ஐபிஎல் கிரிக்கெட் போட்டியில் இரண்டு புதிய அணிகள் இணைகின்றன. இதில் லக்னோ அணியை சஞ்சீவ் கோயங்காவின் நிறுவனம் 7,090 கோடி ரூபாய்க்கு வாங்க, அகமதாபாத் அணியை 5,166 கோடி ரூபாய்க்கு வாங்கியிருக்கிறது சி.வி.சி கேப்பிடல் பார்ட்னர்ஸ் நிறுவனம்.

கொல்கத்தாவைத் தலைமையிடமாகக் கொண்டு இயங்குகிறது, ஆர்.பி- சஞ்சீவ் கோயங்கா குரூப். RPSG Group என்றும் இது அறியப்படுகிறது. சுமார் 45 ஆயிரம் பேர் பணிபுரியும் இந்த நிறுவனத்தின் சொத்து மதிப்பு சுமார் 47 ஆயிரம் கோடி ரூபாய். நிலக்கரி சுரங்கங்கள், மின் உற்பத்தி நிலையங்கள்
பலவற்றை இந்த நிறுவனம் நடத்திவருகிறது. கொல்கத்தா நகரின் மின் சப்ளையை இவர்களின் நிறுவனம்தான் கவனித்து வருகிறது.

ஐபிஎல் கோப்பை

இதுதவிர ஐ.டி நிறுவனங்களையும் நடத்தி வருகிறது. கேரளாவில் ஆறு டீ எஸ்டேட்கள், ஐந்து ரப்பர் எஸ்டேட்கள் இவர்களுக்குச் சொந்தமாக உள்ளன. பல நகரங்களில் செயல்படும் ஸ்பென்ஸர் சூப்பர் மார்க்கெட் ஸ்டோர்கள் இவர்களுக்குச் சொந்தமானவைதான்.

திரைப்பட இசை உரிமை வாங்குவதும், திரைப்படங்கள் மற்றும் தொலைக்காட்சித் தொடர்கள் தயாரிப்பதுமாக இருக்கும் ‘சரிகமா’ நிறுவனமும் ஆர்.பி- சஞ்சீவ்கோயங்கா குரூப்பின் ஓர் அங்கம்தான். ‘ஓப்பன்’, ‘ஃபார்ச்சூன்’ போன்ற பத்திரிகைகளையும் நடத்திவருகிறது.

விளையாட்டுத் துறையில் முதலீடு செய்வதிலும் சஞ்சீவ் கோயங்காவுக்கு ஆர்வம் உண்டு. இந்தியாவின் புகழ்பெற்ற கால்பந்து கிளப்களில் ஒன்றான கொல்கத்தாவின் மோகன் பகான் கிளப்பின் பெரும்பாலான பங்குகளை கடந்த ஆண்டு சஞ்சீவ் கோயங்கா வாங்கினார். இந்தியாவின் முக்கியமான டேபிள் டென்னிஸ் போட்டியான அல்டிமேட் டேபிள் டென்னிஸ் லீகில் போட்டியிடும் ஆர்.பி.எஸ்.ஜி மேவரிக்ஸ் கொல்கத்தா அணி இவருடையதுதான்.

ஏன்… சென்னை, ராஜஸ்தான் இல்லாத இரண்டு ஆண்டுகள் ஆடிய ரைசிங் புனே சூப்பர் ஜெயன்ட்ஸ் அணி இவர்களுடையதுதான்.

ரைசிங் புனே சூப்பர் ஜெயன்ட்ஸ்

அகமதாபாத் அணியை வாங்கியிருக்கிறது சி.வி.சி கேப்பிடல் பார்ட்னர்ஸ் நிறுவனம் குறித்து ஏற்கெனவே பல சர்ச்சைகள் உண்டு. இது முழுக்க முழுக்க ஒரு முதலீட்டு நிறுவனம். முதலீட்டாளர்களின் பணத்தை வாங்கி, லாபகரமான
தொழில்களில் முதலீடு செய்து அவர்களுக்கு லாபம் பெற்றுத் தருவதே இந்த நிறுவனத்தின் நோக்கம். ஐபிஎல் அணியை சிறந்த லாபம் தரும் ஒரு நிறுவனமாகப் பார்த்தே சி.வி.சி கேப்பிடல் பார்ட்னர்ஸ் ஏலத்தில் எடுத்திருக்கிறது.

