பயங்கரவாதத்திற்கு நிதியுதவி அளிப்பதை நிறுத்தாத காரணத்தினால், சர்வதேச நிதி நடவடிக்கை அமைப்பின் மோசமான நாடுகள் பட்டியலில் பாகிஸ்தான் தொடர்ந்து நீடிக்கும் என தகவல் வெளியாகியுள்ளது.
பிரான்ஸ் தலைநகர் பாரிஸை தலைமையிடமாக கொண்டு, எஃப்.ஏ.டி.எஃப் என்ற சர்வதேச நிதி நடவடிக்கை கண்காணிப்பு அமைப்பு செயல்பட்டு வருகிறது. பயங்கரவாதத்திற்கு நிதியுதவி, சட்டவிரோத பணபரிமாற்றம் ஆகியவை எந்தெந்த நாடுகளில் அதிகம் நடைபெறுகிறது என்பதை கண்காணித்து, அந்த நிதியுதவிகளை தடுப்பதற்கான கட்டளையை இந்த அமைப்பு பிறப்பிக்கும். அந்த கட்டளையை நிறைவேற்றும் வரை, சம்பந்தப்பட்ட நாடுகளை ‘கிரே பட்டியல்’ என்றழைக்கப்படும் மோசமான பட்டியலில் வைத்திருக்கும். இதனால், அந்நாடுகளுக்கு உலக வங்கி, சர்வதேச நிதியம் போன்ற அமைப்புகளிடம் இருந்து நிதியுதவி கிடைப்பதில் சிக்கல் ஏற்படும்.

அதன்படி கடந்த 2018 ஆம் ஆண்டு முதல் பாகிஸ்தான் கிரே பட்டியலில் இடம் பெற்றுள்ளது. இந்த பட்டியலில் இருந்து நீக்க இந்தியாவால் தேடப்படும் ஜெயஷ் இ முகமது பயங்கரவாத தலைவர் மசூத் அசார், லஷ்கர் இ தொய்பா நிறுவனர் ஹபீஸ் சயீத் ஆகியோருக்கு நிதியுதவி தருவதை பாகிஸ்தான் நிறுத்த வேண்டும் என தெரிவிக்கப்பட்டிருந்தது. மேலும், பயங்கரவாதத்திற்கு எதிரான 30 வகையான நடவடிக்கைகளை எடுக்க வேண்டும் எனவும் பட்டியலிட்டு இருந்தது. அதில் 26 நடவடிக்கைகளை பாகிஸ்தான் நிறைவேற்றாத காரணத்தினால், தொடர்ந்து மோசமான நாடுகளின் பட்டியலிலேயே நீடிக்கும் என தகவல் வெளியாகியுள்ளது.
Source : WWW.PUTHIYATHALAIMURAI.COM