இந்த சீசனில் பஞ்சாபைத் தவிர யாரையும் வெல்லாத சன் ரைசர்ஸுக்கும், வெல்லும் வாய்ப்பு வந்தாலும் தோற்று நிற்கும் பஞ்சாபுக்கும் இடையேயான இரண்டாவது பலப்பரிட்சை. ஷார்ட்டான பவுண்டரி கொண்ட ஷார்ஜா மைதானம் என்பதால், எப்படியும் பெரிய ஸ்கோர் மேட்ச்சாக இருக்கும் என கணிப்பாளர்கள் ஆரூடம் சொல்ல, டாஸ் வென்ற கேன் வில்லியம்சன் பெளலிங் தேர்வு செய்தார். ”அவர்களை குறைவான ரன்களுக்குள் கட்டுப்படுத்தி வெல்ல இருக்கிறோம்… அதே அணிதான்” என்றார் வில்லியம்சன்.

பஞ்சாப் அணியில் எந்த மாற்றமும் இல்லையென்றால்தான் ஆச்சர்யம். நாதன் எல்லிஸ் முதல் முறையாக விளையாட வாய்ப்புப் பெற்றார். இந்த சீசனில் பஞ்சாப் அணிக்காக விளையாடும் 23-வது வீரர் இவர். இந்தப் போட்டியில் ஃபேபியன் ஆலன், பொரேல், அதில் ரஷீதுக்குப் பதிலாக எல்லிஸ், கெயில், ரவி பிஷ்னாய் சேர்க்கப்பட்டிருந்தனர். அணில் கும்ப்ளேவும், பஞ்சாப் அணி நிர்வாகமும் இப்படி தொடர்ச்சியாக அணி வீரர்களை மாற்றிக்கொண்டே இருந்தால், அவர்கள் மீது அவர்களுக்கே ஒரு நம்பிக்கையில்லாமல் போய்விடும். இந்த சீசனில் சென்னைக்கு மொத்தமாக விளையாடிய வீரர்களே 14 பேர்தான்.

SRH v PBKS

ராகுலும், மயாங்கும் வழக்கம் போல ஓப்பனிங் இறங்கினர். சந்தீப் வீசிய முதல் ஓவரில் பெரிய அளவுக்கு சேதாரமில்லை. பவர் ப்ளேவிலேயே இன்ஃபார்ம் ராகுலுக்கு செக் மேட் வைத்தார் ஜேசன் ஹோல்டர். மூன்று பவுண்டரிகள் அடித்திருந்த நிலையில், 21 ரன்களுக்கு ராகுல் அவுட். அதே ஓவரில் மிட் ஆஃப் திசையில் நிற்கும் வில்லியம்சனிடம் கேட்ச் கொடுத்து அவுட்டானார் மயாங்க். இரண்டு ஓப்பனர்களையும் காலி செய்திருந்தார் ஹோல்டர். பவர் ப்ளே முடிவில் 2 விக்கெட் இழப்புக்கு 29 ரன்கள் மட்டுமே எடுத்திருந்தது பஞ்சாப். கிறிஸ் கெயில் க்ரீஸில் இருப்பதே, எதிரணிக்கு ஒருவித கலக்கத்தைக் கொடுக்கும். ஆனால், இந்தப் போட்டியில் அவரால் பெரிய அளவில் பந்துகளை கனெக்ட் செய்ய முடியவில்லை. சில ஓவர்கள் தாக்குப்பிடிக்கப் பார்த்த கெயில், ரஷீத் ஓவரில் LBW முறையில் வெளியேறினார்.

சில ஆண்டுகளுக்கு முன்னர், ரஷீத் ஓவர்களில் அடி வெளுத்துவிட்டு, பேட்டை குழந்தையைத் தாலாட்டுவது போல் கொஞ்சிக் காட்டுவார் கெயில். அதுவொரு அழகிய நிலாக் காலம். நிக்கோலஸ் பூரன் வந்த வேகத்துக்கு ஒரு சிக்ஸ் அடித்துவிட்டுக் கிளம்பினார்.

