தென்காசி மாவட்டம் புளியரை ஊராட்சி மன்றத் துணைத்தலைவர் பதவிக்கு நேற்று மறைமுகத் தேர்தல் நடந்தது. தேர்தலில் அதிமுக ஆதரவாளரான சரவணன் என்பவரும் திமுக ஆதரவாளரான குருமூர்த்தி என்பவரும் வேட்பாளர்களாகக் களமிறங்கினர்.

கூட்டம் திரண்டதால் போலீஸ் குவிப்பு

ஊராட்சி மன்றத் தேர்தல் அரசியல் சார்புடன் நடப்பதில்லை என்றபோதிலும் அரசியல் கட்சிகளின் ஆதரவாளர்கள் களமிறங்கியதால் இரு தரப்பிலும் கட்சி சார்ந்து ஆதரவாளர்கள் திரண்டு வந்திருந்தனர். அதனால் அந்தப் பகுதியில் பதற்றமான சூழல் நிலவியதால் போலீஸார் குவிக்கப்பட்டனர்.

புளியரை பஞ்சாயத்து வார்டு தேர்தலில் போட்டியிட்டு வென்றவர்களில் 8 பேர் அ.தி.மு.க-வைச் சேர்ந்த சரவணனுக்கு ஆதரவாகவும் 4 பேர் தி.மு.க-வைச் சேர்ந்த குருமூர்த்திக்கு ஆதரவாகவும் இருந்தார்கள். அதனால் சரவணன் வெற்றி பெறுவது உறுதியானதாக இருந்தது.

பெண் கவுன்சிலருக்கு நேர்ந்த அவலம்

ஆனால், மறைமுக வாக்குப்பதிவு நடந்த புளியரை பஞ்சாயத்து அலுவலகத்துக்குள் அ.தி.மு.க ஆதரவு கவுன்சிலர்களை நுழைய விடாமல் தி.மு.க-வினர் தடுத்து நிறுத்தியதாகப் புகார் எழுந்தது. அதை அ.தி.மு.க-வினர் தட்டிக் கேட்டதால் இரு தரப்புக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டது.

இரு தரப்பினரையும் போலீஸார் சமாதானப்படுத்த முயன்றார்கள். அந்த நேரத்தில் அ.தி.மு.க-வை சேர்ந்த சரவணனுக்கு ஆதரவாக வாக்களிக்க வந்திருந்த பெண் உறுப்பினரின் சேலையை சிலர் பிடித்து இழுத்ததால் பதற்றமும் பரபரப்பும் ஏற்பட்டது.

கூட்டத்தில் சிக்கிய பெண் கவுன்சிலர்

பதற்றம் காரணமாக துணைத் தலைவர் தேர்தலை தற்காலிகமாக நிறுத்தி வைப்பதாக அதிகாரிகள் அறிவித்தனர். தி.மு.க-வினர் திட்டமிட்டு வன்முறையைத் தூண்டிவிட்டு தேர்தலை நிறுத்தியதாகக் குற்றம் சாட்டிய கடையநல்லூர் தொகுதியின் அ.தி.மு.க-வைச் சேர்ந்த எம்.எல்.ஏ-வான கிருஷ்ணமுரளி, தனது ஆதரவாளர்களுடன் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டார்.

இது தொடர்பாக அ.தி.மு.க-வைச் சேர்ந்த கிருஷ்ணமுரளி் எம்.எல்.ஏ கூறுகையில், “தேர்தல் நேரத்திலும் சரி இப்போதும் சரி ஆளுங்கட்சியினர் அராஜகம் செய்கிறார்கள். நான் பொறுமையாக இருந்து பார்த்தேன். ஆனால், ஒரு பெண்ணின் தன்மானத்துக்கு இழுக்கு ஏற்படும் வகையில் தி.மு.க-வினர் சேலையைப் பிடித்து இழுத்ததால் தான் போராட வேண்டிய நிலை ஏற்பட்டது. மானத்தை விடவும் வேறு என்ன வேண்டியிருக்கிறது

சாலை மறியலில் ஈடுபட்ட கிருஷ்ணமுரளி

இங்கு மாவட்ட ஆட்சியர் வர வேண்டும். உடனடியாக தேர்தலை நடத்த வேண்டும். எங்களுக்கு ஆதரவாக ஏழு உறுப்பினர்கள் இருக்கிறார்கள். ஏழு பெருசா? நாலு பெருசா? உடனே துணைத் தலைவர் தேர்தலை நடத்தி முடிக்க வேண்டும். இல்லாவிட்டால் நாங்கள் சாலை மறியலை கைவிட மாட்டோம்” என்றார்.

சாலை மறியல் காரணமாக புளியரை வழியாக கேரளாவுக்குச் செல்லும் சாலை முடங்கியது அதனால், எம்.எல்.ஏ-வும் தென்காசி வடக்கு மாவட்டச் செயலாளருமான கிருஷ்ணமுரளியிடம் போலீஸார் மற்றும் வட்டாட்சியர் பேச்சுவார்த்தை நடத்தியதுடன், துணைத் தலைவருக்கான தேர்தல் முறையாக நடத்தப்படும் என உறுதியளித்தனர்.

சாலை மறியல்

அதைத் தொடர்ந்து மறியலில் ஈடுபட்டவர்கள் கலைந்து சென்றனர். இருப்பினும் மறியல் போராட்டம் காரணமாக சுமார் நான்கு மணி நேரத்துக்கு போக்குவரத்து துண்டிக்கப்பட்டிருந்தது. இந்த பதற்றம் காரணமாக துணைத் தலைவருக்கான மறைமுகத் தேர்தல் ஒத்தி வைக்கப்படுவதாக அறிவிக்கப்பட்டது.

பாதிக்கப்பட்ட கவுன்சிலர் சகாயமேரி காவல் நிலையத்துக்குச் சென்று தன்னிடம் அத்துமீறி செயல்பட்ட தி.மு.க-வைச் சேர்ந்த குருமூர்த்தி உள்ளிட்ட சிலர் மீது புகார் அளித்தார். போலீஸார் அவரது புகாரை வாங்க மறுததாக கூரப்படுகிறது. அ.தி.மு.க-வைச் சேர்ந்த செங்கோட்டை ஒன்றியச் செயலாளர் ஆய்குடி செல்லப்பன் தலைமையிலான அ.தி.மு.க-வினர் போலீஸாருடன் வாக்குவாதம் செய்தார்கள். அதன் பின்னரே புகாரை போலீஸார் ஏற்றுக் கொண்டனராம்.

பாதிக்கப்பட்டவர் அளித்த புகார் மனு

காவல்துறையினரின் கண் முன்பாக நடந்த இந்தச் சம்பவம் தொடர்பாக வழக்குப் பதிவு செய்து குற்றவாளிகளைக் கைது செய்ய வேண்டும் என்று வலியுறுத்தினார்கள். அத்துடன், கவுன்சிலர் சகாயமேரிக்கு கொலை மிரட்டல் இருப்பதால் அவருக்கு பாதுகாப்பு வழங்க வேண்டும் என்றும் போலீஸாரிடம் தெரிவித்தனர். போலீஸார் உரிய நடவடிக்கை எடுப்பதாக உறுதியளித்தனர்.

Sign In

Register

Reset Password

Please enter your username or email address, you will receive a link to create a new password via email.