இயற்கை எழிலும், பசுமையும் கொட்டிக் கிடக்கும் அசாம் மாநிலத்தில் உள்ள காசிரங்கா தேசிய பூங்காவின் இணையர் என்றே மானஸ் தேசிய பூங்காவைச் சொல்லலாம். காசிரங்காவின் மேற்குப் பகுதியில் உள்ள மூன்று மலைத்தொடரின் நிலப்பரப்புகளை தன்னகத்தே கொண்டுள்ளது மானஸ் தேசிய பூங்கா.

இமயமலையின் அடிவாரத்தில் அமைந்துள்ள இந்தப் பூங்கா பூடான் வரை நீண்டு காணப்படுகிறது. புவியியல் ஒற்றுமை, பறவை, விலங்குகளின் ஒன்றுபட்ட வாழ்விடமாக காசிரங்காவும் மானஸும் விளங்குகின்றது. இங்கு புலி, யானை, ஒற்றைக் கொம்பு காண்டாமிருகம் போன்ற பல்வேறு விலங்குகளும், அரியவகை பறவைகளும் வாழ்கின்றன. இந்த பூங்கா வனவிலங்குகள் சரணாலயம் என்றும் அறியப்படுகிறது.

image

மேற்கு அசாமில் உள்ள கிழக்கு இமயமலைத்தொடர் அடிவாரத்தில் பன்சபாரி, பன்பாரி, புலப்பரா மலைத்தொடரின் நிலப்பரப்புகளில் அமைந்துள்ளது இந்த சரணாலயம். பிரம்மபுத்திரா நதியின் முக்கிய கிளை நதியான மானஸ் நதி, இந்தப் பூங்காவின் மையப்பகுதி வழியாகச் செல்கிறது. இதனாலேயே மானஸ் தேசிய பூங்கா என்று இந்த சரணாலயம் அழைக்கப்படுகிறது. மானஸ் என்ற பெயர் பாம்பு தெய்வமாகவும், சிவபெருமானின் மகளாகவும் கருதப்படும் மானசா தேவி என்ற பெயரிலிருந்து பெறப்பட்டதாகவும் கூறப்படுகிறது.

image

பூங்காவின் மேற்குப் பகுதியில் மானஸும், பேக்கி போன்ற சிறு நதிகள் ஐந்தும் பூங்காவின் இதர பகுதிகளில் பாய்ந்து இயற்கைக்கு வளம் சேர்க்கின்றன. மலைத்தொடர் பகுதி என்பதால் அடர்ந்த காடுகள், அடிவாரத்தில் சவன்னா புல்வெளிகள், சதுப்புநில காடுகள், பள்ளத்தாக்கு பகுதிகள் என இந்த தேசிய பூங்கா பன்முகம் கொண்ட நிலமாக இருக்கிறது. இந்திய – பூடான் எல்லையில் 950 சதுர கிலோமீட்டர் பரப்பில் உள்ள இந்தப் பூங்காவில் சுமார் 55 வகை பாலூட்டிகள், 380 வகை பறவைகள், 50 வகை ஊர்வன மற்றும் 3 வகை நிலநீர்வாழ் உயிரினங்கள் உள்ளன. பூட்டானின் வடக்குப் பகுதியில் ராயல் மானஸ் தேசிய பூங்கா அமைந்துள்ளது. சர்வதேச எல்லைதான் மானஸ் வனப்பகுதியை இரண்டாகப் பிரிக்கிறது.

image

தேசிய பூங்காவின் மையப்பகுதியில் பக்ராங் என்ற ஒரே ஒரு வன கிராமம் உள்ளது. பூங்காவைச் சுற்றியுள்ள 56 கிராமங்களும், இன்னும் பல விளிம்பு கிராமங்களும் நேரடியாகவோ அல்லது மறைமுகமாகவோ இந்தப் பூங்காவை நம்பியே உள்ளன.

மானஸ் தேசிய பூங்காவானது எப்படி..?

