கொல்கத்தா நைட் ரைடர்ஸ் மற்றும் டெல்லி அணிகளுக்கிடையேயான இரண்டாவது தகுதிச்சுற்று போட்டி நடந்து முடிந்திருக்கிறது. கடைசி ஓவர் வரை பரபரப்பாக சென்ற போட்டியை கொல்கத்தா அணி 3 விக்கெட் வித்தியாசத்தில் வென்று அசத்தியுள்ளது. இதன் மூலம் சென்னை அணிக்கெதிரான இறுதிப்போட்டியில் ஆடவும் தகுதிப்பெற்றுள்ளது. சில எண்களின் வழியே இந்த போட்டியை அணுகினால் கொல்கத்தா அணிக்கும் டெல்லி அணிக்கும் இடையேயான வித்தியாசத்தை எளிதில் உணர முடியும்.

முதலில் பேட் செய்திருந்த டெல்லி அணி தங்கள் இன்னிங்ஸில் 57 சிங்கிள்களையும் 6 டபுள்ஸ்களையும் ஓடி எடுத்திருந்தனர். சேஸ் செய்த கொல்கத்தா அணி தங்களது இன்னிங்ஸில் 53 சிங்கிள்களையும் 7 டபுள்ஸ்களையும் ஒரே ஒரு முறை மூன்று ரன்களையும் ஓடி எடுத்திருந்தனர்.

மொத்தமாக டெல்லி அணி 69 ரன்களையும் கொல்கத்தா அணி 71 ரன்களையும் ஓடியே எடுத்திருந்தனர். இரண்டு அணிகளுக்கும் பெரிய வித்தியாசம் எதுவும் இல்லை.

அடுத்து டாட் பால்களின் எண்ணிக்கைக்கு வருவோம். டெல்லி அணி 46 பந்துகளில் ரன்னே எடுக்காமல் டாட் ஆடியிருந்தது. கொல்கத்தா அணி 47 பந்துகளில் ரன்னே எடுக்கவில்லை. இதிலும் பெரிய வித்தியாசம் எதுவுமில்லை.

அடுத்ததாக டெல்லி அணி தங்களது இன்னிங்ஸில் 6 பவுண்டரிகளையும் 6 சிக்சர்களையும் அடித்திருந்தது. கொல்கத்தா அணியும் தங்களது இன்னிங்ஸில் 6 பவுண்டரிகளையும் 6 சிக்சர்களையுமே அடித்திருந்தது

இந்த எண் விளையாட்டில் எங்கேயுமே டெல்லி கேபிட்டல்ஸுக்கும் கொல்கத்தா நைட் ரைடர்ஸுக்கும் பெரிய வித்தியாசம் எதுவுமே இல்லை. எந்த எண்களை எடுத்து பார்த்தாலும் இரண்டு அணிகளும் ஏறக்குறைய சமநிலையிலேயே இருக்கின்றனர்.

இன்னும் கொஞ்சம் இறங்கி பார்த்தால் கொல்கத்தா அணி 7 விக்கெட்டுகளை இழந்திருந்தது. ஆனால், டெல்லி 5 விக்கெட்டுகளை மட்டுமே இழந்திருந்தது. கொல்கத்தா எந்த இடத்திலும் டெல்லியை பெரிதாக முந்தியிருக்கவில்லை. ஆனாலும் போட்டியை வென்றிருக்கிறது. காரணம் என்ன?

மேலோட்டமாக இப்படி எண்களை வைத்து பார்த்தால் இரண்டு அணிகளும் ஒரே மாதிரியாக பர்ஃபார்ம் செய்திருப்பதை போன்றே தெரியும். ஆனால், இன்னும் கொஞ்சம் ஆழமாக இரண்டு அணிகளும் எப்படியான அணுகுமுறையை கையாண்டனர் என்பதை பார்க்கும்போது இரண்டு அணிகளுக்குமான வித்தியாசம் புலப்படும்.

டெல்லி கேபிட்டல்ஸ் அணியின் பேட்டிங்கை எடுத்துக் கொள்வோம். பேட்டிங்கில் பார்ட்னர்ஷிப் என்பது ரொம்பவே முக்கியம்.

