ஆர்சிபியின் கேப்டனாகக் களமிறங்கிய இறுதி சீசனிலும், கோப்பையைக் கையகப்படுத்த முடியாத வேதனையோடே கோலி வெளியேறியிருக்கிறார். போட்டிக்கு முன்னதாக, மணிக்கணக்காக மனக்கணக்காக, கூட்டிக் கழித்தாலும், ஆர்சிபி – கேகேஆரின், பலம், பலவீனங்கள் எல்லாமே ஓரளவு ஒத்துப் போயிருந்தன. ஆனாலும்கூட, புள்ளிப் பட்டியலில், ஆர்சிபிக்கு பின்னால் இருப்பினும், இரண்டாவது பாதியில், கேகேஆர், ஆர்சிபியைவிட ஒரு அடி, முன்னதாகவே பயணித்தது என்பதே உண்மை.

டாஸை வென்ற கோலி, சேஸிங்கைத் தேர்வு செய்வார் என்று நம்பினால் பேட்டிங்கைத் தேர்வுசெய்து ஆரம்பமே அதிர்ச்சியளித்தார். கொல்கத்தா நைட் ரைடர்ஸ் உடனான இரண்டாவது லீக் போட்டியில் முதல் பேட்டிங்கில் 92 ரன்களுக்கு ஆல்அவுட் ஆனது, டெல்லி உடனான கடைசி லீக் போட்டியில் சேஸிங் செய்து வென்றது போன்று பல விஷயங்களை மனதில் வைத்து கோலி சேஸிங்கை தேர்ந்தெடுப்பார் என்று எதிர்பார்த்தால், நாங்கள் தலைகீழாகத்தான் குதிப்போம் என்ற முடிவையே எடுத்தார்.

சுனில் நரைன்

போட்டி தொடங்குவதற்கு முன்பாகவே, மேத்யூ ஹெய்டன், 180 ரன்கள் இலக்காக இருந்தால்கூட இங்கே சேஸ் செய்து விடமுடியும் என்று சொல்லியிருந்தது நினைவில் வந்து, இது ஹை ஸ்கோரிங் கேமாகவே மாற இருக்கிறது என்ற எண்ணம் எழ, அதற்கு வலுசேர்த்தது, கோலி – படிக்கல் தந்த தொடக்கம்.

முதல் ஐந்து ஓவர்களில், விக்கெட் இழப்பின்றி 49 ரன்கள் சேர்க்கப்பட்டு, எல்லாமே ஆர்சிபிக்குச் சார்பான திசையிலேயே நகர்ந்து கொண்டிருந்தது. எனினும் ஃபெர்குசன் வீசிய, பவர்ப்ளேயின் இறுதி ஓவரின் முதல் பந்துதான், போட்டியை, கண்ணாடி பிம்பமாக, 180 டிகிரி திருப்பிவிட்டது. மார்கனுக்கு, இந்த சீசனில், ஆபத்பாந்தவர்களாகக் கை கொடுத்து வருவது, அவருடைய சுழல்பந்து வீச்சாளர்கள்தானே?! இப்போட்டிக்கு முன்புவரை, அதிகபட்சமாக, 18 விக்கெட்டுகளை, கேகேஆரின் சுழல் கத்திகள் வீழ்த்தி இருந்தன. அதுவும் 5.6 என்னும் அசர வைக்கும் எக்கானமியோடு. இப்போட்டியிலும், அதே பாணியில், ஷகீப் மற்றும் வருணை வைத்தே, ஒன்பதாவது ஓவர் வரை, மிரட்டிக் கொண்டிருந்தார் மார்கன்.

இதன் காரணமாகவே, படிக்கல் ஆட்டமிழந்த பின், கோலி – பரத் கூட்டணி, ரன் சேர்க்க, மிகவும் திணறியது. அரபு பிட்சுகளில், ‘பவர்பிளேவுக்குப் பின், ஓவர்கள் நகர நகர, பிட்ச் மிகவும் ஸ்லோவாகி விடுகிறது’, என்ற கருத்து சமீபமாக மிகவும் தடித்த குரலோடு எழுப்பப்படுவது உண்மைதான். எனினும், இந்த இணையும், இன்டென்ட் என்னும் வார்த்தையை இண்லாண்ட் லெட்டரில் போட்டு, எங்கேயோ அனுப்பி விட்டது போல், மத்திய ஓவர்களில் ரன்சேர்க்க வேண்டுமென்பதையே மறந்து, ஒன்டே இன்னிங்ஸ் ஆடிக் கொண்டிருந்தது. கோலியிடம், இந்த ஐபிஎல் அரபுப் போட்டிகளில் காணப்பட்ட பெரிய பிரச்னையான ‘குறைவான ஸ்ட்ரைக் ரேட்’ இங்கேயும் உயிர்பெற்று, அணியின் ரன்ரேட்டின் கழுத்தை நெறித்துக் கொண்டிருந்தது.