1928-ம் ஆண்டு வரை ஒதுக்கப்பட்ட காடாக மானஸ் இருந்தது. 1928-ல் அப்போதைய ஆங்கிலேய அரசு மானஸை, காப்புக்காடு மற்றும் வடக்கு கம்ரூப் (Kamrup) காப்புக்காடாக வரையறுத்து பாதுகாத்து வந்தது. சில நாட்களில் 360 சதுர கி.மீ. கொண்ட பரப்பளவை பாதுகாக்கப்பட்ட சரணாலயமாக அறிவித்தது. கோச் வம்சத்தைச் சேர்ந்த பெஹார் அரச குடும்பம் மற்றும் கௌரிபூரின் ராஜா ஆகியோரால் வேட்டைக்கு மட்டுமே இந்த பகுதி பயன்படுத்தப்பட்டு வந்தது. 1951 மற்றும் 1955-ம் ஆண்டுகளில், இந்தப் பூங்காவின் பரப்பளவு 391 சதுர கி.மீட்டராக விரிவாக்கம் செய்யப்பட்டது. இங்கு அதிகளவு புலிகள் இருந்ததால், அவற்றைப் பாதுகாக்கும் அவசியத்தை உணர்ந்த அசாம் அரசு 1973-ல் மானஸை புலிகள் காப்பகமாக அறிவித்தது.

Manas National Park depicts excellent tiger conservation story - The  Shillong Times

பாதுகாக்கப்பட்ட இயற்கை வனப்பகுதியான இந்த பூங்காவில், பறவைகளையும், விலங்குகளையும், முக்கியமாக புலிகளைப் பாதுகாக்க வேண்டும் என்ற நோக்கத்தில், 1985-ம் ஆண்டு நடைபெற்ற யுனெஸ்கோ மாநாட்டில், யுனெஸ்கோவின் 7, 9 மற்றும் 10-வது விதியின் கீழ் உலக பாரம்பரிய இடமாக ஏற்றுக்கொள்ளப்பட்டது. இதையடுத்து, இந்தியாவின் பாதுகாக்கப்பட்ட இடங்களின் பட்டியலில் மானஸ் தேசிய பூங்கா சேர்க்கப்பட்டது. இதையடுத்து, 1989 ல் உயிர்க்கோளக் காப்பகமாக (Biosphere reserve) மாறியது.

image

பின்னர் 1990-ல் மத்திய அரசு மானஸ் உயிர்க்கோளக் காப்பகத்தை, கஹிதாமா (Kahitama R.F), கோகிலாபாரி (Kokilabari R.F), பன்பாரி (Panbari R.F) போன்ற காப்புக்காடுகளோடு இணைத்து மானஸ் தேசிய பூங்காவாக அறிவித்தது. 950 சதுர கிலோமீட்டர் பரப்பளவு கொண்ட பூங்கா, மேற்கு வங்கத்தில் உள்ள பக்ஸா புலிகள் காப்பகத்துடன் இணைந்துள்ளது. 2003-ம் ஆண்டில் இது சிராங்-ரிபு யானைகள் காப்பகத்தின் ஒரு பகுதியாகவும் அறிவிக்கப்பட்டது. தற்போது, இந்தியாவிற்கும் பூட்டானுக்கும் இடையில் யானைகள் இடம்பெயர்வதற்கான சர்வதேச வழித்தடமாகவும் இப்பகுதி செயல்படுகிறது.

image

யுனெஸ்கோ பாதுகாப்பதற்கான முக்கிய காரணங்கள்!

யுனெஸ்கோவின் 7-ம் விதியின் படி, மானஸ் நதியால் ஏற்பட்ட இயற்கை வளங்கள் பல்லுயிர்களும் வாழ்வதற்கான சூழலை ஏற்படுத்தியுள்ளது. இதனால் முக்கிய இயற்கைப் பகுதியாகக் கருத்தில் கொள்ளப்பட்டது. 9-ம் விதியின் படி, ஆற்றில் அடித்து வரப்படும் வண்டல் மண் பூங்காவில் படிந்து புது கரைகளை உருவாக்குவதால், மழைக்காலங்களில் வரும் வெள்ளத்திலிருந்து இயற்கையாகவே பூங்கா பாதுகாக்கப்படுகிறது. விதி எண் 10-ன் படி, மனிதர்களின் வாழ்விடங்களுக்கு அச்சுறுத்தும் வகையில் உள்ள சுமார் 22 உயிரினங்கள் வாழ்ந்து வரும் சரணாலமாகவும் அமைந்துள்ளதால் இந்த மானஸ் தேசிய பூங்கா மிகவும் பாதுகாக்கப்படவேண்டியவை என்ற நோக்கத்தில் யுனெஸ்கோவின் பாதுகாக்கப்பட்ட பட்டியலில் முக்கிய இடத்தை பெற்றுள்ளது.

image

பூங்காவின் 6 சிறப்புகள்!

