கார்ப்பரேட்களைப் பற்றி தமிழ்சினிமா அளவுக்கு யாரும் அதிகம் பேசியிருக்கவில்லை. அப்படியிருந்தும் கார்ப்பரேட்களால் அதிகம் பாதிக்கப்படுவதும் தமிழ் சினிமாவாகவே இருக்கிறது. அப்படிச் சமீபத்தில் வெளியாகி பாதிப்பிக்குள்ளாகியிருக்கும் படம் ‘ருத்ர தாண்டவம்’.

கடமை தவறாத நேர்மையான, மனசாட்சியுள்ள, சட்டத்தின்பால் நம்பிக்கையுள்ள, மனிதத்தைப் போற்றக்கூடிய, பெண்களைக் கொண்டாடக்கூடிய, குற்றங்களை எளிதாக துப்பறியக்கூடிய… இப்படிப் பல தகுதிகளைத் தன்வசப்படுத்தியிருக்கும் இன்ஸ்பெக்டர் ருத்ர பிரபாகரன். இவை எல்லாவற்றையும்விட, தற்பெருமை பேசுவது அவருக்குப் பிடிக்கவே பிடிக்காது என்பதால் இவற்றை எல்லாம் மக்களுக்கு அடிக்கடி எடுத்துச் சொல்ல தம்பி ராமையாவை பக்கத்திலேயே வைத்துக்கொண்டு சுற்றிவருகிறார். அவரின் எல்லைக்குள் போதை மருந்துகள் புழக்கம் அதிகமாக இருப்பதை அறிந்து அதன் ஆணிவேரை அசைத்துப் பார்க்க முயல்கிறார். இந்த முயற்சி அவருக்குச் சில எதிரிகளை உண்டாக்குகிறது. அவர்களோடு இவர் பேச, இவரோடு அவர்கள் பேச… அப்படியே க்ளைமேக்ஸ் வர, நடுவே தனது வழக்கமான ‘அரசியல் அறிவையும்’ கலந்து படமாக எடுக்க முயன்றிருக்கிறார் இயக்குநர் மோகன்.ஜி.

‘ருத்ரதாண்டவம்’ ப்ளஸ், மைனஸ் ரிப்போர்ட் | Rudrathandavam Plus Minus Report

ருத்ர பிரபாகரனாக ரிச்சர்ட். ‘எனக்கு இவ்வளவுதான் வரும்’ என தனக்கு வருவதை வைத்து சமாளிக்கிறார். அவருக்கு ஜோடியான தர்ஷாவோ அப்படியே நேரெதிர். மிகை நடிப்பை அள்ளித் தெளிக்கிறார். வில்லனாக கெளதம் மேனன். அவரின் படத்தில் வரும் ஹீரோவை அப்படியே தூக்கிவந்து இந்தப் படத்தில் வைத்திருப்பதைப் போன்ற பொருத்தமில்லாத வேடம். கோபத்தில் எதிரியை அடிப்பதைக் கூட பாக்ஸிங் போல பாவிப்பது, பேசும் இருபது வார்த்தைகளில் இரண்டு வார்த்தை மட்டும் சென்னைத் தமிழ் பேசுவது எனக் குழப்பமான கதாபாத்திர வரைவு. ஆனால், படத்தில் குழப்பங்களுக்கு பஞ்சமில்லை என்பதால் இது பெரிதாகத் தெரியவில்லை.

ஓரளவு பொருந்தும்படி நடித்திருப்பது ராமச்சந்திரன் துரைராஜ் மட்டுமே. ஒய்.ஜி, ராதாரவி, மாளவிகா போன்றவர்கள் நாடக மோடிலேயே படம் நெடுக வருகிறார்கள்.

பரூக் பாஷாவின் ஒளிப்பதிவு மட்டுமே படத்தின் ஒரே ப்ளஸ். ஜூபினின் இசை தொடக்கம் முதல் இறுதிவரை லூப்பில் ஓடுவது போல ஏற்ற இறக்கங்களே இல்லாமல் ஓடிக் களைக்கிறது. முன் பின்னாக பயணிக்கும் திரைக்கதைக்கு தேவராஜின் படத்தொகுப்பு பலம் சேர்க்கவில்லை.

