மர்மமான முறையில் மேற்கு தொடர்ச்சி மலையில் நடக்கும் ஒரு பயங்கர கொலையுடன் ஹாரர் படமாகத் தொடங்குகிறது ‘சிண்ட்ரெல்லா’. அந்த கொலையைத் தொடர்ந்து சந்தேகத்தின் பேரில் கைது செய்யப்படுகிறார் சவுண்ட் டிசைனராக அங்கு தற்காலிகமாகத் தங்கியிருக்கும் அகிரா (ராய் லட்சுமி). அவர் காவலில் இருக்கும்போதே அதே மாதிரியான இன்னொரு கொலை நடக்கிறது. உண்மையில் கொலை செய்தது யார், அகிரா என்ன ஆனார் என்பதே ‘சிண்ட்ரெல்லா’ படத்தின் ஒன் லைன்.

‘சிண்ட்ரெல்லா’

‘காஞ்சனா’, ‘அரண்மனை’ போன்ற பேய் படங்களில் அட்டெண்டன்ஸ் போட்டு வந்த ராய் லட்சுமி சில வருடங்களுக்குப் பிறகு மீண்டும் தமிழில் நடிக்கிறார். பிற மொழி பிரவேசங்களுக்கு பிறகும், முன்பு எந்த மீட்டரில் நடித்தாரோ அதே மீட்டரில்தான் இதிலும் நடித்திருக்கிறார். ஆனால், கதாபாத்திர வரைவும் பெரிதாக அவருக்குக் கைகொடுக்கவில்லை. டெம்ப்ளேட் வில்லியாக சாக்ஷி அகர்வால் அந்த கதாபாத்திரத்தின் மீது வர வேண்டிய கோபத்தை வரவழைக்கிறார். அன்புதாசன், ‘கல்லூரி’ வினோத், கஜராஜ் எனப் பலரும் வந்துபோகிறார்கள். ரோபோ சங்கர் கௌரவ வேடத்தில் நடித்திருக்கிறார்.

காமெடி பேய் படங்களுக்கு நடுவே ஒரு சீரியஸ் பேய் படம் எடுக்க நினைத்தெல்லாம் சரிதான். அதற்காக இன்னும் அகோரமான முகங்களை அருகில் காட்டினால் பயப்படுவார்கள், கிராபிக்ஸில் பொருட்களைப் பறக்க விட்டால் அலறுவார்கள் என நம்பி அதை அடிக்கடி செய்கிறார்கள். பேய் படத்தில் லாஜிக் வேண்டாம்தான். ஆனால், முன்னுக்குப் பின் முரணாக முழு கதையையும் சொல்வதா? கிளைமாக்ஸில் கட் பண்ணி இன்னொரு பேய் இருக்கிறது என ஃபிளாஷ்பேக் சொல்வதெல்லாம்… முடியல!

Also Read: சூர்யா – ஜோதிகா தயாரிப்பு… ‘இராமே ஆண்டாலும் இராவணே ஆண்டாலும்’ என்ன சொல்ல வருகிறது என்றால்?!

‘சிண்ட்ரெல்லா’

ஹாரர் இப்படி என்றால் நடுவில் ஆங்காங்கே சிரிக்க வைப்போம் என அபத்தமான காமெடி செய்கின்றன ராய்லட்சுமியின் நண்பர்களாக வரும் கதாபாத்திரங்கள். இரண்டாம் பாதியில் ரோபோ சங்கர் வரும் இரண்டு காமெடி காட்சிகளும் முகம் சுழிக்க வைக்கும் அருவருப்பு. ஒளிப்பதிவு, ஒலிப்பதிவு, இசை போன்ற டெக்னிக்கல் விஷயங்கள் சில காட்சிகளைக் காப்பாற்றுகின்றன.

உலக புகழ்பெற்ற ‘சிண்ட்ரெல்லா’ கதையை மாற்றியமைத்துப் பழிவாங்கும் ஹாரர் படமாகக் கொடுக்க முயற்சி செய்திருக்கிறார்கள். ஆனால், பேய் பழிவாங்குவது என்னவோ நம்மைத்தான்!

Sign In

Register

Reset Password

Please enter your username or email address, you will receive a link to create a new password via email.