தவான் – ஸ்டாய்னிஸ்

டெல்லி அணியின் அதிகப்பட்ச பார்ட்னர்ஷிப்பே தவானும் ஸ்டாய்னிஸும் கூட்டணி போட்டு எடுத்த 39 ரன்கள்தான். ஒரு ஜோடி கூட 50 ரன்கள் பார்ட்னர்ஷிப்பை எடுக்கவே இல்லை.

அதேநேரத்தில், கொல்கத்தா அணியை எடுத்துப்பார்த்தால் அங்கே ஓப்பனிங் கூட்டணியான ஷுப்மன் கில் – வெங்கடேஷ் ஐயர் ஜோடியே முதல் விக்கெட்டிற்கு 96 ரன்களை சேர்த்திருந்தது. இந்த 96 ரன்கள் எப்படி வந்தது என்பதை அலசுவதும் முக்கியமானதே.

கொல்கத்தா அணி கடைசியாக ஆடிய 3 போட்டிகளும் ஷார்ஜாவில் ஆடியதே. தொடர்ச்சியாக இதே பிட்ச்சில் ஆடுவதால் இதன் மந்தத் தன்மைக்கேற்றவாறு கொல்கத்தா பேட்ஸ்மேன்கள் எளிதில் தங்களை தகவமைத்துக் கொண்டனர். இங்கே அதிரடியாக ஆட நினைப்பது வேலைக்காகாது. அதேநேரத்தில் ரொம்பவே தற்காப்பாக ஆடினாலும் பிரச்னையாகிவிடும் என்கிற நிதர்சனமும் கொல்கத்தாவுக்குப் புரிந்திருந்தது. அதற்கேற்றவாறு பேட்டிங்கை திட்டமிட்டு கொள்கின்றனர். நேற்றைய ஆட்டத்தை பொறுத்தவரைக்கும் ஷுப்மன் கில் வெங்கடேஷ் ஐயருக்கு செகண்ட் ஃபிடில் ஆட வேண்டும். அதாவது ஒரு எண்ட்டில் நின்று கொண்டு எந்த ரிஸ்க்கும் எடுக்காமல் விக்கெட்டை காத்து ஸ்ட்ரைக்கை மட்டும் ரொட்டேட் செய்து வெங்கடேஷ் ஐயரிடம் கொடுக்க வேண்டும். வெங்கடேஷ் ஐயர் ரன்ரேட் கீழே விழாதவாறு கொஞ்சம் ரிஸ்க் எடுத்து பவுண்டரிக்கு முயற்சி செய்து ஆட வேண்டும். இந்த விஷயத்தில் ஷுப்மன் கில் வெங்கடேஷ் ஐயர் இருவருமே 100% தெளிவாக இருந்தனர்.

வெங்கடேஷ் ஐயர் – கில்

ரன்ரேட்டை உயர்த்திய வெங்கடேஷ் ஐயரை விட 16 ஓவர்களுக்கு க்ரீஸில் நின்று விக்கெட்டை காத்த ஷுப்மன் கில்லின் பங்களிப்பு அதிகம் பாராட்டப்பட வேண்டும்.

இன்னிங்ஸின் முதல் பந்தையே கில் பவுண்டரியோடு தொடங்கியிருந்தார். ஆனால், அதன்பிறகு பவுண்டரிக்கோ சிக்சருக்கோ முயற்சிக்கவே இல்லை. தனக்கு கொடுக்கப்பட்ட ரோலை முழுமையாக உணர்ந்திருந்தார். அணியின் ஸ்கோர் 96 ஆக இருந்த போது வெங்கடேஷ் ஐயர் 55 ரன்களில் அவுட் ஆனார். அவரது ஸ்ட்ரைக் ரேட் 134.15. வெங்கடேஷ் ஐயர் அவுட் ஆன பிறகுதான் ஷுப்மன் கில் பேட்டை வீசி ஒரு சிக்சர் அடித்தார். 46 ரன்களை எடுத்து நோர்க்கியாவின் ஓவரில் அவுட் ஆகியிருநந்தார். ஸ்ட்ரைக் ரேட் 100.

வெங்கடேஷ் ஐயர்

கொல்கத்தா கடைசிக்கட்டத்தில் அதிக விக்கெட்டுகளை இழந்த போதும் போட்டியை வெல்ல காரணமாக அமைந்தது கில்லும் வெங்கடேஷும் போட்டுக் கொடுத்த அந்த வலுவான அடித்தளமே!

