‘நீட் தேர்வுக்கு எதிராகத் தீர்மானம், நீட் தேர்வு ஆய்வுக்குழு அறிக்கை, நீட் தேர்வு மாணவர் தற்கொலை’ என இப்போதும் தமிழ்நாடு கொதிநிலையிலேயே இருந்துவருகிறது! இந்தியாவின் மற்ற மாநிலங்கள் எல்லாம் நீட் தேர்வுக்குப் பழக்கமாகி இயல்பு வாழ்க்கையைத் தொடர… தமிழ்நாட்டில் மட்டும் ‘நீட் தேர்வு’க்கு எதிராக ஏன் இந்தத் தடதடப்பு என்ற பரபர கேள்வி எழுந்துவருகிறது.

நீட் தேர்வுக்கு ஆதரவாகப் பேசிவருபவர்கள், ”ஒட்டுமொத்த தேசமும் நீட் தேர்வுக்கு ஆதரவாக இருந்துவரும்போது, தமிழ்நாட்டிலிருந்து மட்டுமே எதிர்ப்பு கிளம்புகிறது. அதன் பின்னணி என்பது மாநில அரசியல் சார்ந்தது. எனவே, நீட் தேர்வு ரத்து செய்யப்பட வாய்ப்பு இல்லை” என்கின்றனர்.

நீட் தேர்வு மையம்

ஆனால், தமிழ்நாட்டில் மாநில பா.ஜ.க-வைத் தவிர அனைத்துக் கட்சியினருமே நீட் தேர்வுக்கு எதிர்ப்பு தெரிவித்துவருகின்றனர். காரணம்… நீட் தேர்வில் மாணவர்கள் வெற்றி பெற வேண்டுமானால், பள்ளிப் படிப்பைத்தாண்டி பிரத்யேக பயிற்சி நிலையங்களிலும் பயிற்சி பெற வேண்டியுள்ளது. வசதி வாய்ப்புள்ள நகர்ப்புற மாணவர்களுக்கு மட்டுமே இது சாத்தியம்.

கிராமப்புறங்களில் உள்ள பெரும்பான்மையான ஏழை மாணவர்கள், பள்ளிப் படிப்பைத் தொடர்வதிலேயே பல்வேறு தடங்கல்கள் இருந்துவரும் வேளையில், நீட் தேர்வு போன்ற பிரத்யேக பயிற்சி வகுப்புகளில் கட்டணம் செலுத்திப் படிப்பைத் தொடர்வதென்பது சாத்தியமற்றது. எனவே நாளடைவில், மருத்துவப் படிப்புகளில் எளிய மக்களின் பங்களிப்பு குறைந்து, உயர் வகுப்பினர் மட்டுமே ஆதிக்கம் பெறும் சூழல் ஏற்படும் என்ற அடிப்படைப் புரிதல் அனைத்துக் கட்சியினர் மத்தியிலும் நிலவி வருகிறது. எனவே, சமத்துவமின்மையை உருவாக்கும் நீட் தேர்விலிருந்து தமிழ்நாட்டுக்கு விலக்கு வேண்டும் என்று உரிமைக்குரல் எழுப்பிவருகின்றனர்.

Also Read: தாம்பரம்: ரயில் நிலையத்தில் கல்லூரி மாணவி கொலை; போலீஸார் தீவிர விசாரணை

இந்த நிலையில், ‘தமிழ்நாடு தவிர மற்ற மாநிலங்களில் நீட் தேர்வுக்கு எதிரான எதிர்ப்புக் குரல்கள் ஒலிப்பதில்லையே ஏன்’ என்றக் கேள்விக்கு விடை கேட்டு கல்வியாளர் ஜெயப்பிரகாஷ் காந்தியிடம் பேசியபோது,

”நீட் தேர்வின் பாதகங்கள் குறித்து இப்போதுதான் மற்ற மாநிலங்களுக்கும் தெரிய ஆரம்பித்திருக்கிறது. அதனால்தான் இப்போது மகாராஷ்டிராவிலும் நீட் தேர்வுக்கு எதிராகக் குரல்கள் ஒலிக்க ஆரம்பித்திருக்கிறது.

இந்தியாவிலேயே அதிக மருத்துவக் கல்லூரிகளைக் கொண்ட மாநிலங்களிலும் தமிழ்நாடு முன்னணியில் இருக்கிறது. நம் மாநிலத்திலிருந்து அதிக எண்ணிக்கையில் மருத்துவப் படிப்புகளுக்கான சீட்கள் அகில இந்திய ஒதுக்கீட்டுக்கும் கொடுக்கப்பட்டு வருகிறது. இதுமட்டுமல்ல… உயர் கல்வி பயில்வோர் குறித்த இந்திய அளவிலான கணக்கெடுப்பில், தமிழ்நாடுதான் முன்னிலை வகித்துவருகிறது. அதாவது, மற்ற மாநிலங்களைவிடவும் தமிழ்நாட்டில்தான் உயர் கல்வி பெறுவோர் எண்ணிக்கை 20 சதவிகிதம் கூடுதலாக இருக்கிறது.

