அ.தி.மு.க-வில் நீண்ட நாள்களாக நீறுபூத்த நெருப்பாக இருந்த உட்கட்சி விவகாரம் இன்று நடந்த மாவட்டச் செயலாளர்கள் கூட்டத்தில் வெடித்தால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

அ.தி.மு.க மாவட்டச் செயலாளர்கள் மற்றும் தலைமைக் கழக நிர்வாகிகள் கூட்டம் இன்று அ.தி.மு.க தலைமை அலுவலகத்தில் நடந்தது. கூட்டத்துக்கு ஒருங்கிணைப்பாளர் பன்னீர்செல்வம், இணை ஒருங்கிணைப்பாளர் எடப்பாடி பழனிசாமி உள்ளிட்டோர் தலைமை வகித்தனர். அ.தி.மு.க-வின் அவைத்தலைவர் பதவி காலியாக இருக்கும் நிலையில், அது குறித்துக் கூட்டத்தில் விவாதிக்கப்படும் என்று ஏற்கெனவே செய்திகள் வெளியாகின.

அ.தி.மு.க தலைமை அலுவலகம்

இந்த நிலையில் கூட்டம் தொடங்கியதுமே, எடப்பாடி நகர்ப்புறத் தேர்தல் குறித்து மட்டும் நிர்வாகிள் தங்கள் கருத்துகளைத் தெரிவிக்கவும் என்று சொல்லியிருக்கிறார். கூட்டம் தொடங்கி அரை மணி நேரம் வரை அமைதியாகப் போன நிலையில், நகர்ப்புறத் தேர்தலில் வேட்பாளர்கள் தேர்வு, கூட்டணி விஷயங்கள் குறித்த பேச்சு எழுந்துள்ளது.

அப்போது சில நிர்வாகிகள், `தலைமைக்குள்ளே ஒத்துவராத நிலை இருக்கிறது. இதே நிலையில் தேர்தலைச் சந்தித்தால் மேலும் நமக்கு சரிவுதான் வரும்’ என்று கூறியிருக்கிறார்கள். குறிப்பாக `11 பேர்கொண்ட வழிகாட்டுதகுழு அமைத்த பிறகு அந்தக் குழு செய்த நடவடிக்கை என்ன?’ என்று சிலர் பிரச்னையைக் கிளப்ப கூட்டத்தில் பரபரப்பு ஏற்பட்டது.

Also Read: எடப்பாடி-க்கு தூது அனுப்பிய சசிகலா… பணிந்த பிரதமர் மோடியின் கணக்கு! | Elangovan Explains

பன்னீர் தரப்பில் வழிகாட்டுதல்குழுவை மாற்றலாம், 18 பேர்கொண்ட குழுவை புதிதாக அமைக்கலாம். அந்தக் குழுவே அனைத்து முடிவுகளையும் எடுக்கட்டும் என்று பேசியதாக கூறப்படுகிறது. இதனால் கூட்ட அரங்கில் கூச்சல், குழுப்பம் ஏற்பட ஆரம்பித்திருக்கிறது. அப்போது சிலர், முன்னாள் அமைச்சர் செங்கோட்டையனை, குழுத் தலைவராகவோ, அவைத்தலைவராகவே நியமிக்கலாம் என்று கூறியிருக்கிறார்கள். இதற்கு எடப்பாடி தரப்பு எதிர்ப்பு தெரிவித்திருக்கிறது. மற்றொருபுறம், முன்னாள் அமைச்சர் அன்வர் ராஜா கருத்து சொல்ல முற்பட, “உங்களால்தான் இவ்வளவு பிரச்னை” என்று சி.வி.சண்முகம் அவரைப் பார்த்துக் கத்தியதால் கூட்டத்தில் சலசலப்பு ஏற்பட்டுள்ளது.

அ.தி.மு.க நிர்வாகிகள் கூட்டம்

ஏற்கெனவே சசிகலா விவகாரம் அ.தி.மு.க-வில் இருந்துவரும் நிலையில், இப்போது புதிய குழு, அவைத்தலைவர் பதவி என்கிற விவகாரங்களை வைத்து எடப்பாடிக்கு எதிராகக் கூட்டத்தில் பெரும் புயலைக் கிளப்பியுள்ளனர் சில மாவட்டச் செயலாளர்கள். இவர்கள் பன்னீரின் பின்னால் இயங்குகிறார்களா என்கிற சந்தேகம் இப்போது எடப்பாடி தரப்புக்கு வந்திருக்கிறது என்கிறார்கள் அ.தி.மு.க-வினர்.

Sign In

Register

Reset Password

Please enter your username or email address, you will receive a link to create a new password via email.