‘ஒரு சமூகத்து மேல எத்தன தடவ சார் சும்மா சும்மா பொய்யா பழி போடுவீங்க?’ என்ற புள்ளியை மையக்கதையாக கொண்டு நகர்கிறது ‘மாநாடு’. இஸ்லாமிய சமூகத்தின் மீதான அதிகார வர்க்கத்தின் அத்துமீறல்கள் குறித்து பேச முயலும் படைப்பு தான் மாநாடு என்றாலும், அதன் திரைக்கதை பாணி படத்தின் மீதான கவனத்தை ஈர்க்கிறது. 

image

மாநாடு ஒன்றை பயன்படுத்தி மத கலவரத்தை தூண்டி, அதன்மூலம் அரசியல் ஆதாயம் தேட முயற்சிக்கிறது அதிகார வர்க்கம். அதிகார வர்க்கத்தின் அத்தகைய முயற்சிக்கு முட்டுக்கட்டையாக நிற்கிறார் சிம்பு. இறுதியில் அதிகாரத்தை எதிர்த்து களமாடும் சிம்புவின் முயற்சி வென்றதா? இல்லையா? என்பதை டைம்லூப் திரைக்கதை மூலமாக சொல்ல முயன்றிருக்கிறார் வெங்கட்பிரபு. அந்த முயற்சியில் வெற்றியும் பெற்றிருக்கிறார்.

image

கலங்க வைக்கும் சிம்பு:

அப்துல் காலிக்- ஆக சிம்பு. நீண்ட நாள்களுக்கு பிறகு ஒரு காலேஜ் பாய் லுக்கில் ஈர்க்கிறார். 

‘எஸ்.டி.ஆர். இஸ் பேக்’ என ரசிகர்கள் அவரை கொண்டாடி தீர்க்கின்றனர். பயந்து ஒதுங்குவது, அடித்து நொறுக்குவது, சர்காஸ்டிக் செய்வது, எமோஷனல் காட்சிகளில் கலங்கவைப்பது என மிரட்டுகிறார். இப்படியான எஸ். டி.ஆரை பார்க்கத்தான் அவரது ரசிகர்கள் தவமிருந்தார்கள். 

image

நடிப்பில் மிரட்டிய எஸ்.ஜே.சூர்யா:

அடுத்ததாக மொத்த படத்தையும் சிம்புவுடன் சேர்ந்து சுமந்து செல்கிறார் எஸ்.ஜே.சூர்யா. மனுசன் வேற லெவலில் ஸ்கோர் செய்கிறார். ஒருகாட்சியில் ‘தலைவரே’ என்ற ஒரே டையலாக் வைத்துக்கொண்டு அந்த சீனையே அமர்களப்படுத்தியிருக்கிறார். 

பிரேம்ஜியிடம் சிம்பு சொல்லும்போது, ‘உன்ன விட அந்தாளு ஓவர் ஆக்டிங் பண்ணுவான்டா’ என்பதைப்போல ஓவர் ஆக்டிங்தான். இருந்தாலும், அதை ரசிகர்கள் ஏற்றுகொள்கிறார்கள். குறிப்பாக ஓய்.ஜி.மகேந்திரன், சிம்பு, எஸ்.ஜே.சூர்யா வரும் சீன் ஒன்று வெகுவாக ரசிக்க வைக்கிறது. உண்மையில் எஸ். ஜே. சூர்யாவை தமிழ் சினிமா இயக்குனர்கள் பயன்படுத்தி கொள்ள வேண்டும். 

கல்யாணி பிரியதர்ஷன், பிரேம்ஜி, கருணாகரன் சப்போர்ட்டுக்கு வந்து செல்கிறார்கள். ஓய்.ஜி.மகேந்திரன், எஸ்.ஏ.சந்திரசேகர் தங்களது கதாபாத்திரத்துக்கு நியாயம் சேர்த்திருக்கிறார்கள்.

image

படத்தின் ஆன்மாவே எடிட்டங்தான்:

சேசிங் காட்சிகள், காவல்நிலையத்தில் வரும் சண்டைக்காட்சி என ரிச்சர்ட் எம். நாதனின் ஒளிப்பதிவு படத்துக்கு பலம் சேர்க்கிறது. எடிட்டர் பிரவீன் கே.எல்-ன் 100வது படம். அவருக்கு பெயர் சொல்லும் வகையில் அமைந்திருக்கிறது. காரணம் டைம்லூப் படத்தின் ஆன்மாவே எடிட்டங்தான். அதை கனக்கச்சிதமாக செய்திருக்கிறார். 

யுவனின் பிஜிஎம் திரையை தெறிக்க விடுகிறது. எஸ்.ஜே.சூர்யா சொன்னது போல படம் முடிந்த பின்பும் கூட அந்த தீம் மூளைக்குள் ஓடிக்கொண்டிருக்கிறது. 

டைம்லூப் பாணி படங்களில் காட்சிகளில் ஏற்படும் சோர்வை தவிர்க்க முடியாது. வெங்கட்பிரபு அதை கவனத்துடன் கையாண்டு சுவாரஸ்யத்தை கூட்டியிருக்கிறார். 

image

இயக்குநர்கள் இதனை தவிர்க்க வேண்டும்:

இருப்பினும், க்ளிஷேவ்களை தவிர்ப்பதில் இயக்குநர்கள் தோல்வியடைந்துவிடுகிறார்கள்.

உருவ கேலி செய்யும் காட்சி, ‘ஆம்பளையா இருந்தா வாடா’ போன்றவற்றை தயவு செய்து தவிர்த்திருக்க வேண்டும். இனி வரும் படங்களில் இயக்குநர்கள் இதனை கவனத்தில் கொள்ள வேண்டும். 

image

ரசிகர்களின் எதிர்பார்ப்பை நிச்சயம் பூர்த்தி செய்யும்:

கோவையில் 1998ல் நடந்த  குண்டுவெடிப்பு, பாபர் மசூதி இடிப்பு, குஜராத் கலவரம் ஆகியவற்றை பதிவு செய்து குண்டுவெடிப்பால் கோவை முஸ்லீம்களின் வாழ்வாதாரம் கேள்விக்குறியானது உள்ளிட்டவற்றை பதிவு செய்த முயற்சி பாராட்டத்தக்கது. சிறுபான்மையினரான ஒரு காவல்துறை அதிகாரியைக்கொண்டு மற்றொரு சிறுபான்மையினரை பலிகாடாவாக்கும் அதிகார வர்க்கத்தின் சதிகள் நுட்பமான அரசியல். 

மொத்ததில் மாநாடு  ரசிகர்களின் எதிர்பார்ப்பை பூர்த்தி செய்ய தவறவில்லை.

Source : WWW.PUTHIYATHALAIMURAI.COM

Sign In

Register

Reset Password

Please enter your username or email address, you will receive a link to create a new password via email.