SRH v PBKS

கடந்த போட்டியில், போட்டிக்கு முன்பாகவே ஹெல்மெட்டை அணிந்து சர்ச்சையில் சிக்கிய தீபக் ஹூடாவும், தென்னாப்பிரிக்க வீரரான மார்க்ரமும் தான் பஞ்சாபைக் காப்பாற்ற வேண்டும். அப்துல் சமத் வீசிய ஃபுல் டாஸை ஒழுங்காக கனெக்ட் செய்யாமல், லாங்க் ஆஃபில் நிற்கும் மணிஷ் பாண்டேவிடம் கேட்ச் கொடுத்து அவுட்டானார் மார்க்ரம். ஓப்பனர்கள் இருவரையும் காலி செய்துவிட்டு குகைக்குச் சென்ற ஹோல்டர் , 16-வது ஓவரை வீச வந்தார். ஹோல்டர் ஓவரில் அட்டகாசமாக கேட்ச் பிடித்து தீபக் ஹூடாவுக்கு குட் பை சொன்னார் சுச்சித். 20 ஓவர் முடிவில் பஞ்சாபால் அடிக்க முடிந்தது 125 ரன்கள் மட்டுமே. ஆனால், எல்லா போட்டிகளிலும் தோற்றுக்கொண்டிருக்கும் சன் ரைசர்ஸ் என்ன செய்யக் காத்திருக்கிறார்கள் என்பதுதான் அதைவிட முக்கியமான கேள்வி. போட்டியின் ஆரம்பத்தில் கேப்டன் கேன் வில்லியம்சன் சொன்னதற்கு ஏற்ப, அவரின் பெளலிங் யூனிட் குறைவான ரன்களுக்குள் பஞ்சாபைக் கட்டுப்படுத்திவிட்டது. ஆனால் SRH Batsmen had other ideas.

SRH v PBKS

ஷமி வீசிய முதல் ஓவரிலேயே வார்னர் அவுட். வார்னரின் அனுபவத்துக்கு, இப்படியான ஷாட் பாலை எல்லாம் விளாசித் தள்ளுவார். ஆனால், இதில் எட்ஜ் வாங்கி ராகுலிடம் கேட்ச் கொடுத்து அவுட்டானார். அடுத்த ஷமியின் ஓவரில் போல்ட் ஆகி வெளியேறினார் வில்லியம்சன். அந்த ஓவரை விக்கெட் மெய்டன் ஆக்கினார் ஷமி. பவர் ப்ளே முடிவில் 2 விக்கெட் இழப்புக்கு 20 ரன்கள். பஞ்சாபைவிடவும் 9 ரன்கள் குறைவு. சன் ரைசர்ஸ் வரலாற்றிலேயே இதுதான் குறைவனா பவர்ப்ளே ஸ்கோர். ரவி பிஷ்னாய் வீசிய முதல் ஓவரிலேயே , மணிஷ் பாண்டேவை காலி செய்தார். அவர் வீசிய கூக்ளியை சரியாக கணிக்காமல் போல்டானார் மணிஷ்.

தன் முதல் போட்டியில் விளையாடும் எல்லிஸ் அட்டகாசமாக பந்துவீசினார். அவருக்கு கொடுக்கப்பட்ட நான்கு ஓவர்களில் 68 % பந்துகளை ஸ்லோயர் டெலிவரிகளாக வீசினார். தன் முதல் ஓவரில் சாஹாவுக்கு வீசிய முதல் பந்தே இப்படியான ஒரு ஸ்லோ டெலிவரிதான். இரண்டாவது ஓவரிலும் அதே பிளானிங்கை தொடர்ந்தார் எல்லிஸ். வெறும் நான்கு ரன்கள். பத்து ஓவர் முடிவில் 3 விக்கெட் இழப்புக்கு 43 ரன்கள் எடுத்திருந்தது சன் ரைசர்ஸ்.

ஹர்ப்ரீத் பிரார் வீசிய ஓவரில், சிங்கிளுக்கு கேதார் பாலைத் தட்டிவிட , கெயில் அதை மிஸ் செய்ய, மூன்று ரன்கள் ஓடினர் கேதாரும், சாஹாவும். கெயிலே அந்தப் பந்தை சேஸ் செய்து பவுண்டரியில் இருந்து காப்பாற்றினார். ஹர்ப்ரீத்தின் அந்த ஓவரில்தான் முதல் முறையாக ஒன்பது ரன்கள் அடித்தது சன் ரைசர்ஸ். அதற்கும் அடுத்த ஓவரில் ஆப்பு வைத்தார் ரவி பிஷ்னாய். அவரின் அடுத்த கூக்ளியில் கேதார் ஜாதவ் போல்ட். அதே ஓவரில் கெயிலிடம் கேட்ச் கொடுத்து அவுட்டானார் அப்துல் சமத். பெளலிங்கில் சன் ரைசர்ஸை கரை சேற்ற ஜேசன் ஹோல்டர் பேட்டிங் செய்ய வந்தார். பிஷ்னாயின் பந்தில் இன்னிங்ஸின் முதல் சிக்ஸை அடித்தார்.