இப்போது டெல்லி கேபிட்டல்ஸுக்கு வருவோம். அங்கேயும் கொல்கத்தா மாதரியே சரியான திட்டமிடல் இருந்தது. ஆனால், அது சரியாக செயல்படுத்தப்படவில்லை. ப்ரித்வி ஷா, வெங்கடேஷ் ஐயர் ஏற்றிருந்த அட்டாக்கிங் ரோலையும் தவான், ஷுப்மன் கில் ஏற்றிருந்த சப்போர்ட்டிங் ரோலையும் ஏற்றிருக்க வேண்டும். முதல் 4 ஓவர்களை பார்க்கும் போது டெல்லியும் இதே திட்டமிடலுடன் தான் இறங்கியிருப்பதை போல தோன்றியது. ஆனால், வருண் சக்கரவர்த்தி வீசிய 5-வது ஓவரில் ப்ரித்வி ஷா lbw ஆகி வெளியேறினார். நம்பர் 3-ல் எப்போதும் ஷ்ரேயாஸ் ஐயரே வந்து கொண்டிருந்தார். ஆனால், அவரது ஸ்ட்ரைக் ரேட் 110 – 120 மட்டுமே இருக்கும்.

கொல்கத்தா அணியின் பௌலர்கள் 5 விக்கெட்டை மட்டுமே எடுத்திருந்தனர். ஆனால், டெல்லி பௌலர்கள் 7 விக்கெட்டுகளை எடுத்திருந்தனர். சரிதான், ஆனால் அந்த விக்கெட்டுகள் எந்த சமயத்தில் வந்தன என்பதை உற்று நோக்க வேண்டும். கொல்கத்தா சீரான இடைவெளியில் அதாவது பவர்ப்ளே, மிடில் ஓவர், டெத் என மூன்றிலுமே விக்கெட் வீழ்த்தியிருக்கிறார்கள். குறிப்பாக,

வருண் சக்கரவர்த்தி

வருண் சக்கரவர்த்தி ப்ரித்வி ஷா, தவான் என இரண்டு முக்கியமான விக்கெட்டுகளை வீழ்த்தியிருந்தார். இதன்மூலம் எங்கேயுமே ஒரு பெரிய பார்ட்னர்ஷிப் என்பது உருவாகாமல் பார்த்துக் கொண்டனர்.

டெல்லி கேப்பிட்டல்ஸ்

டெல்லி கேபிட்டல்ஸின் பௌலர்கள் கொல்கத்தா பௌலர்களை விட அதிக விக்கெட்டுகளை வீழ்த்தினார்கள். ஆனால், அவை சீரான இடைவெளியில் வந்திருக்கவில்லை. 7 இல் 6 விக்கெட்டுகள் கடைசி 5 ஓவரில் மட்டுமே வந்திருக்கிறது. ஆனால், முதல் 15 ஓவர்களிலேயே வெங்கடேஷ் ஐயர் – ஷுப்மன் கில் கூட்டணி 96 ரன்களையெடுத்து மேட்ச்சை முடித்துவிட்டது. டெல்லி பௌலர்கள் டெத் ஓவர்களில் காட்டிய தீரத்தை தொடக்கத்திலிருந்தே வெளிப்படுத்தியிருக்க வேண்டும். பௌலர்களை மட்டும் குறை சொல்ல முடியாது. கேட்ச் டிராப்கள், மிஸ் ஃபீல்ட்கள் என ஃபீல்டர்களும் கடுமையாக சொதப்பியிருந்தனர். கொல்கத்தா அணியின் மொக்கையான மிடில் ஆர்டரின் தொடர்ச்சியான சொதப்பலால் மட்டுமே போட்டி கடைசி வரை சென்று பரபரப்பாகியிருந்தது.

அசாத்தியமான வெற்றிகளை தொடர்ச்சியாக பெற்று இறுதிப்போட்டிக்குள் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் நுழைந்திருக்கிறது. சென்னை சூப்பர் கிங்ஸை போன்றே கொல்கத்தா நைட் ரைடர்ஸுமே கோப்பையை வெல்வதையே தங்களின் உண்மையான கம்பேக்காக நினைக்கும் என்பதால் இறுதிப்போட்டி நிச்சயமாக பரபரப்பாக இருக்கும் என எதிர்பார்க்கலாம்.

Sign In

Register

Reset Password

Please enter your username or email address, you will receive a link to create a new password via email.