கோவிட் தொற்றாளர்கள் எண்ணிக்கை குறைந்து வரும் நிலையில் பள்ளி மற்றும் கல்லூரிகள் திறக்கத் தொடங்கியுள்ளன. அதே நேரம் கல்லூரி மாணவர்களுக்கு கோவிட் தொற்று பரவிய செய்திகளும் வெளிவந்த வண்ணம் உள்ளன.

கர்நாடக மாநிலத்தில் உள்ள தார்வார்டில் மருத்துவமனை மற்றும் எஸ்.டி.எம் மருத்துவ அறிவியல் கல்லூரி ஆகிய இரண்டு மருத்துவமனை விடுதிகளுக்கும் வியாழன் அன்று சீல் வைக்கப்பட்டு தனிமைப்படுத்தப்பட்டது. தடுப்பூசி போட்டுக் கொண்ட 66 மாணவர்களுக்கும் கோவிட் தொற்று ஏற்பட்டதே அதற்குக் காரணம். அதேபோல் ஒடிஷா மாநிலம் சம்பல்பூரில் வீர சுரேந்திர சாய் மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் படித்து வரும் மாணவர்களில் 54 பேருக்கு கோவிட் தொற்று ஏற்பட்டுள்ளது.

Students in India

Also Read: கோவிட்: மாறும் பருவம், ஐரோப்பாவில் உயரும் எண்ணிக்கை; டிசம்பரில் வருமா இங்கும் மூன்றாவது அலை?

கர்நாடகா – தனிமைப்படுத்தப்பட்ட விடுதிகள்!

கர்நாடகா எஸ்.டி.எம் மருத்துவக் கல்லூரியில் மொத்தம் 400 மாணவர்கள் படிக்கின்றனர். இதுவரை 300 பேர் கோவிட் சோதனைக்கு உட்படுத்தப் பட்டுள்ளனர். அதில் 66 மாணவர்களுக்கு கோவிட் தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. மேலும் 100 மாணவர்கள் கோவிட் பரிசோதனைக்கு உட்படுத்தப்பட்டுள்ளனர். அவர்களின் சோதனை முடிவுகள் அறிவிக்கப்படவிருக்கின்றன.

தார்வாட் துணை ஆணையர் நித்தேஷ் பாட்டீல் அதிகாரிகளுடன் வளாகத்தை பார்வையிட்ட பின்னர் செய்தியாளர்களிடம் பேசியபோது, “வளாகத்தில் பணிபுரியும் 3,000 ஊழியர்களும் சோதனை செய்யப்படுவார்கள், சோதனையில் தொற்று உறுதி செய்யப்பட்டவர்களுக்கு சிகிச்சை அளிக்கப்படும். சீல் வைக்கப்பட்டு தனிமைப்படுத்தப்பட்ட இரண்டு விடுதிகளுக்கும் தேவையான உணவு, மருந்துகள் மற்றும் பிற அத்தியாவசிய பொருள்கள் வழங்கப்பட்டு வருகின்றன” என்று கூறினார்.

தொற்று உறுதியானவர்கள் விடுதியை விட்டு வெளியே வர அனுமதிக்கப்படமாட்டார்கள் என்றும், சோதனை முடிவுகளுக்காகக் காத்திருப்பவர்களும் தனிமைப்படுத்தப்பட்டு நோய் தொற்று பரவாமல் இருக்க முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளன எனவும் கூறினார். மேலும் வளாகத்தில் உள்ள அனைவருக்கும் கோவிட் சோதனை செய்யப்படும் என்றும் அவர் கூறியுள்ளார்.

கல்லூரியில் உள்ள அனைத்து மாணவர்களும் 2 டோஸ் கோவிட் தடுப்பூசி போடப்பட்டவர்கள் என அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். மருத்துவமனை கல்லூரியில் பணிபுரியும் அனைத்து ஊழியர்களும் சுகாதார பணியாளர்கள் பிரிவின் கீழ் வருவதால் அவர்களுக்கும் முற்றிலும் தடுப்பூசி போடப்பட்டிருக்கும் , இருப்பினும் தடுப்பூசி போடப்பட்ட பதிவுகள் சரிபார்க்கப்படும் என்றும் கூறியுள்ளார்.