மானஸ் தேசிய பூங்காவானது 6 முக்கிய சிறப்புகளைப் பெற்ற சரணாலயத்துக்குப் பெயர்பெற்றது. அதாவது, உலக பாரம்பரிய தளம், தேசிய பூங்கா, புலிகள் காப்பகம், உயிர்க்கோள காப்பகம், யானைகள் காப்பகம் மற்றும் முக்கியமான பறவைகள் பகுதி என்ற 6 சிறப்புகளைப் பெற்று உயிரினங்களைப் பாதுகாத்து வருகிறது. இதன் காரணமாக இந்திய வனவிலங்கு (பாதுகாப்பு) சட்டம் – 1972, இந்திய வனச் சட்டம் – 1927, அசாம் வன ஒழுங்குமுறை – 1891 போன்ற மிக உயர்ந்த சட்ட பாதுகாப்புக்கு உட்பட்டுள்ளது.

image

பல்லுயிர் காப்பகம்:

இந்தப் பூங்காவில் பாலூட்டிகள், பறவைகள், ஊர்வன மற்றும் நிலநீர்வாழ் உயிரினங்கள் உள்ளன. இந்திய காண்டாமிருகம், இந்திய யானை, இந்தியப் புலி, கருஞ்சிறுத்தை, பெரிய ஒற்றைக் கொம்பு காண்டாமிருகம், குரைக்கும் மான் வகைகள், அசாமிய மக்காக்குகள், கோல்டன் லங்கூர் (குரங்கு வகைகள்), சிங்க வால் குரங்குகள், தேவாங்கு இனங்கள், சிட்டல்கள், ஆமை இனங்கள், ஆசிய தங்க நிறப் பூனை (Asian golden cat), மேகச் சிறுத்தை (Clouded leopard), நீர்நாய்கள், பன்றி மான் (Babirusa), சோம்பல் கரடி, இமாலய அடர்முடி முயல், இமாலய ராட்சத அணில் அல்லது கருப்பு ராட்சத அணில் போன்ற பல்வேறு அரியவகை பல்லுயிர் விலங்குகளும் இந்தப் பூங்காவில் உள்ளன.

image

மேலும், இந்தப் பூங்கா காட்டு நீர் எருமைகளுக்குப் பிரபலமானது. மேலும், இயற்கை வளமான, பல்வேறு வகையான மரங்களின் இனங்களும் இங்குக் காணப்படுகிறது. மூலிகை வகைகள், கொடி வகைகள், புற்கள் என உயர் தாவர பன்முகத்தன்மைக்கும் வாழ்விடமாக உள்ளது. மேலும், 400 வகையான் காட்டு அரிசிகளுக்கும் இந்த இடம் பிறப்பிடமாக உள்ளது. 450-க்கும் அதிகமான பறவை இனங்களும் உள்ளன. அதிலும் குறிப்பாக, அழிவின் விளிம்பில் உள்ள பறவையினமான வங்காள புளோரிகன் (bengal florican) இனங்கள், வாத்துக்கள், வான் கோழி இனங்கள், கூழைக்கடா, மீன்பிடி கழுகுகள், பாம்பு-கழுகுகள், இந்திய மயில்கள் எனப் பலவகையான பறவையினங்களுக்கும் பிரபலமானவை.

image

சுற்றுலாப் பயணிகள் கவனத்திற்கு…

சென்னையிலிருந்து சுமார் 2,562 கி.மீ தொலையில் மானஸ் தேசிய பூங்கா அமைந்துள்ளது. விமானம் மூலம் செல்பவர்கள் கவுகாத்தி விமான நிலையம் சென்று, பேருந்தில் மானஸை அடையலாம். கவுகாத்தியிலிருந்து 167 கிலோமீட்டர் தொலைவில் பூடான் நாட்டு எல்லையை ஒட்டியுள்ளது. ரயில் மூலம் செல்பவர்கள் பர்படா ரயில் நிலையத்தை அடைந்து அங்கிருந்து 40 கி.மீ தொலைவு பயணம் செய்து பூங்காவை அடையலாம்.

