குழந்தைகள் மீதான தொடர்ச்சியான பாலியல் துன்புறுத்தல் செய்திகள் அன்றாடம் வெளிவந்துக்கொண்டிருக்கின்றன. அத்துமீறலில் ஈடுபடும் நபர்களை குழந்தைகள் வெளியுலகுக்கு அடையாளம் காட்டுகின்றனர் என்பது மகிழ்ச்சிக்குரிய விஷயம் என்றாலும், பல இடங்களில் குழந்தைகள் தற்கொலை செய்து கொள்ளும் அவலமும் நிகழ்ந்துவருகிறது. துன்புறுத்தலுக்கு உள்ளாகும் குழந்தைகளின் தற்கொலைகளைத் தொடர்ந்து, கரூரில் தற்கொலை செய்திருந்த குழந்தையின் பள்ளியை சேர்ந்த ஆசிரியர் ஒருவரும் தற்கொலை செய்திருக்கிறார். 

தொடர்ச்சியான இந்த தற்கொலைகள் ஒருவகையான மனசோர்வை நமக்கு கொடுத்தாலும், இவற்றை உடனடியாக நிறுத்தும் பொறுப்பும் நெருக்கடியும் அரசுக்கு தற்போது எழுந்துள்ளது. அந்தத் தேவையை உணர்ந்து தமிழக அரசு சார்பில் பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி நேற்று ஒரு அறிவிப்பை வெளியிட்டிருந்தார். அதில் “பள்ளி மாணவர்கள் மற்றும் ஆசிரியர்களுக்கு உளவியல் ரீதியான ஆலோசனைகளை வழங்க மாவட்டந்தோறும் உளவியல் ஆலோசகர்களை நியமிக்க திட்டமிட்டுள்ளோம்” என அவர் தெரிவித்திருந்தார்.

கொரோனா கால மாணவர் நலன் 4: எட்டாம் வகுப்பு வரை பள்ளி திறப்புக்கு முன் அரசு  செய்ய வேண்டியவை! | Things Tamilnadu Government to do before the reopening  of 1 to 8 th standard students ...

அரசின் இந்த அறிவிப்பு குறித்தும், ஆசிரியர்கள் மற்றும் மாணவர்களுக்கான மனநல ஆலோசனைக் கூட்டத்தின் அவசியம் குறித்தும் ஆசிரியை சுடரொளியிடம் பேசினோம்.

“இந்த கொரோனா பேரிடர் காலத்தில், ஆசிரியர்களுக்கும் மாணவர்களுக்கும் பல காரணங்களுக்காக மனநல முகாம்கள் பள்ளியில் தேவைப்படுகிறது. எத்தனையோ மாணவர்களை அம்மா இல்லாதவர்களாக – அப்பா இல்லாதவர்களாக – இருவருமே இல்லாதவர்களாக ஆக்கியுள்ளது. பெற்றோரன்றி வேறு யாரேனும் நெருங்கிய சொந்தங்களை, உடன்பிறந்தவர்களைக்கூட அக்குழந்தைகள் இழந்திருக்கும் சூழலும் உள்ளது. இவையாவும் அவர்களை மனரீதியாக சோர்வாக்கியிருக்கும். அதை வீட்டிலிருப்போர் உணர்ந்திருந்தாலும், ஏற்கெனவே அவர்களும் அந்த பாதிப்பில் இருப்பதால் அங்கு அக்குடும்பத்தில் மீட்பு சிரமமாகும். அப்படியான சூழலில் அக்குழந்தைகளை இயல்புக்கு கொணர்வது, இன்னும் கடினமாகிவிடும். அப்படியான சூழலில், ஆசிரியர் அங்கு வந்து அக்குழந்தையை மீட்க கை கொடுக்க வேண்டும். மாணவர்கள் மட்டுமன்றி பல பள்ளி ஆசிரியர்களும் இந்த கொரோனாவால் நேரடியாக பாதிக்கப்பட்டுள்ளனர். அவர்களும் உறவுகளை இழந்திருக்கின்றனர். ஆக அங்கு அவர்களுக்கே ஒரு உதவிக்கரம் தேவைப்படுகிறது. நம் குழந்தைகளுக்கு கரம் கொடுக்கும் ஆசிரியருக்கே ஒரு கரம் தேவையென்கையில், அதை முழுமையாக செய்யவேண்டியது அரசின் கடமைதான். அந்தவகையில் அரசின் இந்த அறிவிப்பை நான் முழுமையாக வரவேற்கிறேன்.

image

இக்காரணங்கள் யாவும், ‘ஏன் மனநல முகாம் அவசியம்’ என்பதற்கு அடிப்படையான காரணங்கள். இவற்றுடன், நாம் பேசும் ‘பாலியல் துன்புறுத்தலை தடுத்தல் – தற்கொலையை தடுத்தல்’ ஆகியவையாவும் கூடுதல் முக்கியத்துவம் வாய்ந்தவையாக இப்போது சேர்கிறது.

