“ஆத்திரத்துல சரித்திரத்தை உருவாக்கிட முடியாது. அதேமாதிரி, சரித்திரத்தை ப்ளான் பண்ணி ப்ளூ பிரின்ட் போட்டு எழுதவும் முடியாது. அதுக்கொரு தீப்பொறி வேணும். ஆனா… இப்போ காட்டுத்தீயே பத்திகிச்சு!” – இந்த கேஜிஎஃப் டயலாக் அன்றைய தினம் யுவராஜுக்கு கச்சிதமாகப் பொருந்திப்போனது. ஆடுகளத்தில் ஆத்திரத்தைத் தூண்டியது என்னவோ பிளின்டாஃப்தான்; ஆனால், அதன் விளைவாக யுவராஜ் சிங் எழுதிய சரித்திரத்தில் ‘சிக்கியவர்’ ஸ்டுவர்ட் பிராட். வாருங்கள், ஒரே ஓவரில் ஆறு சிக்சர்கள் பறக்கவிடப்பட்ட ‘கிரிக்’கெத்து சரித்திரத்தைப் புரட்டுவோம்.

image

2007-ஆம் ஆண்டின் ஆரம்பம் இந்திய அணிக்கு பெரும் சோகத்தை கொடுத்தது. அந்த ஆண்டு மேற்கிந்திய தீவுகளில் நடைபெற்ற 50 ஓவர் உலகக் கோப்பை போட்டியில் ராகுல் டிராவிட் தலைமையிலான இந்திய அணி படுதோல்வியடைந்து நாடு திரும்பியது. இதனால் இந்திய அணியில் பெரும் மாற்றங்கள் நடந்தது. அதே ஆண்டில் ஐசிசி டி20 உலகக் கோப்பையை அறிவித்தது. டி20 உலகக் கோப்பை முதல்முறையாக தென் ஆப்பிரிக்காவில் நடைபெற்றது. டி20-களில் இருந்து மூத்த வீரர்களான சச்சின், கங்குலி, டிராவிட் ஆகியோர் விலகியதையடுத்து இந்திய டி20 அணிக்கு தோனியை கேப்டனாக்கி அனுப்பியது பிசிசிஐ.

image

புத்தம் புது வீரர்கள், இளைஞர்கள் என மாபெரும் உலகக் கோப்பைக்கு தோனி தலைமையிலான படை சென்றது. இந்திய அணி அந்த உலகக் கோப்பையில் மிகச் சிறப்பாகவே விளையாடியது. ஆனால், இந்திய அணி முதல் முறையாக டி20 உலகக் கோப்பையை வெல்வதற்கு ஒரே ஒரு போட்டி உத்வேகமாக அமைந்தது எனக் கூறலாம். அது, இங்கிலாந்துக்கு எதிரான லீக் போட்டியாக இருந்தது. செப்டம்பர் 19, 2007-ல் டர்பன் மைதானத்தில் இங்கிலாந்துடன் இந்தியா மோதியது.

image

அந்தப் போட்டியில் முதலில் விளையாடிய இந்தியா 18 ஓவர்கள் முடிவில் 3 விக்கெட் இழப்புக்கு 171 ரன்கள் சேர்த்திருந்தது. அந்த நேரத்தில் யுவராஜ் சிங்கிற்கும், பிளின்ட்டாஃபிற்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டது. பிளின்டாஃப் பேசிக்கொண்டே ஃபீல்டிங் பக்கம் செல்ல, யுவராஜ் சிங் கோபமாக அவரை நோக்கிச் சென்றார். பின்னர் நடுவர் தலையிட்டு அவரை சமாதானப்படுத்தினார். 18-வது ஓவரை பிளிண்டாஃப்தான் வீசியிருந்தார். அந்த ஓவரின் 4, 5-வது பந்தில் பவுண்டரி அடித்திருந்தார் யுவராஜ். யுவராஜ் உடன் தோனி அப்போது களத்தில் இருந்தார். அதுவரை அமைதியாக இருந்த யுவராஜ், பிளின்டாஃப் உடன் ஏற்பட்ட வார்த்தை மோதலில் ஆக்ரோஷமானார்.

image

பிளின்டாஃப் மூட்டிய கோபத்துடன் 19-வது ஓவரை விளையாடினார் யுவராஜ் சிங். அந்த ஓவரை இங்கிலாந்து அணியின் வேகப் பந்துவீச்சாளர் ஸ்டுவர்ட் பிராட் வீசினார். முதல் பந்திலேயே இமாலய சிக்ஸர் விளாசினார். மைதானத்தை விட்டு பந்து வெளியே செல்ல கொஞ்சம் தூரம்தான். முதல் பந்தில் சிக்ஸர் அடித்ததுதான் தாமதம், அடுத்த 5 பந்துகளில் அடுத்தடுத்து சிக்ஸர்களை பறக்கவிட்டார். சிக்ஸர் விளாசிய கையோடு 12 பந்துகளில் அரைசதம் விளாசினார். இந்திய அணி அந்தப் போட்டியில் 4 விக்கெட் இழப்புக்கு 218 ரன்கள் எடுத்தது. யுவராஜ் 16 பந்துகளில் 58 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தார்.

பின்னர் விளையாடிய இங்கிலாந்து அணி 200 ரன்கள் மட்டுமே எடுக்க, இந்திய அணி 18 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. யுவராஜ் சிங்கின் அந்த 6 சிக்ஸர்கள் இப்போதும் வரலாற்றில் பேசப்பட்டு வருகிறது. அந்தப் போட்டியில் யுவராஜ் சிங்கின் ஆட்டம்தான் இந்திய அணிக்கு பெரும் தூண்டுகோலாக அமைந்தது. அதுதான் தோனி தலைமையிலான அணி 2007-ஆம் ஆண்டு உலகக் கோப்பையை வெல்வதற்கு அச்சாணியாக இருந்தது. மிகவும் சாதாரணமாக நடைபெற்ற அந்தப் போட்டியை கிரிக்கெட் ரசிகர்களுக்கு சூப்பர் ஸ்பெஷலாக ஆக்கிய பெருமை பிளின்டாஃபையே சேரும் என்றால் அது மிகையல்ல.

(‘கிரிக்’கெத்து தருணங்கள் தொடரும்)

முந்தைய அத்தியாயம்: ‘கிரிக்’கெத்து 1: அமீர் சோஹைல் இழுத்த வம்பு… வெங்கடேஷ் பிரசாத் பறக்கவிட்ட ஸ்டம்பு!

Source : WWW.PUTHIYATHALAIMURAI.COM

Sign In

Register

Reset Password

Please enter your username or email address, you will receive a link to create a new password via email.