கோலி

அதோடு, கேகேஆரின் ஸ்பெஷல் ஸ்பின் சூட்சுமத்தை எப்படி எதிர்கொள்வது என்ற எந்த கேம் பிளானும் இல்லாமலே, ஆர்சிபி பேட்ஸ்மேன்கள் களமிறங்கியிருந்தனர். குறிப்பாக, பெரும்பாலான ஷாட்களை across the line-ல் ஆடிக் கொண்டிருந்தனர் ஆர்சிபி பேட்ஸ்மேன்கள். கேகேஆரின் ஸ்பின்னர்கள் ஸ்பின்னையே வேகமாக வீசகூடியவர்கள். அவர்கள் பந்தை நேராக ஆட வேண்டுமே தவிர, அக்கிராஸ் த லைனில் ஆடுவது என்பது விக்கெட்டுக்குத்தான் வழிவகுக்கும், ரிஸ்க் அதிகம். அரபு மண்ணில் அக்கிராஸ் தி லைனில் எந்த பேட்ஸ்மேன்களாலும் இதுவரை பெரியதாக ஸ்கோர் செய்யமுடியவில்லை.

இவற்றை எல்லாம் மனதில் நிறுத்தாமல் கோலி உள்ளிட்ட ஆர்சிபி பேட்ஸ்மேன்கள், அக்கிராஸ் த லைனிலேயே ஆடி, ரன்சேர்க்க முயன்றதுதான், அவர்களுக்கே வினையாக முடிந்தது. அவர்களுக்கான வினையை விதைத்தவர், வேறு யாருமில்லை. 2020-க்கு முந்தைய வருடங்களில் மேட்ச் வின்னராக கேகேஆரில் வலம்வந்து, கடந்த சீசனில் சந்தித்த, ஒரு மோசமான ஃபார்ம் அவுட்டில் இருந்து மீண்டு வந்து, இந்த சீசனில் முக்கியமானவராக திகழ்ந்து வரும் சுனில் நரைன்தான். அவர்தான் இப்போட்டியின் கேம் சேஞ்சர்.

ரன்கள் ஏறாமல் பிரஷர் ஏற, பந்தைத் தூக்கியடிக்க முயன்று, பவுண்டரி லைனுக்கு அருகிலேயே, கேட்ச் கொடுத்து ஆட்டமிழந்தார் பரத். சரி, போனது போகட்டும், கோலி, மேக்ஸ்வெல், ஏபிடி மூவரும் இருக்கையில், என்ன கவலை என ஆறுதலோடு இருந்த ரசிகர்களுக்கு, அடுத்தடுத்து விளைந்தது ஏமாற்றமே.

பரத்தின் விக்கெட்டை வீழ்த்திய பின், 13-வது ஓவரை வீச வந்த நரைன், கோலியின் விக்கெட்டை வீழ்த்தினார். கோலி ஆடிய விதமே அவரது ஆட்டமிழப்பிற்குக் காரணம் என்றாலும், நரைன் ஏற்றிய டன் கணக்கான அழுத்தமும் அதற்குக் காரணம். இப்போட்டியில், தனது ஸ்பெல்லில், ஓவருக்கு ஒன்று என, வீசிய அத்தனை ஓவர்களிலும் விக்கெட் வேட்டை ஆடியிருந்த நரைனின், பந்து வீச்சு துல்லியமானதாக இருந்தது.

அரபு நாட்டில் நடைபெற்ற, நடப்பு ஐபிஎல் சீசனில், அவர் வீசிய 76 சதவிகிதத்துக்கும் மேலான பந்துகளை, குட் லென்த்திலேயே வீசியிருந்தார். அந்தளவுக்கு கனகச்சிதமாக இருந்தது அவரது பௌலிங். கோலியைத் தொடர்ந்து, ஏபிடியும் ஆட்டமிழந்தார். இந்த சீசனில், இந்தியாவில், 51.75 சராசரியோடு ரன்களைக் குவித்த ஏபிடி, இந்த இரண்டாவது பாதியில், 17.67 சராசரியோடு மட்டுமே சேர்த்து, ரன்னெடுக்கத் தவறியதும், அணிக்கு பாதகமான அம்சமாக மாறிப் போனது.