ஜூன் முதல் செப்டம்பர் மாதம் வரை பருவ மழைக்காலம் என்பதால் கடுமையான மழைபொழிவு ஏற்பட்டு வெள்ளப்பெருக்கு ஏற்படும். எனவே, நவம்பர் முதல் ஏப்ரல் மாதம் வரை பயணம் செய்வது சிறந்தது. வாரத்தின் 7 நாட்களும் காலை 5.30 மணியிலிருந்து மாலை 6.30 மணி வரை பார்வையாளர்களுக்கு அனுமதி வழங்கப்படுகிறது.

image

காசிரங்கா தேசிய பூங்காவைப் போலவே, சுற்றுலாப் பயணிகளுக்காக, யானை சவாரி, ஜீப் சவாரி வசதிகளைச் செய்து கொடுக்கப்பட்டுள்ளது. காலை 9 மணி முதல் 12 மணி வரையும், மதியம் 2 மணி முதல் 5 மணி வரையும் ஜீப் சஃபாரி வசதியும், காலை 6 மணி முதல் 7 மணி வரை யானை சஃபாரி வசதியும் உள்ளது.

image

கட்டணம்: தேசிய பூங்காவைச் சுற்றிப் பார்ப்பதற்கு நுழைவுக்கட்டணமாக இந்தியர்களுக்கு அரைநாள் கட்டணமாக 50 ரூபாயும், முழுநாள் கட்டணமாக 200 ரூபாயும் கட்ட வேண்டும். வெளிநாட்டினருக்கு அரைநாள் கட்டணமாக 500 ரூபாயும், முழுநாள் கட்டணமாக 2,000 ரூபாயும் வசூலிக்கப்படுகிறது. ஜீப் சஃபாரிக்கு இந்தியர்களுக்கு ரூ.3,000, வெளிநாட்டுச் சுற்றுலாப் பயணிகளுக்கு ரூ.5,000 கட்டணமாக வசூலிக்கப்படுகிறது. ஒரு ஜீப்பில் நான்கு பேருக்கு மட்டுமே அனுமதி. யானை சஃபாரிக்கு இந்தியர்களுக்கு ரூ.500 என்றும், வெளிநாட்டினர்களுக்கு ரூ.1,550 என்றும் கட்டணம் வசூலிக்கப்படுகிறது. அதேபோல், புகைப்படம் மற்றும் வீடியோ எடுப்பதற்கும் தனிக்கட்டணம் உண்டு. புகைப்படம் எடுக்க, இந்தியர்களுக்கு 50 ரூபாயும், வெளிநாட்டினருக்கு 500 ரூபாயும், வீடியோ எடுக்க இந்தியர்களுக்கு 500 ரூபாயும், வெளிநாட்டினருக்கு 1,000 ரூபாயும் வசூலிக்கப்படுகிறது.

மானஸ் தேசிய பூங்கா சுற்றுலாவுக்குச் செல்ல விரும்புவர்கள் இந்த சரணாலயத்தை மட்டும் கண்டுகளிக்காமல் இந்தப் பூங்காவின் அருகில் உள்ள பான்ஸ்பரி தேயிலைத் தோட்டம் (Bansbari tea plantation), பூடான் அரசன் அரண்மனை (King of Bhutan palace), போர்னாடி வனவிலங்கு சரணாலயம் (Bornadi wildlife sanctuary), போகமதி – பிக்னிக் ஸ்பாட் (Bogamati – picnic spot) போன்ற இடங்களுக்கும் சென்று ரசிக்கலாம்.

(உலா வருவோம்…)

முந்தைய அத்தியாயம்: இந்திய பாரம்பரிய இடங்கள் 8: காசிரங்கா தேசிய பூங்கா – இயற்கை எழிலும் அரிய விலங்குகளும்!

Source : WWW.PUTHIYATHALAIMURAI.COM

Sign In

Register

Reset Password

Please enter your username or email address, you will receive a link to create a new password via email.