தஞ்சாவூரில் ஸ்மார்ட் சிட்டி திட்டத்தின் கீழ் பல்வேறு பணிகள் நடைபெற்று வருகின்றன. தஞ்சாவூர் பழைய பேருந்து நிலையம், அதில் இருந்த கடைகள் இடிக்கப்பட்டு புதிதாக பேருந்து நிலையமும், சுமார் 50 கடைகளும் கட்டப்பட்டுள்ளன. 95 சதவீத பணிகள் முடிந்த நிலையில் முதலமைச்சர் ஸ்டாலின் விரைவில் பேருந்து நிலையத்தை திறக்க இருப்பதாக சொல்லப்படுகிறது. இந்நிலையில் பேருந்து நிலையத்தில் கட்டப்பட்ட கடைகளை ஓப்பன் டெண்டர் முறையில் வாடகைக்கு விடுவதற்கு மாநகராட்சி ஆணையர் சரவணக்குமார் நடவடிக்கை எடுத்தார்.

தஞ்சாவூர்
மாநகராட்சி அலுவலகம்

இதற்கு திமுகவின் தஞ்சை மாநகர செயலாளரும், தஞ்சை தொகுதி திமுக எம்.எல்.ஏவுமான நீலமேகம் எதிர்ப்பு தெரிவித்ததாக தகவல்கள் வெளியானது. என்றாலும் சரவணக்குமார் ஓப்பன் டெண்டர் முறையில் கடைகளை வாடகைக்கு விட்டார்.

Also Read: தஞ்சை: 60 நாள்களில் ரூ.150 கோடி அரசு இடம் மீட்பு! – அதிரடிகாட்டும் மாநகராட்சி ஆணையர்

இந்நிலையில், பேருந்து நிலையம் திறப்பதற்கு தாமதமாவதால் கடை வாடகைக்கு எடுத்த வணிகர்களான அதன் உரிமையாளர்கள் பாதிக்கபடக்கூடாது என்பதற்காக மாநகராட்சி நிர்வாகம் தற்காலிக கடைகளை அமைத்து தருவதற்கான ஏற்பாட்டை செய்து வருகிறது. இந்நிலையில் குறிப்பிட்ட அந்த இடத்தில் ஆட்டோ நிறுத்துவதற்கும், ஆட்டோ ஸ்டாண்டிற்கான போர்டையும் வைத்து, கடைகள் அமைக்க திமுக எம்.எல்.ஏ இடையூறு செய்வதாக மாநகராட்சி நிர்வாகத்தினர் சிலரும் வணிகர்கள் தரப்பிலும் பேசப்படுவது பரபரப்பை ஏற்ப்படுத்தியுள்ளது.

தஞ்சாவூர் பழைய பேருந்து நிலையம்

இது குறித்து மாநகராட்சி வட்டாரத்தில் சிலரிடம் பேசினோம், “ஸ்மார்ட் சிட்டி திட்டத்தின் கீழ் பழைய பேருந்து நிலையம் மற்றும் கடைகள் இடிக்கப்பட்டு அவை புதிதாக கட்டப்பட்டன. மாநகராட்சி நிர்வாகம் நஷ்டத்தில் இயங்கியதால் கடைகளை சொற்ப வாடகைக்கு விடாமல் ஓப்பன் டெண்டர் முறையில் ஏலம் விட்டு வாடகைக்கு விட்டார் ஆணையர். ஒரு கடைக்கு டெபாசிட், 12 மாத வாடகை அட்வான்ஸ் தொகையாக பெறப்பட்டு அனைத்து கடைகளும் வாடகைக்கு விடப்பட்டன. இதன் மூலம் ஒரு கடைக்கு லட்ச கணக்கில் பணம் பெறப்பட்டதன் மூலம் மாநகராட்சிக்கு வருவாய் வந்தது. இதையடுத்து நிதி நெருக்கடியிலிருந்து தப்பியது மாநகராட்சி நிர்வாகம்.

இந்த சூழலில், “கடை வாடகைக்கு எடுத்து சுமார் இரண்டு மாதங்கள் ஆகிவிட்டன. ஒவ்வொரு வணிகருக்கும் தீபாவளி பண்டிகைக்கான வியாபாரம் என்பது முக்கியமனாது. எனவே சீக்கிரம் நாங்கள் கடைகளை திறக்க வேண்டும், பேருந்து நிலையத்தை திறந்து கடைகளை ஒப்படையுங்கள்” என வணிகர்கள் மாநகராட்சி நிர்வாகத்திடம் கேட்டுள்ளனர். இன்னும் ஐந்து சதவீத பணிகள் இருப்பதால் உடனடியாக திறப்பதற்கு வாய்ப்பில்லை. எனவே தீபாவளிக்கு சாலையோரங்களில் கடைகள் போடப்படும். அதே போல் தற்காலிக கடைகள் அமைத்து தருகிறோம் அதில் கடைகளை நடத்தி கொள்ளுங்கள் என அதற்கான ஏற்பாட்டை மாநகராட்சி நிர்வாகம் செய்தது.