இப்படி, பிரதான பேட்ஸ்மேன்கள் எல்லோரும் ஆட்டமிழந்ததனால், மேக்ஸ்வெல்லின் மீது மட்டுமே, மொத்த கவனமும் திரும்பியது. இந்த சீசனில் பலமுறை அணிக்காக நின்றவர்தான் என்றாலும், நரைனுடனான அவரது டாம் அண்ட் ஜெர்ரி கேம்தான் அவரது விக்கெட்டுக்கு விலை பேசியது. உச்சகட்ட ஃபார்மில் இருக்கும் பௌலர் பந்துவீசுகிறார், மூன்று முக்கிய தலைகளை அவர் ஏற்கனவே வாங்கிவிட்டார், எனவே அவரைச் சமன்பாட்டில் இருந்து நீக்கிவிட்டு, மற்ற வீரர்களின் ஓவர்களில், அதிரடி காட்டிலாம் என்ற முடிவை, மேக்ஸ்வெல்லின் அனுபவம் எடுக்க வைத்திருக்க வேண்டும். ஆனால், அது, அதைச் செய்யத் தவறியதுதான், ஆர்சிபியின் தோல்விக்கான அடித்தளமிட்டது. மேக்ஸ்வெல் ஆட்டமிழக்கும் முன்பு, 3 ஓவர்கள் மீதம் இருந்தது. நரைன் பந்தை தடுத்தாடிவிட்டு மற்ற 3 ஓவர்களில் ரன் குவித்திருத்தால், அணியின் ஸ்கோர் 160 ரன்களை நெருங்கி வந்திருக்க வாய்ப்புகள் உண்டு, ஆனால் அதை மேக்ஸ்வெல் செய்யத் தவற, ஆர்சிபியின் ரன்ரேட் மொத்தமாக படுத்தே விட்டது.

கிளென் மேக்ஸ்வெல்

கடைசி ஐந்து ஓவர்களில், 30 ரன்களை, மட்டுமே சேர்த்த ஆர்சிபி, இறுதியில், 138 ரன்களை மட்டுமே எடுத்திருந்தது. 2015-ம் ஆண்டுக்குப் பின் சுனில் நரைன் நான்கு விக்கெட்டுகளை ஐபிஎல் போட்டியில் எடுத்திருப்பது, இதுவே முதல்முறை.

139 ரன்களை இலக்காகக் கொண்டு ஆடிய கேகேஆருக்காக, கில் மற்றும் வெங்கடேஷ் இறங்கினர். முந்தைய போட்டிகளில், வெங்கடேஷ் அடித்த பந்தெல்லாம், இடைவெளியைச் சரியாகக் கண்டறிந்து பவுண்டரி லைனைப் பார்க்கும். ஆனால், இப்போட்டியில், அடிப்பது எல்லாம் ஃபீல்டர் நோக்கியே நகர்ந்தது. அதிவேகமாக எல்லாம் ரன்னைக் குவிக்காமல், நிதானமாகத்தான் தங்களது இன்னிங்ஸைக் கட்டமைத்துக் கொண்டிருந்தனர் கேகேஆரின் ஓப்பனர்கள்.

கார்டனின் ஓவரில், கில்லின் ஹாட்ரிக் பவுண்டரியோடு, விக்கெட் இழப்பின்றி போட்டி நகர, ஹர்ஷல் பட்டேலை, கோலி இறக்க, அவர் வீசிய இரண்டாவது பந்தே விக்கெட் வீழ்த்தும் பந்தானது. கில்லின் பலவீனமான ஸ்லோ கட்டர், அவரது விக்கெட்டை, காவு வாங்கியது.

கில்லின் விக்கெட்டுக்குப் பின், அந்தக் கட்டத்தில் இருந்து, ரன்களைக் கட்டுப்படுத்துவதோடு, விக்கெட்டையும் சீரிய இடைவெளியில், ஆர்சிபி எடுத்துக் கொண்டுதான் இருந்தது. கடைசி ஓவர் வரை போட்டி போகும் என்பதை இந்த தொடக்க ஓவர்கள் புரிய வைத்தன.

