மழைக்காலம் தொடங்கிய பிறகு, பல நோயாளிகள் வயிற்றுப்போக்கு, வாந்தி, காய்ச்சல் போன்ற அறிகுறிகளுடன் மருத்துவமனைக்குச் செல்வது அதிகரித்திருக்கிறது என்று மருத்துவர்கள் தெரிவிக்கின்றனர். உணவு ஒவ்வாமை சார்ந்த பிரச்னையால் இதுபோன்ற அறிகுறிகள் ஏற்பட்டுள்ளதாகத் தெரிகிறது.

இதுபற்றி, இரைப்பை குடல் மருத்துவர் காவ்யா தேண்டுகுரியிடம் கேட்டோம்.

“உணவு சார்ந்த பிரச்னையை,

Food Allergy,

Food Intolerance,

Food Poisoning என மூன்று வகையாகப் பிரிக்கலாம்.

Cooking (Representational Image)

Food Allergy – நோய் எதிர்ப்பு மண்டலம் சார்ந்த பிரச்னை இது. பால் பொருள்கள், நிலக்கடலை உள்ளிட்ட ஏதாவது உணவின் மீது ஒவ்வாமை காணப்படும். இந்தப் பிரச்னை சிறு வயதிலேயே பெரும்பாலும் தொடங்கிவிடும். பொதுவாக, புரதச்சத்துள்ள உணவுப்பொருளைச் சாப்பிடும்போது இந்தப் பிரச்னை ஏற்படும். உணவிலிருந்து புரதம் வெளியேறும்போது, உடலுக்கு ஒவ்வாத வெளிப்பொருள் உள்ளே நுழைகிறது என்று நோய் எதிர்ப்பு மண்டலம் ஆன்டிபாடியை உற்பத்தி செய்து அதற்கெதிராகப் போரிடத் தொடங்கும். இந்தப் போர் நடக்கும்போது உடலில் சில அறிகுறிகள் தோன்றும்.

மக்கள் தொகையில் உணவு ஒவ்வாமை என்பது 2% பேருக்கு பொதுவாகக் காணப்படும். அதிலும் குறிப்பாக, குழந்தைகளிடம் பொதுவாகக் காணப்படும். சில நேரங்களில் இந்தப் பிரச்னை மரபணு காரணங்களால் ஏற்படுவதால் பரம்பரையாக வரலாம்.

சருமம் சிவந்து போதல், வாந்தி உணர்வு, வாந்தி, வயிற்றுவலி, வயிற்றுப்போக்கு, சருமத்தில் அரிப்பு ஆகிய அறிகுறிகள் ஏற்படலாம். சில நேரம் இந்த ஒவ்வாமை நுரையீரலைப் பாதித்து சுவாசப் பாதையில் வீக்கம் ஏற்பட்டு மூச்சுத்திறணல் ஏற்படலாம். இதனால் தீவிர சிகிச்சைப் பிரிவில்கூட அனுமதித்து சிகிச்சையளிக்க வேண்டியிருக்கும்.

Peanut

குறிப்பிட்ட உணவை சிறிய அளவு எடுத்துக்கொண்டாலே ஒவ்வாமை ஏற்பட்டுவிடும். உதாரணமாக, நிலக்கடலை ஒவ்வாமை ஒருவருக்கு இருந்தால் ஒரு கடலை சாப்பிட்டால்கூட, சிலருக்கு அதை வறுக்கும் மணம் வந்தால்கூட, சருமத்தில் அது பட்டால்கூட உடல் எதிர்வினையாற்றத் தொடங்கிவிடும். உணவு ஒவ்வாமைக்கு பிரச்னையை ஏற்படுத்தும் உணவைச் சாப்பிடுவதை முழுவதுமாக நிறுத்துவதுதான் தீர்வு.

