தமிழக சுகாதாரத்துறை அமைச்சராக 2016 முதல் 2021 வரை இருந்த காலத்தில் சி.விஜயபாஸ்கர் வருமானத்திற்கு அதிகமாக 27 கோடி ரூபாய் அளவிற்கு சொத்து சேர்த்துள்ளதாக முதல் தகவல் அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
 
கடந்த அதிமுக ஆட்சியின்போது சுகாதாரத்துறை அமைச்சராக இருந்தவர் சி.விஜயபாஸ்கர். இந்நிலையில் வருமானத்திற்கு அதிகமாக சொத்து சேர்த்த புகாரில் சி.விஜயபாஸ்கர் மீது தமிழக லஞ்ச ஒழிப்புத் துறையினர் வழக்குப்பதிவு செய்துள்ளனர். புதுக்கோட்டை மாவட்டம் இலுப்பூரில் உள்ள விஜயபாஸ்கரின் வீடு உள்ளிட்ட 29 இடங்களில் லஞ்ச ஒழிப்புத்துறை போலீசார் சோதனை நடத்தி வருகின்றனர். மேலும் விஜயபாஸ்கர் தொடர்புடைய சென்னை, காஞ்சிபுரம், செங்கல்பட்டு, கோவை, திருச்சி, புதுக்கோட்டை உள்ளிட்ட 43 இடங்களில் ரெய்டு நடந்து வருகிறது.
 
முதல் தகவல் அறிக்கையில், ஏ-1 ஆக குற்றம்சாட்டப்பட்டவர் முன்னாள் அமைச்சர் சி.விஜயபாஸ்கர். ஏ-2வாக இணைக்கப்பட்டிருப்பவர் அவரது மனைவி ரம்யா. இவர்கள் மீது ஊழல் தடுப்புச் சட்டம் 1988, இந்திய தண்டனைச் சட்டம், 2018ம் ஆண்டு திருத்தப்பட்ட ஊழல் தடுப்பு சட்டம் 1988 ஆகிய 3 பிரிவுகளின் கீழ் வழக்கு பதியப்பட்டுள்ளதாக முதல் தகவல் அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.
 
கடந்த 2013-ம் ஆண்டு முதல் 2021 ஏப்ரல் மாதம் வரை வருமானத்திற்கு அதிகமாக சொத்து சேர்த்தாக வைக்கப்பட்ட புகாரில் அடிப்படையில் இந்த வழக்குகள் பதியப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. சி.விஜயபாஸ்கரின் மனைவி, மகள்கள் மற்றும் வணிக நிறுவனங்களின் பெயரில் சொத்துக்கள் சேர்க்கப்பட்டுள்ளதாகவும், இல்லத்தரசியாக இருக்கும் சி.விஜயபாஸ்கரின் மனைவி ரம்யா, இரு வணிக நிறுவனங்களின் உரிமையாளராக காட்டப்பட்டிருப்பதாகவும் அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.
 
image
தமிழக சுகாதாரத்துறை அமைச்சராக 01.04.2016 முதல் 31.03.2021 வரை இருந்த காலத்தில் சி.விஜயபாஸ்கர் பெயரிலும், அவரது மனைவி ரம்யாவின் பெயரிலும் வருமானத்திற்கு அதிகமாக 27 கோடியே 22 லட்சத்து 56 ஆயிரத்து 736 ரூபாய் சொத்து சேர்க்கப்பட்டுள்ளது. 6.5 கோடி ரூபாய்க்கு (7 டிப்பர் லாரிகள், 10 டிரான்ஸிட் மிக்சர்கள், ஒரு ஜேசிபி) அசையும் சொத்துக்களை குவித்ததாகவும், கணக்கில் வராத வருமானம் மூலம் 53 லட்சம் ரூபாய்க்கு பிஎம்டபிள்யு கார் வாங்கியதாகவும், சென்னையில் ரூ.14 கோடி மதிப்பில் வீடு வாங்கியிருப்பதாகவும், பல்வேறு நிறுவனங்களில் 28 கோடி ரூபாய் அளவிற்கு முதலீடு செய்திருப்பதாகவும், 40 லட்சம் மதிப்பில் 85 சவரன் நகையை கணக்கில் வராமல் குவித்ததாகவும் எப்ஐஆரில் தெரிவிக்கப்பட்டுள்ளது. அதேபோல் 3.99 கோடி மதிப்பிலான விவசாய நிலங்களை கணக்கில் வராத வகையில் குவித்து இருக்கிறார்.
 
image
அன்னை தெரசா கல்வி மற்றும் தொண்டு அறக்கட்டளையை தொடங்கி முறைகேடாக பணம் வாங்கியதாகவும், அறக்கட்டளை மூலம் வரி ஏய்ப்பு செய்ததாகவும் இந்த முதல் தகவல் அறிக்கையில் கூறப்பட்டுள்ளது. இதையடுத்து இவருக்கு சொந்தமான 14 கல்வி நிறுவனங்களிலும் சோதனை நடத்தப்பட்டு வருகிறது. 2016 ஆம் ஆண்டு தேர்தலின் போது ரூ.6 கோடியே 41 லட்சம் மதிப்பில் சொத்து இருப்பதாக விஜயபாஸ்கர் கணக்கு காண்பித்துள்ளார். செலவு கணக்கு செய்தாக ரூ.34 கோடி கணக்கு காண்பித்துள்ளார். ஆனால் 2021 ஆம் ஆண்டு தேர்தலின் போது 58 கோடியே 64 லட்சத்து 25 ஆயிரத்து 887 ரூபாய் சொத்து இருப்பதாக கணக்கு காண்பித்துள்ளார். மீதமுள்ள 27 கோடி ரூபாய் வரையிலான சொத்து எப்படி வாங்கப்பட்டது என்ற கணக்கு இல்லாத காரணத்தால் இந்த ரெய்டு நடப்பதாக முதல் தகவல் அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.
 
இதன்மூலமாக, சொத்துக் குவிப்புக்காக வழக்கை சந்திக்கும் 4வது முன்னாள் அமைச்சராகிறார் இவர். முன்னதாக எம்.ஆர்.விஜயபாஸ்கர், எஸ்.பி.வேலுமணி, கே.சி.வீரமணி ஆகிய முன்னாள் அமைச்சர்கள் மீது வழக்கு பாய்ந்தது. தற்போது முன்னாள் அமைச்சர் சி.விஜயபாஸ்கர் மீதும் வழக்குப் பாய்ந்துள்ளது.

Source : WWW.PUTHIYATHALAIMURAI.COM

Sign In

Register

Reset Password

Please enter your username or email address, you will receive a link to create a new password via email.