இன்று உலக ஆர்த்திரிடிஸ் விழிப்புணர்வு தினம். கடந்த 1996 முதல் ஒவ்வொரு ஆண்டும் இத்தினம் அனுசரிக்கப்பட்டு வருகிறது. ஆர்த்திரிடிஸ் காரணமாக ஏற்படும் மூட்டு வலி குறித்தும், பிற பாதிப்புகள் குறித்தும், மேலும் அவற்றால் உடலின் தசைகளில் ஏற்படும் சிக்கல்கள் குறித்தும் விழிப்புணர்வு ஏற்படுத்தும் நோக்கத்தில் இந்த தினம் அமைக்கப்பட்டது.

மாறிவிட்ட வாழ்க்கைச்சூழலில், 20 – 25 வயதிலேயே பலருக்கும் மூட்டு வலி ஏற்பட்டுவிடுகிறது. முன்பெல்லாம் எலும்புத் தேய்மானத்தின் காரணமாக முதியோருக்கு மட்டுமே தொந்தரவு கொடுத்த வந்த மூட்டு வலிப்பிரச்னை, இப்போது நடுத்தர வயதினர், இளவயதினருக்கும் ஏற்படுகிறது. மூட்டு வலி என்பது, ஆர்த்திரிடிஸின் மிகமுக்கியமான அறிகுறி.

image

வாழ்க்கைமுறை மாற்றம், உணவு, உடல் பருமன், வீட்டிலிருந்தபடியே வேலை, விதவிதமான பொசிஷனில் மொபைல் – லேப்டாப் உபயோகிப்பது என இதற்கான காரணங்கள் மட்டும் ஒருவருக்கொருவர் வேறுபடுகின்றன. ஆக, இனியும் மூட்டு வலிப்பிரச்னையை வயது காரணியாக பார்க்கமுடியாது. மாறாக இதை உடலுழைப்பு மற்றும் உடலமைப்பு தொடர்பான சிக்கலாக மட்டுமே காணமுடியும். அந்தவகையில் மிக அதிகமான உடல் உழைப்பு, மிகக் குறைந்த உடல் உழைப்பு இருக்கும் எந்த வயதினரும் இந்த மூட்டு வலியைச் சந்திக்க நேரலாம் என்கின்றனர் மருத்துவர்கள்.

மருத்துவர் அர்ஷத் அகில் மூட்டு வலி வகைகள் குறித்தும், அதன் தாக்கம் நம்மிடம் பகிர்ந்துக்கொண்டார்.

“ஆர்த்திரிடிஸ் ஏற்படுத்தும் மூட்டு வலியில் மூன்று முக்கியமான வகைகள் உள்ளன. அவை,

* ஆஸ்டியோ ஆர்த்திரிடிஸ் (Osteoarthritis) – இது வயது முதிர்வால் ஏற்படும் பிரச்னை. அநேகமாக 45 வயதுக்குப் பின் எப்போது வேண்டுமானாலும் இதன் தாக்கம் அதிகமாக தெரியலாம். உடல் பருமன் இருப்பவர்களுக்கு இதற்கான வாய்ப்பு மிக அதிகம். ஒருவரின் உடல் எடை (கிலோ அளவில்) என்பது, அவரின் உயரத்திலிருந்து (செ.மீ. அளவில்) 100 குறைவாக இருக்க வேண்டும். அப்படி இல்லையென்றால், அந்நபர்கள் எடையை குறைப்பது அவசியம். இந்த வகை மூட்டு வலி இருப்பவர்களுக்கு கால் மூட்டு, கை மூட்டு, இடுப்பு போன்ற இடங்களில் வலி ஏற்படலாம். உடன், உட்கார்ந்து எழுவதில் சிக்கல் – எடை அதிகமுள்ள பொருளை தூக்குதல் – வேகமாக நடப்பதில் சிக்கல் போன்றவையும் இருக்கலாம்.

image

* ருமட்டாய்ட் ஆர்த்திரிடிஸ் (Rheumatoid arthritis) – இதுநாள் வரையிலும், இந்த பிரச்னை எதனால் ஏற்படுகிறது என்பது துல்லியமாக கண்டறியப்படவில்லை. பெரும்பாலும் மரபணு காரணமாக ஏற்படும் பிரச்னை இது. சில நேரங்களில் மரபணு இல்லாமல், வேறு ஏதேனும் காரணமாக கூட இருக்கலாம். மருத்துவரை கண்டிப்பாக அணுகி மருந்துகள் எடுத்து சிகிச்சை பெற வேண்டிய அவசியம் இதற்கு உண்டு. இந்த பாதிப்புக்கும் வயதுக்கும் தொடர்பு கிடையாது

* கௌட் ஆர்த்திரிடிஸ் (Gout arthritis) – உடலில் யூரிக் அமிலம் குறைவதால் இந்த குறைபாடு ஏற்படும். இதற்கும் மருத்துவ வழிகாட்டுதல் அவசியம். இதில் மருந்து மாத்திரைகளைவிடவும் உணவியல் சார்ந்த மாற்றங்களுக்கு மருத்துவர்கள் முக்கியத்துவம் கொடுப்பார்கள்.

