பாலிவுட் நடிகர் ப்ரதிக் காந்தி தன் வாழ்வில் சந்தித்த வேதனையான தருணங்கள் குறித்து பேசியுள்ள வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

பாலிவுட்டின் பிக் ‘பி’ அமிதாப் பச்சனின் பிரபலமான டிவி ஷோ ‘கோன் பனேகா க்ரோர்பதி’. நம்ம ஊரில் நடிகர் சூர்யா, பிரகாஷ் ராஜ் தொகுத்து வழங்கிய ‘நீங்களும் வெல்லலாம் ஒரு கோடி’ என்பதன் இந்தி வெர்ஷன். தற்போது இந்த நிகழ்ச்சி 13-வது சீசனை எட்டியிருக்கிறது. இந்த சீசனின் ஒவ்வொரு வெள்ளிக்கிழமையும் ஒவ்வொரு பிரபலங்களை அழைத்து நிகழ்ச்சி நடத்தி வருகிறார். கடந்த சில வாரங்களில் வீரேந்திர சேவாக் – சரவ் கங்குலி, நடிகை தீபிகா படுகோன் – இயக்குநர் ஃபரா கான், ஒலிம்பிக் பதக்கம் வென்ற நீரஜ் சோப்ரா – பிஆர் ஸ்ரீஜேஷ் மற்றும் நடிகர்கள் ஜாக்கி ஷெராஃப் – சுனீல் ஷெட்டி ஆகியோர் சிறப்பு விருந்தினர்களாக கலந்துகொண்டனர்.

அந்த வகையில் இந்த வாரம் வெள்ளிக்கிழமைக்கான ப்ரோமோ வீடியோ வெளியிடப்பட்டுள்ளது. அதில் ‘ஸ்கேம் 1992: தி ஹர்ஷத் மேத்தா ஸ்டோரி’ வெப் சீரிஸ் மூலம் கவனம் ஈர்த்த நடிகர் ப்ரதிக் காந்தி மற்றும் பிரபல நடிகர் பங்கஜ் திரிபாதி ஆகியோர் ஒன்றாக கலந்து கொண்டுள்ளனர். ப்ரோமோ வீடியோவில் ப்ரதிக் காந்தி தனது வாழ்வில் சந்தித்த கஷ்டங்களை விவரித்துள்ளார். நிகழ்ச்சியில் ப்ரதிக் காந்தி அவரின் காதல் மனைவி பற்றியும், வாழ்க்கையில் சந்தித்த திருப்புமுனைகள் பற்றியும் கேட்டார்.

அதற்கு பதில் கொடுத்த ப்ரதிக் காந்தி, ”மக்கள், ஒருவரின் வெற்றியில் ஆர்வம் காட்டுவது வழக்கம். ஆனால், அந்த வெற்றியின் பின்னணியில் உள்ள கஷ்டங்கள் பற்றி அவர்களுக்கு தெரிவதில்லை. நான் தினமும் காலையில் எழுந்து, இரண்டு மணி நேரம் நடிப்பு ஒத்திகை பார்த்த பின்பே நிகழ்ச்சிகளுக்கும் படப்பிடிப்புகளுக்கும் செல்வேன். நடிப்பு மீதான ஆர்வத்தால் இதை தினமும் செய்கிறேன். இந்த ஆர்வத்தை நிறுத்திவிட்டால், நான் ஒருபோதும் மகிழ்ச்சியாக இருக்க மாட்டேன் என்பது என் மனைவிக்குத் தெரியும். அதனால் இதுபோன்ற செயல்களை செய்ய அவர் என்னை எப்போதும் ஊக்குவிப்பார்.

image

வாழ்க்கையில் எனக்கு திருப்புமுனை கொடுத்தது கடந்த ஆண்டு, நான் நடித்த ‘ஸ்கேம் 1992’ வெப் சீரிஸ்தான். இதன் வெற்றியால் எனது வாழ்க்கை 360 டிகிரி அளவுக்கு முற்றிலும் மாறிப்போனது. மக்களைப் பொறுத்தவரை, நான் ஒரே இரவில் வெற்றி பெற்றுள்ளேன் என நினைக்கிறார்கள், இல்லை. இந்த ஒரு வெற்றிக்காக 14 வருடங்கள் காத்திருந்துள்ளேன். தாமதமான வெற்றி என்றாலும், என் குடும்பம் மற்றும் மனைவியின் ஆதரவால்தான் இதை நான் சாதிக்க முடிந்தது.

நிதி நெருக்கடி, மருத்துவ பிரச்னைகள் என அனைத்து நெருக்கடிகளையும் வாழ்க்கையில் சந்தித்து இருக்கிறேன். ஆனால், இந்த நெருக்கடிகளை கண்டு என்றுமே துவண்டதில்லை. பிரச்னைகளை சந்திக்கும்போது அதற்கான தீர்வையே என் மனம் யோசிக்கும். அப்படியே எனது மனம் பயிற்சி பெற்றுவிட்டது. எல்லோரும் இதை கடந்து செல்கிறார்கள் என்று நினைக்கிறேன்.

கடந்த காலங்களில் எனது மனைவிக்கு மூளைக் கட்டி இருந்து அறுவை சிகிச்சை செய்யப்பட்டது. மேலும், என் தந்தைக்கும் புற்றுநோய் பாதிப்பு இருந்தது. சிகிச்சை அளித்தபோதிலும் 2018-ல் தந்தை எங்களை விட்டு பிரிந்தார். மும்பையில் வீடு வாங்குவது பெரிய விஷயம். இதே மும்பையில் எங்களுக்கென தனி வீடு இல்லாத ஒரு காலம் இருந்தது. கிட்டதட்ட மும்பையில் வசித்த ஒரு தசாப்தத்திற்குப் பிறகு எங்கள் நிலையால் இருக்கிற வீட்டை விற்று திடீரென்று முழு குடும்பமும் வீடற்ற நிலைக்கு சென்றது. ஆனால், அனைத்திலும் இருந்தும் மீண்டுவந்து நடிப்பில் கவனம் செலுத்த எனது குடும்பமும் மனைவியுமே ஊக்கமாக இருந்தார்கள்” என்று நெகிழ்ச்சியாக பேசினார்.

Source : WWW.PUTHIYATHALAIMURAI.COM

Sign In

Register

Reset Password

Please enter your username or email address, you will receive a link to create a new password via email.