ஜெயப்பிரகாஷ் காந்தி – நெடுஞ்செழியன்

ஆக, நிறையபேர் உயர் கல்வி பயிலும் மாநிலத்தில்தானே நீட் தேர்வினால் ஏற்படும் சாதக – பாதகங்களும் முதலில் தெரியவரும். அந்தவகையில், நீட் தேர்வினால் பாதகங்களே அதிகமாக இருக்கிறது என்ற சமூக அநீதியை முதன்முதலாகக் கண்டறிந்த மாநிலமாக தமிழ்நாடு இருப்பதால், ஆரம்பத்திலிருந்தே இதை நாம் எதிர்த்து வருகிறோம்!” என்கிறார் தெளிவாக.

இதே கருத்தை வலியுறுத்தும்விதமாகப் பேசுகிறார் மற்றொரு கல்வியாளரான நெடுஞ்செழியன். அவர் கூறும்போது, ”கல்வி விஷயத்தில், மற்ற மாநிலங்களைவிடவும் தமிழ்நாட்டில்தான் விழிப்புணர்வு அதிகம். அதனால்தான் இந்தியாவிலேயே 69 சதவிகித இட ஒதுக்கீட்டை முதன்முதலில் நடைமுறைப்படுத்திய, இப்போதும் தொடர்ந்துவருகிற மாநிலமாக தமிழ்நாடு இருந்துவருகிறது. நுழைவுச்சேர்க்கையில், ஒற்றை சாளர முறையை உலகுக்கே அறிமுகப்படுத்தியது தமிழ்நாடுதான்.

Also Read: அமெரிக்காவில் மோடி | குவாட் கூட்டணி உருவானது ஏன்… சீனாவின் கோபமும், ஆபத்துகளும்!

சமூக நீதி குறித்த நமது அடிப்படைப் புரிதல், சமூகம் – அரசியலைத் தாண்டி கல்வியிலும் இருந்துவருவதால், உயர் கல்வி பயில்வதற்கான உரிமைகளுக்காக நாம் எப்போதும் போராடத் தயங்கியது இல்லை. எனவே, இந்த விஷயத்தில் மற்ற மாநிலங்கள் எல்லாம் நமக்குப் பின்னால்தான் வரும்!” என்கிறார்.

நிறைவாக, ‘நீட் தேர்வு ஆய்வுக்குழு’ தலைவரான ஓய்வுபெற்ற நீதியரசர் ஏ.கே.ராஜனிடம், ‘நீட் தேர்வு எதிர்ப்பு என்பது மற்ற மாநிலங்களைவிடவும் தமிழ்நாட்டில் வலுவாக இருப்பதன் காரணம் என்ன…’ என்றக் கேள்வியைக் கேட்டபோது,

”இந்தியா என்பது பன்முகத்தன்மை கொண்ட நாடுகளின் நாடு. இங்கே இனம், மொழி, பண்பாடு என பலதரப்பட்ட மக்களும் இருக்கிறார்கள். எனவே, சமூகத்தில் மட்டுமல்லாது கல்வி கற்கும் சூழலிலும்கூட இங்கு பல ஏற்றத் தாழ்வுகள் இருந்துவருகின்றன. சமத்துவம் அற்ற இந்தச் சூழலில், அனைவரையும் ஒரே விதிமுறைகளுக்கு உட்பட்டு, ஒரு ஓட்டப் பந்தயத்தில் கலந்துகொள்ளச் செய்வது ‘யூனிஃபார்ம்’ அல்ல.

ஏ.கே.ராஜன்

தமிழ்நாட்டில், நீட் தேர்வு பாதிப்புகள் குறித்து ஆய்வு செய்து, அரசு சார்ந்த புள்ளிவிவரங்களை – தரவுகளை சேகரித்தபோது கள நிலவரம் என்னவென்பது ஆதாரபூர்வமாக நமக்குத் தெரியவருகிறது. ஆனால், நீட் தேர்வு ஏற்படுத்துகிற பாதிப்புகள் குறித்தப் புரிதல் தமிழக மக்களுக்கு இயல்பாகவே இருக்கிறது. எனவேதான் அவர்கள் ஒட்டுமொத்தமாக நீட் தேர்வை எதிர்த்து வருகிறார்கள். அதற்குக் காரணம்…. தமிழ்நாட்டில் ஏற்கெனவே வேரூன்றியிருக்கும் முற்போக்குச் சிந்தனைகள்தான்.

ஆனால், ‘தமிழ்நாடு மட்டும் ஏன் நீட் தேர்வை எதிர்க்கிறது’ என்ற ஒரே கேள்வியைத்தான் நீட் தேர்வுக்கு ஆதரவானவர்கள் கேட்கிறார்கள். அவர்களுக்கு நாங்கள் சொல்கிற ஒரே பதில் இதுதான்… ‘இட ஒதுக்கீடு, பெண் உரிமை, இலவச கல்வி, சத்துணவுத் திட்டம், குடிசை மாற்று வாரியம் என முற்போக்கான விஷயங்கள் அனைத்திலும் தமிழ்நாடுதான் முன்னோடி மாநிலமாக இருக்கிறது. காரணம்… நாங்கள் சிந்திப்பதற்கு எங்கள் முன்னோர்கள் சொல்லிக் கொடுத்திருக்கிறார்கள். அந்தவரிசையில் நீட் தேர்வின் ஆபத்து குறித்தும் நாங்கள் சிந்தித்து தெரிந்துகொண்டுள்ளோம்… எனவே, நீட் தேர்வுக்கு எதிராக நிற்கிறோம்!” என்கிறார் அழுத்தமாக.

Sign In

Register

Reset Password

Please enter your username or email address, you will receive a link to create a new password via email.