டாஸ் வென்ற கையோடு, கேப்டன்கள் பந்தோடுதான் களமிறங்கவேண்டும் என்ற எழுதப்படாத விதியை இந்தத் தொடரிலும் பயன்பாட்டில் வைத்திருக்கிறது பனிப்பொழிவு. அதிர்ஷ்டக் காற்று இரண்டாவது டி20 போட்டியிலும் ரோஹித்தின் பக்கமே வீச, டாஸ் மறுபடியும் அவருக்குச் சாதகமானது.

20 ஓவருக்குமே புதுப் பந்தைக் கொடுத்தால்தான் சமாளிக்க முடியும் என்ற அளவுக்கு அதிகமாக இருந்தது பனிப் பொழிவு. பௌலர்கள் பந்தோடு ஒருபக்கம் போராடிக் கொண்டிருக்க, ஃபீல்டர்களும் அதே காரணத்தால் கேட்ச் டிராப், மிஸ் ஃபீல்ட் என திணறிக் கொண்டிருந்தனர். குப்தில், மிட்செல், சேப்மேன், கிளென் ஃபிளிப்ஸ் என அனைத்து டாப் ஆர்டர் பேட்டர்களும் நன்றாக ரன் சேர்த்தனர். இப்போட்டியில் அடித்த 31 ரன்களோடு சர்வதேச டி-20 போட்டிகளில் அதிக ரன்களை (3248 ரன்கள்) எடுத்த வீரருக்கான லிஸ்டில் கோலியைத் தாண்டிப் பயணப்பட்டிருந்தார்.

ஆனால், நியூசிலாந்து இன்னிங்ஸின் இரண்டாவது பாதியில் அது மாறியது. வெள்ளை ஜெர்ஸிக்கு மட்டுமென்றே ஒதுக்கப்பட்டிருந்த அஷ்வின், கடந்த ஐந்து டி20-களில், 9 விக்கெட்டுகளை வீழ்த்தியதோடு, வெறும் 21 சராசரியோடே ரன்களைக் கொடுத்து, பல வருடக் காத்திருப்புக்குமான வெறியை, சத்தமில்லாமல் தீர்த்துக் கொண்டிருக்கிறார். நேற்றும் தன் கட்டுக்கோப்பான பந்துவீச்சால் இந்தியாவை மீண்டும் ஆட்டத்துக்குள் கொண்டுவந்தார்.

இத்தனை பேரின் மீதும் வெளிச்சக் கதிர்கள் படிந்தாலும், அதனை மொத்தமாக தனது பக்கம் ஈர்த்துக் கொண்டார் ஹர்ஷல் படேல். ஆம்! பர்ப்பிள் கேப் படேலின் கேப், நீல நிறமாக மாறி இருந்தது. சர்வதேச அரங்கில் களமிறங்காத ஒரு வீரர், பர்ப்பிள் கேப்பைப் பெற்றிருந்த புதுக்கதையை அரங்கேற்றியிருந்த படேலுக்கு, சர்வதேச அரங்கில் கால் பதிக்கும் வாய்ப்பு 30 வயதைக் கடந்த பின்புதான் கிடைத்துள்ளது. ஆனால், முதல் போட்டியின் முடிவிலேயே, ‘இவரை ஏன் நிரந்தர வீரராக அணியில் நீடிக்க வைக்கக் கூடாது’ என சொல்ல வைத்து விட்டார். சிராஜுக்கு விரலில் ஏற்பட்ட காயம் காரணமாக, பிளேயிங் லெவனுக்குள் நுழைந்தார் அவர்.

அனில் கும்ப்ளே அணியின் பயிற்சியாளராக இருந்தபோது அறிமுக போட்டியில் ஆடும் வீரருக்கு, முன்னாள் வீரர்கள் மூலமாக முதல் போட்டிக்கான கேப் தருவது வழக்கமாக இருந்தது. அப்பழக்கம் இப்போது திரும்பக் கொண்டு வரப்பட்டிருக்கிறது. ஹர்ஷல் படேலுக்கான கேப்பினை அஜித் அகர்கர் அளித்தார்.