‘ருத்ரதாண்டவம்’ ப்ளஸ், மைனஸ் ரிப்போர்ட் | Rudrathandavam Plus Minus Report

படத்தின் மிக முக்கியமான காட்சி. ருத்ர பிரபாகரன் ஸ்டேஷனுக்கு வந்து ‘நான் சாப்பிட்டு வந்துடுறேன்’ என சொல்லிவிட்டுக் கிளம்பும் நேரத்தில், மார்க்கெட்டில் இரு பள்ளிச் சிறுவர்கள் கஞ்சா விற்பதாக போன் வருகிறது. ”உடனே பேட்ரோல் வண்டியை அனுப்புங்க” என்கிறார் ருத்ரா. ”சாரி சார், பேட்ரோல் வண்டி எல்லாம் ரவுண்ட்ஸ் போயிருக்கு. அனுப்ப முடியாது” என்கிறார் தம்பி ராமையா. ”ஐயா… பேட்ரோல் வண்டி ரவுண்ட்ஸ் போறதே இப்படி குற்றங்களைத் தடுக்கத்தானே? அனுப்ப முடியாதுன்னா அப்புறம் என்ன அது பேட்ரோல் வண்டி?” என எங்களைப் போலவே உங்களுக்கும் தோன்றுகிறதுதானே. உடனே ரிச்சர்டும் தம்பி ராமையாவும் கிளம்புகிறார்கள். அங்கே அவர்களை கையும் களவுமாகப் பிடிக்கும் கடமை தவறாத ரிச்சர்ட், ‘சரி நீங்க பேசிட்டு இருங்க, நான் போய் சாப்பிட்டு வந்துடுறேன்’ என தம்பி ராமையாவை தனியாக விட்டுவிட்டு திரும்பவும் கிளம்புகிறார். அப்புறமென்ன, அந்தக் குற்றவாளிகள் வழக்கம்போல தம்பி ராமையாவை தாக்கிவிட்டு டூ வீலரில் தப்பிக்க, தூரத்திலிருந்து அதைப் பார்த்து அவர்களை தன் அரதப் பழைய வண்டியில் துரத்துகிறார் ரிச்சர்ட். விளைவு ஓர் அசம்பாவிதம். அதனால் ரிச்சர்ட் பாதிக்கப்படுகிறார். ஆனால் பரிதாபப்படவேண்டிய நமக்கு கோபம்தான் வருகிறது, ‘முக்கியமான அக்யூஸ்ட்டை ரோட்ல நிக்கவச்சுட்டு சாப்பிடப் போவாங்களா?’ என! படம் நெடுக இப்படி வரும் அமெச்சூர்த்தனங்களே இயக்குநர் என்ன கதை சொன்னாலும் நம்மை ஒன்றவிடாமல் தடுக்கின்றன.

படத்தின் இன்னொரு பரிதாபம் பெண்கள் குறித்த மோகன்ஜி-யின் பார்வை. தொடக்க காட்சியிலேயே, ”பப்-புக்கு போற பெண்களுக்கு அடிக்கடி இது நடக்கிறதுதான்” என வன்முறையை நியாயப்படுத்தும் தொனி. அடுத்தக் காட்சியில் பெண்ணை கடத்திவைத்திருப்பவர், பெண்ணின் அப்பா மீசையை எடுத்துவிட்டுவந்தால் பெண்ணை விட்டுவிடுகிறேன் என்கிறார். ”மீசையை எடுத்தா கெளரவம் என்னாகுறது? அதெல்லாம் முடியாது. பொண்ணு போனா போகுது” என்கிறார் தம்பி ராமையா. மீசைக்குக் கொடுக்கும் முக்கியத்துவத்தை சக உயிருக்குக் கொடுக்காதளவிற்குத்தான் இயக்குநரின் தெளிவு இருக்கிறது.

ருத்ர பிரபாகரனின் கொள்கைதான் என்ன? ”சட்டப்படி நியாயமா இருக்கலாம். ஆனால் தர்மப்படி தப்பு” என ஒரு காதல் ஜோடியை பிரித்து வைப்பவர் தனக்கு ஒரு பிரச்னை என வரும்போது மட்டும், ”சட்டப்படித்தான் நடக்கணும் எல்லாம்” என்கிறார். ‘ஓ நல்லவரு போல’ என நினைத்தால் அடுத்தக் காட்சியிலேயே துப்பாக்கி எடுத்து ஒருவரை சுடுகிறார். என்னங்க சார் உங்க சட்டம்? குற்றம் செய்தவரைவிட்டுவிட்டு அவரின் குடும்பத்தைக் கடத்திக்கொண்டு போகும் பராக்கிரமம் எந்தச் சட்டப்படி நியாயம்? அவரின் இந்த கேரக்டர் குழப்பமே அவர்மீது நமக்கு பரிதாபம் வரவிடாமல் செய்கிறது.