ஆட்டோ ஸ்டாண்டிற்காக வைக்கப்பட்ட போர்டு

தொடர்ந்து தகர சீட் அமைத்து கடைகள் அமைக்கும் பணியும் தொடங்கப்பட்டது. கடைகள் ஓப்பன் டெண்டர் முறையில் ஏலம் விட்டதிலிருந்தே நீலமேகத்திற்கும், மாநகராட்சி நிர்வாகத்திற்கும் கருத்து வேறுபாடு நிலவி வருகிறது. குறிப்பிட்ட அந்த இடத்தில் ஆட்டோ ஸ்டாண்ட் இருந்தது. எனவே ஆட்டோக்கள் மட்டுமே நிறுத்த வேண்டும் கடைகள் அமைக்க கூடாது என ஆட்டோ டிரைவர்கள் ஆட்டோவை நிறுத்தியதுடன் அந்த இடத்தில் ஆட்டோ ஸ்டாண்டிற்கான போர்டையும் வைத்தனர். இதன் பின்னணியில் நீலமேகம் இருந்து கொண்டு ஆட்டோ டிரைவர்களை தூண்டி விட்டு ஆட்டோவை நிறுத்த வைத்துள்ளார். மாநகராட்சி நிர்வாகத்தின் மேல் உள்ள காழ்ப்புணர்ச்சியின் காரணமாக இதனை செய்கிறார். இதனால் கடைகள் அமைக்கும் பணி தற்காலிகமாக நிறுத்தப்பட்டுள்ளது” எனத் தெரிவித்தனர்.

இது குறித்து டி.கே.ஜி. நீலமேகம் எம்.எல்.ஏவிடம் பேசினோம், “25 வருடங்களுக்கு மேலாக குறிப்பிட்ட அந்த இடத்தில் ஆட்டோ ஸ்டாண்ட் செயல்பட்டு வருகிறது. யூனியன் கிளப் சுற்று சுவரை இடித்து விட்டு அந்த இடத்தில் தற்காலிக கடைகள் அமைக்கப்பட்டன. நான் சி.எம்-ஐ பார்ப்பதற்காக சென்னையில் இருப்பதால் ஆட்டோ டிரைவர்கள் தங்கள் வாழ்வாதரம் பாதிக்கும் எங்க கட்சிகாரர்கள் சிலரை சந்தித்து கூறியிருக்கின்றனர்.

தற்காலிக கடைகள்

அவர்கள் மாநகராட்சி நிர்வாகத்திடம் பேசினர். இதையடுத்து மாநகராட்சி நிர்வாகம், போக்குவரத்து போலீஸ், ஆட்டோ டிரைவர்கள் ஆகியோர் சேர்ந்து பேச்சுவார்த்தை நடத்தினர். இதில் கடைகளுக்கு பின்புறம் ஆட்டோவை நிறுத்தி கொள்ளவும், ஒரு ஆட்டோ வெளியே வந்து செல்கின்ற வகையில் வழி விட்டு கடைகள் அமைக்கவும் யோசனை கூறப்பட்டது. இவை அனைத்து தரப்பிலும் ஏற்றுக்கொள்ளப்பட்ட நிலையில், நான் கடைகள் அமைக்க இடையூறு செய்வதாக கூறப்படும் தகவல் துளியும் உண்மையில்லை. நான் மாநகராட்சி பகுதி முழுவதும் துல்லியமாக அறிந்திருப்பதால் மக்களுக்கான சர்வீஸை சிறப்பாக செய்து வருகிறேன். அதன் மூலம் எனக்கென நல்லப்பெயரும் உள்ளது. இதனை ஏற்க முடியாத எங்க கட்சியை சேர்ந்த சிலரே என் மீது களங்கம் ஏற்படுத்துவதற்காக இது போன்ற பொய்யான தகவல்களை பரப்பி விடுகின்றனர்” என்றார்.

Sign In

Register

Reset Password

Please enter your username or email address, you will receive a link to create a new password via email.