Harshal Patel

2021 IPL தொடரின் 15 போட்டிகளில், வெறும் 14.34 சராசரியோடு 32 விக்கெட்டுகளை எடுத்து ஒரு ஸ்டாராக உருவெடுத்திருந்தார் ஹர்ஷல். அதுவும் பல வருடங்களாக நீடித்து வந்த, ‘ஒரே சீசனில் அதிக விக்கெட்டுகளை எடுத்தவர்’ என்ற சாதனையை, ஹர்சல் படேல், பிராவோவோடு பங்கிட்டிருந்தது, அவர் மீது ஒரு பெரிய எதிர்பார்ப்பை ஏற்படுத்தியிருந்தது. எனினும், அவருக்கும் பிராவோவுக்குமான ஒற்றுமை அங்கேயே முடிந்து விடவில்லை. பிராவோவின் பலமே ஸ்லோ பாய்சனாகும் ஸ்லோ பால்கள்தான். அதுதான் ஹர்ஷலின் பலமும். ஆனால், அதே ஸ்லோ பால்களுக்காகத்தான் ஹர்சல் விமர்சிக்கப்பட்டு வந்தார்.

வேகப் பந்து வீச்சாளராக இருக்கும் அவர், தனது ஸ்டாக் டெலிவரியான வேகப் பந்து வீச்சை பிரதான ஆயுதமாகப் பயன்படுத்துவதை விடுத்து, வேரியஷனான ஸ்லோ பால்களை அதிகமாகப் பயன்படுத்துகிறார் என்பது எப்பொழுதும் அவரின் மீது நீளும் குற்றச்சாட்டு. ஆனால், இந்தப் போட்டியிலும் ஹர்ஷல் தனது அஸ்திரத்தைப் பயன்படுத்தத் தவறவில்லை.

சர்வதேச டி20-ல் அவரது முதல் விக்கெட்டே அவரது ஆகச்சிறந்த ஆயுதமான ஸ்லோ பாலில்தான் விழுந்திருந்தது. அதுவும் ஓப்பனராக இறங்கி, போட்டியின் பாதி ஓவர்களுக்கும் மேல் தாக்குப் பிடித்திருந்த டேரில் மிட்செல்லை, தனது முதல் சர்வதேச விக்கெட்டாக வீழ்த்தினார் ஹர்ஷல். RCB நாட்களில், “அதிர்ஷ்டத்தால் கிடைத்த புகழ்தான் இது. இன்னமும் இவர் டெத் ஓவர்களைத் திறம்படக் கையாள வேண்டும்”, என பல கணைகள் இவரைத் துளைத்திருந்தன. அதிலும், ஜடேஜா அடித்து துவம்சம் செய்த அந்த ஒரு ஓவர், இவர் இந்தியாவுக்காக ஆட எல்லாம் இன்னமும் தயாராகவில்லை, சர்வதேச வீரர்களை இவரால் சமாளிக்க முடியாது என்றும் கூற வைத்து விட்டது.

மிட்செல்லோடு தனது விக்கெட் வேட்டைக்கு முற்றுப் புள்ளி வைக்காமல், அடாவடியாக ரன் குவித்து அபாய மணி அடித்துக் கொண்டிருந்த பிலிப்ஸையும் சேர்த்தே அனுப்பியிருந்தார் ஹர்ஷல். வீசிய நான்கு ஓவர்களில் இரண்டு விக்கெட்டுகளை வீழ்த்தியதோடு, வெறும், 6.2 என்னும் எக்கானமியோடு தன் ஸ்பெல்லை முடித்தார். மொத்தம் 13 டாட் பால்கள். இதுவே, எந்த அளவுக்கு நியூஸிலாந்து பேட்ஸ்மேன்களை அவர் திணறடித்திருந்தார் எனக் காட்டும்.

