திருட்டுக் கும்பல் ஒன்றை பங்களாவில் இருக்கும் பேயை விரட்ட ஒருவர் அழைத்துவருகிறார். பேயும், கும்பலும், நாமும் என்ன ஆகிறோம் என்பதுதான் ‘பேய் மாமா’ படத்தின் கதை.

பேய் மாமா

யோகி பாபு & குடும்பம் திருட்டு வேலை செய்து காலத்தை ஓட்டிவருகிறது. மாளவிகாவின் குடும்பமும் இதையேதான் செய்கிறது. ஆனைமலை அருகேயிருக்கும் பட்டுமலை பங்களாவில் பேய்கள் நடமாட்டம் இருப்பதால், அதை யாரும் வாங்க மறுப்பதால், இந்தக் குடும்பத்தை வீட்டினுள் அனுப்புகிறார்கள். இந்தக் கதையைத்தானே போன வாரம் ‘அனபெல் சேதுபதி’ எனப் பார்த்தோம் என யோசிக்கிறீர்களா?! அதில்கூட யோகிபாபு வந்திருப்பாரே! அதே கதையின் வேறொரு வெர்ஷன்தான் இந்தத் திரைப்படம்.

Also Read: நிறுத்தணும் எல்லாத்தையும் நிறுத்தணும்… `அனபெல் சேதுபதி’ ப்ளஸ், மைனஸ் ரிப்போர்ட்!

யோகி பாபுவின் பெயர் கோழி குமார். சேட்டு வீட்டில் மொய் வைப்பவர்கள் பெயர் அனுஷ்கா ஷர்மா, அக்‌ஷய் குமார், சுனில் ஷெட்டி. இப்படியாக எக்கச்சக்கமான காமெடிகள். ABC என்கிற ஒரு நிறுவனம், இந்தப் பங்களாவை வாங்கி ‘ஹெர்பல்’ புராஜெக்ட்ஸ் செய்யத் திட்டமிடுகிறது. ஹெர்பல், ABC என ஷூட்டிங் ஸ்பாட்டிலேயே கதை எழுதியதுபோல பல காட்சிகள் நகர்ந்து கொண்டேயிருக்கின்றன. புளூ சட்டை மாறனுக்கு கிளாஸ் எடுக்க ஒரு காட்சி; சமந்தா, நயன் பர்சனல் வாழ்க்கை தொடர்பான ஸ்லைடுகள் என இதெல்லாம் ஏன் இந்தப் படத்தில் வருகின்றன என்பது புரியவில்லை.

நாம் ஒரு பேய்ப் படம் பார்க்கிறோமா, அல்லது ஸ்பூஃப் படம் பார்க்கிறோமா என்கிற ரீதியில்தான் பல காட்சிகள் நகர்கின்றன. இதற்கு நடுவே ‘பேட்ட’ படத்தின் ஸ்பூஃப், பிக்பாஸ் ஸ்பூஃப் வேறு. அதிலும் ‘பம்பாய்’ பட ‘கண்ணாலனே’ பாட்டுக்கு யோகி பாபு, மனிஷா கொய்ராலாவாக வருகிறார். பத்து வருஷத்துக்கு முன்னாடி விழுந்து விழுந்து சிரிச்சிருக்கலாம் பாஸ், சாரி!

பேய் மாமா

சில ஆண்டுகளுக்கு முன்னர் வெளியான ஷக்தி சிதம்பரம் படங்கள் எல்லாம் காமெடிக்காகவே ஹிட் அடித்தன. அந்தக் காமெடிகள் தற்போது டிவியில் போட்டாலும் மக்கள் ரசிக்கிறார்கள். அதற்காக அதே காமெடியை திரையரங்கில் மீட்டுருவாக்கம் செய்து நம்மை சோதித்திருக்கிறார். சத்யராஜ், கோவை சரளாவை வைத்து ‘தொட்டால் பூ மலரும்’ ரீமிக்ஸுக்கு ஆட வைத்தவர், இந்தப் படத்தில் மொட்டை ராஜேந்திரனையும், ரேகாவையும் ‘என்ன சத்தம் இந்த நேரம்’ பாடலுக்கு ஆட வைத்திருக்கிறார். உலக வரலாற்றிலேயே ரியான் ரெனால்ட்ஸுக்குப் பின், தன் படத்தின் காட்சியை தானே ஸ்பூஃப் செய்தவர் என்கிற பெருமையைப் பெறுகிறார் ரேகா. இந்தக் காட்சி முடிந்து ஆசுவாசப்படுத்தக்கூட நேரம் தராமல், அங்கிருந்து அப்படியே ‘கோலமாவு கோகிலா’ பாடலுக்கு ஜம்ப் ஆகிறார்கள். அடிங்க, ஆனா கேப் விட்டு அடிங்க!

Also Read: சூர்யா – ஜோதிகா தயாரிப்பு… ‘இராமே ஆண்டாலும் இராவணே ஆண்டாலும்’ என்ன சொல்ல வருகிறது என்றால்?!

யோகி பாபு, வையாபுரி, ரமேஷ் கண்ணா, அனுமோகன், PRO கிருஷ்ணமூர்த்தி , மீனாள், ரேகா, சிங்கம் புலி, மொட்டை ராஜேந்திரன், எம் எஸ் பாஸ்கர், பாஸ்கி, பவர் ஸ்டார் என ‘எங்க சிரி பார்போம்’ என ஒரு கூட்டமே நமக்கு முன்னாள் நின்று ஜோக் சொல்கிறார்கள். இதில் யோகி பாபு மாளவிகா மேனன் ரொமான்ஸுக்குப் பதில், மாளவிகாவின் தாயாருடன் ஒரு ரொமான்ஸ் பாடல். அடுத்த வரி ஸ்பாய்லர். ரேகா தன் தலையை கழற்றி வைத்துவிட்டு குளிக்கச் செல்கிறார். யூகித்துவிட்டீர்களா?! அவருக்கு தலைக்குக் குளித்தால் ஜலதோஷம் பிடித்துவிடுமாம். சிரிங்க சிரிங்க எல்லோரும் சிரிங்க.

பூத் மற்றும் பேய் மாமா பட போஸ்டர்கள்

படம் வெளியாவதற்கு முன்னர் வெளியான போஸ்டர், இணைய தளங்களில் பயங்கர ட்ரோலுக்கு உள்ளானது. இந்தி ‘பூத்’ படத்தின் போஸ்டரில், விக்கி கௌஷலின் தலையை வெட்டிவிட்டு யோகிபாபுவின் தலையை ஒட்டி வைத்துவிட்டார்கள். அப்படியாவது எங்கிருந்தாவது படத்தை ஒட்டியிருக்கலாம்.

பார்க்கும் மக்களுக்கு பேய் பிடித்தாலும் பரவாயில்லை, இப்படியே பேய் காமெடிப் படங்கள் என டார்ச்சர் செய்துகொண்டிருந்தால், ‘பேயே தேவல’ எனச் சொல்ல வைத்துவிடுவார்கள் போல!

Sign In

Register

Reset Password

Please enter your username or email address, you will receive a link to create a new password via email.