வெங்கடேஷை வெளியேற்றி, இந்த சீசனில், தனது 32-வது விக்கெட்டை ஹர்ஷல் வீழ்த்தினார். ஒரே சீசனில், அதிக விக்கெட்டுகளை வீழ்த்தியதற்கான சாதனையை, பிராவோவோடு பகிர்ந்து கொண்டார். ஒருவேளை அணி, இறுதிப் போட்டி வரை முன்னேறியிருந்தால், முறிக்க முடியாத சாதனையை, ஹர்சல் நிகழ்த்தியிருக்கலாம். ஆனால், அதை நிகழ விடாமல் செய்தது, கேகேஆரின் பக்கம் காற்று திசைமாறத் தொடங்கியது, டேன் கிறிஸ்டியன் வீசிய அந்த ஒரு ஓவரில்தான்.

கோலி – மார்கன்

அதற்கு முன்னதாக, ஒன்பது ஓவர்களில், 60 ரன்கள் தேவையென பார்த்துப் பார்த்து பௌலர்கள் குறைத்து வைத்திருந்த ரன்ரேட்டை, ஒரே ஓவரில் கபளீகரம் செய்து, 22 ரன்களைத் தந்து, போட்டியையே புரட்டிப் போட்டு விட்டார் கிரிஸ்டியன். நரைன் ஒரு Slogger அவருக்கு ஸ்லோ பால் வீசுவது என்பது தற்கொலைக்குச் சமம், அதை வேண்டி விரும்பிசெய்தது ஆர்சிபி. அவருக்கு ஸ்லோ கட்டர்களாக கிறிஸ்டியன் வீச, பந்து சிக்சர்களுக்கு பறக்கத் தொடங்கியது. அந்த ஓவரில் மூன்று சிக்ஸர்களைப் பறக்கவிட்டு, இருந்த அழுத்தம் அத்தனையையும், ஆர்பியின் பக்கம் பிரதிபலிக்கச் செய்து விட்டார் நரைன். பௌலராக மட்டுமின்றி, பேட்ஸ்மேனாகவும் ஆர்சிபிக்கு எதிராக விஸ்வரூபம் காட்டினார், நரைன்.

நரைன் வந்தவுடன் கொண்டு வந்திருக்க வேண்டிய சிராஜை, தாமதமாக கொண்டு வந்தார்கள். எனினும், ஒரே ஓவரில், சிராஜ் எடுத்த இரட்டை விக்கெட்டுகள், நம்பிக்கையைக் கொஞ்சம், இறுக்கிப் பிடித்து வைத்திருந்தாலும், இறுதி இரண்டு ஓவர்களில், 12 ரன்கள் என இலக்கு சுலபமாகி இருந்தது. அதுவும் கடைசி ஓவரும் டேன் கிறிஸ்டியனிடம் கொடுக்கப்பட, இரண்டு பந்துகள் மீதமிருந்த நிலையிலேயே, கேகேஆரை வெல்ல வைத்து விட்டார். நான்கு விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது கேகேஆர்.

இந்த வெற்றி, கேகேஆரை, டெல்லியுடனான இரண்டாவது குவாலிஃபயருக்கு கொண்டு சேர்த்துள்ளது. முதல் சுற்றின் முடிவில், ஏழாவது இடத்தில் இருந்த அணியான கேகேஆர், அங்கிருந்து முன்னேறி, மேலே எழும்பி வந்திருப்பதுதான், டி20 மற்றும் ஐபிஎல்லின் அழகான அம்சமே! டெல்லி கேப்பிடல்ஸுக்கும், கேகேஆருக்கும் இடையிலேயான யுத்தமும் கடுமையானதாகத்தான் இருக்கப் போகிறது.

வீரர்கள் தேர்வில் தொடங்கி, எல்லா இடத்திலும் தவற விட்டு விட்டது ஆர்சிபி. தொடரின் முதல் பாதியில் இருந்த வேகத்துக்கு கோப்பையை வாங்காமல் விட மாட்டார்கள் என எதிர்நோக்கப்பட்ட அணி, மறுபடியும் ஒருமுறை, சாம்பியன்ஷிப்பைத் தவற விட்டுள்ளது. அதுவும் தொடர்ந்து இரண்டாவது ஆண்டாக, ப்ளே ஆஃப்புக்கு முன்னேறியும், இறுதிப் போட்டியைக் கூட, எட்ட முடியாமல் வெளியேறி உள்ளது ஆர்சிபி.

ஐபிஎல் கோப்பைக்கு பல அடுக்கு, இரும்புப் பூச்சு தந்து, ஆர்சிபியின் கையில், மிகப்பெரிய காந்தத்தைத் தந்தால்கூட, இயற்பியலுக்கு எதிராக, இரண்டும் எதிரெதிர் திசையில்தான் நகரும் போலும்!

Sign In

Register

Reset Password

Please enter your username or email address, you will receive a link to create a new password via email.