இந்த மனநல முகாம்களில் குழந்தைகள் தரப்புக்கு ‘பாலியல் ரீதியான துன்புறுத்தல் எது’ என்ற தெளிவையும் ‘பாலியல் துன்புறுத்தலுக்கு நீ உள்ளானால், எப்படி – எங்கு – யாரிடம் சென்று உதவியை நாடவேண்டும்’ என்ற புரிதலையும் கொடுக்க வேண்டியுள்ளது. அதுபோலவே குழந்தைகள் மத்தியில் தற்கொலை தீர்வல்ல என்ற புரிதலையும் கொடுக்க வேண்டியுள்ளது. ஆசிரியர் தரப்புக்கு ‘மாணவ மாணவியரை எப்படி கையாள வேண்டும் – அவர்களிடம் ஆசிரியருக்கான உரிமை என்ன’ என்பதை அரசு சொல்லிக்கொடுக்க வேண்டும். ஏனெனில் இன்றும் பல ஆசிரியர்கள் ‘குழந்தைகளை திட்டினால், அதட்டினால், அடித்தால் அவர்கள் சொல்பேச்சு கேட்பார்கள்’ என்று நினைக்கின்றனர். குழந்தைகளை தங்களைவிட வலிமை குறைவானவராக பார்ப்பதால் வரும் மனநிலை இது. ‘குழந்தையை திட்டினா அதை தட்டிக்கேட்க யார் வரப்போகிறார்கள்’ என்ற ஆதிக்க மனப்பான்மையை ஆசிரியர்களிடையே உடைக்கவேண்டும். ‘குழந்தைகள் நம்மிடமிருந்து அறிவைப் பெறும் சக உயிர்’ என்று உணர்தல் ஆசிரியர்களுக்கு வேண்டும். அதை மனநல முகாம்கள் அவர்களுக்கு வழங்க வேண்டும். 

கொரோனா கால மாணவர் நலன் 4: எட்டாம் வகுப்பு வரை பள்ளி திறப்புக்கு முன் அரசு  செய்ய வேண்டியவை! | Things Tamilnadu Government to do before the reopening  of 1 to 8 th standard students ...

உடன் ‘பாலியல் குற்றச்சாட்டுகளை முன்வைக்கையில், குழந்தைகள் பொய் சொல்லிவிட்டால் என்ன செய்வது? புரிதலின்றி ஒரு மாணவனோ / மாணவியோ, ஆசிரியர் மீது புகார் சொல்லிவிட்டால் அதை அந்த ஆசிரியர் எப்படி கையாள்வது?’ என்பது பற்றி ஆசிரியருக்கு மனநல ஆலோசனைகள் வழங்கப்படவேண்டும். இந்த இடத்தில், எந்தக் குழந்தையும் புரிதலின்றி ஒரு ஆசிரியரை ‘தன்னிடம் இவர் பாலியல் அத்துமீறலில் ஈடுபட்டார்’ என சொல்லாது என்பதை நாம் உணரவேண்டும். சில நேரங்களில் ஆசிரியரை பிடிக்காத காரணத்தால் அவர் மீது சில குழந்தைகள் பொய் சொல்லக்கூடும். அப்படியான நேரத்தில், அதை அந்த பள்ளி நிர்வாகம் நேர்த்தியாக கையாள வேண்டும். பள்ளி நிர்வாகம் எந்தக் குழந்தையின் புகாரையும் உதாசீனப்படுத்தாமல், அனைத்து புகார்களையும் விசாரிக்க பள்ளிக்குள்ளேயே ஒரு கமிட்டி அமைத்துக்கொண்டாலேவும் போதும்.

