட் இழப்பிற்கு 197 ஆக இருந்தது.

அதன்பின் நியூஸிலாந்து பேட்டர்களின் விக்கெட்டுகள் அனைத்தையும் இந்திய ஸ்பின்னர்கள் மொத்தமாக சாய்க்கத்தொடங்கினர். அதிலும் குறிப்பாக அக்ஸர் பட்டேல் மிகச் சிறப்பாக பந்து வீசினார். ஏற்கனவே மெதுவாக ஆடிவந்த நியூஸிலாந்து பேட்டர்கள் இன்னும் ஒரு கியர் குறைத்து இந்திய ஸ்பின்னர்களை மேலும் சோதித்தனர். ஆனால் அக்ஸர் பட்டேல் பந்துவீச்சில் டெய்லர் மற்றும் நிக்கோலஸ் அடுத்தடுத்து ஓவர்களில் வெளியேறினர். அடுத்த விக்கெட்டாக சுமார் 282 பந்துகளை சந்தித்து 95 ரன்கள் அடித்த டாம் லாத்தமை அக்சரின் பந்திலேயே ஸ்டம்பிங் செய்தார் கே.எஸ்.பரத். 1965-க்கு பிறகு டெஸ்ட் போட்டிகளில் ஒரு சப்ஸ்டிட்யூட் கீப்பர் ஸ்டம்பிங் செய்வது இதுவே முதல்முறை.

Axar Patel

அதன்பிறகு நியூஸிலாந்து கீப்பர் டாம் பிலண்டல் புஜாராவிற்கே டஃப் கொடுக்கும் இன்னிங்ஸ் ஒன்றை ஆடினார். 94 பந்துகளை சந்தித்த அவர் கடைசியில் 13 ரன்களில் அக்சரிடம் போல்ட் ஆனார். பிற விக்கெட்டுகள் அனைத்தையும் அஷ்வின் மற்றும் அக்சர் சாய்க்க 296 ரன்களுக்கு ஆல்-அவுட்டானது நியூஸிலாந்து. முதல் விக்கெட்டை 151 ரன்களில் எடுத்த இந்திய பௌலர்கள் அடுத்த 145 ரன்களுக்குள் அனைத்து விக்கெட்டுகளையும் வீழ்த்தினர். தனது நான்காவது டெஸ்ட் போட்டியிலேயே ஐந்தாவது 5-விக்கெட் ஹாலை இன்று எடுத்து சாதனை படைத்திருக்கிறார் அக்ஸர் பட்டேல்.

இரண்டாவது இன்னிங்ஸில் 49 ரன்கள் முன்னிலையில் களமிறங்கிய இந்திய பேட்டர்களுக்கு ஆரம்பமே அதிர்ச்சி காத்திருந்தது. ஜேமிசன் வீசிய இரண்டாவது ஓவரின் முதல் பந்திலேயே மீண்டுமொரு முறை ஸ்டெம்புகளை பறிகொடுத்தார் கில். இன்றைய ஆட்டநேர முடிவில் இந்திய அணியின் ஸ்கோர் 14-1.

தற்போதைய நிலையில் இந்திய அணி 1 விக்கெட் மட்டுமே இழந்து 63 ரன்கள் முன்னிலையில் இருந்தாலும் நாளை இந்திய பேட்டர்களின் ஆட்டத்தை பொறுத்தே மொத்த ஆட்டத்தின் போக்கும் அமையும். மிட்டில் ஆர்டர் வீரர்கள் தங்களை நிரூபிக்க நாளை நல்ல வாய்ப்பு கிடைத்திருக்கிறது… பார்ப்போம்!

Sign In

Register

Reset Password

Please enter your username or email address, you will receive a link to create a new password via email.