School Student (Representational Image)

ஒடிஷா… கல்லூரி விழா களேபரம்!

இதேபோல் ஒடிஷா மாநிலம் சம்பல்பூரில் வீர சுரேந்திர சாய் மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் படித்து வரும் மாணவர்களில் 22 பேருக்கு செவ்வாய்க்கிழமை கொரோனா தொற்று ஏற்பட்டது. புதன்கிழமை அது 34 ஆக உயர்ந்த நிலையில் ஒரே நாளில் மேலும் 20 பேருக்கு தொற்று உறுதியானதால், இந்த எண்ணிக்கை 54 ஆக உயர்ந்துள்ளது. சமீபத்தில் கல்லூரியில் நடந்த ஆண்டு விழா காரணமாகத் தொற்றுப் பரவி இருக்கலாம் என்று கருதப்படுகிறது. சம்பல்பூரில் பாதிக்கப்பட்ட மாணவர்கள் வீர சுரேந்திர சாய் மருத்துவ அறிவியல் மற்றும் ஆராய்ச்சி நிறுவனத்தின் விம்சா கோவிட் பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். தற்போது, நேரடி வகுப்புகள் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளன.

இது குறித்து சுகாதார சேவை இயக்குநர் பிஜய் மொஹபத்ரா கூறுகையில், “குறிப்பிட்ட இடங்களில் மட்டுமே கோவிட் தொற்று பதிவாகி இருப்பதால், இதில் கவலைப்பட ஒன்றுமில்லை. இந்தச் சூழ்நிலை நான்கு அல்லது ஐந்து நாள்களுக்குள் கட்டுப்படுத்தப்படும்” என்று கூறியுள்ளார்.

Girl wearing mask

Also Read: கோவிட் 19: மாற்றமடையும் நோய்க்கான அறிகுறிகள்; காரணம் என்ன?

பள்ளி, கல்லூரி திறப்பு நிலவரம்!

மகாராஷ்டிரா அரசு கிராமப்புறங்களில் 1 முதல் 4-ம் வகுப்பு வரையிலும், நகர்ப்புறங்களில் 1 முதல் 7-ம் வகுப்பு வரையிலும் டிசம்பர் 1 முதல் பள்ளிகளை மீண்டும் திறக்க முடிவு செய்துள்ளது. நவம்பர் 22-ம் தேதி முதல் 1 முதல் 5 வரையிலான மாணவர்களுக்கு நேரடி வகுப்புகளைத் தொடங்க குஜராத் அரசாங்கம் அனுமதித்துள்ளது. போபாலில் ஏற்கெனவே 50% மாணவர்களைக் கொண்டு பள்ளிகள் நடத்தப்பட்டு வருகின்றன. ராஜஸ்தானில் பள்ளிகள், கல்லூரிகள் ஆகியவற்றை 100% மாணவர்களுடன் திறக்க அனுமதி அளிக்கப்பட்டுள்ளது.

பள்ளிகளை முழுவதுமாகத் திறக்க வேண்டும் என்ற முந்தைய முடிவில் இருந்து பின்வாங்கி, மேற்கு வங்க அரசு, இப்போது பள்ளிகளை திறக்கும் தேதியை தள்ளிவைத்துள்ளது. கேரளாவில் 1 முதல் 7-ம் வகுப்பு மற்றும் 10, 12-ம் வகுப்புகளுக்கு நவம்பர் 1-ம் தேதி முதல் பள்ளிகள் திறக்கப்பட்டு நடைபெற்று வருகின்றன.

Sign In

Register

Reset Password

Please enter your username or email address, you will receive a link to create a new password via email.