‘ருத்ரதாண்டவம்’ ப்ளஸ், மைனஸ் ரிப்போர்ட் | Rudrathandavam Plus Minus Report

படத்தில் வில்லனாக வரும் கெளதம் மேனனால் செய்யமுடியாதது என எதுவுமே இல்லை! ஊடகங்களைக் கட்டியாள்கிறார், நாடு முழுக்க போதை மருந்துகள் கடத்துகிறார், வழக்கு நடத்தும் அரசு வக்கீலையே நியமிக்கிறார், நீதிமன்றத்தின் முக்கிய சாட்சிகளையே கொல்கிறார். ‘தானோஸை அழிக்க அவெஞ்சர்ஸ் தேவையில்ல, நான் மட்டுமே போதும்’ என்கிற அளவுக்கு இருக்கின்றன அவரின் சூப்பர் பவர்கள். மோகன் ஜி யுனிவெர்ஸ்!

இரண்டாம் பாதியில் வரும் நீதிமன்ற காட்சிகளும் கோர்ட் ரூமில் நடக்கும் டிராமாவாக இல்லாமல் சீரியல் டிராமாவாகவே இருக்கின்றன. பார்ட் ஒன், பார்ட் 2 என எடுக்க நினைத்து, ‘ஒருவேளை மூணாவது அலை வந்துட்டா தியேட்டர் திரும்ப மூடிடுவாங்களே’ என இரண்டையும் ஒரே பார்ட்டாக எடுத்ததுபோல நீ…..ளம்.

படம் பேசும் அரசியலில் எந்தத் தெளிவும் இல்லை. சமுதாயத்தின் அனைத்துப் பிரிவினரும் பாதிப்புக்குள்ளாகும் போலீஸ் அராஜகம் பிரச்னையில்லை. ஆனால் ஒடுக்கப்பட்ட பிரிவினரின் பாதுகாப்புக்காக இயற்றப்பட்டிருக்கும் சட்டம் பெரிய பிரச்னை என நியாயப்படுத்தும் ஆதிக்கக் குரலாகவே ஒலிக்கிறது இயக்குநரின் குரல். ஆணவக் கொலைகளும், சாதி வெறியாட்டங்களும் தினந்தினம் நடந்துவரும் சூழலிலும் ‘அதெல்லாம் சகோதரப் பாசம்’ என ஃபேன்டஸி உலகைத் திரித்து முன்னிறுத்துவதும், ஒடுக்கப்பட்டவர்களுக்கு ஆதரவாய் நிற்கும் வன்கொடுமை தடுப்புச் சட்டத்தை கேள்விக்குள்ளாக்குவதும் விஷம் கலந்த பிரசாரம்.

‘அம்பேத்கரை கொண்டாடுகிறோம்’ என வலிய வந்து ஆஜராகும் இயக்குநர், அம்பேத்கர் விவரித்த மதமாற்றத்திற்கான காரணங்களையும் பேசியிருக்கலாமே? சுப்ரமணியை சுப்ரமணி ஆரோக்கியசாமி என வெறும் நகைச்சுவையாக குறுக்குவதிலேயே வெளிப்படுகிறது இயக்குநரின் முதிர்ச்சியற்ற, நியாயங்களை தன் தேவைக்காக புறக்கணிக்கும் மனப்பான்மை.

‘ருத்ரதாண்டவம்’ ப்ளஸ், மைனஸ் ரிப்போர்ட் | Rudrathandavam Plus Minus Report

பிரச்னையின் வேரைக் கண்டறிந்து அதைப் பற்றி தெளிவாகப் பேசுவது அறம் சார்ந்த அரசியல். பிரச்னையின் கிளைகளைக் கவனத்திற்குக் கொண்டுவந்து வேரை யாரும் அண்டவிடாமல் பாதுகாப்பது மற்றொருவிதமான அரசியல். இயக்குநர் இதில் கவனமாகக் கையாள்வது இரண்டாவது வகை அரசியலை. இத்தகைய அரசியல்தான் இருப்பதிலேயே ஆபத்தானது.

சரி, இவ்வளவும் சொன்னபின்பும் முதல் பத்தியில் சொன்ன கார்ப்பரேட் சதி பற்றி ஒன்றுமே இல்லையே என உங்களுக்குத் தோன்றலாம். இப்படியான படங்கள் எடுக்கப்படுவதே ‘வாட்ஸ் அப்’ எனும் கார்ப்பரேட் நிறுவனத்தின் படைப்பில் உலா வரும் அபத்தக் கருத்துகளை வைத்துத்தான்.

அபத்தமான, விஷமமான ஃபேன்டஸி உலகைக் கட்டமைக்க மெனக்கெடுவதில் கொஞ்சத்தை சமூக யதார்த்தத்தைப் பிரதிபலிக்கும் படங்களை எடுக்கவும் செலவிடுங்கள்!

Sign In

Register

Reset Password

Please enter your username or email address, you will receive a link to create a new password via email.