Food Intolerance – செரிமான மண்டலம் சார்ந்த பிரச்னை இது. எந்த உணவைச் சாப்பிட்டாலும் அதைச் செரிப்பதற்கு உடலில் நொதிப்பொருள் (என்சைம்கள்) இருக்க வேண்டும். இன்டாலரென்ஸ் இருந்தால் அந்தக் குறிப்பிட்ட உணவைச் செரிப்பதற்கான என்சைம்கள் இருக்காது. அதனால் உணவைச் செரிக்க முடியாமல் போகும். உணவில் பல்வேறு நிறமிகள், சுவையூட்டிகள், பிரிசர்வேட்டிவ் எனப் பல ரசாயனங்கள் சேர்க்கப்படுகின்றன. அவற்றைச் செரிப்பதற்கான என்சைம்கள் இல்லாததால் செரிமான மண்டலம் விளைவுகளை ஏற்படுத்தும்.

Food (Representational Image)

ஏதாவது குறிப்பிட்ட உணவைச் சாப்பிடும்போது பால், தயிர், சீஸ் போன்றவற்றைச் சாப்பிடும்போது செரிமான மண்டலத்தில் சில அறிகுறிகள் தோன்றும். குறிப்பிட்ட ஓர் உணவைச் சாப்பிடும் போது நமது உடலால் அதைச் செரிக்க முடியாத நிலை ஏற்படும். அதனால் வயிற்றில் வலி, தசைப்பிடிப்பு போன்ற உணர்வு, வாந்தி உணர்வு, வாந்தி, நெஞ்செரிச்சல் உள்ளிட்ட அறிகுறிகள் தோன்றும். உணவு ஒவ்வாமைக்கும் இதே அறிகுறிகள் தோன்றும். வயிறு அதிகமாக நிறைந்தது போன்ற உணர்வு, வயிற்றில் வாயு தொந்தரவு, உடனே மலம் கழிக்க வேண்டும், எரிச்சலுணர்வு போன்றவை தோன்றும்.

ஒவ்வாமையைப் போன்று தீவிர பிரச்னைகள் பெரும்பாலும் ஏற்படாது. சிறிய அறிகுறிகள் மட்டுமே ஏற்படும். சாப்பிடும் அளவைப் பொறுத்துதான் பிரச்னை உருவாகும். குறைவான அளவு சாப்பிடும்போது பிரச்னை எதுவும் ஏற்படாது. அதிக அளவில் எடுத்துக்கொள்ளும்போது அறிகுறிகள் தோன்றலாம். உணவு ஒவ்வாமையைப் போன்று வாழ்நாள் முழுவதும் அந்த உணவைத் தவிர்க்க வேண்டாம். சிறிது காலம் கழித்து அந்த உணவை மீண்டும் சாப்பிடத் தொடங்கலாம்.

Food (Representational Image)

Also Read: அதீத டயட் அக்கறையும் ஆபத்தில் முடியலாம்… எப்படி? – மனநல மருத்துவர் சொல்றார்… கேளுங்க!

உணவு டைரி!

சாப்பிடும் உணவைக் குறித்து வைப்பதற்கான டைரி ஒன்றை பராமரிக்க வேண்டும். ஒரு மாதம் என்னென்ன சாப்பிடுகிறோம் என்பதை அதில் குறித்து வைத்துக்கொள்ள வேண்டும். குறிப்பிட்ட ஏதாவது உணவுப்பொருளைச் சாப்பிடும்போது அறிகுறிகள் தோன்றினால் அதையும் குறித்து வைத்துக்கொள்ள வேண்டும். ஒரு மாத இறுதியில் எந்த உணவுப் பொருளைச் சாப்பிடும்போது Intolerance ஏற்பட்டு அறிகுறிகள் ஏற்பட்டன என்று கண்டறிந்து அந்த உணவைத் தவிர்த்துவிட்டால் இந்தப் பிரச்னைக்குத் தீர்வு கண்டுவிடலாம். குறிப்பிட்ட நாளைக்குப் பிறகு, குறைந்த அளவில் தொடங்கி மெள்ள மெள்ள அந்த உணவை மீண்டும் எடுத்துக்கொள்ளத் தொடங்கலாம்.