இவை மூன்றையும் தாண்டி, சில இளவயதுகாரர்கள், ‘என்னால் உட்கார்ந்தால் எழ முடியவில்லை, வயதாகிடுச்சோ’ என புலம்பும் வகையிலான மூட்டு வலி ஒன்றுண்டு. ஆனால் அது இங்கே வகைப்படுத்தமுடியாது. ஏனெனில் அது அந்த சூழ்நிலையில் அந்நபரின் வாழ்வியல் மாற்றத்தால் ஏற்பட்டிருக்கும் ஒரு பிரச்னை. வாழ்வியலை சீரமைத்துக்கொண்டு, ஆரோக்கியமான உணவுகளை உண்டு, உரிய உடற்பயிற்சி செய்தால் தன்னால் அது சரியாகிவிடும். மற்றபடி அது ஆபத்து என சொல்லும் வகையிலானதில்லை. உரிய முறையில் அதை கவனிக்காமலும் வாழ்வியலை சரியாக அமைத்துக் கொள்ளாமலும் இருந்தால்தான் அது தொடர்ந்துக்கொண்டே போகும். 

இதையும் படிங்க… வொர்க் ஃப்ரம் ஹோம் செய்பவர்களுக்கு சில எளிய பயிற்சிகள்

இருப்பவர்கள் நேரம் கிடைக்கும்போது நீச்சல், சைக்கிளிங், நடைப்பயிற்சி செய்து வரலாம். உடல் எடையைக் குறைக்க உடற்பயிற்சி 20 சதவிகிதம்தான் உதவும். மீதமுள்ள 80 சதவிகிதம் நாம் எடுத்துக்கொள்ளும் உணவு முறைதான். பொதுவாக, நாற்பது வயதுக்கு மேல் உடலில் உற்பத்தியாகும் ஆன்டிஆக்ஸிடன்ட் குறைந்துவிடும். எனவே கீரைகள், பழங்கள், நட்ஸ் ஆகியவற்றை எடுத்துக்கொள்வது நல்லது.

image

எலும்பு பிரச்னைகளை பொறுத்தவரை, உணவியல் மாற்றங்கள் மிகவும் நல்லது. அந்தவகையில், நார்ச்சத்துள்ள உணவுகளை அதிகமாகச் சாப்பிடவேண்டும். கொழுப்புச் சத்து நிறைந்த உணவுகள், கார்போஹைட்ரேட் உணவுகளைக் கட்டாயம் தவிர்க்கவேண்டும். பழச்சாறுகளுக்கு பதில், பழங்களாக எடுத்துக்கொள்வதுதான் நல்லது. போலவே கால்சியம், வைட்டமின் டி உள்ள உணவு வகைகளை அதிகம் உண்ணவேண்டும். பால் சார்ந்த உணவுகள், கீரைகள், கேழ்வரகு, மீன், இறால், முட்டை ஆகியவற்றில் கால்சியம் நிறைந்துள்ளன.

ஒருவேளை எலும்பு அல்லது மூட்டு வலி ஏற்பட்டால் அதை தொடர்ந்து உதாசீனப்படுத்தாமல், மருத்துவரை அனுகி ஆலோசனை பெறுவது அவசியம். இந்த ஆண்டு உலக மூட்டுவலி விழிப்புணர்வு தினத்தின் மையக்கரு, ‘தாமதிக்க வேண்டாம், இன்றே இணையுங்கள்: செயல்படுவதற்கான நேரமிது’ என்பதுதான். ஆகவே தாமதிக்காது, எதுவாகினும் உடனடியாக மருத்துவரை அணுகவும்” என்றார்.

எந்தவயதுக்காரராக இருந்தாலும், உடல்பருமனாக இருந்தால் அவர்களுக்கு மூட்டு வலிக்கான சூழல் அதிகம் என்பதால் அவர்கள் கூடுதல் கவனத்துடன் இருக்கவேண்டுமென எச்சரிக்கிறார் மருத்துவர் அர்ஷத் அகில்.

Source : WWW.PUTHIYATHALAIMURAI.COM

Sign In

Register

Reset Password

Please enter your username or email address, you will receive a link to create a new password via email.