அப்படி நிர்வாகம் அமைக்கும் கமிட்டியில், உளவியல் நிபுணர் – பள்ளியளவில் ஒரு ஆசிரியர் – குழந்தைகளை சென்சிட்டிவாகவும் நேர்த்தியாகவும் கையாளும் ஒரு ஆசிரியர் / நிர்வாகம் சார்ந்த நபர் – குழந்தைகள் சார்ந்து இயங்கும் செயற்பாட்டாளர்கள் / அமைப்பினர் – அரசு குழந்தைகள் ஆணையத்தின் உறுப்பினர் (கட்டாயம்) போன்றோர் இருக்க வேண்டியது அவசியம். இந்த கமிட்டி விசாரித்து முதல் அளவிலேயே நடவடிக்கை சரியான எடுக்கையில், எந்த ஆசிரியரும் தவறான பழிச்சொல்லுக்கு உள்ளாகமாட்டார். ஒருவேளை குழந்தை பொய் சொல்லியிருந்தாலும், கமிட்டி நிர்வாகிகள் குழந்தையை நேர்த்தியாக கையாள்வர். அதன்மூலம் வருங்காலத்தில் குழந்தை பொய்ப்புகார்களை அளிப்பதன் விளைவுகளை உணர்ந்து திருந்திக்கொள்ளும்.

தொடர்புடைய செய்தி: கொரோனா கால மாணவர் நலன் 9: ‘ப்ரவுசிங் ஹிஸ்டரி காட்டுவது எதை?’ – உடனடி தேவை, மனநல முகாம்கள்!

குழந்தைகள் மீது ஆசிரியரே துன்புறுத்தலில் ஈடுபடுவது போல வேறொரு கொடுமை ஏதுமில்லை. ஏனெனில், ஆசிரியரென்பவர் குழந்தையின் பாசிடிவ் – நெகடிவ் என எல்லாமே அறிந்து வைத்துக்கொண்டு, அதில் குழந்தைக்கு எது தேவை – எது தேவையில்லை என உணர்ந்து அவர்களுக்கு பாடம் புகட்ட வேண்டிய நபர். அவரே அந்தக் குழந்தையின் நெகடிவ்வை தனக்கு சாதகமாக உபயோகப்படுத்திக்கொள்கிறார் என்பதைவிட கொடுமை வேறென்ன இருக்க முடியும்? பாலியல் சார்ந்த துன்புறுத்தலுக்கு மட்டும் நான் இதை சொல்லவில்லை. வன்முறை சார்ந்த துன்புறுத்தலும் இப்படியான மனநிலைதான். ‘எங்க டீச்சர் என்னை திட்டிட்டாங்க’ என்று எழுதிவிட்டு, தவறான முடிவுகளை எடுக்கும் குழந்தைகளும் இங்கு உள்ளார்கள். அவர்களை பொறுத்தவரை ‘வலிமையற்ற குரல் குழந்தையோடது’ என்ற மனநிலைதான் அவர்களை வன்முறைக்கு உள்ளாக்குது. இதை உடைக்க வேண்டும். குழந்தையின் நெகடிவ்வை தனக்கு சாதகமாக பயன்படுத்திக்கொள்ளும் ஆசிரியர்கள், நிச்சயம் அதற்கு பொறுப்பேற்ற உரிய தண்டனையையோ எச்சரிக்கையையோ பெற்றே ஆகவேண்டும்.

image

குழந்தைகள் மீதான பிற வன்முறைகளைவிடவும், பாலியல் குற்றங்கள் மற்றும் துன்புறுத்தல்களை தடுப்பதில் நாம் இன்னும் நிறைய தூரம் பயணிக்க வேண்டியுள்ளது. அதில் நாம் முதன்மையாக வேலை செய்ய வேண்டியது, குழந்தைகளிடம்தான். குறிப்பாக, ஒரு உயிர் தன்னைத்தானே காப்பாற்றிக்கொள்வது எப்படி, தனக்கு பிரச்னை வருகையில் அதை எதிர்த்து நிற்பது எப்படி என குழந்தைகளுக்கு நாம் சொல்லிக்கொடுக்க வேண்டும். குறிப்பாக ‘பாலியல் குற்றங்களிலிருந்து தன்னை தானே தற்காத்துக்கொள்வது எப்படி – ஒருவேளை பாலியல் குற்றங்களால் பாதிக்கப்பட்டுவிட்டால், அப்போது அதிலிருந்து மீள்வது எப்படி’ என்பதை குழந்தைகளுக்கு கற்றுக்கொடுக்க வேண்டியுள்ளது.