Food Poisoning- கெட்டுப்போன (Contaminated) உணவு, தண்ணீர் போன்றவற்றை எடுத்துக்கொள்ளும்போது அவற்றிலும் பாக்டீரியா, வைரஸ் போன்றவை உடலில் ஒவ்வாமையை ஏற்படுத்துவதே Food Poisoning எனப்படும் பிரச்னை. காய்ச்சல், வாந்தி உணர்வு, வாந்தி, வயிற்று வலி, வயிற்றுப்போக்கு போன்ற அறிகுறிகள் ஏற்படலாம். இவை கெட்டுப்போன உணவு, தண்ணீரால் ஏற்படும் ஹெபடைட்டிஸ் A, E வைரஸ் தொற்று பாதித்திருந்தால் மஞ்சள்காமாலைகூட வரலாம்.

Medical Gastroenterologist Dr.Kavya Dendukuri

மழைக்காலம் என்பதால் Food Poisoning பிரச்னையுடன் நிறைய பேர் மருத்துவமனைக்கு வருகின்றனர். ஹெபடைட்டிஸ் A, E தொற்றால் பாதிக்கப்பட்டு, தீவிர இரைப்பை குடல் அழற்சியினாலும் நோயாளிகள் சிகிச்சைக்காக வருகின்றனர்.

தடுப்பது எப்படி?

மழைக்காலங்களில் நன்றாகக் கொதிக்க வைத்த நீரை மட்டுமே குடிக்க வேண்டும். காய்கறிகள், பழங்களை நன்றாகக் கழுவிய பின்னரே சமையலுக்குப் பயன்படுத்த வேண்டும். பொரித்த உணவுகளைவிட நன்றாக வேக வைத்த உணவுகளைச் சாப்பிடுவதே நல்லது.

ஹோட்டல்களில் பயன்படுத்தப்படும் பொருள்கள் எங்கிருந்து வந்தன, அவற்றை எவ்வாறு கையாண்டார்கள் என்பதெல்லாம் தெரியாது. எனவே, இதுபோன்ற சமயங்களில் வீட்டில் சமைத்த உணவைச் சாப்பிடுவதே சிறந்தது. அசைவ உணவுகளைச் சாப்பிடுவதிலும் கவனம் தேவை. அந்த விலங்குகள் என்ன சாப்பிட்டன, அவற்றுக்கு ஏதாவது பிரச்னை இருந்ததா என்பதெல்லாம் தெரியாது. குறிப்பாக, உறுப்புகளைச் (Organ Foods) சாப்பிடுவதைத் தவிர்த்துவிடுவது நல்லது. வீட்டிலும் அசைவ உணவுகளை வாங்கி ஃபிரிட்ஜில் சேமித்து வைத்துப் பயன்படுத்தக்கூடாது.

Dining (Representational Image)

Also Read: Covid Questions: டஸ்ட் அலர்ஜி, உணவு அலர்ஜி இருப்பதால் தடுப்பூசி போட பயமாக உள்ளது; என் பயம் சரியா?

உணவு ஒவ்வாமை, Intolerance, Poisoning ஆகிய மூன்றுக்கும் பெரும்பாலும் ஒரே மாதிரியான அறிகுறிகள் தோன்றும் என்பதால் என்ன பிரச்னை என்பதைக் கண்டறிவது சிரமம். உணவு ஒவ்வாமை தீவிரமானால் தீவிர சிகிச்சைப் பிரிவில்கூட சிகிச்சை தேவைப்படலாம். மேலும் இந்தப் பிரச்னைகளால் உடலிலுள்ள நீர்ச்சத்து குறையும் என்பதால் நீர்ச்சத்து இழப்பு ஏற்பட்டு சிறுநீரகம்கூட பாதிக்கப்படலாம். எனவே, அறிகுறிகள் தோன்றினால் உடனே மருத்துவரை அணுகி, அது என்ன பிரச்னை என்பதை உறுதிசெய்து சிகிச்சையைத் தொடங்க வேண்டும்” என்றார் அவர்.

Sign In

Register

Reset Password

Please enter your username or email address, you will receive a link to create a new password via email.