Tim Southee

டாஸ் போட்ட நாணயத்தில், இரண்டு பக்கமுமே, பௌலர்களது நாள் என்றே பொறிக்கப்பட்டிருந்தது போலும். நியூஸிலாந்தின் சார்பில், கேப்டன் சவுத்தியும் கோலோச்சினார். சவுத்தி, பவர்பிளேயில் வீசிய இரண்டு ஓவர்களில் வெறும் 11 ரன்களை மட்டுமே கொடுத்திருந்தார். இது இந்தியத் தரப்பின் மீது சற்றே அழுத்தம் தந்தது. ஆனால், தொடக்கத்தில் விக்கெட் வாடை பார்க்காத அவரது பந்துவீச்சு, 65 ரன்களோடு களத்தில் நின்ற ராகுலை வீழ்த்தி, உடையாத அந்த ஓப்பனிங் பார்ட்னர்ஷிப்புக்கு முற்றுப்புள்ளி வைத்தது.

ராகுலின் விக்கெட்டோடு ஆறு ரன்களும் வந்திருந்த அந்த ஓவரை விட, அவரது இறுதி ஓவர்தான் ‘போட்டியின் திருப்புமுனையாகிவிடுமோ’ என்ற அதிர்ச்சி தந்தது. கேப்டன் ரோஹித் மட்டுமின்றி, சூர்யகுமார் யாதவ் விக்கெட்டையும் வீழ்த்தி, இந்திய அணியை சற்று நேரம் கலங்கடித்தார் சவுத்தி. எட்ட வேண்டிய இலக்கு நெருங்கி விட்டாலும், அதனை சற்றே மங்கலாகக் காட்சிப்படுத்தின இந்த இரு விக்கெட்டுகள். தனது தனி முத்திரையான ஒன் ஹாண்டட் சிக்ஸரோடு, பன்ட் மிகச் சுலபமாக இலக்கை சென்று விட்டாலும், சற்று நேரம் போட்டியின் சுவாரஸ்யத்தையும், பேட்டுக்கும் பந்துக்குமான யுத்தத்தையும் தீவிரமடையச் செய்தது சவுத்தியின் இறுதி ஓவர்.

ராகுல் – ரோஹித்

போட்டியில், இரண்டு அணிகள் ஆடிய விதத்தையும், சற்றே பரிசீலித்தால், நியூஸிலாந்து, பவர் பிளேயில், இந்தியாவை விட சிறப்பாகவே ஆடி இருந்தது. ஆனால், அங்கிருந்து அடுத்தடுத்த விக்கெட்டுகளோடு போட்டியின் பிடியை தங்கள் கைக்குள் இந்தியா கொண்டு வந்து விட்டது. இன்னமும், 20 – 30 ரன்கள் போட்டியின் முடிவைக் கூட மாற்றியிருக்கலாம் என்பதால்தான், பிலிப்ஸின் விக்கெட் முக்கியமான திருப்புமுனையாக அமைந்தது. இருபக்கமும், கேட்ச் டிராப் தவறுகள், சரமாரியாக நடந்தேறின. போல்ட் இத்தொடர் முழுவதுமே கேட்ச்களைக் கோட்டை விடுவதை, பகுதி நேர வேலையாகச் செய்து வருகிறார். அதேபோல், பிற்பகுதியில் வீழ்த்திய விக்கெட்டுகளை, நியூசிலாந்து முன்னதாகவே எடுத்திருந்தால், அதுவும் அவர்களுக்கான ஒரு வாய்ப்புக்கான வித்தாக மாறி இருக்கலாம்.

ரோஹித்

எது எப்படியோ, ஒரு போட்டி மீதமுள்ள நிலையில் தொடரைக் கைப்பற்றி விட்டது இந்தியா. பயிற்சியாளர் – முழுநேரக் கேப்டன் பயணத்தை, வெற்றிகரமாகவே துவக்கியுள்ளது டிராவிட் – ரோஹித் கூட்டணி. கடந்த உலகக் கோப்பையின் முடிவு இந்தியாவுக்குச் சிறப்பாக அமையா விட்டாலும், அடுத்த ஆண்டு நடக்க இருக்கும் உலகக் கோப்பைக்கான ஒத்திகைக்கான சிறந்த தொடக்கமாக, இந்தியாவுக்கு இந்த வெற்றி, அமைந்துள்ளது.

Sign In

Register

Reset Password

Please enter your username or email address, you will receive a link to create a new password via email.