இதை நான் குறிப்பிட்டு சொல்லக்காரணம், பண்பாடு – கலாச்சாரம் என்ற பெயரில் நாம் நம் குழந்தைகளிடம் பல தேவையில்லாத கற்பிதங்களை சொல்லிக்கொடுத்திருக்கிறோம். அதுதான் அவர்களை தற்கொலை போன்ற இடங்களுக்கு தள்ளிச்செல்கிறது. பெரும்பாலான பெற்றோர் ‘பாலியல் குற்றங்களில் நடந்தபின் அதை வெளியில் சொல்வது அவசியம்’ என்று குழந்தைகளுக்கு சொல்லிக்கொடுப்பதோடு தங்கள் பணியை நிறுத்திக்கொள்கின்றனர். அவற்றுடன் ‘ஒருவேளை உனக்கு பாலியல் குற்றம் நடந்தால், அதை நாம் இணைந்து எதிர்ப்போம். அதற்கான சட்ட ரீதியான வழிமுறைகள் நமக்கு உள்ளது. அந்தவகையில், அந்நபர்களை நீ எப்படி எதிர்க்க வேண்டும் – எப்படி அதிலிருந்து சட்டரீதியாக போராட வேண்டும் – அதிலிருந்து மீள வேண்டும்’ என்பனவற்றையும் பேச வேண்டும்.

image

இவற்றில் சட்டரீதியாக போராட வேண்டும் என்ற இடம், இவை அனைத்திலும் முக்கியமானது. ஏனெனில் சமீபத்தில் தற்கொலை செய்துகொண்ட குழந்தைகள் யாருக்குமே, சட்டத்தின் வாயில் தெரியவில்லை என்பதுதான் பெரும்குறையாக இருக்கிறது. அவர்கள் எல்லோருமே தங்களுக்கு தெரிந்த வரையில் பெற்றோரிடம், ஆசிரியர்களிடம், நெருங்கிய உறவினரிடம் விஷயத்தை சொல்லி முறையிட்டுள்ளனர். ஆனால் அங்கு அவர்களுக்கு உரிய பாதுகாப்பு கிடைக்காமல் இருந்துள்ளது. இந்த இடத்தில் அக்குழந்தையின் பெற்றோரையோ உறவினர்களையோ நான் குற்றவாளியாக்கவில்லை. அவர்களுக்கே சட்டத்தை அணுகும் – 1098 / 14417 எண்கள் குறித்த விஷயம் தெரியவில்லை என்பதுதான் நான் சொல்லவருவது. ஆகவே, பெற்றோருக்கும் பொதுமக்களுக்கும்கூட நாம் சட்டத்தை சொல்லித்தர வேண்டியுள்ளது. அதைத்தொடர்ந்தே அவர்கள் வழியாக குழந்தைகளையும் சட்டத்தை நோக்கி அழைத்துச்செல்ல வேண்டும். இப்படியாக சமூகத்தை மாற்றி, அதன் தொடர்ச்சியாக குழந்தைகளை மேம்படுத்துகையில், துன்புறுத்தலுக்கு உள்ளாக்கும் நபர்களை நம்மால் எளிதாக கண்டறியவும்; பாதிப்புக்குள்ளாகும் குழந்தைகளை காக்கவும் முடியும். இவை அனைத்தையும் குழந்தைகளுக்கான மனநல முகாம்கள் மூலம் அவர்களிடம் நேரடியாகவும் கொண்டு செல்ல முடியும். ஆகவே, நம் கையில்தான் அனைத்தும் உள்ளது.

நேரடியாகவோ, சுற்றிவளைத்தோ… குழந்தைகளிடம் சட்டத்தை கொண்டு சென்றால், நம்மால் தற்கொலைகளை தடுக்கவும் தவிர்க்கவும் முடியும். போலவே பள்ளிகளில் ‘குழந்தைகளுக்கான கமிட்டி’ அமைத்து அவர்கள் குரலுக்கு செவிசாய்த்து – முறையான பள்ளியளவிலான விசாரணைகளை செய்யும்போது நம்மால் அச்சுறுத்தலுக்கு உள்ளாகும் ஆசிரியர்களையும் காக்க முடியும். முடிவு, நம் கையில்” என்றார்.

Source : WWW.PUTHIYATHALAIMURAI.COM

Sign In

Register

Reset Password

Please enter your username or email address, you will receive a link to create a new password via email.