ஐரோப்பாவில் இருக்கும் லக்ஸம்பர்க் நாட்டைத் தலைமையிடமாகக் கொண்டு இயங்கும் இந்த நிறுவனத்துக்கு 40 ஆண்டு கால வரலாறு உண்டு. அமெரிக்காவின் புகழ்பெற்ற சிட்டி பேங்க் நிறுவனம், தனது ஐரோப்பிய கிளையாக இதை ஆரம்பித்தது. ஒரு கட்டத்தில் இது சிட்டி பேங்க் நிறுவனத்திடமிருந்து பிரிந்து தனியாக இயங்க ஆரம்பித்தது. சீக்கிரமே, ‘ஐரோப்பாவின் நம்பர் ஒன்
முதலீட்டு நிறுவனம்’ என்று பெயர் வாங்கியது.

இப்போது இந்த நிறுவனத்தின் பிரமாண்டம் மலைக்க வைக்கும். உலகம் முழுக்க 25 இடங்களில் இதன் அலுவலகங்கள் உள்ளன. இந்தியாவில் சி.வி.சி கேப்பிடல் பார்ட்னர்ஸ் அலுவலகம் மும்பையில் இருக்கிறது. அதனால்தான் மும்பைக்கு
அருகே இருக்கும் அகமதாபாத் அணியை வாங்கியிருக்கிறது. இந்த நிறுவனத்தின் சொத்து மதிப்பு ஐந்து லட்சத்து 63 ஆயிரம் கோடி ரூபாய்.

ஐ.டி செக்யூரிட்டி நிறுவனம், விலையுயர்ந்த சுவிஸ் வாட்ச்களைத் தயாரிக்கும் நிறுவனம், ஜவுளி நிறுவனங்கள், மருந்து நிறுவனம் என்று பலவற்றில் முதலீடு செய்திருந்தாலும், லாட்டரி, சூதாட்டம், விளையாட்டு அமைப்புகள் ஆகியவற்றில் முதலீடு செய்வதில் இவர்களுக்கு ஆர்வம் அதிகம். மலேசியாவின் மேக்னம் கார்ப்பரேஷன் லாட்டரி நிறுவனம் இவர்களுடையதுதான்.

பிரிட்டனின் Sky Betting & Gaming நிறுவனம், ஜெர்மனியின் விளையாட்டு சூதாட்ட நிறுவனமான Tipico என்று பலவற்றில் இவர்களின் முதலீடு உள்ளது. ஐபிஎல் தொடர்பாக சூதாட்ட சர்ச்சைகள் பல எழுந்ததுண்டு. ஆனால், சூதாட்ட நிறுவனங்களை வைத்திருக்கும் ஒரு நிறுவனமே ஐபிஎல் அணி ஒன்றை இப்போது வாங்கியுள்ளது.

BCCI – IPL New Teams Auction

சி.வி.சி கேப்பிடல் பார்ட்னர்ஸ் நிறுவனம் இதற்கு முன் விளையாட்டில் செய்த மிகப்பெரிய முதலீடு, புகழ்பெற்ற கார் ரேஸ்களை நடத்தும் ஃபார்முலா ஒன் நிறுவனத்தை வாங்கியது. கிட்டத்தட்ட 12 ஆண்டுகள் ஃபார்முலா ஒன் நிறுவனம்
இவர்களின் கட்டுப்பாட்டில் இருந்தது. விளையாட்டில் குறைந்த முதலீடு செய்து அதிக லாபம் எடுக்க முயற்சி செய்வதாக இவர்கள் மீது அப்போது குற்றச்சாட்டு எழுந்தது. சுமார் 15 ஆயிரத்து 400 கோடி ரூபாய் முதலீடு செய்த சி.வி.சி கேப்பிடல் பார்ட்னர்ஸ், அதை வைத்து ஃபார்முலா ஒன் நிறுவனத்திலிருந்து 36 ஆயிரத்து 200 கோடி ரூபாய் வருமானம் பார்த்தனர். ரேஸ்களை ஒழுங்காக நடத்துவது, அதற்கான கட்டமைப்புகளை ஏற்படுத்துவது போன்றவற்றைச் செய்யாமல், பணத்தில் மட்டுமே குறியாக இருந்ததாக ரேஸில் பங்கேற்கும் அணிகள் புகார் செய்தன. 2017-ம் ஆண்டு ஃபார்முலா ஒன் நிறுவனத்தை சி.வி.சி கேப்பிடல் பார்ட்னர்ஸ் விற்றுவிட்டது.

இப்போது ஐபிஎல் அணியை வாங்கி தனது அடுத்த ஆட்டத்தை ஆரம்பித்திருக்கிறது.

அடுத்த வருட ஐபிஎல்-லில் இந்த இரண்டு அணிகளின் வருகை எத்தகைய மாற்றத்தைக் கொண்டு வரும்? உங்கள் கருத்துகளை கமென்ட்டில் சொல்லுங்கள்.

Sign In

Register

Reset Password

Please enter your username or email address, you will receive a link to create a new password via email.