SRH v PBKS

இரண்டு ஓவர்களில் வெறும் ஆறு ரன்கள் என கெத்தாக இருந்த எல்லிஸ் பந்து வீச வந்தார். அடுத்தடுத்து இரண்டு சிக்ஸ். சட்டென இலக்கை எட்டக்கூடியதாக மாற்றிவிட்டார் ஹோல்டர். அய்யய்யோ இப்படியே போனா, ஜெய்ச்சுடுவமோ என கலக்கத்தில் அமர்ந்திருந்தது சன் ரைசர்ஸ். ட்விஸ்ட் கொடுப்போம் என சாஹா ரன் அவுட்டானார். பெளலர் திசையில் வீசியதால் சாஹா அவுட். யார் போனால் என்ன என ஷமியின் ஓவரிலும் ஒரு சிக்ஸ் அடித்தார் ஹோல்டர்.

Also Read: DC v RR: ஒற்றை ஆளாக வெள்ளையடித்த கோவாலு சஞ்சு சாம்சன்… பிளேஆப் குஷியில் டெல்லி! | IPL 2021

ரஷீதை அர்ஷ்தீப் அவுட்டாக்க கடைசி ஓவரில் 17 ரன்கள் தேவை . நாதன் எல்லிஸ் பந்துவீச வந்தார். என்ன ஆனாலும், ஹோல்டருக்கு பேட்டிங் வர வேண்டும் என நினைத்த புவி, ”அய்யனாரப்பா” என நான் ஸ்டிரைக்கர் எண்டுக்கு ஓடிவந்துவிட்டார். பைஸ் முறையில் 1 ரன். 5 பந்துகளில் 16 ரன்கள். எல்லோரும் எதிர்பார்த்ததைப் போலவே சிக்ஸ். 4 பந்துகளில் பத்து ரன்கள் தேவை. சரியான நேரத்தில் மீண்டும் ஒரு ஸ்லோ டெலிவரியை வீசினார் எல்லிஸ். ரன் ஏதுமில்லை. அடுத்ததாக ஒரு யார்க்கர். சிங்கிள் அடித்தால் , புவி பேட்டிங் செய்ய வேண்டும். சிங்கிளை மறுத்தார் ஹோல்டர். இரண்டு பந்துகளில் 10 ரன்கள். கடினமானது என்பதால், அடுத்த பந்தை ஒய்டாக்கினார் எல்லிஸ். அடுத்த பந்தில் 2 ரன்கள்.

SRH v PBKS

கடைசி பந்தில் சிக்ஸர் அடித்தார், ஆட்டம் சூப்பர் ஓவருக்கு போகும் என்கிற நிலை. வெல்ல வேண்டிய போட்டியில் 2 புள்ளிகளை எதிரணிக்கு தானம் கொடுத்துவிட்டு வருவது பஞ்சாபுக்கு ஒன்றும் புதிதல்ல. ஆனால், எதற்கு வெல்ல வேண்டும் என ஆடும் சன் ரைசர்ஸிடம் அது பலிக்காதல்லவா. எல்லிஸ் வீசிய லோ ஃபுல் டாஸில், ஹோல்டரால் 1 ரன் மட்டுமே அடிக்க முடிந்தது. ஐந்து ரன்கள் வித்தியாசத்தில் பஞ்சாப் வென்றது.

விளையாடிய ஒன்பது போட்டிகளில் எட்டில் தோற்று, பத்தாண்டுகளுக்குப் பின்னர் மோசமான ஒரு சாதனையை செய்திருக்கிறது சன் ரைசர்ஸ்.

பேட்டிங், பெளலிங் என இரண்டிலும் கலக்கிய ஹோல்டர் ஆட்டநாயகனாக தேர்வு செய்யபட்டார்.

Sign In

Register

Reset Password

Please enter your username or email address, you will receive a link to create a new password via email.