நெல்லை மாவட்டத்தில் பணிபுரியும் காவலர்கள் உயரதிகாரிகளின் டார்ச்சரால் மிகுந்த மன உளைச்சலுக்கு உள்ளாகும் சம்பவங்கள் அவ்வப்போது நடக்கின்றன. நெல்லை மாநகர காவல்துறையில் சமீபத்தில் அத்தகைய சம்பவம் நடந்தது. பாளையங்கோட்டை காவல் நிலையத்தில் உதவி ஆய்வாளராக பணிபுரியும் அருணாசலம் என்பவர் ஆடியோ வெளியிட்டு அதிர்ச்சியூட்டினார்.

Also Read: `மகளுடன் 10 நிமிடம் விளையாடக் கூட நேரமில்லை’ வேதனையில் உருகும் எஸ்.ஐ-யின் ஆடியோ! -பின்னணி என்ன?

அவர் வெளியிட்ட ஆடியோவில், ’நேர்மையாகப் பணியாற்றும் எனக்கு அதிகாரிகள் கொடுக்கும் டார்ச்சர் மற்றும் பணிச்சுமை காரணமாக என் இதயத் துடிப்பு நின்று விடும் நிலை உள்ளது’ என்று உருக்கமாகப் பேசியிருந்தார். அந்த சமயத்தில் நெல்லைக்கு வந்திருந்த காவல்துறை டி.ஜி.பி-யான சைலேந்திரபாபு அவரை அழைத்து ஆறுதலாகப் பேசி அனுப்பினார்.

அதே போன்ற சம்பவம் மீண்டும் நெல்லை மாவட்டத்தில் நடந்துள்ளது. ஆயுதப்படைப் பிரிவில் பணியாற்றும் காவலர் ஒருவர் பேசியுள்ள ஆடியோவில், “கடந்த மாதம் எனது மனைவிக்கு உடல்நிலை மிகவும் மோசமானதாக வீட்டில் போன் வந்தது. என் மனைவி 7 மாதம் கர்ப்பிணியாக இருந்தார். அதிகாரியிடம் நான்கு நாள் லீவு கேட்டு வீட்டிற்குச் சென்றேன். நான் போகுறதுக்குள் டாக்டர்கள், குழந்தையை அறுவை சிகிச்சை செய்து எடுத்து விட்டார்கள். ஆனால் ஒரே நாளில் எனது குழந்தை இறந்து விட்டது.

மன அழுத்தம்

பின்னர் விடுமுறை கேட்டபோது, முதல் கட்ட தேர்தலுக்கு பிறகு தான் அனுப்ப முடியும் என்று அதிகாரி கூறிவிட்டார். ஆனால் இரண்டாம் கட்டத் தேர்தல் முடிந்த பிறகும் எனக்கு விடுமுறை தரவில்லை. குழந்தை இறந்த ஏழாம் நாள் காரியத்திற்குச் செல்ல வேண்டும் என்று விடுமுறை கேட்டதற்கும் தரவில்லை. பிறகு அலுவலகத்தில் இருந்து அழைத்து இரண்டு நாள் லீவு தந்திருப்பதாகச் சொன்னார்கள். இது பற்றி பேச அதிகாரியைத் தொடர்பு கொண்டபோது அவர் செல்போனை எடுக்கவே இல்லை.

பணி ஒதுக்கீடு செய்யும்போது என்னை மட்டும் பழிவாங்கும் நோக்குடன் பணி ஒதுக்குகிறார்கள். கடந்த ஒரு மாதமாக காரையாறு அணைப் பகுதியில் பணியில் இருக்கிறேன். அங்கு செல்போன் சிக்னல் எதுவும் கிடைக்காததால் மனைவிடம் கூட பேசமுடிவதில்லை. எனக்கு என்ன செய்வதென்றே தெரியவில்லை ரொம்ப மன உளைச்சலாக இருக்கிறது. எனக்கு பணியிட மாறுதல் கிடைத்தும் இங்கிருந்து ரிலீவ் செய்யாமல் இருக்கிறார்கள்.

மருத்துவரின் சீட்டு

நான் பக்கத்தில் இல்லாததால் என் குழந்தையை இழந்து விட்டேன். மருந்து குடித்து தற்கொலை செய்யலாம் என்ற முடிவுக்கு வந்து விட்டேன். இதற்கு முழுக்காரணம் இன்ஸ்பெக்டர் தான். என் குடும்பத்துக்கு அவர் தான் பதில் சொல்ல வேண்டும்” என்று வேதனையுடன் ஆடியோவில் பேசியுள்ளார் அவர் பேசிய ஆடியோ தற்போது சமூக வலைதளங்களில் வேகமாக பரவி வருகிறது

இது குறித்து ஆயுதப்படை அதிகாரியிடம் கேட்டதற்கு, “அந்த காவலர் ஏதோ மன உளைச்சலில் இது போன்று ஆடியோ பதிவிட்டு விட்டார். அவரை நேரில் அழைத்துப் பேசி அவரது மனக்குறையைக் கேட்டிருக்கிறோம். அவருக்கு இடமாறுதல் கிடைத்திருக்கிறது. அதனால் விரைவில் அவர் விரும்பும் இடத்துக்குச் செல்வார்” என்றார்.

காவல்துறையில் பணிச்சுமையைக் குறைக்க காவலர்களுக்கு கட்டாய விடுமுறை உள்பட பல்வேறு சலுகைகளை அரசு அறிவித்துள்ளது. ஆனாலும் கூட தொடர்ந்து காவலர்களுக்கு பல்வேறு வகைகளில் நெருக்கடி மற்றும் மன உளைச்சல் ஏற்படுவது வாடிக்கையாக இருப்பதால் இதைச் சரிசெய்ய அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்கிறார்கள், சமூக ஆர்வலர்கள்.

Sign In

Register

Reset Password

Please enter your username or email address, you will receive a link to create a new password via email.