இந்திய முன்னாள் பிரதமரும், காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர்களுள் ஒருவருமான 89 வயதான மன்மோகன் சிங், உடல்நல குறைவு காரணமாக டெல்லி எய்ம்ஸ் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். நரசிம்மராவ் பிரதமராக இருந்த போது , அவரின் அமைச்சரவையில் நிதி அமைச்சராகப் பதவி வகித்த மன்மோகன் சிங் நாட்டின் பொருளாதாரத்தை மேம்படுத்த ‘தாராளமயமாக்கல்’ கொள்கைகளை அறிமுகப்படுத்தி பொருளாதார சீர்திருத்திற்கு வித்திட்டார். அரசியலின் பால் பெரியளவில் ஈர்ப்பு இல்லாதவராக இருந்த மன்மோகன் சிங், 2004-ல் மத்தியில் காங்கிரஸ் ஆட்சியைப் பிடித்ததும் திடீர் பிரதமரானார். ஆனால், அதற்குப் பின்னர் தொடர்ந்து 10 ஆண்டுகள், மன்மோகன் தன் பெயரை வரலாற்றின் பக்கங்களில் அழுத்தமாகப் பதிவு செய்தார். அதற்குப் பின்னர், 2014-ல் பாஜக மத்தியில் ஆட்சியை பிடித்தது என்றாலும், இதுவரையிலும் பொருளாதார ரீதியாக மத்திய அரசுக்குத் தொடர்ந்து தனது ஆதரவையும், ஆலோசனைகளையும் வழங்கி வருகிறார். 2019-ம் ஆண்டு முதல் மாநிலங்களவை உறுப்பினராகவும் அவர் பதவி வகித்து வருகிறார்.

மோடி – மன்மோகன் சிங்

முன்னதாக, மன்மோகன் சிங் கடந்தாண்டு ஏப்ரல் மாதம் கொரோனா நோய்த்தொற்று பாதிக்கப்பட்டு, டெல்லி எய்ம்ஸ் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வீடு திரும்பினார். 2009-ல் ஏற்கெனவே, அவருக்கு இதய அறுவைசிகிச்சை மேற்கொள்ளப்பட்டிருந்த நிலையில், தற்போது மீண்டும் உடல்நலக் குறைவு காரணமாக டெல்லி எய்ம்ஸ் மருத்துவமனையின் இதயவியல் துறையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். நேற்று முன்தினம் முதலே மன்மோகன் சிங்கிற்கு கடுமையான காய்ச்சல் இருந்து வந்ததாகவும், நேற்றைய தினம் திடீர் மூச்சுத்திணறல் மற்றும் நெஞ்செரிச்சல் ஏற்பட்டதால் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாகக் கூறப்படுகிறது.

சிகிச்சை பெற்று வரும் அவரின் உடல்நிலை குறித்து டெல்லி எய்ம்ஸ் மருத்துவமனை நிர்வாகம் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில், “காய்ச்சல் காரணமாக அவர் சிகிச்சைக்கு அனுமதிக்கப்பட்டிருக்கிறார். தற்போது அவரின் உடல்நிலை சீராக இருக்கிறது. தொடர்ந்து, மருத்துவர்கள் அவரை கண்காணித்து வருகின்றனர்” என்று குறிப்பிட்டிருக்கிறது.

மன்மோகன் சிங் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதைத் தொடர்ந்து, அரசியல் தலைவர்கள் பலரும் அவர் விரைவில் குணமடைந்து வீடு திரும்ப வேண்டும் அறிக்கை வெளியிட்டு வருகின்றனர். இது தொடர்பாகத் தனது ட்விட்டர் பக்கத்தில் மத்திய அமைச்சர் ஹர்தீப் சிங் பூரி, “மன்மோகன் சிங் விரைவில் குணமடைந்து வீடு திரும்ப வேண்டும் என்று இறைவனைப் பிராத்தித்துக் கொள்கிறேன்” என்று பதிவிட்டுள்ளார்.

Sign In

Register

Reset Password

Please enter your username or email address, you will receive a link to create a new password via email.